Monday, March 31, 2008

அவளும் அவன் கவிதையும்





அறிந்து கொண்டீர்களா
அவள் மாறிவிட்டாள் என்பதை.
அந்தக் கவிஞனால் கூட
அவளை அடையாளம் காண
முடியவில்லை.
அவள்
பிறர் அறியாமல்
மறைவாய்
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.

மனித மனங்களின்
மூலைமுடுக்குகளில்
நுழைந்து
ஆழம் பார்க்கிறாள்.
அவள் சுமந்து வரும்
உலகளாவிய செய்திகளில்
அதிரடி மாற்றங்களில்
கவிஞனின் கவிதை
தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கவிதைக்கு முதலிடம் தர
மறுத்தவர்களையும்
முழுமையாக
ஆட்சி செய்கிறது
கவிதையின் ராஜாங்கம்.

கவிதை
அவளைப் பலியாடாக்கிவிட்டது.
தன் தலையில்
கைவைத்துக் கொண்ட
பத்மாசுரனாய் அவள்.
வாதங்களிலும்
இசங்களிலும்
கிழிந்து தொங்குகிறது
அவள் கவிதையுடல்.
அவள் இருக்கையை
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.
அவளுக்கான அவள் முகத்தை
கவிதை
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ
நிலத்தைப் போல
உறுதியான
அவள் ஆளுமையை
கவிதை விரும்புவதில்லை.
காற்றைப் போல
அவளிருக்கட்டும்.
உலகத்தைச் சுற்றிவரட்டும்.
அவன் கவிதைகள் மட்டுமே
அவளை அடையாளம் காணட்டும்.
அவளுக்கும்
அவன் கவிதைகளுக்குமான உறவு
தலைமுறைகளாக
தொடரும் கதை.

கவிதை..
அதுதான்
அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
கவிஞனின் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் அவள்.

மற்றபடி
அவனும்
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்
வந்துப்போகும்
ஒரு வலைப்பதிவு.
அவ்வளவுதான்.

(ref: LIVE UPDATE - An anthology of Recent Marathi poetry
Pg 144. prafull shiledar 's marathi poem)

Wednesday, February 13, 2008

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்


கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும்
கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல்
"இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான்.
குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக
வந்திருக்கும் அந்நாவலை அண்மையில் வாசித்தேன்.

தலைமைக்குத் தகுதியான வீரம், காதல் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே
கொண்டிருந்த மகாபாரதக்கதையின் பீமன் எப்போதும் இரண்டாம் இடத்தில்
இருக்கிறான். அவன் தான் வாசுதேவநாயரின் மகாபாரதக்கதையை
இரண்டாம் இடத்தின் பார்வையில் நின்று கொண்டு பார்க்கிறான்.
காலமெல்லாம் தர்மம், மனு சாத்திரம், முன்னோர் சொன்னது,
அரசு சட்டம், வழக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமைப்பீடத்தை
அவனுடைய இரண்டாம் இடம் கேள்விக்குரியதாக்குகிறது.


அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்றெடுத்தவள் பாஞ்சாலி என்று
அர்ச்சுனனுடன் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறாள்
பாஞ்சாலி. ஆனால் சுயம்வரத்தில் வென்றவளைப் பத்திரமாக
காப்பாற்றி எதிர்த்தவர்களை எல்லாம் ஓடச்செய்தவன் பீமன்.
அந்தவகையில் பார்த்தால் பாஞ்சாலி பீமனுக்குரியவளாகிறாள்.
ஆனால் எப்போதும் அப்படி பேசப்படுவதில்லை.

யுத்தத்தில் பகைவர்களை வென்றவனுக்கே அரசுரிமை என்பது வழக்கம்.
அப்படிப்பார்த்தால் குருசேத்திரத்தில் பகைவர்களான துரியோதனன்,
துச்சாததனை வென்றவன் பீமன். அரசுரிமை அவனுக்குத்தான் உரியது
என்று தருமனும் சொல்ல ஒரு கணநேரம் அரசனாகும் கனவுகளில்
மிதக்கும் பீமனை பாஞ்சாலி தன் தலைமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
சந்திக்கிறாள்.
பீமன் அரசன் ஆனால் அவனுடைய மனைவி பலந்தரை அரசியாவாள். தன்னுடைய
இடம் 'இரண்டாம் இடமாகி'விடும் என்று அச்சப்படுகிறாள் அவள்.
விதுரனோ காலமெல்லாம் பணிப்பெண்ணுக்குப் பிறந்த காரணத்தால்
அரசுரிமைகளிலிருந்து விலக்கப்பட்டவன். தன் மகன் யுதிஷ்டரனுக்கு
அரசுரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என்பதில்
கவனமாக இருக்கிறான். யுதிஷ்ட்ரன் விதுரனின் மகன் என்பதை
குறிப்பால் உணர்த்தும் இடங்களை ஆசிரியர் தன் பின்னுரையாக இணைத்துள்ளார்.

பீமன் தன்னை எப்போதும் தருமசீலன் என்று சொல்லிக்கொள்வதில்லை.
துவாரகைக் கடலில் மூழ்கி எல்லாம் முடிந்து ஐவரும் பாஞ்சாலியுடன்
இறைவனடி சேர மகாபிரஸ்தானம் ஆரம்பிக்கிறார்கள்.
களைப்புற்று பாஞ்சாலி மண்ணில் சாய்கிறாள். அப்போது தருமசீலன்
யுதிஷ்டிரன் ,"அவள் எப்போதும் அர்ச்சுணனை மட்டும்தான் மனதார
நேசித்துக்கொண்டிருந்தாள். ராஜசூயத்தில் என் அருகில் அமர்ந்திருக்கும்போதும்
அவள் கண்கள் அர்ச்சுனனிடம் தான் நிலைத்திருந்தன" என்று குற்றம்
சுமத்திவிட்டு சொர்க்கத்தேரை நோக்கி நடக்கிறான்.
பீமன் மட்டும் தான் சொர்க்கத்தேரை மறந்து தான் நேசித்த தன்
பாஞ்சாலியின் கண்கள் திறக்குமா என்று காத்திருக்கிறான்.
பீமனுக்கும் தெரியும் அவளின் காதல் மனம்.
நான்காண்டுகளுக்குப் பிறகு அவனுடைய முறையில் அவனுடைய குடிலில்
அவள் அர்ச்சுனனை நினைத்து "சொல்லுங்கள், காலகேயவதத்தைப் பற்றி
முழுவதுமாகக் கூறுங்கள்" (பக் 286) என்று சொன்ன நாட்கள்.
" வேண்டாம், தன் மனதில் அர்ச்சுனனைக் கனவில் கண்டு கொண்டிருக்கும்
அவளின் குளிர்ந்த உடல் இன்றைய இரவில் எனக்கு வேண்டாம்' என்று
அவன் குடிலிலிருந்து வெளியில் வந்த நாட்கள்.
ஆனாலும் அவன் மட்டும் தான் கடைசிவரை அவளுக்காக வாழ்ந்தவன்.
ஜெயாசக்கரவர்த்தி எழுதிய 'திரெளபதி' யில் தருமர் சொர்க்கம் போய்
சேர்வதற்கு முன்பே பாஞ்சாலியும் பீமனும் சொர்க்கத்தில் அவரை
வரவேற்றார்கள், என்ன அதிசயம்!" என்று எழுதியிருப்பார்.(பக் 14)
ஒவ்வொரு நிகழ்விலும் தருமன் பேசும் தருமம் எவ்வளவு
கேலிக்கூத்தானது என்பதை பீமன் போகிறப்போக்கில் சொல்லிக்கொண்டிருப்பான்.

போர்க்களத்தில் அபிமன்யு மாண்ட செய்தி கேட்டு கிருஷ்ணனின் முகம்
கறுத்துவிடுகிறது. அவன் உபதேசம் செய்த கீதையின் சாயம் வெளுத்து
விடுகிறது பீமனின் பார்வையில்.
'கிருஷ்ணனின் கருத்த முகத்தைக் கண்டேன், சொந்த இரத்தமென்றும்
குடும்பம் என்றும் வரும்போது தான் நைந்த ஆடைகளின் உவமையை
மறந்துவிடுகிறோம்..." என்கிறான் பீமன்.

பீமனின் மகன் கடோத்கஜன் போரில் இறந்துவிடுகிறான். கர்ணன் அர்ச்சுனனுக்கு
எதிராக இறுதியில் பயன்படுத்த வைத்திருந்த வேலைப் பயன்படுத்தியே
கடோத்கஜனைக் கொல்ல முடிந்தது. எனவே அர்ச்சுனன் தப்பித்துக் கொண்டான்
என்பதற்காக பாண்டவர்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணன்
பாண்டவர்களிடன் சொல்கிறான்.
திட்டமிட்டே தன் மகன் கடோத்கஜன் அன்றைய போரில் முன்
வரிசையில் அனுப்பப்பட்டதை அறிகிறான் பீமன். அதுமட்டுமல்ல
கிருஷ்ணன் மீண்டும் சொல்கிறான்,
" கடோத்கஜன் காட்டுமிராண்டிதானே! அரக்ககுணமுள்ளவன், யாகத்தின்
எதிரி, பிராமணர்களின் பகைவன் அவன் இப்போது இறக்கவில்லை
என்றாலும் என்றாவது நாமே கொல்ல வேண்டியது வரலாம்.."
கதை முடிவில் பீமனும் ஒரு காட்டுவாசிக்குப் பிறந்தவன் என்பதை
குந்தியே ஒத்துக்கொள்வாள்.
'அந்தப் பயங்கரக் காட்டிலிருந்து அவர் வந்தார். அதுவும் சங்கிலி அறுபட்ட
ஒரு சண்டமாருதத்தைப் போல்.. பெயர் தெரியாத ஒரு காட்டுவாசி வந்தார்"
என்று பீமன் பிறந்தக்கதையைச் சொல்லுவாள்.
கிருஷ்ணனின் கூற்றும் பீமன் பிறந்தக்கதையும் இணைத்துப் பார்க்கும்
போது அனைத்து திறமைகளும் கொண்ட பீமனுக்கு
பாரதக்கதையின் ஒதுக்கப்பட்ட இரண்டாம் இடத்தின் வரலாறு
சமூகப்பின்னணியுடன் புரியும்.


பீமனின் பார்வையில் ஒரு சமூகப்பின்னணியைக் குறிப்பாக
உணர்த்தியிருக்கும் நாவல் இரண்டாம் இடம். வாசிப்பவர்களுக்காக
படைப்பாளன் விட்டு வைத்திருக்கும் பக்கங்கள் அவை.
வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியிருக்கும் சொற்களுக்கு
நடுவில் மவுனத்தில் இமயத்தின் பனிக்கட்டியாக உறைந்து
போயிருக்கிறது இரண்டாம் இடத்தின் வரலாறு.
அந்த வரலாற்றின் எச்சமாகவே
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்
நாட்டுப்புறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடல்களில் பீமனும் கர்ணனும்
மற்ற கதை மாந்தர்களை விட அதிகமாகப் பாடப்பட்டிருக்கிறார்கள்.

'கத்தி எடுத்துச் சண்டைசெய்து -நான்
கர்ணனோட பொண்பொறந்தேன்
கர்ணன் மதிச்சாலும்
கர்ணனுக்கு வந்தவள மதிக்கலியே
காணமுற்றுத் தேடலியே

வில்லெடுத்துச் சண்டைசெய்து
வீமனோட பொன்பொறந்தேன்
வீமனுக்கு வந்த வேசிமதிப்பாவ
வேணுமின்னு தேடுவானா.."
.

இரண்டாம் இடம் :இன்று
----------------------

எப்போதும் சிலருக்கு இரண்டாம் இடம் நிரந்தரமாக இருந்துவிடுகிறது.
இரண்டாம் இடத்தில் இருப்பதாலேயே அவருடைய திறமைகள்
பல நேரங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

இன்னும் சிலர் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போட்டிப்
போடுகிறார்கள். அவர்களும் முதலிடம் காலியானால் இரண்டாம் இடம்
முதலிடமாகும் எழுதப்படாத சட்டத்தை நம்புகிறார்கள்.
அரசியலில் இந்த நம்பிக்கை பல நேரங்களில் பொய்த்திருக்கிறது.
அப்போதெல்லாம் முதலிடத்தைத் தவறவிட்டவர்கள் தங்களின்
இரண்டாம் இடத்திலும் நிலைத்து இருக்க முடியாமல் மன உளைச்சலில்
கூடாரம் மாற்றிக்கொள்கிறார்கள். கொள்கையாவது கொள்கை..!
வெங்காயம்!!

இரண்டாம் இடத்தில் இருப்பது சிலருக்கு பாதுகாவலாக அமைந்து
விடுகிறது. அவர்கள் செய்கிற நல்லதுகளுக்கு மட்டுமே அவர்கள்
பொறுப்பு. அவர்களின் அநியாயச் செயல்களுக்கு பொறுப்பேற்க
வேண்டியது அவர்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும்
முதலிடம். இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலிடத்தை விட
அதிகமாகக் கோடி கோடியாக தன் கணக்கில் சேர்த்துக்கொண்டவர்களூம்
உண்டு.

ஒரு கருத்துக்கணிப்பில் முதலிடமா இரண்டாவது இடமா என்று
காகிதத்தில் வந்த வெறும் அட்டவணைகள் கூட சிலரின்
அரசியல் முகவரியை மாற்றி இருக்கிறது.

போட்டிகள் எப்போதுமே முதலிடத்திற்குத்தான். எனினும் அமைதியாக
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள்
பிழைக்கத் தெரிந்தவர்கள்.

முதலிடத்தை ரப்பர் ஸ்டாம்பாக்கிய இரண்டாம் இடங்களின்
துணிச்சலைப் பாரட்டியே ஆகவேண்டும்.


முதலிடத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் இப்போதெல்லாம் இரண்டாமிடங்களுக்கு
இருப்பதால் இரண்டாம் இடத்தின் அதிகாரம் கொடிக் கட்டிப்பறக்கிறது.

மும்பையில் பாருங்கள்..
மண்ணின் மைந்தன் கொள்கை உன்னுடையது மட்டும்தானா?
என்று போட்டி நடக்கிறது. பாவம் மாராட்டிமானுஷ்.
யார்ப்பக்கம் சேர்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் பீகார், உத்திரபிரதேசத்துக்காரர்களின் ஆதிக்கம்
அதிலும் குறிப்பாக மும்பையில் என்கிறார் - ராஜ்தாக்கரே.

