Sunday, July 17, 2022

பச்சையம் துளிர்க்கும் கார்காலம்

 

 தூறல்

சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.

மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு

தன் பசி அடங்காமல் படுத்திருந்தது.

மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள்

மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன.

வேர்களின் தாகத்தைத் தணிக்கும்

இலைகளின் ஈரம்

சொட்டுசொட்டாக வடியும் இரவு

சலனமின்றி தூங்கும் மலை.

கனவுகள்  விழித்திருப்பதோ தூங்குவதோ

பாறைகளைத் தொந்தரவு செய்வதில்லை.

காற்றின் அசைவுகள் கல்மீது படிவதில்லை.

சாரல் அடித்து அடித்து அருவி விழிக்கிறது.

கனவுகள் குடைப்பிடித்து

வெளியில் வருகின்றன.

குடைப்பிடிப்பது யாராக இருந்தாலும்

நனைவது மட்டும் நானாகவே இருக்கிறேன்.

இலைகளின் மழைமொழி  இசையாகி..

என்னை மீட்டிக்கொண்டே இருக்கின்றது

மழைமொழி என்னை எழுதுகிறது.

மழைக்காலம் என்னை வாசிக்கிறது.

 

புயல்

த்த்த்தட தட த்த்த்தட தட

ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஸ்ஸ்….

டக்க் டக் டக்க் டக்க்

ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூஊஊஊஊஊ

ட்டமீற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜன்னலை இழுத்து மூடு.

இடி இடிக்குது.

திரைச்சீலையை இழுத்துவிடு.

கர்ப்ப கிரஹத்தில் மின்னல் வெளிச்சம்..

காற்றில் அசையும் தீபத்தின் நாதம்..

தேவி… கருவறை திறக்கிறது.

பரவசமாகி அவரவர் வேண்டுதல்களுடன்

அவள் மடியை நிறைக்கிறார்கள்.

குமரி அவள்.

கடல் அலைகள்  தாலாட்டும் குமரி அவள்.

தொட்டில் கட்டித் தாலாட்ட முடியாமல்

தவிப்பது ஏன்?

பனிக்குடம் உடைந்த ஈரப்பிசுபிசுப்பு தரை எங்கும்.

கர்ப்பஹிரகத்தில் இருளின் வெளிச்சம்.

புயலுக்குப்பின் சலனமின்றி கடல்

அவள் பிரசவ வேதனையை

தனக்குள் வாங்கிக்கொள்கிறது.

அவள் எட்டுக்கைகளாலும் தன் பிள்ளைகளை

தூக்கி எடுத்து தழுவி முத்தமிடுகிறாள்.

கண்ணனைக் கூடையில் சுமந்து கொண்டு

ஆற்றுவெள்ளத்தை யாரோ கடந்து செல்கிறார்கள்.

கடல் அலைகளை

நார்நாராக கிழித்து எடுத்து கூடை செய்து

மின்னலை விரித்து மெத்தையாக போர்த்தி

தன் பிள்ளைகளை மிதக்கவிடுகிறாள்..

சுறா மீன்களும்  கடல்குதிரைகளும்

நட்சத்திரகைகளும் வலம்சங்கு முகங்களும்

கூட்டணி சேர்ந்து கூடையைக் கவுத்துவிடுகின்றன.

உப்பு நீருக்குப் பழகிப்போனவனும்

கடல் அலைகளில் நீந்த தெரிந்தவளும்

தீவுகளைத் தேடி பயணிக்கிறார்கள்.

குமரியின் மூக்கூத்தி வெளிச்சத்தில்

தடுமாறும் மின்னல்

கடலைப் பார்த்தால் அவள் கன்னிமைக்கெடுமென

கட்டுப்பாடுகள்..

அவளுக்கும் கடலுக்குள் நடுவில்

ஆயிரம் கண்டங்கள்

மழைத்துளிகள் மீட்டுவரும்

நினைவுகளின் வாசனை

கடற்கரையில் மோதி  அலைந்து திரிந்து

முகவரியைத் தேடும் அனாதைகளாக

கரை ஒதுங்கி இருக்கின்றன கிளிஞ்சல்கள்

 

வெள்ளம்

மழை பொழிந்த அந்த  நள்ளிரவில் கடலின் சீற்றம்.

அலைகள் பாறைகளின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி

ஆவேசம் கொண்டு தழுவுகின்றன.

காலடியிலிருந்த மண்..

குழிப்பறித்து இழுத்துச் செல்லும் வேகம்

என்னால் நிற்கமுடியவில்லை.

மழை வெள்ளத்தில் சிக்குண்டு

அடித்துச் செல்லப்பட்ட

தண்டவாளங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன.

நீர்வழிப்படூஉம் யானும்..

கடல் அலையும் மழை வெள்ளமும்

கட்டுக்கடந்காக் காமத்துடன்

கட்டிப்பிடித்து முத்தமிடுகின்றன.

கோடைக்காலத்தின் புழுக்கம்

சூடு தணிக்கும் ஆவேசம்

கடற்கரையைக் காணவில்லை.

யாரும் கடலுக்குள் போகவேண்டாம்.

படகுகளுடன்  வலைகளும் பதுங்கிக்கொள்கின்றன.

கடலடியிலிருந்து மீனராசா எட்டிப்பார்க்கிறான்.

ஜீவராசிகளின் கூடல்மொழி ஓசையின்றி எழுத்துகளின்றி

மழை நீரில் மிதந்து வருகிறது.

அதிலிருந்து வடியும் ஒவ்வொரு துளியாக கையிலெடுத்து

பசலைத் தணிக்கிறேன்.

