Saturday, February 24, 2018

பின்னங்களும் தலைகீழ் விகிதங்களும்


Image result for will kamal rajini take dmk aiadmk votes

அரசியல் திரையரங்கில் கமல் ரஜினியின் பாத்திரம் என்ன?
எதற்காக இத்திரைப்படம்?
யார் இயக்குகிறார்கள்?
யார் தயாரிப்பு?
மக்கள் கொடுக்கப்போகும் டிக்கெட்டுகளின் விலை என்ன?
சில பின்னங்கள், சில தலைகீழ்விகிதங்கள்
கூட்டல் வகுத்தல் பெருக்கல் ஈவு சுழி
அல்ஜீப்ரா என்ற கணக்குகள் ஓடிக்கோண்டிருக்கின்றன.
சில பின்னங்கள் தலைகீழ்விகிதங்களாகிவிடலாம்
என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன ..
ஆட்டம் எப்படி நடந்தாலும் மகாஜனங்களுக்கு
ஈவு கிடைக்கப்போவதில்லை.
ஏற்கனவே இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 
கடனாளியாகத்தான் பிறக்கிறது !
கமல் குறித்து தேவைக்கு அதிகமாகவே எழுதியவர்களில்
 நானும் ஒருத்திதான். என்ன செய்வது..? என்னைச் சுற்றிய ஊடகமும் சமூக வலைத்தளமும் என்னையும் இயக்கும்
வல்லமைப் படைத்தவை தான்.
எதற்காக கமலும் ரஜினியும் இப்போது அரசியல் களம்
இறங்குகிறார்கள்? அல்லது களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்?
உண்மையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா?
திமுக தலைவர் கலைஞரின் அரசியல் செயலற்ற உடல்நிலையும்
 ஜெ யின் மறைவும் அவர் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில்
ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு பிரச்சனைகளும் கோஷ்டிகளும் 
அரசியல் தளத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதற்கான
 புள்ளியைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறதா?


அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும் போதெல்லாம்
 திமுக மற்றும் அதிமுக என்று எதாவது ஒரு திராவிட அரசியல்
கட்சியுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து 
தேர்தலைச் சந்தித்ததன் மூலம் திராவிட அரசியல் 
கட்சிகளுக்கான மாற்று அரசியலாக இருக்கமுடியாத
அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன
அதனால் கமலும் ரஜினியும் திராவிட அரசியல் கட்சிகளுக்கான 
மாற்று அரசியல் சக்தியாக ஊடகத்தால் 
ஊதிப் பெரிதாக்கப்பட்டு ஒலி ஒளி காட்சிகளில்
வலம் வருகிறார்கள். ஆனால் இது சாத்தியமா..?
2016 சட்டசபை தேர்தல் ஓட்டுவிகிதத்தைக் கவனிக்கவும்.
அதிமுக 41% ஓட்டுகள் 176 லட்சம்
திமுக 31% ஓட்டுகள் 136 லட்சம்
மொத்த ஓட்டுகள் 429 இலட்சம்
429 -136-176 = 117
இதில் வருகிற சட்டசபை தேர்தலில் புதிதாக 
ஓட்டுரிமைப் பெறும் வாக்காளர்கள் குறைந்தது 20 இலட்சம் என்று வைத்துக்கொண்டாலும்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 450 இலட்சமாகும்.
ஓட்டுப் போடாதவர்களும் வரும் தேர்தலில்
 வாக்களிக்க வந்தால் எல்லாம் சேர்த்து மொத்த 
வாக்காளர்கள் 500 இலட்சமாகலாம்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
 திராவிட அரசியல் கட்சிகள் தங்களிடம் கணிசமான 
வாக்காளர்களையும் கட்சி உறுப்பினர்களையும்
 தக்க வைத்திருக்கின்றன.
அதிமுக ஓட்டுகளைப் பிரிப்பதற்கு அவர்களே போதும்!
திமுக ஓட்டு விழுக்காடு 31% என்பதுதான் தற்போது
தேர்தல் களத்தில் பெரிய எண்! 
கமலும் ரஜினியும் திமுகவின் ஓட்டுகளைக் கணிசமாகப் 
பிரித்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இதில் கமல் அதிமுக ஆட்சியை மட்டுமே 
சிஸ்டம் சரியில்லை என்று ஒரே போடாக போடுகிறார். 
திமுக ஆட்சியில் கமலைப் பொறுத்தவரை 
சிஸ்டம் ஒழுங்காக இருந்தது! 
இந்த நிலைப்பாடு 
வெளிப்படையாக தெரிந்தாலும் அவரை திமுக நம்புகிறதா? இல்லை ! 
ரஜினியின் ஆன்மீக அரசியலும்
 ரஜினி ரசிகர் மன்றமும் ஓட்டுகளைப் பிரிக்கும்
 வல்லமை கொண்டவை.
இந்திய தேர்தல் முறை ஒவ்வொரு தொகுதியிலும்
 மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குப்பெற்றவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் மெஜாரிட்டி எலெக்ஷன் முறையைப் பின்பற்றுகிறது.
அதாவது 100 வாக்காளர்கள் மொத்தம் உள்ள தொகுதியில்
திமுக 30
அதிமுக குழு 31
இவர்கள் மொத்தம் பெற்ற வாக்குகள் 61 ஆக இருந்தாலும்
 அத்தொகுதியில் 31.5 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெற்றவராகிவிடுவார்.
எனவே திமுக வும் அதிமுக வும் அவரவர் வாக்குகள் கணக்கை மிகச்சரியாக துல்லியமாகக் கணக்கிட வேண்டும். 
அதிமுக உள்கட்சி பிரச்சனையில்
கணக்கில் கோட்டைவிட்டுவிடுவதற்கான 
சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.
 திமுக வின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள்
கலைஞரைப் போல இந்தக் கூட்டல் கழித்தல் 
கணக்குகளையும் தன்னுடைய ஊகக்கணக்கு 
அதாவது எதிர்காலம் குறித்த ஒரு ஊகம் 
ஆகியவற்றை சரியாகக் கணிப்பாரா ? அல்லது
வாரிசு அரசியல் போராட்டத்திற்கே முன்னுரிமைக்
 கொடுப்பாரா? தெரியவில்லை! 
கமலும் ரஜினியும் அவர்கள் பெரிதும் விமர்சிக்கும் 
திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளின் 
ஓட்டுகளைப் பிரிக்காமல் தங்கள் அரசியல் கடையில்
 வியாபாரம் நடத்த முடியாது.
திமுக , அதிமுக இரு கட்சிகளுமே 
திரைப்பட நடிகர்களுக்கான கவர்ச்சியை
 மற்றவர்களை விட அதிகமாக அறிந்தவை.
அதனால் தான் தங்கள் கட்சிகளின் ஓட்டுகளை 
இவர்கள் பிரிப்பார்கள் என்ற அச்சம் இருக்கிறது.
காங்கிரசு கட்சியின் ஆட்சியை அடியோடு விரட்டிய
திமுக வின் அன்றைய தம்பியர் படை , திமுக வின்
ஓர் அங்கமாக இருந்து தன் ரசிகர் மன்றத்தை
 வளர்த்துக் கொண்டு தொடர்ந்து அரசியல் சினிமா
 என்ற இரட்டை குதிரையில் பயணித்த எம் ஜி ஆர் 
என்ற நடிகரின் பொதுஜனத் தொடர்பு,
நேற்றுவரை விலை உயர்ந்தக் காரில்
இறங்கி ரசிகர்களைப் பார்க்கும் போது கை அசைத்துவிட்டு 
சென்ற கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறதா,,? 
பொதுஜனத் தொடர்பு என்பதில் எம் ஜி ஆர்
 உண்மையில் மக்கள் திலகமாகவே மிகவும் கவனத்துடன் திரையிலும்
அரசியலிலும் (நடித்தார் ?)தன் பாத்திரத்தை
 சிரத்தையுடன் வடிவமைத்துக் கொண்டார்.
அதற்கான காலம் இன்றைய ரஜினி கமலுக்கு இருக்கிறதா..?
டுவிட்டர், முகநூல் , வாட்ஸ் அப் குரல்களைத்
 தாண்டியது தேர்தல் வாக்காள பெருமக்களின் ஜனத்திரள்.
திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான
 வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில்
ரஜினியும் கமலும் திமுகவுக்கு தான் வேட்டு வைக்க
களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள்!
அதனாலேயே கமலோ ரஜினியோ அரசியல் களத்தில்
வெற்றி பெற்று நாளைய தமிழக முதல்வர்
 ஆகிவிடுவார்களா என்றால் அதுவும் நடக்காது.
அப்படியானால் ஏன் இதெல்லாம் நடக்கிறது?
தமிழகத்தில் வலுவான மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது.
வலுவற்ற ஆட்சி, மைநாரிட்டி ஆட்சி நடக்க வேண்டும்.
தமிழகத்தின் கனிம வளங்களையும் 
கடற்கரை வளத்தையும் மொத்தமாக 
அயல்நாட்டுக் காரனுக்கு குத்தகைக் கொடுக்கவும் 
 விற்கவும் 
இந்தியப் பேரரசுக்கு எவ்வித தடங்கலும் இருக்கக்கூடாது.
காங்கிரசு செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனதை 
மோதியின் பிஜேபி அரசு செய்து காட்ட நினைக்கிறது.
அவ்வளவுதான். 
அப்பத்தைப் பங்கு வைத்த பூனையின் கதை
வெறும் கதையல்ல.

5 comments:

  1. எது எப்படியோ மக்கள் மாக்களாவது மீண்டும் உறுதி.

    ReplyDelete
  2. ஆக அரசியல் என்றோ வியாபாரமாகிவிட்டது😶😶😶

    ReplyDelete
  3. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  4. குழம்பிய இதே குட்டையில் தானே மீன் பிடிக்கவேண்டும்.

    ReplyDelete
  5. தேர்வு என்பது மக்கள்க்கு "தேர்வு " மட்டும் தான்.ஆட்டசியில் வந்த பிறகும்.. ரிசள்ட்டை எதிர் பார்க்கும் மாணவர்கள் போல காத்துக்கிட்டே இருப்பார்கள்...அப்புறம் வேறு எதாவது அதிர்ச்சி தகவல் வரும்போது ஓட்டு போட்டதையும் மரக்கலம்..

    ReplyDelete