இதே ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களை
நிறுத்தியிருந்தார் என்பதும் அந்த 15 பேரும் தோற்றுப்போனார்கள்
என்பதும் உண்மை.

ஈழத்துப் பிரச்சனையையும் தமிழனின் அகதி வாழ்க்கையையும் புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஈழப்போராளிகளை
ஆதரிக்கவில்லையா என்று வேறு கேட்டு வைத்திருக்கிறார்.!

பெரியவர் பால்தாக்கரேயோ விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனை வெளிப்படையாகவே ஆதரிப்பவர்.

இந்தியாவின் தலைமை அமைச்சராகும் தகுதி சரத்பவாருக்கு
உண்டு, அவர் பிரதமராக வேண்டும் என்றார் பெரியவர் தாக்கரே.

20 எம்.பி.களை வைத்துக்கொண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக
எப்படி வரமுடியும்? என்று சிரித்தார் சரத்பவார்.

சரி இது என்னவொ கொள்கைப் பிடிப்பில் மண்ணின் மைந்தர்கள் மீது
கொண்ட அதீதமான அக்கறையுடன் செயல்படுவது என்கிறமாதிரியான
ஒரு தோற்றத்தை... ஆம் தோற்றத்தைத் தருகிறது.
ஆட்சி, அதிகாரம் கைப்பற்றுவதற்கும் ஒரு எளிதான வழியாக
இருக்கிறது. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும்
வெளிமாநிலத்திலிருந்து மும்பை வந்து மும்பையை வணிகப்பெருநகரமாக்கி
இருக்கும் அம்பானி போன்றவர்களின் வருவாயை இழக்கத் துணிய
மாட்டார்கள். பொன்முட்டையிடும் வாத்துகளை இழக்க யாருக்குத்
துணிச்சல் வரும்?

ராஜ்தாக்கரே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்
என்ற செய்தி வந்தவுடன் (12/2/2008) பாட்னாவில் இனிப்பு
வழங்கி இசை வாத்தியம் முழங்க ஆடிப்பாடிக் கொண்டாடி
இருக்கிறார்கள்! மனிதர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கலாம் !
ஆனால் இரண்டாம் தரச் செயல்களைச் செய்வது என்பது
கேவலம்!

இரண்டாம் இடத்தில் கூட இப்போதெல்லாம் இரண்டு பேருக்கு
நிம்மதியாக இருக்க முடிவதில்லை. முதலிடத்தைக் குறிவைத்து
இரண்டாம் இடங்கள் நடத்தும் குருசேத்திரத்தில்
மீண்டும் ஒரு மகாபாரதக்கதை ....!!.

Tuesday, February 12, 2008

தொண்டர்களின் கதைப்பாடும் கவிதை அலை



தலைவர்களுக்காகவும்
அவர்கள் சொன்ன
தத்துவங்களுக்காகவும்
தன்னைத் தொலைத்த
தலைமுறைகளின் எச்சமாய்
பரந்து விரிந்து
மண்ணைத் தொடும்
அரபிக்கடலின் அலைகள்.
பேரலைகளாய்
சிற்றலைகளாய்
எப்போதும்
இந்த மண்ணில்
உங்கள் குரல்.

வங்கக்கடலோரம்
வலைவீசும்
கூட்டணித் தோணிகளுடன்
உங்கள் அரபிக்கடலின்
அலைகள் எப்போதும்
கைகுலுக்குவதே இல்லை.
அதனால் தான்
உங்கள் கூடாரங்களில்
கொள்கைகள் மட்டுமே
வெளிச்சங்களாய்-
எங்கள் தலைமுறையை
அதிசயிக்க வைக்கும்
அற்புதமாய்-
எப்போதும் அமைந்துவிடுகின்றன
பவள விழாக்காணும்
உங்கள் பாதைகள்.

கறுப்பும் சிவப்புமாய்
உங்கள் பாதைகளுக்கு
அடையாளமாய்
உங்கள் கரைவேட்டிகள்.
கைநீண்ட ஜிப்பாக்கள்
தோள்களில்
தென்றலெனப் புரளும்
நீண்ட நேரியல்
நிமிர்ந்த நடை
ஆட்சிக்கட்டிலுக்கு
வெண்சாமரம் வீசாத
உங்கள் செருக்கு
எப்போதும் எவரிடத்தும்
உங்கள்
அடையாளங்களைக் காட்டி
உங்கள் வாரிசுகளான
எங்களுக்காக
எதையும் வரமாக வேண்டாத
உங்கள் பெருந்தவம்
தந்தையே..
தலைவணங்குகிறேன்


ஈரோட்டுப்பாதையை
எங்களுக்காக
இந்த மண்ணில்
நிலைநிறுத்த
நீங்கள் நடத்தியது
வெறும் போராட்டங்கள்
மட்டுமல்ல.
உங்கள் கனவுகளுக்காக
நீங்கள் நடத்தியதெல்லாம்
வெறும் கூட்டங்கள்
மட்டுமல்ல.
எனக்குத் தெரியும்
நீங்களே பாதையாகிப்
போன அந்தக்கதை.

எனக்குத் தெரியும்...
இந்தப் பாதையில்
மண்ணாக
சல்லிக்கல்லாக
உறைந்த தாராக
எவராலும் உடைத்து
எடுக்கமுடியாத
பகுத்தறிவுப் பாதையாக
நீங்கள் மாறிய நாட்கள்.
அந்த நாட்களில்
உங்கள் வசந்தப் பருவங்களில்
நீங்கள்
எதை எதை எல்லாம்
தொலைத்தீர்கள் என்பது
எனக்கும்
எங்களைப் பெற்றெடுத்த
எங்கள் அன்னையர் பூமிக்கும்
தெரியும்.

தந்தையே
நீங்கள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு
சாட்சியமாய்
தொண்டர்களின் கதையை
எப்போதும்
என் கவிதைஅலைகள்
இந்தக் கடற்கரையோரம்
பாடிக்கொண்டே இருக்கும்.

Monday, February 11, 2008

கறுப்புக்குதிரையில் கவிதைகளின் ஊர்வலம்



மும்பையில் காலாகோடா (Gala godha) -

கறுப்புக்குதிரை என்ற பெயரில் ஒவ்வொரு

ஆண்டும் நிகழும் கலைத்திருவிழா இந்த

ஆண்டு கடந்தவாரம் மிகச்சிறப்பாக

நடைபெற்றது. (02/2/2008 முதல் 10/2/2008

வரை)
நாட்டுப்புற கலை முதல் மேற்கத்திய இசை

வரை எல்லாம் பல்வேறு அமைப்புகளின்

உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும்

நடைபெறுகிறது. இந்த மும்பை மாநகரத்தில்

வாழும் மாநகரக்கவிஞர்களை அழைத்து

இந்த மாநகரத்தைப் பற்றிய கவிதைகளை

வாசிக்கும் ஒரு நிகழ்வு டேவிட் சாசன் நூலக

பூங்காவில் பனிவிழும் முன்னிரவில் 100

முதல் 150 வரை எழுத்தாளர்கள் கூடி இருக்க
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும்
விரும்பினால் அவரவர் தாய்மொழியிலும்

வாசிக்கும் அனுபவம் கொஞ்சம்

வித்தியாசமானது.
ஆனால் ஒவ்வொரு முறையும் இம்மாதிரி

அனுபவங்களில் சின்னதாக ஒரு பெருமிதம்

எற்படும். எல்லா கவிஞர்களும் கிட்டத்தட்ட

ஒரே நேர்க்கோட்டில் நிற்பது தெரியும்.
அன்றும் அப்படித்தான்.
09/2/2008 மாலை 6 முதல் 7 வரை கவிதை

வாசிப்பின் முதல் பகுதியில் என்

கவிதைகளுக்கான நேரம்

ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுக்கு என்று கவிதை எழுத

நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதியிருந்த

இருகவிதைகள் அந்த நிகழ்வுடன் மிகவும்

தொடர்புடையதாக இருந்ததால் அந்த இரு

கவிதைகளையும் வாசித்தேன்.
(ஆங்கிலத்தில் தான்) என்னதான்

ஆங்கிலத்தில் வாசித்தாலும் என்னவோ

அந்தக் கவிதையின் ஒட்டுமொத்த

ஜீவனையும் கொடுத்த மனநிறைவு

ஏற்படுவதில்லை. இம்மாதிரி நிகழ்வுகளுக்குப்

பின் இப்படி ஒரு மனக்குறையும்

அவஸ்தையும் ஏற்படுவதைத் தவிர்க்க

முடிவதில்லை.

எனக்காக என் கவிதைகளை இதோ
சத்தமாக வாசிக்கப்போகிறேன்!

(1)
மாநகரக் கவிதை
--------------------

எப்போது ஏறலாம் ?
எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.
எப்போதும் இருக்கும்
எங்கள் மாநகர் வண்டியில்
மனிதர்களின் மந்தைக்கூட்டம்.
ஏறுவது மட்டும்தான் என்வசம்
இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய்
என் பயணம்.
அடிக்கடி இறங்கும் இடம் கூட
என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சரியான பக்கத்தில் நின்றாலும்
சரியான நேரத்தில் சென்றாலும்
சரியான இடத்தில் இறங்குவதற்கு
உத்திரவாதமில்லை.

கஞ்சியில் உலர்ந்து
கடை இஸ்திரியில்
காஸ்ட்லியாக நடக்கும் காட்டன்கால்கள்
கசங்கி நொறுங்கி
மரக்கால்களூடன் நொண்டியடிக்கும்
கம்பீரநடையில்
கண்துஞ்சாமல்
வெற்றியை நோக்கி வீறுநடைபோடுகிறது
என் மாநகரத்தின் மனித வெளிச்சங்கள்.

லிப்ஸ்டிக்கில் சிவந்த உதடுகள்
எப்போதும் தூங்கிவழியும் சன்னல்

இருக்கைகள்
திறந்தவெளி முதுகுகளுடன்
போட்டிப்போடும் செழிப்பான மார்புவெளிகள்
எப்போதும் தாதர் ஸ்டேஷனில் இறங்கக்

காத்திருக்கும்
காய்கறிக்கூடைகள்
ஏறி இறங்கும் பூக்காரிகள்
மார்புச்சீலை மறைக்காத
பால்குடிக்குழந்தைகள்
போகிற வழியில் உட்கார்ந்திருக்கும்
மூட்டை முடிச்சுகள்
நைலான் புடவைக்குள்
அடங்க மறுக்கும்
அரவாணிகளின் சதைத்துடிப்புகள்
தொப்புள் வளையங்கள் சிரிக்க
செல்போனுடன் ஜனித்துவிட்ட
இளங்குமரிகள்
இவர்களுக்கு நடுவில்
எங்காவது
தொங்கிக்கொண்டிருக்கும்
என் முகம்!

மீன்கூடையின் கவிச்சல்
வாடாபாவுடன் கலந்து
மல்லிகைப்பூவில் உரசி
குளித்தவுடன் தடவிக்கொண்ட
வாசனைத்தைலத்துடன்
வியர்வையாய்
மெல்லிய உள்ளாடையை ஈரப்படுத்தும்

சேச்சியின் தோள்களுக்கும்
மவுசியின் தொடைகளுக்கும் நடுவில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்கும் இருக்கை.
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை.
------
(2)
புத்தக அலமாரி
----------------

கழிவறைச் சுவர்களைத் தவிர

மற்ற எல்லா சுவர்களிலும்

கண்ணாடிக் கதவுகளுடன்

தொங்கிக்கொண்டிருக்கிறது

புத்தக அலமாரிகள்.


ஒவ்வொரு பொங்கலுக்கும்

வெவ்வேறு தளங்களில்

மாறி மாறி அடுக்கப்படுகிறது

புத்தகங்கள்.


அலமாரிக்கு கண்களாய்

இருக்கும் புத்தகங்கள் சில.

பிரபலங்களின் பெயர்கள்

பளிச்சிடும் கண்ணாடிக்குள்

புத்தகமாய் இருப்பதுகூட

அலமாரிக்கு அந்தஸ்தை

அதிகரித்து காட்டும் என்பதால்

எப்போதும் முன்வரிசையில்.


நண்பர்களின் புத்தகங்களைத்

தொட்டுப் பார்க்கும்போதெல்லாம்

சிலிர்த்து போகிறது

தனிமையின் நாட்கள்.


அலமாரியில் எப்போதும்

போனசாக சேர்ந்து கொள்கிறது

நானே காசு போட்டு

அச்சடித்து வைத்திருக்கும்

புத்தக வரிசைகள்.


தூசி துடைத்து

கரப்பான் அடித்து

கவனிக்க

அதிக கூலி கேட்கிறான்

கண்ணன் என் சேவகன்.


வைக்க இடமில்லை

என்பதால் மட்டுமே

எந்தப் புத்தகத்தையும்

பழைய பேப்பர்கடைக்கு

பார்சல் செய்யமுடியாமல்

அடிக்கடி எல்லைத்தாண்டி

அடுத்தவர் அலமாரிகளை

அபகரிக்கும் குற்றத்திற்காய்

எப்போது வேண்டுமானாலும்

தூக்கிலடப்படலாம் நானும்

என் எழுத்துகளும்.


என் கவலை எல்லாம்

சாவைக் குறித்தல்ல.

என் சாவுக்குப் பின்

அனாதையாகப் போகும்

அலமாரியின்

புத்தகங்களைப் பற்றித்தான்.

...
அப்பாடா இப்போ தான் நிம்மதி!

Friday, February 8, 2008

கலைக்கூத்தனின் இராகங்களைப் பாடிய இலெமுரியா




மும்பை வாழ் தமிழர்களின் கவிதை எப்போது எங்கே சூல் கொண்டது?
நாடகமேடையிலா? கவியரங்கங்களிலா?
தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டிலிருந்தும் பிறந்த வடிவேலு என்ற
இளைஞனின் கவிதைகள் தான் அச்சுவடிவம்-நூல்வடிவம் என்ற
நடைப்பயின்று துள்ளிக்குதித்து அருவியாகி,
மண்ணில் கலந்து நதியென மனிதர்கள் வாழ்வில் இணைந்து, அரசு, அதிகாரம், பதவி என்ற எந்த அணைக்கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்த முடியாத
பெருமிதத்துடன் கடலில் கலந்தது. அரபிக்கடலின் அந்தக் கவிதைகள் வாழ்ந்ததன் சாட்சியாக 02/02/2008 ல் தன் ஆரம்பவிழாவில் இலெமுரியா பதிப்பகம் கவிஞர் கலைக்கூத்தனின் இசைப்பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து
கவிஞர் கலைக்கூத்தனின் 'தமிழிசைத் தென்றல்" என்ற பெயரில் குறுந்தகடாக
வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
கவிஞர் கலைக்கூத்தனின் கவிதைகளை வெளியிடுவதன் மூலமே பல்வேறு
செய்திகளைக் குறியீடாக வெளிப்படுத்தி இருக்கும் இலெமுரியா பதிப்பகத்திற்கு
எம் வாழ்த்துகள்.