பாறைகளுக்கு இடையில் கனன்று கொண்டிருந்த

அடுப்பின் சூடு ஒருவழியாக தணிகிறது.

அடுப்பிலிருந்து பொங்கி வழிந்தப் பால்

பாத்திரம் தாண்டி விளிம்புகள் கடந்து

வழிந்து கரைந்து மழைவெள்ளத்தில் மிதந்து

கடல் நீரில் நுரையாகிப் போனதறியாமல்

பாத்திரத்தை மூடிப் பத்திரப்படுத்துகிறேன்.

கடல் அலையில் பால் நுரைகள்

தீவுகளில் மோதும் பால்திட்டுகள்..

மீனராசா பாலருந்தி பால் அருந்தி

மயக்கம் தெளிகிறான்.

மீண்டும் மீண்டும்

பால்சொரியும் முலைகள் தேடி அலைகிறான்.

கடலடியில் அவன் அந்தப்புரத்து மச்சக்கன்னிகள்

அவன் பசியாற்றமுடியாமல் தவிக்கிறார்கள்.

பசியின் வேட்கை..

அவனைத் தின்று துப்பிய சக்கையாக

படுக்கையில் கிடக்கிறான்.

மச்சக்கன்னிகள் தீவுகளிலிருந்து கொண்டுவந்த பச்சிலைச்சாறுகள்

அவன் உதட்டோரத்தில் வழிந்து

கடல்மேல் விழுந்த கரும்பாறைகளாக மிதக்கின்றன.

பாய்மரத்தின் உச்சியில் கட்டியிருந்த திசைக்காட்டி

தலைகீழாக சுழல்கிறது.

திசையறியமுடியாமல் படகுகள்

கடலுக்கு நடுவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதை

கடல்குதிரைகள் வேடிக்கைப் பார்க்கின்றன.

துருவ நட்சத்திரம் கதவடைத்துக் கொள்கிறது.

கார்மேக கூட்டத்தின் படையெடுப்புக்கு அஞ்சி

பிற நட்சத்திரங்களும் இடம் மாற்றிக்கொண்டு

வேறொரு பூமிக்குப் போய்விடுகின்றன.

மச்சக்கன்னிகள் மீனராசாவை கைகளில் ஏந்தி

கடற்கரைக்கு வருகிறார்கள்.

நட்சத்திரங்களில்லாத ஆகாயம்

நிலவில்லாத மேகம்

இருளைத் தின்று துப்பிய கடல்வெளி

மழை நீரில் மிதந்துவரும் காலம்

கடல் அலையும் மழை வெள்ளமும்

ஒன்றை ஒன்று  கூடி புணர்ந்து

ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடி

ஒன்றில் ஒன்றாக முடியாமல்

வெள்ளக்காடு..

மழை வெள்ளத்தில் மீனராசா

கடல் அலையில் அவள்..

இடம் மாறிப்போன படகுகள்

மீண்டும்

தீவுகளை  வந்தடையுமோ?

இடி மின்னலுடன் மழை..

சலனமின்றி படுத்திருக்கும் அவன்..

அலைகளில் நர்த்தனமிடும் ஆதிசேஷன்..

புல்லாங்குழலோசையில் மிதக்கும் பிருந்தாவனம்.

அவள் போர்த்தியிருக்கும் போர்வையை

மெல்ல விலக்கி இருளின் வெளிச்சத்தில்

மின்னும் மீன்செதில் மேனியை

அதிசயமாகப் பார்க்கிறாள்.

தூரத்தில் கடல் அலைகளில் மீதேறி

கை அசைத்து செல்கிறான் மீனராசா.

கடல் நீர் வற்றுவதில்லை.

அடுத்த மழைக்கும் அவன் வருவான்.

ஆனால், அந்த மச்சக்கன்னிகள் வரவிடுவார்களா?

கடலைக் கடைந்தவன் விஷமேறிச்  செத்துப்போவதற்குள்

அமுதருந்த  வந்துதானே ஆகவேண்டும்!

கடலில் ஒரு சின்னப்புள்ளியாக

அவன் மறையும்வரை காத்திருக்கிறேன்..

போர்வையை விலக்கி சன்னலை அடைக்க

பிரயத்தனப்படுகிறேன்.

படுக்கையிலிருந்து எழும்போதுதான்

கவனிக்கிறேன்.

என் கால்கள் இருந்த இடத்தில்

மீனராசாவின் வால் நீண்டு நெளிகிறது.

மழை வெள்ளத்தில் நீந்தி நடனமாடுவேனா..

முலைகள் தேடி அவன் வருவானே..

எதைக்கொண்டு அவன் விஷம் தணிப்பேன்!

மீனராசா… தேடித் தேடி அலைகிறான்,

துடிக்கிறான்.. தவிக்கிறான்..

கடலில் நீந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து

மச்சக்கன்னிகள் சிரிக்கிறார்கள்.

 

இடி மின்னல்

அர்ஜூனா அர்ஜூனா..

மின்னல் பாய்கிறதே..

கருவறை கருகிய வாசனை.

உடைந்தப் படகுகளின் துடுப்புகள்

கடலில் மிதக்கின்றன.

குமரி அவள்.

சுமப்பதை பிரசவிக்க முடியாமல்

கடலுக்குள் விழுந்து தற்கொலை.

மடி நிறைத்த அலைகள்

தொட்டில் கட்டித் தாலாட்ட

முடியாமல் கதறி அழும்

மழைக்காலம்.

அவள் மொழியை ரகசியமாக

மேகக்கூட்டத்தில்

பத்திரப்படுத்துகிறது.

( நன்றி : கதவு இதழ் 38 ஜூலை 22)

No comments:

Post a Comment