Friday, December 19, 2014

சாதிகளற்ற அந்தமான்

அந்தமானில் ஒரு தீவு நீல் தீவு. அங்கு லக்ஷ்மண்பூர் பீச்சில் நான் சந்தித்த அழகுமலையும் அவர் சொன்ன செய்திகளும் என் வாழ்வில் மறக்க முடியாதது. இந்தப் புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் தான் அழகுமலை. உல்லாசப் பயணிகள் வரும்போது இளநீர் விற்பனை,மற்ற நாட்களில் தென்னைமரம் சார்ந்த பிற தொழில்கள். இந்திய அரசு அந்தமான் வாசிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு முன்னுரிமையும் கட்டணச்சலுகையும் உண்டு.
அழகுமலையின் சொந்தவூர் மதுரை அருகே குக்கிராமம். அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அந்தமானுக்கு வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார். வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. "மேடம், இங்க நிம்மதியா இருக்கோம், சாதிச்சண்டைகள் கிடையாது. ஏன், சாதி வேறுபாடுகள் கிடையாது. வங்காளிகளும் அதிகமாக வாழும் அந்தமான் தீவுகளில் மொழி இன வேறுபாடுகள் இல்லை. தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கருமாரி அம்மன், சிறுதெய்வங்கள் மற்றும் முருகன் கோவில்கள்.. இசுலாமியர்கள், கிறித்தவார்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் மதச் சண்டைகள் இல்லை... "
அவர் தன் கதையைச் சொல்ல சொல்ல என் கனவு உலகம் கண்முன்னே விரிந்தது. அந்தமானில் போர்ட் ப்ளேயரில் மட்டும் தான் தமிழ்ப் படிக்க வசதி.. அதனால் என்ன...? இந்தியும் ஆங்கிலமும் தான் பிற தீவுகளில் கல்விக்கூடங்களில்.. அதனால் தான் என்ன?
கவிதாசரண் அய்யா அவ்ர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது."தமிழ்ச்சமூகத்தின் சாதி இழிவைப் போக்க ஆகச்சிறந்த என் செம்மொழியையும் காவு கொடுத்துதான் பெற முடியும் என்றால்...!"
அழகுமலையின் அடுத்த தலைமுறைக்கு சென்னைக்குப் போக வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. காரணம், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கம்...
Like ·  · 

1 comment:

  1. ஆச்சரியம்தான் சகோதரியாரே
    இந்நிலை அப்படியே தொடரட்டும்

    ReplyDelete