கலைக்கூத்தன் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தில் வேலைப்பார்த்தவர். அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் - ஏன் பல நேரங்களில் பேருந்து பயணச்சீட்டிலும் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை
நோட்டுப்புத்தகத்தில் எழுதிப் பாதுகாத்து அவை அச்சில் வர உதவிய
இளைஞர்களில் ஒருவர்தான் திரு.குமணராசன் அவர்கள். அவரே கவிஞரின்
பாடல்களுக்கு குறுந்தகட்டு வடிவம் கொடுத்து அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு
அந்த மறைந்தக் கவிஞனின் கனவுகளை எடுத்துச் சென்றிருப்பது
நட்பு, கவிதை ரசனை எல்லாம் தமிழனின் வாழ்வில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதைத் தான் உணர்த்தியுள்ளது.

எத்தனையோ பேர் வந்தார்கள், வாழ்ந்தார்கள்.. போனார்கள்.. ஏன் கலைக்கூத்தனுக்கு மட்டும் இந்தச் சிறப்பு?

இந்தக் கவிஞன் தான் 1977ல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த நேர்க்காணலில் செம்மாந்து பதில் சொன்னான்.
"தமிழக அரசின் அரசவைக் கவியாக இருப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள மராட்டிய மாநிலத்தில் ஒரு தமிழ்க்கவியாக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று.
Q: why didn't you ask the DMK Govt to help you?
poet: if the DMK Govt had by itself offered to help me, it would have been different. But i would not use my status as a party worker to promote my position as a poet. Besides it is more exciting to emerge as a poet from non tamil maharashtra rather than to be a court poet of a political party in tamil nadu.

தன் பெயரையும் புகழையும் தான் சார்ந்த அரசியல் மேடையில் இணைத்து எந்தப் பூமாலைக்காகவும் இவர் கவிதைகள் காத்திருந்ததில்லை.

கலைக்கூத்தன் கவிதைகள் - 1973
மனிதனை நான் தேடுகின்றேன் - 1979
எதிர்நீச்சல் போடுகின்றேன் - 1988
பூங்கோதை - 1976

பூங்கோதைக் காப்பியம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புக்குப் பாடநூலாக இருந்தது. 1988ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.
மும்பைக் கவிஞர் எழுதிய காப்பியநூல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது இன்றுவரை இவருக்கு மட்டுமே!
இவர் எழுதிய தமிழிசைப்பாடல்கள் இசைப்பேராசிரியர் வித்துவான் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் இராக, தாள, சுரக்குறிப்பு மெட்டமைப்புகளுடன்
வெளியிடப்பட்ட தொகுப்பு. இந்நூலை அக்காலத்திலேயே சண்முகாநந்தா கலையரங்கில் கவிஞர் வெளியிட்டார்.
"மகாகவி பாரதியையும் புரட்சிக்கவி பாரதிதாசனையும் நான் கலைக்கூத்தன்
வடிவில் காணுகின்றேன்" என்றார் அன்றைய சென்னை பல்கலை கழக
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள்.
கலைக்கூத்தனின் 'மனிதனை நான் தேடுகின்றேன்' கவிதைகளை டி.எஸ்.எலியட்டின் 'the hollow man' கவிதைகளுடன் ஒப்பிடக்கூடியது என்கிறார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் திருக்குறள்மனி
க.த. திருநாவுக்கரசு.

பொங்கல் பற்றி எத்தனையோ கவிதைகள். ஆனால் இவர் போல
எழுதியவர் எவருமில்லை.
இதோ "பொங்கல் நாளை!" கவிதையிலிருந்து சில வரிகள்

முப்பாலைத் தந்தானின் பிறந்தநாளை
முகிழ்த்து வரும் செங்கதிரை வணங்கும்நாளை
எப்போதும் வயற்சேற்றில் உழன்ற மக்கள்
இன்பமெலாம் வீடுவந்து சேருன்நாளை
தப்பாமல் உடனுழைத்த எருதின் வாயில்
தளிர்க்கரும்பு சோறுபழம் ஊட்டும்நாளை
எப்போதும் வரவேற்போம் வாழ்த்துக்கூறி
எம்தமிழர் போற்றவரும் பொங்கல்நாளை!

செந்தமிழன் வீரமதைப் பகரும்நாளை
தென்னிலத்தார் மேன்மைகளை விளக்கும்நாளை
நந்தமிழன் வரலாற்றின் தொடக்கநாளை
நாகரிகம் முகிழ்த்தயினம் கண்டநாளை
எந்தவொரு சூழலிலும் மாசில்லாத
இயற்கை வழி கொண்டாடும் சிறந்த நாளை
வந்தவர்கள் கதைகட்டி ஏய்த்து மாற்று
வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தநாளை!

உருவவழிபாடு கண்ட சமுதாயத்தில்
ஒருக்காலும் குறைகூற முடியா வண்ணம்
பருவவழிபாடு கண்ட தமிழன் காலப்
பக்குவத்தைப் பகுத்தறிந்தே ஏற்றநாளை
மதங்கலவாத திருநாளை மனிதவாழ்வின்
மதிப்புயர்த்தும் பொன்னாளை அரியநாளை
விதவிதமாய்ப் பொங்கலிட்டுத் தமிழன் வாழும்
வீடெல்லாம் விருந்துமணம் கமழும்நாளை
இதமாக வரவேற்போம் இன்பநாளை
இசையாலும் தமிழாலும் போற்றும்நாளை!

நாமும்,
நன்றியுடன் வரவேற்போம்.
கவிஞனின் தமிழிசைத் தென்றலை. அந்த இசைத் தென்றலின்
ராகங்களை மீட்டிய இதயவீணைகளை.

Monday, February 4, 2008

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும் _

மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு
இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய
இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் கலைக்கூத்தனின்
பாடல்கள்- குறுந்தகடு, எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் வாழ்வின்

சுவடுகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்திய நகர மேயர்கள் கருத்தரங்கில்

கலந்து கொள்ள வந்திருந்த நெல்லை மாவட்ட மேயர்
ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வழக்கம்போல மாலை 8 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டு கூட்டம்
பொறுமையிழந்து காத்திருக்க 8.50க்கு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இனி, சீமானின் பேச்சிலிருந்து சிலத் துளிகள்:

பொறுமையிழந்து தவிக்கும் மக்கள் அரங்கைத் தன் கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவர சீமான் பாட்டுப்பாட வேண்டி இருந்தது. விசில் சத்தமும்
கைதட்டலும் கட்டுப்ப்பாட்டுக்குள் வந்தவுடன் சீமான் தன் பாணியில்
இறங்கினார்.

> வாழ்த்துகள் திரைப்படம் 3 வாரத்திற்குள் பெட்டிக்குள் போய்விட்டது.
மக்களுக்கு படம் முழுக்கவும் தமிழிலேயே இருந்ததால் புரியவில்லையாம்!

> தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலம் அல்ல, அது இங்கிலாந்துக்குள்

இருக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது.

> வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிறான். எல்லோருக்கும் இடம்

கொடுத்தான் தன் மண்ணில். இப்போ எல்லோரும் இவன் மேலே ஏறி

மிதிக்கிறான்.

>பர்மா, பம்பாய், கர்நாடகம், கேரளா, இலங்கை இப்போ மலேசியா எல்லா

இடத்திலும் தமிழன் அடிப்பட்டுச் சாகிறான். இதிலே ஒரே ஒரு இடத்தில்தான்
தமிழன் திருப்பி அடிச்சான்! அவன் திருப்பி அடிச்சவுடனே எல்லாரும்

சொல்றான்..இது வன்முறை, தீவிரவாதம்னு.

> கங்கைக் கொண்டான், கடாரம் வென்றான்னு சொல்லிக்கிட்டே இருக்கியே
இன்னிக்கு உன் இனம் ராமேசுவரத்தில் குப்பறப்படுத்திருக்கே.. அனாதையா,
அகதியா..ஏன்?

> எங்கே போச்சு உன் வீரம்?

> சோறுதின்னாமா ரைஸ் தின்னா எப்படிடா உனக்கு சுயமரியாதை ஏற்படும்?

> நான் இவ்வளவு பேசிக்கிட்டிருக்கேன், அவன் "பாட்டுப்பாடு"னு கத்தறான்.
நீ விளங்கமாட்டே. உன்னை வெறிநாய் மாதிரி அடிச்சியே கொல்லப்போறான்.
இப்போ உனக்குப் பாட்டு கேட்குது.. அப்படித்தானே.. பாட்டுப் பாடறேன்
கேட்டுட்டு செத்துப்போ.!!

>உன் தோட்டத்திலே உன் மண்ணிலே காய்க்கிற இளநீரை நீ

வாங்கிகுடிக்கமாட்டே. உனக்கு கோக் குடிச்சாதான் பெருமை. சச்சின் 2 கோடி
ரூபாய் வாங்கிட்டு குடிக்கிறான். அட குடிக்கிற மாதிரி நடிக்கிறான். நீ
அந்தப் பூச்சி மண்டின பாட்டிலை வாங்கிக் குடிக்கிறே.

> உன் பாட்டன் செத்துப்போனதை அவன் சொன்னானு மத்தாப்பு கொளுத்தி
பலகாரம் சாப்பிட்டு தீபாவளினு கொண்டாடிக்கிட்டிருக்கியே.

> கடந்த காலத்தில் நீ சூத்திரன், நிகழ்காலத்தில் நீ அகதி..
நீ எப்போ தமிழனா இருந்திருக்கே.

> நீ எங்களை நாத்திகன்னு சொல்றியே , உண்மையில் பார்க்கப்போன நீதான்
நாத்திகன், உனக்குத்தான் உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. அட
உனக்கு உன் கடவுள் மீது நம்பிக்கை இருந்தா ஏன் கோவில் வாசலைப்

பூட்டிட்டு போறெ. உன் கடவுள் காலடியில் இருக்கிற உண்டியலுக்கு ஏன்
பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கே.
உனக்கே உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் தானே.
தன் காலடியில் இருக்கும் தன் உண்டியலைக் காப்பாத்த வக்கத்த கடவுள்
இந்த ஊரெல்லாம் காப்பாத்தும்னு நம்புறியா?
ஊரெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
உன் உண்டியலைக் காப்பாற்று தாண்டவக்கோனே

> நடு செண்டர் னு சொல்றே
ஓகே ரைட் சரினு சொல்றியே..
இது என்ன மொழி?

> சொந்தமொழி தெரியாதவன் முட்டாள்

> பிறமொழிகள் கற்க வேண்டாம்னு சொல்லலை. பிறமொழிகள் எத்துணை

வேண்டுமானாலும் கத்துக்கோ. ஆனால் அதெல்லாம் உன் வீட்டு

சன்னல்கதவுகளாக இருக்கட்டும். உன் வீட்டு நுழைவாயிலாக உன் தாய்மொழி

இருக்கட்டும்.

> நீ என்ன பண்றே.. உன் தாய்மொழியை உன் கழிவறைச் சன்னலாக

வச்சிருக்கியே.

சீமான் இதெல்லாம் சரிதான்.
உங்கள் பேச்சு உங்கள் சீற்றம் உங்கள் அடிமனசிலிருந்து எரிகின்ற
தீக்குச்சி..
ஒரு தீக்குச்சி எரியாமல்
தீப்பந்தம் எரியாது என்று நீங்கள் மேத்தாவின் கவிதை வரிகளைச் சொன்னது
மிகவும் சரிதான். "நான் நெருப்பு, புரட்சி தீக்குச்சி உரசலுக்காக காத்திருக்கிறது

என்று உங்களைப் பற்றிய உங்கள் சுயவிமர்சனம் மிகையானதும் அல்ல.

அன்றைய உங்கள் பேச்சில் நீங்கள் நரிக்குறவர்கள் குறித்து சொன்ன கருத்தை
மீண்டும் ஒரு முறை தீக்குச்சி வெளிச்சத்தில் பாருங்கள், அண்ணன் அறிவுமதி,
மற்றும் தோழர் சுப.வீ யிடம் கேட்டுப்பாருங்கள். அல்லது நரிக்குறவர்

இனவரைவியல் குறித்த ஆய்வுகளைக் (தமிழினிப் பதிப்பகம்

வெளியிட்டிருப்பதாக நினைவு) கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

சீமான் எனக்குச் சின்னதா ஒரு சந்தேகம்.

உங்களை எப்படி அழைக்கவேண்டும்?
இயக்குநர் சீமான் என்றா?
அப்படி அழைத்தால் தான் கூட்டம் சேரும். அப்படி அச்சடித்தால்தான்
விழாக்கள் வெற்றி பெறும். அப்படியானால் உங்களுக்கிருக்கும் முகம்,
உங்களுக்கிருக்கும் அடையாளம், உங்களுக்கிருக்கும் முகவரி
திரைப்படத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உங்கள் சீற்றம் எனக்குப் பிடித்திருந்தது. உங்களை உங்களுக்கான மேற்கண்ட
அடையாளங்களுக்கு அப்பால் ஒரு பகுத்தறிவு மனிதனாக, சொந்தமொழி மீதும்,
தமிழ் மண், தமிழ் உறவுகள் மீதும் எல்லையில்லாத பாசமும் அக்கறையும்

கொண்ட தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்த முடியவில்லையே என்பதில்
என்னைப் போன்றவர்களுக்கு வருத்தம் தான்.
நீங்கள் பேசிய கருத்துகளை, உங்களை விடவும் ஆணித்தரமாக

பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள்
யாரை அழைத்தாலும் அவர்களிடன் "ஆட்டோகிராப்" வாங்கவும் சேர்ந்து நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் எந்தத் தமிழனும் ஓடிவருவதில்லை.
இதெல்லாமே திரைப்பட முகவரி உங்களுக்கு கொடுத்திருக்கும்

அடையாளங்களால் கிடைத்த வெளிச்சம்.

