Monday, August 18, 2014

செங்கோட்டையில் சில காட்சிகள்




கடந்த ஆக 15, (2014) செங்கோட்டையில் இந்திய பாரம்பரிய உடையில்
தன் சொந்த வசனத்தில் குண்டுகள் துளைக்காத கண்ணாடி கூண்டுகளை
விலக்கி வைத்துவிட்டு, தனக்கே உரிய மேடைப் பாணியில் இந்திய பிரதமர்
நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் முழங்கினார், முழங்கினார்.
மறுநாள், இணையங்களும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சமூக வலைத் தளங்களும் அவர் பேசிய வீர வசனங்களை வெவ்வேறு தலைப்புகளில்
துண்டு துண்டாக போட்டு தங்கள் பக்கங்களை நிரப்பிக்கொள்வதில்
போட்டிப் போட்டன. அந்தப் போட்டி இன்றுவரை.. தொடர்கிறது.

மோதி அவர்களின் தோரணை ரசிக்க கூடியதாகவே இருந்தது.
அவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.

பெண் சிசுக்கொலைக்கு எதிராக அவர் முழங்கியதும், உங்கள் பெண் குழந்தைகளை குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுங்கள்
என்று சொன்னதும், அடுத்த சுதந்திர தினத்திற்குள், அதாவது ஆக 15, 2015க்குள்
இந்திய பாடசாலைகள் அனைத்திலும் பெண் குழந்தைகளுக்கான கழிவறை வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னதும் ஒரு நிமிடம் என் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது , போங்கள். அப்படியே ஆடிப்போய்விட்டேன் நான்.

அத்துடன், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் கலவரங்களையும் அவர் கண்டித்ததும் அக்கொடுமைகளுக்காக அவர் வெட்கப்படுவதாக சொன்னதும்
தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் கைதட்ட வைத்தது.

ஆமாம், இதை எல்லாம் எப்படி செய்யப்போகிறீர்கள் மோதி?
நீங்கள் கொண்டாடும், நீங்கள் நம்பும் இந்து தர்மம்
என்ன சொல்கிறது?
பெண் சிசுக்கொலைக்கு காரணங்கள் என்ன?
இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்க கழிவறை இல்லாதது
ஒரு காரணமாக சில இடங்களில் இருந்திருக்கலாம்! ஆனால்
தொடரும் பாலியல் வன்கொடுமை ஆகட்டும், கலவரங்கள் ஆகட்டும்..
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த நாட்டில் நீங்கள்
வளர்த்தெடுக்கும் வருணாசிரமம் மட்டுமே !

குஜராத்தில் நீங்கள் முதல்வராக இருந்து 'குஜராத் ஒளிர்கிறது' என்று
எல்லோரையும் நம்ப வைத்தீர்கள். அப்படி எல்லாம் எந்த ஒளிவட்டமும்
குஜராத்தில் உருவாகவில்லை, டாடா நானாவுக்கு நீங்கள் கொட்டிக்கொடுத்த
மக்கள் பணத்தில் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைக்குரல் அமுங்கிப்போனது என்பது மட்டுமே உண்மை.

மக்கள் நல்வாழ்வு கூறுகளைப் பட்டியலிடும் போது பிறந்த குழந்தைகளின்
இறப்பு விகிதமாகட்டும், பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை ஆகட்டும்,
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், ஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி
போடுவதில் கூட குஜராத் மாநிலம் சொல்லிக்கொள்ளும் படியான நிலையில்
இல்லை. அதிலும் ஒப்பீட்டளவில் தமிழகத்தைவிடவும் பிந்தங்கிய மாநிலமாக
இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆண்ட காங்கிரசும் ஆளும் பி ஜே பி இருவரும் மேடைகளில் முழங்கும் வசனங்களும்
அதன் ஏற்ற இறக்க தொனியும் மாறுபடுகின்றனவே தவிர அவர்களின்
செயல்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை.

இதோ உங்கள் பட்ஜெட்டிலிருந்து...

