Friday, April 26, 2024

பாரதியும் எங்க ஊரு பாட்டுக்கிறுக்கனும்

 பாரதியும் எங்க ஊரு பாட்டுக்கிறுக்கனும்.




பாரதியை அவர் வாழ்ந்தக் காலத்தில் யாரும் கொண்டாடவில்லை யாரும் கவனிக்கவில்லை, யாரும் மதிக்கவில்லை என்று சொல்லப்படுகின்ற எந்த குற்றச்சாட்டுகளோடும் எனக்கு உடன்பாடு இல்லை. பாரதியை அந்தக் காலத்தில் அவரைச் சுற்றி இருந்த கல்வி சார்ந்த சமூகம் அக்கறையோடு பேணிப் பாதுகாத்திருக்கிறது. புதுச்சேரியில் பாரதி குடியிருந்த அந்த வீட்டுக்கு போயிருந்தப்போது இந்த எண்ணம் எனக்கு மேலும் உறுதியானது. அந்த வீடு இப்போதும் கூட பலருக்கு எட்டாதக் கனவு. நம்ம ஆளு நல்லாத்தான்யா வாழ்க்கையை அனுபவிச்சு இருக்கிறாரு! பிறகு எதுக்கு இவங்க எல்லாரும் பாவம் பாரதி ,பாவம் பாரதி! என்று அடிக்கடி பாவப்பட்டு கொள்கிறார்கள்?!

சரி.. அவர் காலத்தில் அவர் எழுதியதை அவருடைய சமூகம் கவிதை என்று ஏற்றுக்கொண்டது. இதைவிட ஒரு படைப்பாளனுக்கு வேறு என்ன வேண்டும்? 


பாரதியின் காலத்தில் வாழ்ந்த என்னுடைய சின்ன தாத்தா.. அவரை நாங்கள் வாத்தியார் தாத்தா என்றுதான் அழைப்போம். அவர் அந்தக் காலத்து எட்டாம் வகுப்பு. வில்லிசை பாடல் பாடுவதில் வல்லவர். எந்த இசைக்கல்லூரியில் போய் எந்தக் குருவிடமும் அவர் இசையைக்கற்றுக் கொள்ளவில்லை. தானே இட்டுக் கட்டி தனக்குத் தெரிந்த நாட்டுப்புற தெய்வங்களின் கதைகளை பாடிக்கொண்டே இருப்பார்! 

அவருடைய பொருளாதார நிலைக்காக அவரைப் பம்பாய்க்கு அழைத்து வந்து இங்கு இருக்கும் பாடசாலையில் வாத்தியாராக நியமித்தார்கள். ஆனால் அவருக்கு இந்த வேலை செய்வது அதுவும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வது இதெல்லாம் ஒத்து வரவில்லை. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பம்பாயிலிருந்து கிளம்பி போய்விட்டார். ஊர் ஊராக சென்று பாடிக் கொண்டு அலைந்தார். அப்படி தன்னோடு பாடிய தன்னுடைய பாடலை ரசித்த ஒரு பெண் அவரோட கூடவே வந்து விட்டாள். ஏற்கனவே திருமணம் ஆன தாத்தா, இரண்டாவதாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த இரண்டாவது பெண்ணுக்கு பிறந்தக் குழந்தைகள் கிடையாது. அவருடைய மூத்த மனைவி குழந்தைகள் ஏன் எங்கள் ஊரே அவரை "கிறுக்கன்"என்று சொல்லி ஒதுக்கி வைத்தது. தன் வயதான காலத்தில் தன்னோடு வந்த அந்தப் பெண்ணோடு சேர்ந்து எப்போதும் கருக்கலிலும்  விடியலிலும் அவர்கள் இருவரும் அவர்களின் குடிசையில் பாடிக் கொண்டே இருப்பார்கள்.!

அவர்கள் இருவரும் பாடிப் பாடியே வாழ்ந்தார்கள். பாடுவதிலேயே தங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டார்கள். தூங்குவதற்கு கூட அவர்களுக்கு பாடல் தான் உதவி இருந்திருக்கும்! ஆனால் கடைசி வரை அவரைச் சுற்றமும் ஊரும் ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. இப்படியாக எங்கள் ஊரில் எங்கள் உறவில் ஒரு மாபெரும் கலைஞன் ஒரு  கவிஞன் அனாதையாக வாழ்ந்து மடிந்தான்.

💥

பல தருணங்களில் பல இடங்களில் நாம்  எங்கு இருக்கிறோம்? என்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள்,,? சில இடங்களில் ஒட்ட முடியாமல் அந்நியப்பட்டு நிற்கும் என்னை..

எப்போதோ வாழ்ந்து மறைந்த அந்தப் பாட்டுக்கார கிறுக்கனுடன் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். 

எழுத்தோடு வாழ்தல் என்பது ஏன் என்னைப் போன்றவர்களுக்கு இவ்வளவு பெரிய போராட்டக் களமாக இருக்கிறது?!

எனினும் 

வாழ்தல் இனிது. 

எழுத்தோடு எழுத்தாக வாழ்தல்

அதனினும் இனிது.

1 comment:

  1. வாழும் போது மதிக்காத சமூகம்தான் அவர்களின் மறைவுக்கு பின்னால் பாராட்டுக்கூட்டம் நடத்தும்.இது தான் அன்றும் இன்றும் என்றும் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் அங்கிகாரம். இதில் எனக்கு மகிழ்ச்சி நானும் அவரை பார்த்தா நினைவு இருக்கிறது . அவருக்கும் எம் புகழ் அஞ்சலி🌺

    ReplyDelete