மேலே சொன்ன இனமானக் கருத்துகளைச் சொல்லவும் இந்த மின்மினி
வெளிச்சங்கள் தேவைப்படுகிறதே.. இதுதான் தமிழனின் சாபக்கேடு.

இத்தனையும் பேசிய/பேசுகின்ற நீங்கள் இதற்கெல்லாம் காரணமானவர்களைப்

பற்றி ஏன் மவுனம் காக்கிறீர்கள்?

எய்தவன் இருக்க அங்கே அரங்கில் விசிலடித்த அம்புகளைக் கண்டு
ஏன் சீற்றம்?
ரஜினி என்ற நடிகரின் ஆதரவு/ கண் அசைவு எந்தப் பக்கமிருக்கிறது என்று
தலைமுதல் வால்வரை நம் தலைவர்கள் தலைகீழாக நின்று

தவமிருக்கிறார்களே! ஏன்?
ரஜினிகாந்த என்ற சினிமா நடிப்புத்தொழிலைச் செய்யும் ஒரு மனிதனை
"சூப்பர் ஸ்டாராக" உயர்த்திப் பிடித்திருப்பவர்கள் இந்த உள்ளீடு இல்லாத
வெறும் காகிதக் குப்பைகளா? உங்களுக்குத் தெரியும் யார் என்று?
ஆனாலும் உங்கள் தீக்குச்சிகள் வெறும் குப்பைகளைக் காகிதங்களை
மட்டுமே எரித்துக் கொண்டிருக்கிறது!
அதனால் எரிக்க எரிக்க குப்பைகள் வேகமாக பன்மடங்குப் பெருகிக்கொண்டும்
இருக்கிறது!

தீபாவளிப் பண்டிகைக் குறித்து நீங்கள் சொன்னதில் எனக்கொன்றும் கருத்து

வேறுபாடில்லை. என் "பெரியாரிஸ்டின் தீபாவளி" சிறுகதையை உங்கள்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நடுவிலும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசிக்க :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10412023&format=html

நம் தலைவர்கள் அவரவர்களின் குடும்ப வாரிசு தொலைக்காட்சிகளில் தோன்றி
தீபாவளி வாழ்த்து சொல்வதைக் கண்டித்து சின்னதாக தமிழ்நாட்டில்
ஓர் அறிக்கை வெளியிட்டுப் பாருங்களேன்!

தீக்குச்சிகள்
எரித்த காகிதக் குப்பைகள்
எரிந்து கொண்டே இருக்கிறது
தீப்பந்தம் எரிவதாக
கனவுகளில்
தீக்குச்சிகள்.
புரட்சி வந்துவிடும்
காத்திருக்கிறது
தீப்பெட்டி.
ஒவ்வொரு குச்சியாக
எரிந்து முடிந்து
காலியவதற்குள்
விழித்துக்கொள்ள வேண்டும்
தீப்பெட்டிகள்.
நம் மண்ணை
நம் மனிதர்களைக்
குப்பைகளாக்கிய
கோமாளிகளின்
கூடாரங்களை
கூண்டோடு அழிப்பதற்கு.

தாள் பொறுக்கும் தமிழச்சியாக
தமிழகம்
அரபிக்கடலோரம் வீசி எறிந்த
இந்திய அகதிகளின்
முகாமிலிருந்து
உங்கள் தீக்குச்சி உரசலில்
எரியும் காகிதக்குப்பைகளுக்கு நடுவில்
எரியக் காத்திருக்கும் தீப்பந்தம்..

--------புதியமாதவி, மும்பை.

Tuesday, January 15, 2008

இவைப் பேசினால்...

தமிழ்த்தாய் வாழ்த்து!!
-------------------

மன்னிக்கவேண்டும்
தமிழ்தாய் வாழ்த்து
நான் பாடப்போவதில்லை
தமிழ்த்தாய் இப்போதெல்லாம்
'மம்மி'யாகி
வெறும் 'டம்மி'யாகிப் போனதினால்
மன்னிக்க வேண்டும்
கவிஞர்களே
நான் தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடப்போவதில்லை.

எவரையாவது
வாழ்த்திதான்
கவியரங்கை
ஆரம்பிக்க வேண்டும் என்றால்
வாழ்த்துகிறேன்
-என்னை-
என்னுடன் இருக்கும் உங்களை
நம்முடன் இருக்கும்
நட்பு மலர்களை..
வாழ்க
வணக்கம்.

----

எழுதுகோல்
-----------

எழுதுகோல் அறியாத
குகைகளின் கவிதையை
யார் எழுதியது?
ஆதிசிவனிடம் கேளுங்கள்.

எழுதுகோல் ஏமாற்றிய
ஏழைகளின் கவிதையை
ஆர் எழுதியது?
அதிரும் பறையிடம்
கேளுங்கள்..

உண்மைகளைத் தாலாட்டி
உறங்க வைத்த கவிதைகளை
தட்டி எழுப்பிடவே
தரணிக்கு வந்த
ஆதவனின்
ஹைபுன்

கட்டைவிரல்
தொட்டுப்பார்க்காத
ஏகலைவனின்
புதிய ஹைக்கூ.

இந்த மூன்றடிகளில்
முடியப்போவது
துரோணச்சாரிகள்
மட்டுமல்ல
துரோணச்சாரிகளுக்கு
துரோகிகள் என்ற
முத்திரைக் குத்திய
பிதாமகன்களின்
ஆதிக்ககீரிடமும் தான்...

------


தொலைக்காட்சி
----------------------

நிஜங்கள் எல்லாம்
நிழல்களுடன் உறவாடுவதால்
நம் பிள்ளைகள்
'பெப்சி உமா'விடம்
நலம் விசாரிக்கிறார்கள்.

பகுத்தறிவு பேசிய -நம்
அன்னைப் பராசக்தி
இப்போதெல்லாம்
அண்ணா-மலையாகி
ஆருடம் சொல்கிறாள்

மக்களாட்சியின்
அரசிளங்குமாரர்களை
அட்ரஸ் இல்லாமல்
ஆக்கும் வல்லமை
வாக்குப் பெட்டிக்கு
இருக்கிறதோ இல்லையோ
நம் வீட்டு
காட்சிப் பெட்டிக்கு
கட்டாயம் இருக்கிறது.

பாண்டவர் வென்ற
பங்காளிச் சண்டையில்
வாரிசுகளின் கதை
முடிந்து போனதாக
முனிவன் சொன்னதும்
பொய்த்துப் போனது.

கோட்டையைத் தாக்கும்
குடும்பச் சண்டையில்
எல்லோருக்கும் வெற்றி
எல்லோருக்கும் ராஜ்யம்
அட..எல்லோருக்கும் தொலைக்காட்சி!
ஆஹா..இதுவல்லவோ
எங்கள் தமிழன் வென்ற
புதிய குருஷேத்திரம்..

_

பதவி நாற்காலி
---------------
மக்களாட்சி கண்டுபிடித்த
மந்திர நாற்காலியில்
மனிதர்கள் அமரலாம்
மந்திரி ஆகலாம்.
ஆனால்
மீண்டும்
மனிதர்கள் ஆகமுடியாது.

நகையை அடகுவைப்பது
நம்முடைய கதை.
நாட்டையே அடகுவைப்பது
நாற்காலிகளின் கதை.

பதவி நாற்காலிகளே
எம் பாரதநாடு
நீங்கள் பட்டாபோட்டு
விற்பதற்கல்ல...
-------------------

செருப்பு
-------

மாறி மாறி
ஓட்டுப்போட்டு
மக்கள் கண்ட
மாற்றம் என்ன?

போதும்...
மாண்புமிகு மந்திரிகளே
போதும் போதும்
இனி,
உங்களுக்குப் பதிலாக
உங்கள் செருப்புகளே
ஆளட்டும்.
அது ஒன்றும்
எங்களுக்குப் புதிதல்லவே..
இனி,
செருப்புகள் பேசட்டும்
இது-
கல்யாண வீட்டில்
கால்மாறிய செருப்பா?
கடவுள் வீட்டில்
களவுப் போன செருப்பா?
சட்டசபை
ஆயுதமா?

---

அலைபேசி
------------

அலைகளைவிட
பெருகிப்போன
அலைபேசிகளில்
மூழ்கிவிட்டது
மனித பூமி.

படுக்கையில்
பாத்ரூமில்
பயணத்தில்
பாக்கெட்டில்
கைப்பையில்
கால்பையில்
எவ்விடத்தும்
எக்காலமும்
ஜனக்கடலில்
அலைகளின் பேரிரைச்சல்.

இதில்
படம் பார்க்கலாம்
படம் பிடிக்கலாம்
பாட்டு கேட்கலாம்
செய்திப் படிக்ககலாம்
கடிதம் அனுப்பலாம்
காதல் கூட பண்ணலாம்
பேசுவதைத் தவிர
எல்லாம் செய்யலாம்.

பேச வேண்டுமா..
அலைவரிசையில்
"நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்குள் இல்லை.."

அந்நியனின்
அலைபேசியில்
இந்தியனின்
கைபேசி எழுதிய
ஹைக்கூ
" miss-call"

-----

ஆடை
----
தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு
சிறப்பு பட்டிமன்றம்
காணத் தவறாதீர்கள்.

"ஆடைகள்
உடலுக்கு அவசியமா? அலங்காரமா?"

இரண்டு அணிகளும்
பேசப்பேச
தொடரும் கைதட்டல்..
ஆமாம்..
அசத்தப் போவது யாரூஊ..?

துப்பட்டா இல்லாமல்
நுழைய அனுமதி மறுக்கும்
கல்லூரி வாசல்களில்
கிழிந்து தொங்குகிறது
ஆடைகளின்
பண்பாட்டு அடையாளங்கள்.

---

வாக்குப்பெட்டி
--------------

விளம்பரங்களில்
சிரிக்கும்
கிரிக்கெட் வீரர்கள்
எங்கள் வாக்குப்பெட்டிகள்

எப்போதாவது
எங்களுக்கும்
கிடைக்கலாம்
'உலகக்கோப்பை'
நம்பிக்கையில்
காத்திருக்கும்
100 கோடி ஜனங்கள்.

ஜயஜய ஜயஜய
ஜயஜய ஹே
வந்தேமாதரம்..
"வாக்குப்பெட்டி சின்னத்தில்
வாக்களியுங்கள்"
வந்தேமாதரம்.

----

கோவில் உண்டியல்
-------------------
சாமிகளில்
சாதி இருக்கிறதோ
இல்லையோ
சமத்துவம் இருக்கிறதா
திருப்பதி
ஏழு மலையானுக்கு
எத்தனை உண்டியல்..!
அலுத்துக் கொண்டது
ஆத்தங்கரையில்
அனாதையாக நிற்கும்
உண்டியல் இல்லாத- எங்கள்
ஊர்க்காவல் தெய்வம்.


தவணை முறையில்
தவறுகள் செய்துவிட்டு
மொத்தமாக வந்து
மொட்டை அடித்ததில்
கோவில் உண்டியல்
ஊதிப் பெருத்தது
கர்ப்பஹிரகத்தின்
வயிறு வீங்கி வெடித்தது.

திருப்பதி மொட்டையோ
திருத்தணி மொட்டையோ
பழநி மொட்டையோ-நாம்
பார்த்திராத மொட்டையோ
உண்டியல் வருகிறது
கோவில் உண்டியல் வருகிறது

"ஜாக்கிரதை ஜாக்கிரதை
திருடர்கள் ஜாக்கிரதை
உங்கள் கைப்பைகள் பணப்பைகள்
ஜாக்கிரதை"
-இப்படிக்கு
கோவில் தேவஸ்தானக் கமிட்டி.

((தமிழர் நட்புறவுப் பேரவையின் ஜந்தாம் ஆண்டுவிழா
-தருண் பாரத் நற்பணி மன்றம் அரங்கு, செம்பூர்,

மும்பை. 13-01-2008ல் நடைபெற்ற கவியரங்கத்
தலைமையில் வாசித்த 'உரைவீச்சுகள்")

Monday, January 7, 2008

யார் இவர்கள்?




யார் இவர்கள்?
----------------

2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின்
மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை.
ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்த இரு ஜோடிகள்,
தங்களைக் கேலி செய்து ஆண்கள் கூட்டத்தை நோக்கி பெண்கள் சத்தமிட,விளைவு.. அந்த இரு
பெண்களைச் சுற்றிக் கூடி அவர்களின் உள்ளாடைத் தெரியுமளவுக்கு அவர்களின் ஆடைகளைத் தூக்கிக் கிழித்து மிருகத்தனமாக
நடக்கத் துணிந்தார்கள். அச்சமயம் அங்கிருந்த
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிருபர் அக்காட்சியை புகைப்படம் எடுத்து சாட்சியமாக்கி, தக்க நேரத்தில் அங்கு வந்த காவல்துறை உதவியுடன் அவ்விரு ஜோடிகளையும் காப்பாற்றினார்.

அந்தப் பெண்களைச் சுற்றி இந்த வெறியாட்டம்
நடத்திய இவர்கள் யார்?

இவர்களுக்கு குடும்பம் இல்லையா?
இவர்கள் என்ன கல்லிடுக்குகளிலிருந்து தவறிவிழுந்த உடைந்தச் சில்லுகளா?
குடி, கும்மாளம், வெறி... இதெல்லாம் இப்படியும் நடக்கத் தூண்டுமா?
ஏன் இதெல்லாம் நடக்கிறது?
இந்தக் கூட்டத்தில் தன் மகனை, தன் சகோதரனைப் பார்க்கும் குடும்பத்தின் கதி என்ன?
இவர்களினால் பாதிக்கப்பட்ட பெண், அவள் கணவர்/காதலன் இவர்களின் மனநிலை எவ்வளவு
பாதிக்கப்பட்டிருக்கும்?
இப்படியானக் கவலைகளில் நடுத்தரக் குடும்பங்கள்
தத்தளித்துக் கொண்டிருந்தன.
அப்போது தான் பத்திரிகைகள் , அரசியல் தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துகளை
அதிமேதாவித்தனமாக வாரி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மாதிரிக்கு ஒன்றிரண்டு:


>இந்தியத் தலைநகரம் டில்லியுடன் ஒப்பிடும்போது
மும்பை எவ்வளவொ பரவாயில்லை! (இந்த கேடு கெட்ட விசயத்தில்).

> மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்படல் வேண்டும்.