கல்விக்கு ஒதுக்கி இருக்கும் தொகை ரூ 83,771 கோடி. இதில் சர்வ சிக்ஷா
அபியான - எல்லோருக்கும் கல்வி திட்டத்திற்கு போகும் தொகை
ரூ 28,635 கோடி. மீதி தொகை அனைத்தும் உயர் தொழில் நுட்பக் கல்விக்கு
ஒதுக்கப்பட்டிருக்கிறது. (அதாவது மேல்சாதி மேல்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு)

உயர் தொழில் நுட்பக்கல்விக்கு பெருந்தொகையை ஒதுக்குவதை கேள்விக்குறி ஆக்குவது என் நோக்கமல்ல. இதன் விளைவுகள் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் வளர்ச்சியாக இல்லாமல் ஒரு சிலரின் வளர்ச்சியாக மாறி சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும். 67 ஆண்டுகள் விடுதலைக்குப் பின்னரும் இந்திய இராணுவத்திற்கு வேண்டிய போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை இவர்களின் 67 ஆண்டுகால உயர் தொழில்நுட்பக்கல்வி வழங்கவில்லை என்பதையும்
நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும்
இராணுவத்திற்கு ஒதுக்கும் தொகை நம் பட்ஜெட்டின் பெரும் செலவினத்தொகை.
மோதி அரசு சென்ற ஆண்டைவிட 12.5% கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்கிறது.
126 வானூர்திகளை வாங்க மட்டும் 60,000 கோடி ரூபாய் என்று காட்டுகிறது

இந்திய மக்கள் தொகை 122 கோடி. அதில் 73 கோடி மக்கள் வேளாண்மை
மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை செய்பவர்கள். இவர்கள்
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களின் வேளாண்மைக்கு
ரூ 1700  கோடி ஐ உங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தார் உங்கள் நிதி அமைச்சர்
அருண் ஜெட்லி. இதிலும் 1000 கோடி பாசன வசதி பெருக்கத்திற்கு என்று
பிரதமரின் தனித்திட்டத்திலிருந்து வருகிறது என்றால் வேளாண்மைக்கு
ஒதுக்கி இருப்பது வெறும் 700 கோடி என்றுதான் கணக்கில் எடுக்க வேண்டும்.
சரி இந்தக்கணக்கு ஒரு புத்தகக்கணக்கு என்று ஒதுக்கி வைத்தால் கூட
கங்கையைப் புனிதப்படுத்திட ரூ 2037கோடி ஒதுக்கியது  உங்கள் செயல் திட்டம்


இராணுவத்துறை, வாழ்நாள் காப்பீட்டு துறை, மொத்த வணிகம் மற்றும்
சில்லறை வணிகத்தில் அயல்நாட்டார் நேரடி முதலீட்டை நுழையவிட்டது
மன்மோகன் ஆட்சியில் சோனியாகாந்தி அரசு. ஆனால் அதைவிடப் பெரிதாக
செய்திருக்கிறது நரேந்திர மோதியின் அரசு.

.. இப்படியாக உங்கள் செயல்பாடுகளும் அதற்கான திட்டங்களும் நீங்கள்
சுதந்திர தின உரையில் பேசிய எந்த வீர வசனத்துடன் ஒத்துப்போகவில்லை.
ஏனொ சம்பந்த மில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..
உங்கள் திருமதி குளிப்பதற்காக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம்
எழுந்து யாரும் பார்க்கும் முன் பொது தண்ணீர்க்குழாயில் தண்ணீரைப்பிடித்து
அங்கேயே குளித்து வாழும் வாழ்க்கை!


தமிழிலும் இந்தியிலும் நாங்கள் நிறைய கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில்
நடித்தப் படங்களைப் பார்த்து பார்த்து ரசித்து வெற்றிப்படங்களாக்கி
அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்து ... நிறையவே ரசித்துவிட்டோம்.
அதே பாணியில் தொடரும் அரசியல் மேடைகளை எங்களால் இனியும்
கொண்டாட முடியவில்லை.

No comments:

Post a Comment