குடைக்குள் நடப்பது..
------------------------------------------
மழைத்துளி குடைப்பிடித்து நடந்தாலும்
எப்படியும் நனைத்துவிடத்தான் செய்கிறது.
சில்லென்ற அந்த ஈரத்தின் அணைப்பில்
ஒரு குடையில் இரு உடல்களாய் நடந்தப்போது
அவன் மவுனமாகவே என்னுடன் நடந்து வந்தான்.
அந்த மழைநாளுக்கு அடுத்த மழைநாளிலும்
அவன் குடையுடன் காத்திருந்தான்.
என்னுடன் எனக்கான குடை
பத்திரமாக பையில் இருந்தாலும்
எடுத்து விரிக்க மனமில்லாமல்
அவன் குடைக்குள் நடப்பது
ஒரு கவிதைக்குள் வாழ்வது போல
சுகமாகவே இருந்தது.
அவனுக்கு கவிதையின் மொழிகள்
தெரியவில்லையோ.
தெரிந்தும் வாசிக்க விருப்பமில்லாமல்
இருந்திருக்கலாமோ
அவன் மொழியில் கவிதைக்கோ காதலுக்கோ
வார்த்தைகள் இருந்திருக்காதோ.
அவன் பேசிய வார்த்தைகளோ
அந்த மொழியோ நினைவில் இல்லை.
அவன் முகம் கூட
காற்றிலும் மழையிலும்
கல்தூணாய் மாறிப்போன
காவல்தெய்வத்தின் சிலைபோல
மங்கலாய்..
குடைக்குள் நடப்பதும்
குடைப்பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம்.
இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம்.
அதை விரிப்பதும் மடக்குவதும்
என் விரல்களுக்குள் அடக்கம்.
யாருடையை குடைக்குள்ளும்
யாருடனும் நடப்பது எனக்கு சாத்தியமில்லை.
கவிதைக்குள் வாழ்கின்ற சுகங்களை
துறந்துவந்தாகிவிட்டது
என்றாலும்
.....
ஒவ்வொரு மழைக்காலத்திலும்
மழைத்துளியின் சாரல்
பாதம் தொட்டு உச்சிமுகர்ந்து
முத்தமிடும் மழை இரவில்
மழைமுகமாய்
அவன் குடைப்பிடித்து வரக்கூடும் என்ற
கனவுகளில் குடைப்பிடித்து
நனைந்துக் கொண்டிருக்கிறது என் மழைக்காலம்.
அபாரமான கவிதை....மணிரத்தினம் படங்களில் உண்ர்ச்சிகர காட்சிகளை மேலும் உணர்ச்சிமயப் படுத்த மழையைப் பயன்படுத்துவார்....அதுபோலவே புதிய மாதவியும் மழைஅயை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
ReplyDelete---இந்திரன்
குடையிலும் கோலோச்சுமோ கவிதை...
ReplyDelete