> பெண்களை அவமானப்படுத்திய இவர்கள் மும்பைக்காரர்கள் அல்லர். மும்பைக்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள்!

> பெண்கள் அணியும் ஆடைகள்தான் இதெற்கெல்லாம் காரணம்.

> பெண்கள் ஏன் இருட்டில் வெளியில் வரவேண்டும்?

> பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் குற்றத்தைப் பதிவு செய்யாத வரை போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்படியாக தொடர்கிறது.

இதில் எதுவுமே இந்தப் பிரச்சனைக்கான தீர்வையோ அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையோ வைக்கும் நோக்கத்தில் பேசப்படும் அக்கறையுள்ள விமர்சனங்கள் இல்லை.

டில்லியுடன் ஒப்பிடும்போது மும்பை பரவாயில்லை என்பதும் மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பதும் பிரச்சனையைத் திசைத்திருப்பவே உதவும்.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே "இதைச் செய்தவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள்
என்று இதிலும் அரசியல் பண்ணபார்க்கிறார்.,
கொஞ்சமும் விவஸ்தை இல்லாமல்!
(Involved in the juhu molestation were outsiders. if this police does not take any action we will blacken their faces and parade then around the city- uddhav thackeray)

கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்திருக்கும் 14பேரில் 9 பேர் மும்பையில் வாழும் மராத்திய
குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

குற்றவாளிகளுக்கு மதம், இனம், மொழி, நாடு, குடும்ப அடையாளங்கள் கிடையாது. இப்படி எந்த அடையாளத்துடனும் அவர்களை அடையாளம் காட்ட முயல்வது அந்தக் குற்றங்களைச் செய்யாத
அவரைச் சார்ந்த அப்பாவிகளையும் உறவுகளையும்
மீள முடியாத தண்டனைக்குள்ளாக்கிவிடும்.

பெண்கள் ஏன் இரவில் வெளியில் வரவெண்டும்?
என்று இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் இப்போது
07/1/2008 , பிற்பகல் 3.15க்கு) சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவரிடம் கேட்கிறார்கள்
"நீங்கள் ஏன் இரவில் வெளியில் வந்தீர்கள்?'
-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு-
என்று பதில் சொல்கிறார்.
நீங்க்ள் வெளியில் வரலாம், பெண்கள் வரக்கூடாதா என்று அடுத்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

எந்த நாட்டில் இரவிலும் பெண்கள் பத்திரமாக வெளியில் போய்விட்டு திரும்ப முடிகிறதோ அந்த நாட்டில் தான் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது என்பது மட்டுமல்ல,
அந்த நாட்டில் தான் பண்பாடும், கலாச்சாரமும்
மதிக்கப்படுகிறது, உண்மையான சுதந்திரம்
இருக்கிறது.

"படிதாண்டி, குளம் சுற்றி
உனைத் தரிசிக்க வரும்
உன் மகளை
உன் மகனே
கேலி செய்கிறான்,
அழகி மீனாட்சி
உன் காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
( கவிஞர் இரா.மீனாட்சி)
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணமாம்!

இக்காரணம் சொல்லப்படும் போது தான் அண்மையில் சென்னைக் கல்லூரி ஒன்றில் ஜீன்ஸ்
பேண்ட், டீ ஷர்ட் அணிந்து சென்ற தோழி லீனாமணிமேகலையை துப்பட்டா அணிந்து உள்ளே வர சொன்னதும் அவர் மறுத்து வெளியேறியதும் கவனிக்கப்பட வேண்டியது என்ற
எண்ணம் வலுப்பெறுகிறது.
உலகச்சந்தையை நடுத்தெருவில் திறந்து வைத்துவிட்டு பெண்கள் யாரும் துப்பட்டா அணியாமல் வெளியில் வரக்கூடாது என்று சொல்வதில் நியாயமில்லை.
ஆமாம் அப்படி என்னதான் துப்பட்டாவில் காப்பாற்றப்பட்டுவிடும் பெண்ணின் மானமும்
நாம் வாய்கிழியப் பேசும் நம் பண்பாடும்.?
புடவைக் கட்டிய எந்தப் பெண்ணும் பாதிக்கப்படுவதில்லை என்பதையாவது இந்த மாதிரி பேசுபவர்களால் நிரூபிக்க முடியுமா?
துப்பட்டா மறைப்பில் இருக்கிறது நம் பண்பாடு என்று ஒரு கல்லூரி சொல்கிறது, அந்தக் கல்லூரியிலிருந்து இந்த நாட்டின் இளைய தலைமுறை வெளிவருகிறது.. அவர்களிடமிருந்து
உருவாகும் எண்ணங்கள் எப்படிப் பட்டவையாக இருக்கும்!

மினியும் இறுக்கமான ஆடைகளும் அணிந்து சாலைகளில் நடக்கும் பெண்களை வெளிநாடுகளில் ஆண்கள் கூட்டமாய்ப் பாய்ந்து
ஆடைக் கிழித்துதான் அலைகிறார்களா?

ஏன் நம் கலைச் சிற்பங்களில் தன் உடலழகு எடுப்பாக தெரிய ஆடை அணிந்த பெண்ணுருவ சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் இருக்கிறது தானே. அந்தப் பெண்களை எல்லாம்
இந்த மாதிரிதான் ஆண்கள் நடத்தினார்களா?

இரண்டு வர்க்கங்களுக்கு நடுவில் உலகமயமாதல்
பெரும் இடைவெளியை, நிரப்ப முடியாதப் பள்ளத்தாக்கு போல ஏற்படுத்திவிட்டது.
இம்மாதிரி கொண்டாட்டங்களின் போது உயர்மட்டத்திலிருப்பவர்களை அணுகுவது கீழ்த்தட்டு மனிதர்களுக்கு மிகவும் இலகுவாகிறது. இந்தத் தீடீர் நெருக்கத்தில் அவர்கள் பார்க்கும் பெண்கள், அவர்கள் இதுவரைப் பழகும் பெண்களைப் போலில்லை . இம்மாதிரி உடை அணிந்திருந்தால் அவள் நம் பண்பாட்டுக்கு எதிரானவாள் என்ற ஒரு கருத்துருவாக்கமும் ஏற்கனவே அவர்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், கூட்டத்துடன் கோவிந்தா, நம்மை யாரால் என்ன செய்ய முடியும்..? இத்தியாதி எண்ணங்கள் ஏற்பட்டு விடுகிறதா? இதையும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. வர்க்கப்பிரச்சனையின் ஊடாக இதைப் பார்ப்பதும் எப்போதும் பொருத்தமாக இருப்பதில்லை.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் இந்த ஆண்கள்?

இந்த ஆண்களும் ஒரு பெண்ணின் மகன், கணவன், அப்பா, அண்ணன். தம்பி... என்ற பார்வையில் பார்க்கும் போது சம்மந்தப்பட்ட இவர்கள் சார்ந்த பெண்ணின் மனநிலையை, வேதனையை நினைக்கும்போது ... அந்த வேதனையை வார்த்தைகளால் எழுத முடியவில்லை.

மொத்தத்தில் பெருகி வரும் இம்மாதிரி சமூகத்தலைகுனிவுக்களுக்கு யார்ப் பொறுப்பு?

Wednesday, December 12, 2007

உறவுச் சிக்கல்கள்


உறவுச் சிக்கல்கள்
--------------------> புதியமாதவி, மும்பை
( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில்
கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)

நான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:
தனியாகவா போகிறாய்?
சங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா?
இப்படிக் கேட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள். அவர்களுக்குத் தெரியும் இக்கருத்தரங்கு பெண்கள் கருத்தரங்கு, பெண்கள் கலந்து கொள்ளும்
பெண்களால் நடத்தப்படும் கருத்தரங்கு என்பது.
இதைவிட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி: நுழைவிசைவுக்காக (விசா) ஜெர்மானிய தூதரகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இதுதான்:
தனியாகவா பயணம் செய்கிறீர்கள்?
உங்கள் கணவர் உடன் வரவில்லையா?
இப்போது யோசித்துப் பாருங்கள். இதே மாதிரி கேள்வியை ஓர் ஆணிடம் அவன் தனியாக பயணம் செய்தால் யாராவது கேட்பார்களா? இப்படிக் கேள்வி கேட்டவர்களை நான் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். எது , யார் இந்த மாதிரி கேள்விகளை அவர்களிடம் திணித்தது?
சமுதாயத்தின் மொழி, நம்பிக்கை, மரபுகள் நம்மீதும் நம் நனவிலி மனதிலும் (sub-conscious mind) ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய தாக்கம் இது. இந்த மாதிரியான தாக்கங்கள் மிகவும் இயல்பாக கிட்டத்தட்ட அனிச்சை செயல்போல நம் சிந்தனை அலைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஆணுக்கு உறவுகள் உண்டு. பெண்ணுக்கும் உறவுகள் உண்டு.
ஆணுக்கு உறவுகள் பிரச்சனைகள் ஆவதில்லை. பாரமாவதில்லை. அவனைச் சிறுமைப் படுத்துவதில்லை. அவன் மதிப்பு, மரியாதைகளை நிலைநிறுத்துகின்றன.
ஆனால் பெண்ணுக்கு உறவுகள் பிரச்சனைகளாக பயமுறுத்துகின்றன. அவளால் சுமக்க முடியாத பாரமாக அவளைக் காலம் காலமாய் அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப் படுத்துவதில்லை.
அவளைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளாய் உறவுகள். அவள் வேகமாக நடந்தால் அவளைக் காயப்படுத்தும். அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது மாற்றமுடியாத விதி. இனம், மொழி, நாடு கடந்த உலகளாவிய சட்டம் இது. உறவுகள் அவளுக்காக வாழ்வதும் வாழாமல் இருப்பதும் உறவுகளின் விருப்பம் கட்டாயமில்லை.
அவளுக்கு என்று விருப்பங்கள் இல்லை. இருக்கவும் கூடாது. அவளுடைய விருப்பங்கள், கனவுகள், திட்டங்கள் எல்லாமே அவளைச் சுற்றியிருக்கும் உறவுகளின் நலம் சார்ந்தாக மட்டுமே இருக்கும், இருக்க வேண்டும்.

சமைப்பதும் துவைப்பதும்
அழுகிற குழந்தையை
அள்ளி எடுப்பதும்
குடும்ப பாரம் தூக்கிச்சுமப்பதும்
எனக்கு மட்டும்
உரியதென்கிறாய்!
புரிகிறது -
நீ ஆண் என்பதும்
நான் பெண் என்பதும்
அதனாலென்ன மனிதர்கள் தானே
என்ற பதிலை
உன்னிடம் நான்
கேட்டுப் பெறவில்லை என்பதும் -

( வர்த்தினி)


பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்துவிட்டாலே ஆண்களுக்கு
அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னார் பெண்ணிய விடுதலைப் போராளி தந்தை பெரியார்.
ஆனால் நடந்தது என்ன?

அடுப்பங்கரை விறகுக்கு
ஒரு பக்கம் தீ
இந்த அலுவலக விறகுக்கு
இரண்டு பக்கமும் தீ
(புதியமாதவி)

இன்றைக்கு அவர் நினைத்தப் படி தன் காலில் தானே நிற்குமளவுக்கு பொருளாதர வலிமையை அடைந்துவிட்ட பெண்களாலும்
பெண் அடிமை சமுதாயத்திலிருந்து விடுதலைப் பெற்ற பெண்ணாக வாழ்ந்து காட்ட முடிகிறாதா என்ற கேள்வி
நம் முன்னால் விசவரூபமெடுத்து நிற்கிறது. இப்போது தான் நாம் வேகமாக ஓடி ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் நிற்பதை
உணர்கிறோம். நமக்கான வெளி, நமக்கான பாதை, நமக்கான பயணம் எதுவாக இருக்க வெண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தக் கேள்வியை நேருக்கு நேராக சந்திக்காமல் கண்ணாடிச் சன்னல்கள், திரைச்சீலைகளுக்குப் பின்னால் நாம் மறைந்து கொள்ளும் வரை நம் முகங்களை நம் முகங்களாக நம்மால் நம் வரலாற்றில் பதிவு செய்ய முடியாமல் போய்விடும்.

பெண்ணின் உறவுச் சிக்கல்களை இரண்டு வகையாகப் பிரித்து பார்க்கிறேன்.
முதலில் அவள் இந்த மனித சமுதாயத்தின் ஓர் அங்கம். இதில் அவளுக்கும் இந்த சமுதாயத்திற்குமான உறவுச் சிக்கல்கள்.
இரண்டாவது மனித சமுதாயத்தில் ஆண்-பெண் என்ற இரண்டு பாலியல் அடிப்படையானப் பிரிவுகளில் பெண்ணுக்கு ஆணுக்குமான உறவு சார்ந்த சிக்கல்கள்.

மனித வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக இருந்த இனக்குழு எப்படி எப்போது தந்தைவழிச் சமூகமாக, ஆண்வழிச் சமூகமாக
மாறியது என்பதான காரண காரியங்களை பற்பல இசங்கள், பெண்ணிய வாதிகள் நிறையவே பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் அறிவோம்,. எனவே கூறியது கூறல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

பெண் என்றால் யார்?

சூல்பை, கருப்பை என்ற பதில் வருகிறது.
அப்படியானால் இந்த சூல்பை, கருப்பையை எடுத்துவிட்டால் அவள் பெண்ணில்லையா?
இந்தக் கேள்வியை முன்வைக்கும் போதுதான் பெண்ணியக் கவிஞராக பெரிதும் அறியப்பட்டிருக்கும் கவிஞர் குட்டிரேவதி அவர்கள் தான் நடத்தும் பெண்ணிய இதழுக்கு கருப்பை, பிரசவத்துடன் தொடர்புடைய "பனிக்குடம்" என்ற பெயரை
வைத்திருப்பதில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இதுவும் கூட நம்மில் ஊறிக்கிடக்கும் மரபியல் ரீதியான சிந்தனைகளின் தாக்கம்
என்று தான் நினைக்கிறேன்.

‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னது அரிஸ்டாடில். ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கப் பட்டிருப்பதாகக் கருத வேண்டுமென்றும் என்கிறார் அந்தச் சிந்தனையாளர்!
தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான்.
"திறமையற்ற பெண்தான் நற்குணம் உடையவள்' என்பது சீனப்பழமொழி.

