பாரதி " சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு..."
என்று ஏன் எழுதினார்?
இந்த வரி பலருக்கு தொந்தரவு செய்கிறது!
பாரதியை பாரதியின் அரசியலை அக்காலத்தில் ஏற்பட்ட மராட்டிய மண்ணின் மண்ணின் எழுச்சியை அதற்கு காரணமான சங்கீத நாடகங்களை, திலகரை, திலகரின் கேசரியை..
என்ற விரிகிறது இந்த ஒற்றை வரி.
மகாகவி பாரதி தன் சுதேச கீதங்கள் கவிதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் “பாரத்தேசமென்று பெயர் சொல்லுவார். “
என்ற பல்லவிக்கு அடுத்து வரும் சரணத்தில்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்..
…..
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…”
என்று எழுதி இருக்கிறார்.
இக்கவிதையில் இடம்பெறும் ‘சிங்கமராட்டியர் கவிதை கொண்டு ‘ என்ற வரிகள் பலருக்கு பல ஐயப்பாடுகளை ஏற்படுத்தி தொந்தரவு செய்கிறது.
இத்தொகுப்பு வெளிவந்த காலமும் அக்காலத்தில் பாரதியின் அரசியலும் இக்கவிதையைப் புரிந்து கொள்ள துணைபுரியும்.
பாரதியின் அரசியல் குரு என்ற இட த்தில் இருந்தவர் பாலகங்காதர திலக்.
பாரதிக்கு திலகரின் தீவிரவாத விடுதலை கோட்பாடுகள் மீது ஈடுபாடு
இருந்தது. 1907 டிசம்பரில் சூரத் காங்கிரசு மாநாட்டில் கலந்து கொள்ள வ.உ.சியுடன் பாரதியும் சென்றார். திலகரைச் சந்திக்கிறார். பாரதி 1908ல் சுயராஜ்ய தினம் கொண்டாடினார்.. அதே ஆண்டில்தான் சுதேச கீதங்கள் என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டார். அத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பதுதான் மேற்கண்ட கவிதை.
பாரதி சிங்க மராட்டியர் தம் கவிதை என்று ஏன் சொன்னார் ? என்ற கேள்வியை இந்தப் பாதையில் சென்றுதான் புரிந்து கொள்ள முடியும்.
பாரதி திலகரைப் பற்றி எழுதி இருக்கும் கவிதையிலும் “வீரமிக்க மராட்டியர்” என்று மராட்டியர்களைப் பற்றி எழுதி இருப்பதும் நாம் கவனிக்க வேண்டும்.
ஏன் வீரமிக்கவர்களாக மராட்டியர்களையும் அவர்கள் கவிதைகளையும் பாரதி குறிப்பிட்டார் என்றால்.. பாரதி தான் வாழ்ந்தக் காலத்தின் தன் அனுபவத்தை அன்றைய அரசியலை இதில் எழுதுகிறார்.
மராட்டிய இலக்கியத்தில் நாடகம் என்பது எப்போதும் “இசை நாடகங்கள்” தான். சங்கீத் நாடக் என்றே அவர்களின் நாடகங்கள் அழைக்கப்பட்டன.
திலகரின் காலம் நாடகங்களில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தக் காலமாகும். திலகர் இந்திய விடுதலைப் போராட்ட்த்தில் தீவிரமாக செயல்படும் காலத்தில் நாடகங்களை தன் சுதந்திரப் போராட்ட கருவியாகப் பயன்படுத்தினார். அரசியல் விடுதலை சமூக விடுதலையைப் பேசிய சங்கீத நாடகங்கள் அவர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. 1890 முதல் 1920 வரை முப்பது ஆண்டுகள் மராட்டிய நாடகங்களும் நாடகங்களில் ஓங்கி ஒலித்த பாடல்களிலும் திலகர் கோலோச்சினார் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நாடகங்கள் மூலம் எளிதில் மக்களிடம் தன் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்த திலகர் அவர் பத்திரிகைகளான கேசரி, மராட்டா இரண்டிலும் நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
Swatantrya aale Ghara ( Freedom comes Home)
Swadeshihitchintak – ( a well wisher of motherland)
Swarajya sundarai – (Independence beauty )
Vande mataram .
இந்த நாடகங்கள் அனைத்தும் திலகர் காலத்திய நாடகங்கள்.
திலகரை மாபெரும் சுதந்திரப் போராட்ட தலைவராக – வீரமிக்க தலைவராக ஏற்றுக்கொண்ட பாரதிக்கு திலகர் காலத்திய அரசியல் நாடகங்களும் அந்த நாடகங்களின் பாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்கும்.
அப்படியானால் தமிழ் நாடகங்கள் ?
இக்காலக்கட்டத்தில் தமிழ் நாடகங்கள் என்னவாக இருந்தன?
தமிழ்க் கவிதைகள் எதைப் பாடுபொருளாக கொண்டிருந்தன?
இந்த இரண்டையும் காய்த்தல் உவத்தலின்றி அணுகும்போது
மராட்டிய கவிதையை வீரமிக்கதாகவும்
அவர்களின் கவிதைகளை சிங்க மராட்டியர் கவிதை எனவும் சொல்லியதன் பின்னணி புரியும்.
மேலும் பாரதி வாழ்ந்தக் காலத்தில் இசை என்றால் கர் நாடக இசையும் அதிலும் தெலுங்கு கீர்த்தனைகளும் பாடப்பட்ட காலம், எனவேதான் பாடல் என்று எழுத வரும்போது “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து ‘ என்றூ எழுதுகிறார் பாரதி. அதே மன நிலையில் தான் பாரத தேசத்தின் ஒற்றுமையைக் கனவு காணும் பாரதி அதில் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து சிந்துவையும் தென் கோடி கேரளத்தையும் இணைக்கிறார். வீரமிக்க பாடல்களாக அவர் காலத்தில் அவர் அறிய வந்த மராட்டிய கவிதைகளுக்கு (பாடல்களை) சேர நாட்டு தந்தங்களைப் பரிசளிக்க முன்வருகிறார்.
