Tuesday, February 1, 2022

கவிதைகள் விற்பனைக்கல்ல

 கவிதைகள் பிச்சை எடுப்பதற்கு அல்ல.

கவிஞன் வேலைப்பார்க்க கூடாது என்று
எந்த இடதுசாரி தத்துவம் சொல்லி இருக்கிறது!
எந்த இசம் கவிஞனுக்கு கொம்பு முளைத்திருக்கிறது
என்று பேசி இருக்கிறது..
புலவர்கள் அரசனைப் புகழ்ந்துப் பாடுவதும்
அரசன் அவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதும்
நிலவுடமை சமூகத்தின் அதிகாரவெளி..
இன்றும் அதன் எச்சமாகத்தான் கவிஞர்கள் கூட்டம்
தலைவர்களைப் புகழ்ந்துப் பாடி சன்மங்களுக்காக
காத்திருக்கும் கவியரங்க மேடைகள்..
“கவிஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படுமா?”
என்று அதிமேதாவித்தனமான கேள்விகளை என்
தோழர்களும் கேட்பதுண்டு.
இந்த நாட்டில் உழவனையும் தொழிலாளியையும்
கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா என்ன?”
என்று அவர்களிடம் கேட்பதில் பயனில்லை.
காரணம் அவர்களின் கவிதைகளில்
ரத்தம் கொப்பளிக்க புரட்சிகள் வெடித்திருப்பதால்
இன்னும் இன்னும் புரட்சிகள் வெடிக்காமலிருக்க
மவுனமாக கடந்து சென்றிருக்கிறேன்.
நான் கவிஞன்.. என்னைக் காப்பாற்றவில்லை என்றால்
தமிழ்ச் செத்துவிடும், நாட்டில் புரட்டி வெடிக்காது,
என்றெல்லாம் பயமுறுத்தல் வேறு நடக்கிறது!
இதெல்லாம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
செம்மொழி தமிழ் மொழி கவிதையுலகத்தில் தான்
இந்தப் பெருந்தொற்று பரவி இருக்கிறது.
இது சங்க காலத்தின் தொடர்சி என்று கூட
ஆய்வு செய்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம் நீங்கள்.

எனக்கு இத்தருணத்தில் தந்தை பெரியாரின்
குசேலன் விமர்சனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
குசேலனுக்கு 27 பிள்ளைகள்.
அவன் உதவி என்ற பெயரில் பிச்சை எடுக்க
வந்திருப்பது ஒரு பெரிய மோசடி .
ஓர் ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பார்த்தாலும் கூட
20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 .
இத்தனை பிள்ளைகள் உழைக்கிற வயசில் இருக்கும்
அப்பன் அவர்களைக் காப்பாற்ற பிச்சை எடுப்பது
மோசடி அல்லாமல் வேறு என்ன?
என்று உரக்கச் சொன்னவர் பெரியார் மட்டும்தான்.
அதுவரை குசேல புராணத்தை கிருஷ்ணபிரானின் நட்பாக கொண்டாடிக்கொண்டிருந்தக் கூட்டமிது.
சரி அதைவிடுங்கள்..
குசேலன் பிராமணன். அவன் கையேந்தி கேட்டுவிட்டால்
அரசன் கொடுத்தாக வேண்டும்.
இது மனு நீதி. அரச தர்மம்.
புலவர்கள் அரசனைப் பாடினால்
அவன் பரிசு கொடுத்தாக வேண்டும்.
இது தமிழ் நீதி..
இதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன
இருக்கிறது என்று இடதுசாரிகள் தான்
தத்துவ விளக்கம் சொல்ல வேண்டும்!

கவிஞனுக்கும் அதிகார அரசு பீடத்திற்குமான உறவு
முடியரசு காலத்தின் எச்சம்.
நிலவுடமை சமூகத்தின் வடிவம்
. உடல் உழைப்பை விட கவிதை உன்னதமானது
என்று கொண்டாடும் மன நிலையில் இருக்கிறது
உடல் உழைப்பு செய்பவனை கீழ்மைப்படுத்தும்
மேட்டிமைத்தனம்.
கவிதைகள் பிச்சை எடுப்பதற்கு அல்ல.
உழைப்பின் வேர்வைத்துளிகள் இல்லாத கவிதை
முதலாளித்துவத்தின் ஆபரணம்.

4 comments:

  1. அருமையான பதிவு, புதிய நோக்கு,அய்யா ஆட்சியில் அம்மா உச்ச பட்சமாக திட்டித் தீர்த்த ஒரு புலவர் கூட்டம் அம்மா ஆட்சிக்கு வந்ததும் அப்படியே டேக் டைவர்ஷன் எடுத்து அம்மாவின் புகழ்பாடியது. இப்போது மீண்டும் பல்டி அம்மாவையே தெரியாது என்பதுபோல் தளபதி சின்னத்தளபதிக்கு வாழ்த்துப்பா பாடுகிறது. புலவர்க்கு இதெல்லாம் சகஜமப்பான்னு போகவேண்டியதுதான்.

    ReplyDelete
  2. அருமை அம்மா

    ReplyDelete
  3. வியர்வைத் துளிகளை மறந்துவிட்டு கவிஞன் வாழ்ந்துவிட முடியாது. மறந்தவன் கவிஞனாகவும் இருக்க முடியாது

    ReplyDelete
  4. உண்மையை சொன்னீர்கள்

    ReplyDelete