பெண் எதையும் தானாகச் செய்து கொள்ள உரிமையற்றவள் ( மனுநீதி 5:147)
ஒரு மகனைப் பெறுவதற்க்காக எந்த ஆணும் இன்னொருத்தன் மனைவியைப் பயன்படுத்தலாம். ( மனு 9:52)
வாரிசுகள் இன்றி சொத்துக்களை விட்டுக் கணவன் இறந்துவிட்டால் கணவன் வழி சொந்தக்காரனுடன் கூடிக் குழந்தை பெற்றுக் கணவனின் சொத்துக்களை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். என்கிறது மனுநீதி.
இன்றைய சமுதாயத்தில் இக்கருத்துகள் மறைந்துவிட்டன என்று பலர் சொல்கிறார்கள், மறைந்துவிடவில்லை. மங்கலாக தெரிகிறது. அவ்வளவுதான். இக்கருத்துகளின் ஊடாக விதைக்கப்பட்ட கருத்து: பெண் ஓர் ஆணின் வாரிசை உருவாக்கும்
விளைநிலம் என்ற கருத்துதான். இன்றுவரை இந்தக் கருத்திலிருந்து முழுமையாக பெண்களால் வெளிவந்திருக்க முடிந்திருக்கிறதா?
சீனாவில் கன்ஃப்யூஷியஸ் பெண்களைப் பற்றி பேசியது மிகக் குறைவு. எங்கும் உயர்வாக பேசவில்லை. ஆண்வழிச் சமூகத்தின் கடைசிப் படிகளில் பெண்ணை வைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் ஆண்வாரிசைப் பெற்றெடுப்பது தான் அவள் பெண்ணாகப்
பிறந்ததன் பலன் என்ற நம்பிக்கை இன்றுவரை உள்ளது. அதனால் கம்யுனீசக் கொள்கைகள், சட்டங்கள் பெண்சிசுக்கொலையை மாற்றமுடியவில்லை. 1990 களில் வெளிவந்த பி.பி.சி எடுத்த ஆவணப்படம் "மரண அறை" வெளிவந்தப் பிந்தான் பெண்குழந்தைகள் எவ்வாறு அனாதைகளாக்கப்படுகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை உலகம் அறியவந்தது.
ஆணின் ஆசைநாயகியாக இருக்கவும் அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் சீனப்பெண்கள் தயாராக இருந்தார்கள்.

இந்தியாவில் சீனாவில் பெண்ணுரிமைப் பேசியவர்கள் இல்லையா? பெண் கவிஞர்கள் இல்லையா? பெண் எழுத்தாளர்கள் இல்லையா? என்றால் இருந்தார்கள் இருக்கிறார்கள். உலக வரலாற்றில் பெண்ணுரிமைக்கான முதல் குரலாக ஒலிக்கும் புத்தரின் கருத்துகள் பிறந்த இடம் இந்திய மண் என்றால் பரவி காலூன்றிய இடம் சீனமண்.
துறவு மேற்கொள்ளும் முன் தன் மனைவி யசோதரையிடம் " நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்" என்று கேட்டுக்கொண்டவர். தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக்கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.
“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.
புத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார்
புத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார்.
சமயச் சடங்குகள், ஈமச்சடங்குகள் இதை எல்லாம் செய்யும் அதிகாரமும் உரிமையும் ஆண் குழந்தைக்குத் தான் என்றும் ஆணாகப் பிறந்தவன் தான் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர முடியும், நிர்வாண நிலையை எட்ட முடியும்
என்று இருந்த இந்து மத நம்பிக்கைகளை உடைத்தார். சீனாவிலும் பவுத்தம் கோலோச்சிய பேரரசி வூ ஜீத்தியேனின் ஆட்சியிலும் டாங்க் முடியாட்சிலும் பெண்கள் உயரிய அந்தஸ்தில் இருந்தார்கள் , சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பதை
வரலாற்றில் பார்க்கிறோம். நான் சொல்ல வந்தக் கருத்திலிருந்து சற்று விலகிச் செல்வது போல இருக்கும்.
இப்போது தான் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
புத்தராக மாறிய சித்தார்த்தன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள கேட்டதெல்லாம் ரொம்பவும் புரட்சிகரமான கருத்துகள் தான் என்பதில் ஐயமில்லை, ஆனால் சித்தார்த்தனின் மனைவி யசோதரை அதற்கு என்ன பதில் சொன்னார்.

, உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்பதுதான்.

யசோதரைக்கும் துறவியாக விருப்பம்தான். ஏன் சித்தார்த்தனுடன் சேர்ந்து அவளுக்கும் சமூக வெளிக்கு வர ஆசைத்தான்.
ஆனால் வரமுடியாது. ஏன் வரமுடியாது. அவளே தான் சொல்கிறாளே. குழந்தை ராகுலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டும். வயதான மாமன், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆண் சமூக வெளிக்கு எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தை விட்டுவிட்டு வந்துவிட முடியும் எப்போதும் எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரு பெண்ணால் அது முடியாது. ஏன் எனில் இந்த உறவுகளை அவள் தான் சுமக்கிறாள், குடும்பம் என்ற செடியின் ஆணிவேராக பெண் மட்டுமே இருக்கிறாள். சமுதாயக் கட்டமைப்பு இதுதான்.'

இப்போது தான் பிரச்சனை வருகிறது. படித்தவள், கை நிறைய சம்பாதிக்கிறவள், எல்லா தளங்களிலும் ஆணுக்கு இணையாக பல இடங்களில் அவனை விட ஒரு படி உயர முடியும் என்று காட்டும் தகுதிப் ப்டைத்தவள் இன்றைய யசோதரை. இவள்
சித்தார்த்தனுக்கு முன்பாகவே சமூக வெளிக்கு வரத்துடிக்கிறாள். ஆனால் சித்தார்த்தன் ராகுலைக் கவனித்துக் கொள்ளத் தயாரா? வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா? வரமாட்டான். அப்படி வரவேண்டும் என்ற நிலை
ஏற்படும் போது தான் காலம் காலமாய் இந்த சமுதாயம் பெண்ணுக்கு என்று உருவாக்கி வைத்திருக்கும் கடமைகளை
அவன் பட்டியலிடுகின்றான். பிரச்சனைகள் உருவாகிறது.

கற்பு, தாய்மை இந்த இரண்டும் தான் காலம் காலமாய் பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்கள். சமூக மதிப்பீடுகளும் நுகர்ப்பொருள் கலாச்சாரமும் இந்த மதிப்பீடுகளை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

கற்பு பற்றி ஒரு காலத்தில் சொன்னார்கள்: ஆடவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டாலே அந்தப் பெண்ணின் கற்பு களங்கப்பட்டு விடுகிறது என்று. ஆண் பெண்ணைப் பார்த்து ஆசைப்படுவதில் பெண்ணுக்கு எந்த தொடர்புமில்லை.
இந்த தெளிவு வந்தவுடன் ஒரு பெண் ஆடவனைப் பார்த்து ஆசைப்பட்டால் தான் தவறு, அந்த ஆம்பளை மட்டும் ஆசைப்பட்டால் அதற்கு இவள் என்ன செய்யமுடியும்? என்று மாற்றிக்கொண்டான்.அதன் பின் பெண் படிக்க வெளியே வருகிறாள், வேலைக்குப் போகிறாள், பல்வேறு ஆண்களைச் சந்திக்கிறாள், தொடர்பு ஏற்படுகிறது. ஒப்பீடு சாத்தியமாகிறது. இன்று ஒரு பெண்ணுக்கு வேறு ஓர் ஆணுடன் காதலுறவு இருக்கிறது எனத் தெரிந்த பிறகும்கூட இவர்களுக்குத் தேவையான பணம், சாதி, தகுதி, படிப்பு, எல்லாம் கூடி வருகிற போது திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்குப் பின்
சரியாக இருந்தால் போதும், இன்றைக்குத் திருமணம் பேசப்படும் போதே இந்த நிலைமை வந்துவிட்டது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
அப்படியானால் சமுதாயத்தில் கற்பு என்ற சொல்லின் பொருள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டுதானே வருகிறது.

சீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ்விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும்
மனப்பான்மை முற்றிலும் மறைந்துவிட்டிருக்கிறது .


பெண்ணின் மேல் பாரமாய்க் கவிந்திருக்கும் அடையாளம் தாய் என்ற புனைவுதான். பெண்ணை அடிமைபடுத்த ஆண் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதி அற்புதமானது இந்தத் தாய்மை என்ற ஆயுதம். பெண் தாய்மையில்தான் முழுமையடைகிறாள், பிறந்தப் பயனை அடைகிறாள் என்று புனைந்து அவளைப் பிள்ளைப் பெறும் எந்திரமாய் அவன் வாரிசை
வளர்க்கும் செவிலியாய் மட்டும் ஆக்கியிருந்தது ஆண் மேலாண்மைச் சமூகம்.

கர்ப்பத்தை மட்டுமே
நினைவூட்டி அச்சுறுத்தும்
இந்தக் கட்டில்
எஜமானின் ஆயுதம் ' என்று சல்மா சொல்வது இதைத்தான்.
இப்போதும் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு குற்ற உணர்வு
இருக்கிறது.

நகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் xy குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது.ச்

கல்வியும் கல்வி வழங்கிய பணி, பணி நிமித்தம் பிரிந்திருத்தல், அதனாலேயே தனித்து வாழ முடியும் என்று
காலம் பெண்ணுக்கு கற்பித்துவிட்டப் பாடம் இவை அனைத்தும் ஆண்-பெண் உறவில் சமுதாயம் போட்டிருந்த
இரும்புத்திரையை விலக்கி புதிய வெளிக்கு இட்டு வந்துள்ளது.

'பொறுக்க முடியாத தருணத்தில்
என் நியாயத்தை
உரத்துச் சொல்வது
வேலைக்குப் போகிற திமிராகும்போது
நீ அடிப்பது
உதைப்பது மட்டும்
எப்படி அத்தான்
ஆபிஸ் டென்ஷனாகிறது
(இளம்பிறை, நிசப்தம் பக் 14)

சோவியத் ரஷ்யா உருவாக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு அரசியல் வாழ்வில் பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைச் சட்டபூர்வமாக்கிய பெருமைக்குரியவர் அலெக்சாண்டிரா.சர்வதேச அரசியலில் பெரும் பங்காற்றியதோடு லெனின் தலைமையின் கீழ் அமைச்சராகவும் வெளிநாட்டுத் தூதராகவும் செயலாற்றிய செயல்திறன்மிக்க போராளி; தன் வாழ்நாள் முழுவதும் அயராது துணிச்சலோடு தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். முதலாளித்துவ சமூகம் பெண்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்த அலொக்சாண்டிரா ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் பல்வேறு முறைகளில் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வீராங்கணை எனலாம்.

வர்க்க விடுதலை மட்டும் பெண் விடுதலைக்குப் போதாது என்பதில் உறுதியாக நின்று செயல் பட்டதாலேயே பலமுறை கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புரட்சியின் போதும் அதன் பின்னரும் அவர் சந்தித்த நெருக்கடிகளும் சிக்கல்களும் ஏராளம். ஆயினும் மனந்தளராமல் இறுதிவரை பெண் விடுதலைக்கும் போர் எதிர்ப்புக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்துக்கொண்ட அசாதாரண பெண் அலெக்சாண்டிரா.
குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்றாலும் அந்தச் சுமையைத் தாங்கும் நிலையும் பெண்ணுக்கே உரியதாகிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் விடுப்பு எடுப்பது என்பது இயலாமற்போகிறது. தவறி எடுத்துவிட்டால் வேலை போய்விடும் என்ற நிலை. வேலை பறிபோனால் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் நேர்ந்து விடுகிறது. அப்போது அவள் சுயத்தை இழந்துவிடும் துரதிருஷ்டமும் ஏற்பட்டுவிடுகிறது.

வேலையை இழந்து, வறுமையில் வாடி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழலில் பெண் தன் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆணை நாடிச் சென்று பணத்தைப் பெறும் சூழலும் நெருக்கடியும் உருவாகி விடுகின்றன. பெண்களின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை பாட்டாளித் தோழர்கள் உட்பட. புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவில் விபசாரம் பெருமளவிற்குக் குறைந்தது என்றாலும் அதன்பின் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைமை சோவியத் சமூகத்தில் விபசாரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்தது. அவர் எழுதிய சகோதரிகள் என்ற கதையில் அதை எதிர்த்துப் போராடும் தேவையை அலெக்ஸாண்டிரா நுட்பமாக விளக்குகிறார் .

பல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உள்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.

அமெரிக்காவைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் The centre for reproductive rights என்கிற அமைப்பு ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜார்ஜ் புஷின் அரசு பெண்களின் உடல்நிலை மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் புஷ் அரசு கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது இந்த அமைப்பு. இது தவிர, முறையற்ற செக்ஸ் கல்வியை ஊக்குவிப்பதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது. ஏற்கனவே கருக்கலைப்புப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழலில் இந்த அறிக்கை உலக அளவில் பெண்ணியவாதிகளிடையில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெண்களின் நிலை கவலையளிப்பதாகவே இருப்பதற்கு இன்னொரு சாட்சி London school of economicsன் centre for economis performance தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. நிர்வாகக் குளறுபடிகள்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும்கூட இந்த சம்பள பாகுபாட்டிற்குக் காரணங்கள். ‘கடந்த 30 வருடங்களில் ஆண்,பெண்களுக்கு இடையிலான இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும்' என்கிறது அறிக்கை. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக வேலையை தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது' என்கிறார் அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.

பெண்ணுக்கு ஆன்மிகத்தளத்தில் இடமில்லை. மதம் அவளைத் தீண்டத்தாகதவள் என்று புறக்கணிக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்து மதம். இந்து மதத்தில் தான் ஏகப்பட்ட பெண்வழிபாடு. மூன்று தேவியர் உண்டு. அவர்களுக்கு பிள்ளைப் பேறு, பிரசவம் எல்லாம் உண்டு. குடும்பம் உண்டு. பாற்கடலில் படுக்கை அறை உண்டு. அந்தப் பொம்பளை சாமிக்கெல்லாம்
மாதவிலக்கு தீட்டு கிடையாதா?
சபரிமலை சர்ச்சை வந்த போதும் வழிபாட்டு இடங்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்ப்டாத போதும் அறநிலை அதிகாரிகளாக
பெண்கள் அமர்த்தப்படுவதில்லை என்று எழுதிவைத்திருப்பதை எதிர்த்தும் போராட வந்தப் போதும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் மத நம்பிக்கைகளை எதிர்த்த பெண்ணிய அமைப்புகள் எத்தனை?

