Monday, June 20, 2016

கூத்துக்காரனின் கவிதைமொழி"தாண்டுகால்" கவிதை தொகுப்பு என் வாசிப்புக்கு வந்து சில
மாதங்கள் கடந்துவிட்டன. கவிதை எழுதிய தவசிக்கருப்பசாமி தான்
நான் அறிந்த தம்பி ஹரி கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொள்ள
என் மரமண்டைக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
இரு நாட்களுக்கு முன் ஹரி என்னுடன் பேசினார்.
அவருடைய கவிதைகளை வாசித்தவர்கள் " நீ இனிமேல்
கவிதை எழதவேண்டாம்" என்று சொன்னார்களாம்!! ஆம்
சொன்னார்களாம்.!!
நீங்க வாசித்தீர்களா , எதுவுமே சொல்லவில்லையே! என்று இரு
தினங்களுக்கு முன் அவர் என்னிடம் கேட்டார். அறிந்தப்பெயரும்
அறியாத பெயரும் ஏற்படுத்திய குழப்பத்தை அவரிடம் சொல்லி
ரசித்தேன். எவரெல்லாம் அவரை கவிதை எழுதவேண்டாம் என்று
சொன்னார்கள் என்று அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகவும்
அருவெறுப்பாகவும் இருந்தது.

"கவிதை என்ன இவனுகளுக்கு பட்டா போட்டு எழுதிக்கொடுத்த
சொத்தா?"
இவனுகளின் மொழி தான் வசீகரமானதா?
கவிதையை ஒளிவட்டமாக தலையில் தூக்கி சுமந்துக்கொண்டு
அலையும் இந்த விருது சிகாமணிகளுக்கு
தாண்டுகால் மொழி நிச்சயமாக மிரள வைத்திருக்கும்.
அந்த மிரட்சியில் அரண்டு போய் அந்தக் கவிதா
சிகாமணிகள் அலறுகிறார்கள் ..
கூத்துக்காரனின் மொழி தமிழ்மொழி இல்லையா?
இவனுகளைப் போல கொஞ்சம் கொஞ்சும் சமஸ்கிருத
வார்த்தையைக் க்லந்து கவிதை எழுதிவிட்டால்
தமிழின் செம்மொழி அந்தஸ்த்து பாதுகாக்கப்படுமா என்ன?
சற்றொப்ப் (1500 ஆண்டுகள்) சில நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழ் மண்ணை தமிழன் ஆளவில்லை.
தமிழ்க்கவிதையின் ஆணிவேரை தன் கூத்துகளில்
மறையாது பறை அடித்து முழங்கிக்கொண்டிருந்தவன்
இவர்கள் விமர்சிக்கும் இந்தக் கூத்துக்கவிதைககாரன் தான்.
என்னடா நியாயம் இது?
கவிதை நீதிமன்றத்தில் இவனுகளை எவண்டா நீதியரசர்களாக
நியமித்தது? !!

ஹரி.. உனக்குத் தெரியுமா.. மராத்தி மொழியில்
நாம்தேவ் தாசல் என்ற புகழ்பெற்ற கவிஞ்ருக்கும்
இதே நிலை ஏற்பட்டது.
"மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்."
என்ற அவன் வரிகளில் அதிர்ந்துப்போனது மராத்தி இலக்கிய உலகம்.
இன்றுவரை அந்த அதிர்ச்சி அலைகள் ஓயவில்லை.
ஆனால் நாம்தேவ் தாசலின் மொழி ஆளூமையை
எவராலும் எட்டமுடியவில்லை.

தாண்டுகால் தொகுப்பிலிருந்து..

"ஓடிப்போன பதினேழு வயசுக்கரியைத்
தேடி மீட்டுக்கொண்டு வந்தாயிற்று.
அடி அதிரசம் குத்து கொளுக்கட்டை
வாலிபத்திற் கிட்டாத வாய்ப்பையெண்ணி
உடனமர் காதலனை காரில் வைத்துப்போர்த்தியதில்
நிபந்தனையற்ற கெட்டியன்பு நீர்த்துப்பின் விட்டோடி நீங்கியது.
பரம்பரை மானம் சொல்லி கயிறுப்பிடித்துக் கூத்தாட்டும்
மசிர்பொசுங்க சாம்பலைத் தேய்த்தோ
உசிர் கருக உறுப்பில் சூடிழுத்தோ
பிறந்த ஒழுக்கமற்ற அரும்பாவியை உய்விக்காதா
மனுஷஞ் செத்தாலும் நாயம் சாகப்பிடாது.

----

பெண்ணியம் பேசும் ஆண்களை விட ஆண் பெண் உறவில்
ஆணின் அவஸ்தைகளை வெளிப்படையாக சொல்லவரும்
ஆண்கள் நம்பிக்கையானவர்கள். உண்மையானவர்கள் என்பதால்.!
சிலர் அந்த உண்மைகளை வெளிப்படையாக
பேசினாலும் எழுத்தில் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதை
அறிவேன்.. காரணம் தங்களை முற்போக்காளர்
பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்களொ என்ற அச்சம்தான்!
ஆனால் ஹரி எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
தொலைபேசியில் பேசும்போது இப்படியும் கூட பெண்கள்
இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுவார்,.

என்றைக்கு  நம் வீட்டு படுக்கை அறையில்
தொலைக்காட்சி பெட்டி ஓரிடத்தைப் பெற்றுவிட்டதோ
அன்றே வாழ்க்கை நுகர் கலாச்சாரமாகிவிட்டது.
பெண்கள் நுகர்ப்பொருட்கள் அல்ல என்ற விழிப்புணர்வு
இருக்கும் பெண்களிடமும் கூட உலகச்சந்தையும்
விளம்பர உலகமும் மயக்கத்தை ஏற்படுத்திவிடும்
உண்மையை இனியும் நாம் மறைக்க வேண்டியதில்லை.
இந்தப் பின்புலத்தில் தான் கீழ்க்கண்ட இக்கவிதை என் கவனத்தை
ஈர்த்திருக்கிறது

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும்
வாழை நாரேங்கிறவாள் வாய்த்தாளெனக்கு.
காதல் கடிமணம் கரைந்தது பணம்
மகன் பிறந்து அப்பாவென விளித்ததொன்றுதான் சாக்கு
வரதட்சணை புகார் கொடுத்து ஓடிப்போனவள் மீண்டுத் திரும்ப
புருஷன் நான் கூடிக்கொண்டேன்.
ரத்தினப்பிரகாசத்துடன் பத்துவிரற் மோதிரம் தரித்தேன்
உடமை மேலுடமை சேர்த்து உபரியை பதுக்கியும் வைத்தேன்.
லாரியை நான் பார்த்துக்கொள்கிறேன்
அவளை யோனர் பராமரிக்கிறார்
மண்ணு திங்கற பண்டத்த மனுஷன் தின்னாலென்ன.

(தாண்டுகால் கவிதை தொகுப்பு வெளியீடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்.)

No comments:

Post a Comment