இன்று கண்பதி உற்சவத்தின் கடைசி நாள். ஆனந்தசதுர்த்தி.
10 நாட்களும் பல்வேறு அலங்காரங்களுடன் இருந்த கண்பதியை
கடலில் சென்று கரைக்கும் நாள். மும்பையின் சாலைப்போக்குவரத்து
கண்பதி ஊர்வலமாக வரும் சாலைகள், அலைமோதும் கூட்டத்தை
ஒழுங்குப்படுத்த இரவும் பகலுமாக பணியில் நியமிக்கப்பட்டிருக்கும்
காவல்படை, சற்றொப்ப 50,000 போலீஸ்காரர்கள் இந்தப் பணியில்..
கேபிள் டிவியில் ஆனந்த சதுர்த்தியின் நேரடி ஒளிபரப்பு...
நாளை ஜூகு கடற்கரைக்குப் போனால், பரிதாபமாக காட்சியளிக்கும்
கண்பதியின் நிலை... இத்தருணத்தில் மும்பை கண்பதி உற்சவ நாளில்
நடந்த ஓர் உண்மை சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் கண்பதி வரும்
நாளில் என்னைக் கலங்கடிக்கிறது.
மும்பை , அன்றைய பம்பாய், வரதாபாய் என்று அழைக்கப்பட்ட
தமிழர் வரதராசமுதலியாரின் கட்டுப்பாட்டுக்குள்
இருந்தக் காலம். இன்றைய செண்ட்ரல் மாதுங்கா நிலையம் அருகில்,
ஒவ்வொரு ஆண்டும் வரதராசமுதலியாரின் கண்பதி 10 நாட்களும்
கோலாகோலமாகக் கொண்டாடப்படும். கண்பதி பந்தலில் அலங்காரம்
பார்க்க பலர் வரிசை வரிசையாக வருவார்கள். மாலையில் கலைநிகழ்ச்சி.
அந்தக் கலைநிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்துப் பாடாத பாடகரே
கிடையாது. வரதராச முதலியார் அழைத்து அதை நிராகரிப்பது என்பதெல்லாம்
நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. மாதுங்காவில் ஒவ்வொரு கடைகளிலும்
கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அத்துடன்
அந்தக் கண்பதி விழாவை ஒழுங்குப்படுத்தி எவ்விதமான அசாம்பாவிதமும்
நடக்காமல் முதலியாரின் ஆட்களே காவல்துறையாக மாறி கட்டுக்குள்
வைத்திருப்பார்கள். ஏன், சாலைப் போக்குவரத்து கூட அவர்களின்
கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். காலப்போக்கில் கடத்தல் தொழிலையும்
சட்டவிரோத செயல்களையும் செய்வதிலிருந்து விலகி தமிழர்ப்பேரவை
ஆரம்பித்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தக் காலக்கட்டம்.
அப்போது ஒரு முறை அவர் போட்டிருந்த பந்தல் நிகழ்ச்சி முடிந்தப்பின்
பின்னிரவில் தீக்கிரையானது. அச்செய்தி எங்கும் பரவி ஒரு பதட்டமான
சூழ்நிலை. விடிந்ததும் வரதராசமுதலியார் தன்னுடன் சாட்சிக்காக
விசிட்டர் அனந்த், மற்றும் அண்மையில் மறைந்த எழுத்தாளர் சீரவரிசை
சண்முகராசனுடன் பாந்திரா சிவசேனா தலைவர் பால்தாக்கரே இல்லம்
நோக்கி காரில் சென்றார். கூட வந்தவர்கள் வராந்தாவில் காத்திருக்க
இவர் மட்டும் பால்தாக்கரேவை சந்திக்கிறார். அன்று மாலை நிகழ்ச்சி
ஆரம்பிப்பதற்குள் எரிந்துப்போன பந்தல் மீண்டும் அதே போல எழுந்து
நின்றது. மாலையில் கலைநிகழ்ச்சி வழக்கம்போல நடந்தது.
சிவசேனாவின் பால்தாக்கரே நடத்திய இந்த பலப்பரீட்சையில்,
வரதராசமுதலியாரை அசைக்க முடியாது என்பதை உணர்ந்து
கொண்டார்.
வரதராச முதலியாரின் கதையை திரைப்படமாக்கி, கமலஹாசன் நடித்து
வெளிவந்த மணிரத்னத்தின் "நாயகன்" கூட பம்பாயில் நடந்த பனிப்போரின்
இந்த உச்சக்கட்ட காட்சியை தங்கள் கதைக்குள் கொண்டுவரவில்லை.
ஒருவேளை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு இந்தச் சம்பவங்கள்
தெரியாதோ என்னவோ!
இப்போதும் வரதராசமுதலியாரின் மகன் அதே மாதுங்கா செண்ட்ரல்
நிலையம் அருகில் கண்பதி விழாவைக் கொண்டாடுகிறார். சிறிய
பந்தல், கூட்டம் இல்லை. பந்தலில் ஓரமாக வரதராச முதலியாரின்
புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. இந்த ஓர் அடையாளம் மட்டும்தான்
இப்போது. ஆனால் அந்தப் பந்தலுக்குள் போகும் போதும் அந்தப்
புகைப்படத்தைப் பார்க்கும் போதும் எண்ணங்கள் அலைமோதுகின்றன.
அதில் சிலவற்றை எப்போதுமே எவரிடமும் சொல்ல முடியாதுதான்.
ஆனால் சொல்லுவதற்கும் நிறையவே இருக்கிறது.
படத்தில் காட்டாத உச்சத்தை தாங்களாவது சொல்லியிருக்கலாம்
ReplyDelete