பெண்ணுக்குக் கல்வி வேண்டும். தொழில் செய்ய உரிமை வேண்டும். அரசு பதவியில் அமர முடியும் நிர்வாகம் செய்ய முடியும். அதிகாரமும் செய்யலாம். பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு சொத்து சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் பெண் உரிமைகள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன. இங்கு தரப்படும் கல்வி யார் தேவையை நிறைவேற்றுகிறது. இங்கு நடைபெறும் தொழில் நிறுவனங்கள் யார் தேவையை எவ்வகையில் எத்தகைய முறையில் நிறைவேற்றுகிற நிறுவனங்கள்? நிர்வாகம் செய்வது என்றால் என்ன? சொத்துரிமை என்பது என்ன? இவையெல்லாம் முதலாளியத்தை, அரசு அதிகாரத்தை வலுப்படுத்தக் கூடியவை. நெடுங்காலமாக நம் சமூகச் சூழலில் பெண்கள் எத்தனையோ வகைகளில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் பிறப்பு முதல் இறப்புவரை எத்தனையோ கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகி வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு நம் காலத்தில் கிடைத்துள்ள கல்வி முதலியவை எத்தனை அளவுக்கு ஆக்க ரீதியானவை என்பதை நாம் மறுக்கமுடியாது.
கூடவே இன்னொன்றையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. முதலாளியச் சூழலில் நமக்குக் கிடைக்கிற கல்வி முதலிய உரிமைகள் நாம் நமக்கான ஆளுமையைப் பெறுவதற்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கல்வி, நுகர்ப்பொருள் கலாச்சாரம், உலகமயமாதல் இதனால் பெண்ணிடம் ஏற்பட்டிருக்கும் புதிய அடையாளங்கள் சமூக மதிப்பீடுகளை பாதித்துள்ளன. மரபுகளை மாற்றியுள்ளன.அடையாளங்களை அழித்து புதிய வெளியை உருவாக்கியுள்ளன.
தன்னை மறந்து தன் நாமம் கெட்டு அவள் அவனில் ஒன்றி அவளை இழத்தல் இனி சாத்தியமா?
அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் இந்தக் கேள்வியை ஒவ்வொரு சமூக அக்கறையுள்ளவர்களிடமும் கேட்கிறது. என்ன பதில்? யாரிடம் குறைபாடு? குடும்ப வட்டம் இன்று ஒரு சின்ன ஒற்றைப் புள்ளியாய்
மாற்றம் கண்ட பிறகும் எதனால் காதல் கசப்பாகி வழக்கு மன்றங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது? படித்தப் பெண்கள் அதிகமிருக்கும் கேரள மாநிலத்தில் பெண்களின் தற்கொலைச் சாவுகளும் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன?

ஒரு பக்கம் பெண்விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம். மறுபக்கம்
பெண் குடும்பம் சார்ந்தும் கணவன் துணையுடனும் வாழ்வது மட்டுமே அவளுக்கான
சமூக அந்தஸ்த்து என்ற சமூக வாழ்வின் அகநிலை. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண், இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை. இந்த இடைவெளி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்னவோ இப்போதோ நேற்று முந்தினமோ தோன்றிய இடைவெளி அல்ல. ஆனால் இந்த இடைவெளி எவராலும் இட்டு நிரப்பமுடியாத பள்ளத்தாக்காய் அண்மைக்காலங்களில்
மாறிப்போனதால் தான் சமரசமும் பெண் தன்னை மறந்து காதலாகிக் கசிந்து கரைந்து
போதலும் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.

கல்வியும் கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகளும் இன்றைய பெண்ணுக்கு அபரிதமான
பொருளாதர உரிமையை வழங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் ஆண்களை விட
பெண்களே முன்னுரிமைப் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். பள்ளி இறுதிப் படிப்பு,
கணினி மென்பொருள் துறை. வளர்ந்து வரும் BPO, Call centres, வணிக வளாகங்கள்
அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது இன்றைய உலகமயமாதலும் தனியார்மயமாதலும். பெண்களை பணிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பதும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நியாயமானக் கோரிக்கைகளை புறக்கணிப்பதும் பெண்களின் விசயத்தில் எளிது என்பதால்
பெண்களுக்கு பணியடங்களில் முன்னுரிமை வழங்கப் படுகிறது என்பது தான் உண்மை. உலக மயமாதலான சந்தையில் அரசும் அரசு சார்ந்த கொள்கைகளும் வலுவிழந்து விட்டதால் படித்தப் பெண்களும் மேற்கத்திய உடையில் வலம்வரும்
கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திலிருந்து
வெளியில் வர முடியாது என்பது பெண்ணிய வளர்ச்சி விடுதலையில் ஏற்பட்டிருக்கும்
தீர்க்க முடியாத நோயாகிவிட்டது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக
வீடு, குடும்பம், குடும்பம் சார்ந்த கடமை, பாலியல் உறவு, பொறுப்பு இவைகளை முழுமையாகச்
செயல் படுத்த முடியாத நிலைமை பெண்களுக்கு. விளைவு.. மணமுறிவுகள்.

மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்திருக்கும் 10 ஆண்டு
வழக்குகளில் 1991ல் 1839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் அதுவே 2877 ஆக
உயர்ந்துள்ளது. (ref: Growing Incidence of Divorce in Indian Cities:)


ஆண் பெண்
15-24 1.7 22.3

25-34 57.3 57.0

35-44 29.0 18.0

44+ 12.0 2.7

இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மும்பை, சென்னை நகரங்களில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ,மேலும் விவாகரத்துக்கான காரணங்களில் தற்காலிகமான வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துக்கு வந்து
வழக்குகள் 18.7. ஆணின் வன்கொடுமைக் காரணமாக வந்தவை 33.7.
பொய், பித்தலாட்டம், பாலியல் உறவில் நிறைவின்மை காரணங்கள் எல்லாம் முறையே 1.3, 5.7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
இந்தப் பத்து வருட உண்மையான பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் ஆண்- பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் உளவியல் சார்ந்த புள்ளியைச் சுற்றி எழுந்திருக்கும் அலைகள்.
சீனாவில் நிறைய சம்பாதிக்கும் பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். அதுமில்லாமல் அதிகம் படித்தப் பெண்களைச் சீன ஆண்கள் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக மனைவியாக ஏற்கத் தயாராயில்லை
சீனத்தில் குடும்ப வன்முறை ரொம்பவும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. மனைவியை அடிப்பதைப் பெருமையாக நினைக்கும் கணவன்மார்கள். அதிலும் பெண்குழந்தையைப் பெற்ற பெண்தான் குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகிறாள்.
2003 ஆம் ஆண்டை ஒப்புநோக்க 2004 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை இரட்டிப்பாகி இருக்கிறது .

கல்வி, வேலை காரணமாக பெண்களின் திருமண வயது 25ஐத் தாண்டிவிட்டது.
25 வயதுக்குள் ஒரு பெண்ணோ ஆணோ தன் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டபின் ஒருவருக்காக ஒருவர் தன்னை மறப்பதும் தன்னை இழப்பதும் எப்போதும் எல்லா இடங்களிலும்
சாத்தியமாவதில்லை.
புடவையா.. அவருக்குப் பிடித்தது..
சமையலா.. அவருக்குப் பிடித்தது
சங்கீதமா.. அவருக்குப் ப்டித்தது
சினிமா அவருக்குப் பிடித்தது
இப்படி எல்லாம் அவருக்குப் ப்டித்ததாகவே இயங்கிய நம் அம்மாக்களின் பெண்களாக
நாமில்லை. ஆனால் மரபணு சார்ந்து தனக்குப் ப்டித்தது மட்டுமே அவளுக்குப் ப்டித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஆணும் அவன் சார்ந்த சமூகமும் இருக்கிறது. குறைந்தப் பட்சம் தனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் வேறுபாடுகள் குறைகிறது. அதாவது தன் விருப்பம் அவள் விருப்பமாக இருப்பதுடன் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அந்த விருப்பங்கள்
தானும் விரும்புவதாக இருக்கலாம் அல்லது விரும்பாததாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு ஆண்-பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் ஒவ்வொரு ஆணும்
சற்று திக்கு முக்காடி மூச்சுத் திணறித்தான் தவிக்கிறான். இந்த மூச்சுத் திணறலை
விட்டு வெளியில் வந்து பெண், மனைவி, அவளுக்கான ஆளுமைகளை ஏற்றுக்
கொள்வதில் ஆண் காலம் காலமாய் போற்றி வளர்த்திருக்கும் ஆண்மை காயப்படத்தான் செய்கிறது. " உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று தந்தை பெரியார் சொல்வதும் இதனால் தான்.

.பெண்ணும் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் ஆணையும் அவன் அகப்பட்டுக் கொண்டுள்ள அடிமைத்தனத்திலிருந்து, ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவித்தாக வேண்டும். உடைமை, அரசு, மதம் முதலிய ஆதிக்கங்களைத் தனக்குக்கீழ் உள்ளவர்கள்மீது செயல்படுத்தும் கருவி என்ற முறையில் அந்த ஆதிக்கங்களுக்குள் அகப்பட்டு அவைதரும் சில வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவற்றையே தனக்கான இன்பம் என்றும், அவற்றையே தனக்குப்பெருமை என்றும் ஆணவத்தோடும் தோரணையோடும் இருக்கிற ஆண் தானே விரும்பி தன்னைக் கட்டுப்படுத்துகிற அடிமைத்தனத்தை தகர்த்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் அவனையும் விடுவிக்கும் முறையில், அவனோடும் போராடி அவன் வழியாகச் செயல்படும் ஆதிக்கங்களின்மூலம் எது என அவனுக்கும் சுட்டிக்காட்டி அவனை எதிரியெனக் கருதிக் காயப்படுத்தாமல் அவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு ஆதிக்கங்களுக்கெதிரான போராட்டத்தில், விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும்.

பெண் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆணையும் அவன் அகப்பட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்கச் சக்தியிலிருந்து மதங்களின்மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும்.

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
- புறம்(187) அவ்வை.

___________________________________________


பின்குறிப்புகள்:

>அணங்கு - மார்ச்-ஆக்ஸ்டு 2007 இதழ்

> பெருஞ்சுவருக்குப் பின்னே: ஜெயந்திசங்கர்

> பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை
- கோவை ஞானி - பெண்ணியம் இதழ்

>A Growing Incidence of Divorce in Indian Cities: A Study of Mumbai
Ajay Kumar Singh & Dr. R K Sinha
International Institute for Population Sciences,
Mumbai, India

Thursday, December 6, 2007

தலித் மாநாடு


நன்றி: கீற்று மின்னிதழ்

(http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_5.php)

தலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்
புதியமாதவி, மும்பை



ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.

தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்.. இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.

இந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)

போர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்" என்று சொல்லியிருந்தார்.

இந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் அருந்ததி அவர்கள் 'புòதூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும்? இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.

இசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த "ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.

இலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா ? என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்?

ராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ?" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்.

இத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். 'மனுசங்க' இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.

கக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன்! இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர்?) அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.

கக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான்? மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது? தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்!

தமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை "வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.

தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி 'அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என்று கொஞ்சம் சூடாக கலந்துரையாடலில் சொன்னதும் 'நானும் தலித் தான்' என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.

அசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.

சிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.

சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.

சாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம்? என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்.. நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது.

சிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த "இரட்டை வாக்குரிமை" என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.

இந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி "இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா?" என்றும் "ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்" என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.

இந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.

1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை "அதிகார மாற்றம்" என்றும் "பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே" என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.

இவர்களை இந்திய தேசியவாதிகள் "தேசத்துரோகிகள்" என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். 'தமிழன்" என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.

திராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் "தமிழ் தேசியம்" பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.

தலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்... என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.

அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

-

நேர்காணல்


நேர்காணல்
வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி

(http://www.vaarppu.com/interview.php?ivw_id=3)

செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா?

நிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அதை உணர்த்துவதும் எவ்வளவு கடினமானது என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். எங்கள் ஊடகங்களும் தலைவர்களும் எனக்குள் கம்பீரமாக கட்டி எழுப்பியிருந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறிய போது உண்மையிலேயே நானும் உடைந்து போனேன் மௌனமாக?


பெண்கள் சந்திப்பின் ஆக்கபூர்வமான தன்மைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்?

எதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் தாங்களே முன்னின்று 17 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தியிருக்கும் 26 சந்திப்புகள்,- பெண்களின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் ஆக்கப்பூர்வமான செயல்,- எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்வதின் ஊடாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சி.


இச் சந்திப்பின் பின்னரான உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது?

அலைகளில்லாத ஆழ்கடல் போல அமைதியாக இருந்தேன். பேசப்பட்ட பல்வேறு செய்திகளை மனம் அசைப்போட்டது. தமிழ்நாட்டில் ஏன் இது போன்றதொரு சந்திப்புக்கான வாய்ப்புகளில்லை என்று யோசிக்கவைத்தது. இவர்களை எல்லாம் அழைத்துவந்து அவர்களின் ஆதித்தாய் மண்ணில் -( தமிழ்நாட்டில்) ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்று கனவு கண்டேன். அந்தக் கனவே ரொம்பவும் இனிமையானதாக இருந்தது.


தலித் மாநாட்டு நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்போடு பொருந்திப் போனதா அல்லது மாறுபாடாக இருந்ததா?

இந்தக் கேள்விக்கு என் பதில் 'இரண்டும் தான்.' சிலவற்றில் பொருந்திப்போனதையும் சிலவற்றில் மாறுபாடாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.


எதில் பொருந்திப்போனது? எதில் மாறுபாடாக இருந்தது?

ம்ம்ம்.. தேசியநீரோடையில் கலக்காமல் இந்திய மண்ணில் பாபாசாகிப் அம்பேத்கர், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இவர்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்த அயோத்திதா சப்பண்டிதர், மகாத்மாபுலே இவர்கள் அனைவரும் சமூக விடுதலையை முன்னிறுத்திப் போராடினார்கள். அம்மாதிரியான ஒரு போராட்டக்குரலை -கலகக்குரலை- எழுப்பும் கட்டாயத்தில் காலம் இவர்களைத் தள்ளி இருக்கிறது என்று எண்ணினேன். அதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.

