Saturday, July 24, 2021

அவள்மொழி - திருவந்தாதி

 கையறு நிலையில் கடவுள் தேவைப்படுகிறார்.



இங்கே தேவைகள் மட்டுமே
அதன் இருத்தலைத் தீர்மானிக்கின்றன.
தேவை ஏற்படவே இல்லை என்றால்
தேவன் எதற்கு? தேவி எதற்கு?
அவர்கள் குடியிருக்க கோவில் எதற்கு?
நேற்று தேவைப்படாத கடவுள்
இன்று தேவைப்படுகிறான்.
இன்று தேவை இல்லை என்பதால்
நாளைய தேவையை தீர்மானிக்க முடிவதில்லை.
இதில் உருகி உருகிக் கரையும் பெண்ணுக்கு
இறுதிப்புகலிடமாக இறைவனடி இருப்பதுதான்
ஆபத்தில்லாத முடிவு.
பெண்ணை ஒவ்வொரு காலக்கட்ட த்திலும்
அந்த முடிவை நோக்கி இச்சமூகம்
துரத்திக்கொண்டே இருக்கிறது.
எல்லா வாசல்களையும் அடைத்துவிட்டு
காவலுக்கு ஆயிரம் அறம்பாடி நிறுத்திவிட்டு
அவளைத் துரத்துகிறது.
அடிபட்டு அடிபட்டு கதறித்துடித்து
அவள் ஓடிவரும்போது திசைகள் தெரிவதில்லை.
வெளிச்சத்தில் அழத்தெரியாதவள் அவள்.
இருளில் ஓடுகிறாள்.
கூட்டமாக சேர்ந்து அவளை அவர்கள்
துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் பாதையில்தான் நீ சென்றாக வேண்டும்
என்று அவர்கள் சொல்வதில்லை.
ஆனால் அந்தக் குறுகலான ஒற்றைப் பாதை தான்
அவள் முன் இருக்கும்படியாக பார்த்துக்கொள்கிறார்கள்.
தப்பித்தால் போதுமென அவள் ஓடிவருகிறாள்.
அவள் ஓட ஓட .. பாதை மேலும் மேலும் குறுகலாகி
அவளை அடைத்துக் கொள்கிறது.
"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேனே"
விலகிச்செல்லும் அவனிடம் நெருங்கி நெருங்கி
வருகிறது அவள் காதல்மொழி.
"ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ…"
கதறுகிறாள் அவள்.
அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் வேதனை அவனை எதுவும் செய்யவில்லை.
அவளிருந்த இட த்தில். வேறொருத்தியை எளிதாகப்
பொருத்திவிட முடிகிறது அவனுக்கு.
“இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -..
போகட்டும அதனாலென்ன..?
அவள் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்.
"அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்…
என்று இந்தப்பிறவியில் ஆளாக முடியாமல் போன
வேதனையை ஆற்றிக்கொள்கிறாள்.
"எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று"
பேதலிக்கிறது அவள் மனம்..
இன்புற்றேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்கிறாள்.
தனக்குள் இருக்கும் அவனை
அவனே நினைத்தாலும் எடுத்துவிடமுடியாது?
அவன் எனக்குள் இருக்கிறான்.. இருப்பான்..
தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்.

இரவும் பகலும் வருகின்றன.
ஊர்க்கோடியில் அவள் ஒதுங்கிக்கொள்கிறாள்.
நினைவுகளில் வாழ்வதும் கனவுகளில் விழிப்பதும்
இரவில் எரியும் பிணங்களைத்
தொந்தரவு செய்கின்றன.
பிணம் எரிப்பவன் அருகில் வருகிறான்.
என்னவேண்டும் தாயே என்று
அவள் முகம் பார்க்கும்போது
காலத்தின் வற்றிய முலைகளிலிருந்து
பால் சுரக்கிறது..
தாகம் தணிக்கிறான்.

#அவள்மொழி_புதியமாதவி

No comments:

Post a Comment