Thursday, January 16, 2025

ஃ கவிதைகள் விமர்சனம் 1



ஃ கவிதைகள

முதல் விமர்சனம்.

நன்றி எஸ்தர் ராணி🙏💐

     "பறவைகளின் மொழியை

மரங்களின் மொழியைக் கூட

கேட்டதுண்டு

பாறைகளின் மொழி?"


     இக்கவிதைத் தொகுப்பை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். இல்லாவிடில் நீங்கள் தொலைந்து விடுவது திண்ணம்.

     பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இறுகிப் போயிருக்கும் வரலாறை, புராணங்களை, புனைவுகளை, கற்பிதங்களை மையமாக்கி அதை உடைக்கத் துணிந்திருக்கிறது இத்தொகுப்பு.

     அப்போதும் பசி அடங்கவில்லையா

என் கருப்பைக் கிழித்து

கனவுகள் எடுத்து ருசி

பாறையில் கசியும் ரத்தம்

பருகியது போக மீதியைத் தொட்டு 

உன் மேனி எங்கும் பூசிக் கொள்

    இப்படியாக பயணித்து இங்கு வந்து நிற்கிறது.

  யூ

     அக்கமாதேவியின் குரலுக்கும், காரைக்கால் அம்மையின் குரலுக்கும் என்ன வேறுபாடு? காரைக்கால் அம்மை தன்னை ஒறுத்துக் கொண்டார். அக்கமாதேவியோ தன்னை அப்படியே சென்னிமல்லிகார்ஜூனாவுடன் பிணைத்துக் கொண்டாள். அக்கமாதேவியின் குரல் எதிர்ப்பின் குரல். புராணங்கள், கற்பிதங்களை எள்ளி நகையாடிய குரல். 

    புதிய மாதவியின் அகக்கேள்விகள் கவிதைகளாகி நிற்பது இந்த இடைவெளிகளில்தான். மீப்பெரு இடைவெளிகளை சிறுசொற்கள் நம் முன்னே காட்டி விடுகின்றன.

  காரைக்கால் வீதிகள் தலைகுனிந்த இரவு

....

பேயுரு களைந்த திருவந்தாதி 

தலைகீழாய் நடக்கிறாள்

படைப்புக்கும் பிரம்மத்திற்கு நடுவில் 

வெந்து தணியுமோ காடு?!

      துலுக்கநாச்சிக்கும், துர்க்கைக்கும், சீதைக்கும், கர்ணபுத்ரிக்கும், காந்தாரியின் மக்களுக்கும் விடுதலையைத் தர விரும்புகின்றன கவிதைகள். கிடைத்தால் மகிழ்ச்சி தானே.

    போகிற போக்கில் பூம்பூம் மாடுகள் என்று தமிழ்க் கவிஞர்களுக்கு குத்து விட்டிருக்கிறார். உண்மையாகவே  நேற்று ஒரு சம்பவம். வீதியில் ஒரு அம்மா தன் குடும்பத்தோடு மாட்டிற்கு பூஜை செய்து கொண்டிருந்தார். நான் கூட பூம்பூம் மாடென்று நினைத்தேன். அது பசு. மாட்டுக்காரர் அழைத்து வந்து இருந்தார். அந்த அம்மா பசுவின் மேல் பொன்னாடை போர்த்தி கன்றுக்கு என்று மற்றொரு பொன்னாடையைக் கொடுத்தார். இனி நான் இதை மறப்பதெப்படி. 

  "முட்டுகின்ற மாடுகளைவிட

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் 

மாடுகள்...

'கால்' நடைகளின் அவமானம் 

ச்சே.."

     இதில் நான் சேர்த்தி இல்லை என்று நம்புகிறேன். 

   கவிதை என்னவாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.

   "இருளின் நிர்வாணத்தில் கவிதை 

தன்னை அழகூட்டிக் கொள்கிறது

கவிதை இருளின் ஆன்மா

...

கவிதையை எப்போதும் பகலில் வாசிக்காதீர்கள்

கவிதை இரவின் மொழி."

     நவராத்திரி முதல் நாள் ஆரம்பித்த கவிதைத் தொகுப்பை இறுதியாக இப்படி முடித்திருக்கிறார்.

 "சிவப்பு வெள்ளையின்

மூத்திரம் குடி

போடா போ..

நான் கருப்பி

கறுப்பு என் நிறம் மட்டுமல்ல!"

     எனக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது. யுத்தப் பேரிகை ஆயத்த அழைப்பு. புரியவும், ரசிக்கவும் அது இடம் கொடுப்பதில்லை. 

    அஃகேணம் கவிதைகள் என் இரவுகளின் துணைகளில் ஒன்றாகி விட்டது. வாழ்த்தும், அன்பும்...


   - எஸ்தர் ராணி


ஃ கவிதைகள்

புதியமாதவி

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 

3 comments:

  1. சிறப்பு... தற்போது தான் வாசித்தேன்.

    ReplyDelete
  2. தங்கள் கவிதை எள்ளி நகையாடுவோனைத் தலைகுனியத்தானே வைக்கும்!



    ReplyDelete
  3. சுருக்கமான பகிர்வு. தோழர் புதிய மாதவி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். எனினும் அக்கமகா தேவியின் குரல் எதிர்பின் குரலோ கலகக்குரலோ அல்ல மாறாக முழு நிர்வாணமாக தன் கூந்தலையே ஆடையாக்கி தன்னை முற்றாக சென்னமல்லிகார்ச்சுன சிவனுக்கே ஒப்புக் கொடுத்து விட்டவர். எனினும் வாழ்த்துக்கள்

    ReplyDelete