எதில் மாறுபாடாக இருந்தது என்றால் இந்த மாநாட்டில் தரவுகளை வைப்பதற்கான களப்பணியோ, ஆய்வுகளோ செய்யப்படவில்லை. கலகக்குரலாக மட்டுமே இருந்ததே தவிர எதிர்காலத் திட்டங்கள், தீர்மானங்கள் பற்றிய தெளிவில்லை. தலித் அரசியல் பற்றிய பார்வையை முன்வைக்கவில்லை. இந்த மாநாடு குறித்த என் கருத்துகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.


இலங்கையின் சாதியமைப்பு முறை பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது ஏற்கனவே அறியப்பட்டவைகளாக அவை இருந்ததா?

நான் அறிந்தது சொற்பம். இந்த மாநாடு இன்னும் நான் அறிந்து கொள்ள வேண்டியவைகளைக் கோடிட்டுக்காட்டியது மட்டுமல்ல தமிழகத்தின் ஊடகங்கள் சொல்லாத பலச்செய்திகளை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.


தமிழ்த் தேசியம், தலித்தியம் இடையிலான முரண்களில் இந்த மாநாடு தெளிவான பார்வையொன்றைத் தந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

தரவில்லை. அதற்கான கேள்வியை நான் மாநாட்டிலேயே வைத்தேன். இந்த மாநாடு தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான இருத்தலைப் பற்றியும் தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான சமவாய்ப்புகள் குறித்தும் குரல் எழுப்பி இருக்கிறதா அல்லது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே- குரல் எழுப்பி இருக்கிறதா.. இந்தக் கேள்வியுடனேயே நான் இந்தியா திரும்புவதாக அவர்களிடன் சொன்னேன். அதையே தான் உங்களிடமும் சொல்கிறேன்.


இம் மாநாட்டில் வைக்கப்பட்ட உங்கள் கருத்துக்கள் கவனிப்புப் பெற்றதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லமுடியுமா?

கவனிப்பு பெற்றிருந்தால் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில்.. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் பக்கங்களைச் சொன்னேன், வரலாறு எப்போதும் வெற்றிபெற்ற வேடர்களின் பார்வையிலேயே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டினேன். ஆதித்தமிழர்கள் நாம் தான், எவ்வாறு நாம் சேரிகளில் தள்ளப்பட்டோம் என்பதையும் குறிப்பிட்டேன். எல்லா மதங்களும் சாதிக்காப்பாற்றும் மதங்கள் தான். சட்டத்த்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது எங்களுக்கான சமத்துவ உரிமைகள். இந்திய அரசு சாதிக்காப்பாற்றும் அரசுதான். என்று தரவுகளுடன் சொல்லி, இறுதியாக தலித்துகளுக்கிடையில் இருக்கும் உட்சாதிப்பூசல்களை ஒழிக்க வேண்டும். தலித் விடுதலையில் முதல் படி இதுதான் என்பதை வலியுறுத்தினேன். நான் இறுதியாகச் சொன்ன தலித்துகளுக்கிடையில் நிலவும் உட்சாதிப்பூசல்கள் குறித்த கருத்தை எந்தளவுக்கும் இந்த மாநாட்டினர் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை சந்தேகம்தான்.


.இது உங்கள் முதலாவது வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்திதந்த விடயங்கள், திருப்திதராத விடயங்கள் என்றுஎவற்றைச் சொல்கிறீர்கள்?

நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தால்தானே ஏமாற்றங்கள் இருக்கும்! எனவே திருப்திதராதது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நான் ரொம்பவும் சாதாரணமானவள். ஈழப்போராட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் புஷ்பராணி அக்காவைச் சந்தித்தது, மகிழ்ச்சி. அதைப் போலவே மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே அறிந்திருந்த உறவுகளை நேரில் சந்தித்ததும் அவர்களுடன் ஒருத்தியாக ரொம்பவும் இயல்பாக என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் என் வாழ்வின் இனிய நினைவுகள்.


இன்றைய குடும்ப அமைப்பிலிருந்து இயல்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் சமூக கட்டுமானங்களால் மிகக் குறைவு எனக் கூறப்படுகின்றதே இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பெண்கள் சந்திப்பில் முதல் நாள் நான் 'உறவுச்சிக்கல்கள்' என்ற தலைப்பில் வாசித்தக் கட்டுரையின் மையப்புள்ளி இதுதான். இல்லாள், மனைமாட்சி, தாய்மை என்ற கருத்துருவாக்கங்களின் மூலம் சமூகக்கட்டுமானங்கள் குடும்பத்தின் சுமையை பெண்ணின் தோள்களில் ஏற்றி சவாரி செய்கின்றன. சமூக வெளியில் ஓர் ஆணைப்போல இயல்பாக கரைந்து செயல்படுவது என்பது இன்றும் பெண்ணுக்கு எட்டாதக் கனிதான். இன்றைய பெண் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையில் ஆணுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்தவள். எனவே பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படும்போது குடும்பம் என்ற அமைப்பையே ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிலமைக்குத் தள்ளப்படுகிறாள்.


பெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற போதிலும் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களில் பிரயோகிப்பதை பலர் எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் ஒரு கவிஞர் என்ற ரீதியில் இவ்எதிர்ப்புக்களை, இப்பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்.?

மொழியும் மொழிவழி நம் சிந்தனைகளும் ஆணின் பார்வையிலேயே காலம் காலமாய் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்ணின் உடல்மொழியை ஓர் ஆண் எழுதுவது என்பதற்கும் பெண் எழுதுவது என்பதற்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசங்களை பெண்கள் எழுதவந்தப் போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.

கவிஞர் அ.வெண்ணிலா

பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்திற்கான
அழுகையும்

என்று எழுதும்வரை பிரசவத்தைப் பற்றி என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள்? பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது! தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.


உங்கள் ஹேராம், நிழல்களைத் தேடி கவிதைத்தொகுதிகள் இலக்கியத்தளத்தில் எப்படியான கவனிப்பையும் விமர்சனங்களையும் பெற்றது?

ஹேராம் கவிதைகள் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. என் இலக்கிய வட்டத்தை விசாலமாக்கியது. அரசியல் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மை. அயோத்தி பாபர்மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள் ... இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாதிப்புகளில் ஏற்பட்ட வலியின் அலறல். அத்துடன்,

ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதி திராவிடன் உயர்ந்தவனா?'

என்று திராவிட இயக்கங்களை நோக்கி அந்தக் குடும்பப்பின்னணியில் வந்த அதன் இரண்டாம் தலைமுறை வைக்கும் கேள்வி.. இப்படியாக நிறைய உண்டு. நிறைய விமர்சனங்களும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. அமீரக நண்பர்கள் கவிஞர் அறிவுமதியை அழைத்து அமீரகத்தில் (துபாய்) ஹேராம் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்கள

நிழல்களைத் தேடி கவிதைநூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நிழல்களைத் தேடி கவிதைகளை ஆய்வு செய்தார்கள். ஆனாலும் ஆய்வுகளும் சரி விமர்சனங்களும் சரி, நிழல்களைத் தேடி என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் 11 கவிதைகளுக்குள் புகவில்லை என்பது என்னை வருத்தப்பட வைத்த விசயம்தான்.


பெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

உடற்கூறும் அதனால் விளையும் உளவியல் சிக்கல்களும் அரசியல், சமூகத் தளத்தில் பெண்ணை இரண்டாம் நிலைக்கு (subordinate) இட்டுச் செல்வதாகவும் இயற்கையிலேயே அதிகாரத்தை (power) வென்றெடுக்கும் உடல்வலியும் மனவலியும் ஆணுக்கே இருப்பதாகவும் சொல்லப்படும் கருத்துகள் பெண் மறுப்பு அரசியலை முன்வைக்கின்றன, இன்னும் சிலர் ஆள்பலம், அடிதடி, குத்து, கொலை, ஏமாற்று என்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடப்பியல் சூழலில் ஆணின் துணையின்றி பெண் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்வதை முற்றும் புறக்கணிக்கும் நிலை வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றிச் சொல்லும்போது 'அவர் ஒருவர்தான் காங்கிரசில் ஆண்' என்று சொன்னதை நினைவுப் படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் அதிகாரம் பெண்ணிடம் வரும்போது அதையும் 'ஆணாக' பார்க்கும் பார்வையே நம்மிடம் இருக்கிறது! ஒவ்வொரு பெண்ணின் அரசியல் நுழைவும் கூட இங்கே அரசியல் தலைவரின் மகளாக, விதவை மனைவியாக, உடன்பிறந்தவளாக..ஆணின் பினாமி பெயரில் ரப்பர் ஸ்டாம்பாக ... இருக்கும்வரை பெண் அரசியலைப் பெண்கள் அடையாளம் காண வெகுதூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.


பெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் பிழையானது என்று கருத்து வைக்கப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்துக்கள் எவை?

உங்கள் கேள்வியில் இருக்கும் 'குடும்பம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது' என்ற சொற்றொடரில் இருக்கும் 'பாதுகாப்பு 'என்ற சொல்லே மரபியல் சார்ந்த கருத்து தான். பாதுகாப்பு என்பதே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு தந்திரமான பாதுகாப்பு வளையம்தான் பாதுகாப்பு என்ற சொல்லின் கருத்துருவாக்கத்தைப் பெண்கள் உடைத்து வெளிவர வேண்டும். யாருக்கும் யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. .துணை என்பதும் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்ப உறவுகள் என்பதும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் சிலுவையில் அறையப்படக் கூடாது. பெண் கல்வி, அதனால் கிடைக்கும் பொருளாதர பலம், பணிநிமித்தம் தனித்து வாழும் சூழல் இவை எல்லாம் 'குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது' என்ற கருத்துருவாக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது என்ற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக. எங்கெல்லாம் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதற்கான பின்னணியைப் பாருங்கள். உதாரணமாக ஒரு தலித் ஆண் ஆதிக்கச்சாதியை எதிர்த்தால் அவனை அடக்கவும் ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்யும் செயல் அந்த தலித் ஆணின் தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது.இந்தமாதிரியான பாலியல் பலாத்காரம் ஆணின் காமயிச்சையையோ , தனிமனித விகாரத்தையோ காட்டும் செயலாகவோ இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெண்ணின் பாலியல் தன்மையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது .ஆணாதிக்க சமூகத்தில் போர் முடிந்து எதிரி நாட்டின் பெண்களைச் சிறைப்பிடித்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்றிலிருந்து இதை நாம் பார்க்கலாம். சாதி மேலாதிக்கத்தில் மிகவும் தீவிரமாக இக்கருத்தியல் செயல்படுகின்றது.


அண்மையில் வெளிவந்த ஈழத்து பெண்கவிஞர்களின் தொகுப்பான பெயல்மணக்கும் பொழுது என்ற கவிதைத்தொகுப்புப் பற்றி -நீங்கள் ஒரு கவிஞர் எழுத்தாளர், என்ற வகையிலும் பெண்கள் சந்திப்பில் அந்நூலை விமர்சனம் செய்தவர் என்ற வகையிலும்- நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பெண்கள் சந்திப்பில் கவிதைகளுக்கான என் விமர்சனத்தை வைத்தேன். அதுதவிர இத்தொகுப்பு குறித்து சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் இந்த முயற்சியில் பெண்கள் பெயரில் எழுதும் சில ஆண்களின் கவிதைகளும் தவறுதலாக இடம் பெற்றுவிட்டன. யுத்த பூமியில் தனக்கான நாளைய விடியல் நிச்சயமில்லாத பொழுதில் ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன். இம்மாதிரியான தொகுப்பு நூல்களில் கவிஞர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் கட்டாயம் தேவை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஞ்சிகைகளில் வந்த கவிதைகளை இவர்கள் அப்படியே எடுத்து போட்டுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்த்திருக்க முடியும். அதேநேரத்தில் என்னவோ இத்தொகுப்பை வெளியிட்டு இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ இதன் மூலம் தான் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் அவசியம் நிச்சயமாக இந்நூலைத் தொகுத்த அ.மங்கை அவர்களுக்கு இல்லை என்பதையும் இம்மாதிரியான விமர்சனங்களை வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நான்கு சுவர்கள், கூரை, வீடு என்று வாழும் பெண் ஒரு நிமிடத்தில் அனைத்தும் இழப்பதும் அகதி முகாம்களில் வாழ்வதும் மிகவும் கொடுமை. அதிலும் ஒரு பெண் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். எனினும் இக்கருப்பொருளில் ஓரு கவிதை கூட இத்தொகுப்பில் இல்லை. பெண்கள் இதைப் பற்றிய கவிதைகள் எழுதவே இல்லையா என்ற கேள்வி இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தன்னிச்சையாக எழுகிறது.


பெண், ஆண்களால் எழுதப்படும் பெண்ணிய எழுத்துக்களை வைத்து பெண்களால் மட்டும் எழுதப்படும் பெண் எழுத்துக்களின் தேவையை நிராகரிப்பது பற்றிய உங்கள் பர்ர்வை என்ன?

பெண்ணிய எழுத்துகளை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. கவிஞை அ.வெண்ணிலாவின் கவிதையை உதாரணம் காட்டி நான் ஏற்கனவே சொல்லியிருப்பது இதைதான். இதைச் சொல்லும் போது பெண்ணிய எழுத்துகளை ஆண் எழுதினால் அது நிராகரிக்கப்படவேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. பெண் எழுத்துகளின் தேவையை எந்த தளத்திலும் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த அளவுகோலை வைத்துக்கொண்டும் இனி எவராலும் நிராகரிக்க முடியாது. யாருடைய எழுத்தையும் யாரும் நிராகரிக்கவும் முடியாது தானே!. எழுத்துகளின் இருத்தலை நிச்சயப்படுத்துவது காலம் மட்டுமதான.


கவிதைகளுக்கான வார்ப்பு மின்னிதழ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

'எனக்குத் தொழில் கவிதை' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையும் கவிதை சார்ந்தும் மட்டுமே இயங்குதல் என்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலையும் கம்பீரத்தையும் பாராட்டுகிறேன். வளரும் கவிஞர்களைத் தாலாட்டியும் வளர்ந்த கவிஞர்களைச் சீராட்டியும் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் வார்ப்பு பலர் கவிதைகளுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்ததன் மூலம் தன் முகவரியை கவிதை உலகில் நிச்சயிப்படுத்திவிட்டது. வார்ப்பு ஆசிரியர் குழுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.