கவிதை எப்போதும் கவிஞனின் உச்சமான உணர்வு நிலையின் வெளிப்பாடு.
அந்த உணர்வு நிலை என்பது அவன் அறிந்தவையும் அவன் அனுபவமும் அவர் கொள்கையும் அவன் வேட்கையும் அவன் அரசியலும் ..கலந்த ஒரு வெளிப்படாகவே இருக்கும். பாரதிக்கும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.
மராட்டிய நாடகங்களின் முற்போக்கு கருத்துகள் இந்திய அரசியலில் முக்கிய இடமுண்டு, 1899ல் ‘சங்கீத் சாரதா” என்ற நாடகம் ( Sangeet sharada by Govind Ballad Deval) வெளிவந்த து. இந்த நாடகத்தில் குழந்தை திருமணம் குறித்த சமூக சீர்த்த்திருத்தம் கருப்பொருளாக அமைந்த து. அதனால் தான் 1929ல் கொண்டுவந்த குழந்தை திருமண தடுப்பு சட்டம் , சர்தா சட்டம் என்றழைக்கப்படுகிறது.
பாரதியின் திலகர் ஈடுபாடு
1907ல் கீச்சக வதா – Kichaka vadh என்ற நாடகம் வெளிவந்த து. இந்திய சுதந்திர போராட்டத்தை உருவகமாக இக்கதை வெளிப்படுத்தியது. மகாபாரதக்கதையின் ஒரு பகுதிதான் இந்த நாடகம். இந்த நாடகத்தில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த கர்சன் பிரபு வில்லன் கீச்சகன். திரெள்பதி பாரதமாதா. திலகர் வீரமிக்க பீமன்..
பாரதியும் பாஞ்சாலி சபதம் காவியத்தை 1912ல் எழுதுகிறார். பாரதிக்கும் திரெளபதி பாரதமாதாவாகவே காட்சி அளிக்கிறாள்.
திலகர் தன் அரசியல் பிரச்சார உத்தியாக வி நாயகர் உற்சவத்தை மராட்டிய மண்ணில் ஆரம்பித்தார். பாரதியும் புதுவையில் வாழ்ந்தக் காலத்தில் அங்கிருக்கும் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் செல்கிறார். விநாயகர் நான்மணி மாலை எழுதுகிறார்.
பாரதி பல மொழிகள் கற்றவர், அறிந்தவர், இலந்தை ராமசாமி அவர்கள் இதைப் பற்றி எழுதும்போது, பாரதிக்கு நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த மொழிகள் 7, அவை தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஹிந்தி பிரெஞ்சு தெலுங்கு மலையாளம்.
இவை தவிர பிறர் பேசினால் புரிந்து கொள்ளத் தெரிந்த மொழிகள் நான்கு அவை லத்தீன், கிரேக்கம், கன்னடம், மராத்தி.
எனவே பாரதிக்கு மராத்திமொழி தெரியவே தெரியாது என்ற முடிவுக்கும் வரமுடியாது.
திலகர் இரு பத்திரிகைகள நடத்தினார். அதில் கேசரி (Kesari) மராட்டி மொழியிலும் மராட்டா (Mahratta) ஆங்கிலத்திலும் வெளிவந்த பத்திரிகைகள்.
எனவே பாரதி திலகரின் மரட்டா பத்திரிகையைக் கட்டாயம் வாசித்திருப்பார்.
திலகரின் வீரமிகு அரசியல் செயல்பாடுகளும் அதைப் பிரதிபலித்த அவர் காலத்திய சங்கீத நாடகங்களும் பாரதியை ஈர்த்திருக்கும். அந்த சங்கீத நாடகங்களின் பாடல்கள் / கவிதைகளில் பாடுபொருளான வீரமும் சமூக சீர்த்திருத்தங்களும் சுதந்திரப் போராட்ட அரசியலும் பாரதிக்கு மிகவும் நெருக்கமானவை. இந்த அனுபவமும் திலகரை வீரமிக்க மராட்டியராக ஏற்றுக்கொண்ட பாரதியின் உணர்வும்தான் இப்பாடலில் சிங்க மராட்டியர் கவிதையாக வெளிப்படுகிறது. பாரதிக்கு மராட்டியர் என்ற வுடன் சிங்கம் நினைவுக்கு வருவதற்கும் திலகரே காரணம். வரலாற்றில் இன்றும் திலகர் என்றவுடன் கேசரி பத்திரிகை நினைவுக்கு வரும். கேசரி என்றால் சிங்கம்
என்றுதான் அர்த்தம். இப்படியாகத்தான் ‘சிங்க மராட்டியர் கவிதைகொண்டு
பாரதி தன் பாரத தேசம் படைக்கிறார்.
இப்போதும் கேசரி பத்திரிகை சிங்கத்துடன் தான் தொடர்கிறது.
#சிங்கமராட்டியர்தம்கவிதை_பாரதி
#பாரதி_திலகர்_சிங்கமராட்டியர்
சிறப்புமிக்க ஆய்வு
ReplyDeleteபாரதியின் காலகட்டம் கொண்டு நோக்குகிற போது கிடைக்கும் தரவுகளை வைத்து மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்
மகிழ்ச்சி
👏🏽👏🏽👏🏽
Deserve rich tributes.
ReplyDelete