நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக
இந்த இரு பெரும்கட்சிகளின் எதேச்சதிகாரத்திற்கு
சாமரம் வீசி அரியணையில் ஏற்றி இருக்கிறது.
இந்த இரு பெரும்கட்சிகளும் திராவிட அரசியல் கட்சிகள்
என்று கொண்டாட முடியவில்லை.
இவர்களிடம் திராவிடமும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பது கானல்நீர்தானா?
என்ற கேள்வி இப்போது விசவரூபமெடுக்கிறது.
நீ இருக்கனும்
இல்ல நான் இருக்கனும்
கொடுக்கல் வாங்கல் சண்டை சச்சரவு
கோர்ட் வாய்தா அடிதடி கொலை கொள்ளை
நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம்
ஆனா .. நம்மள விட்டா ஒரு பய இனி உள்ளே
வந்திடப்பிடாது... ஆமா சொல்லிப்பிட்டேன்.
அடடா... எனக்கென்னவோ .. இப்படி ஒரு அண்டர்கிரவுண்ட் கூட்டணி
செமையா வேலை பார்த்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறது.
எம்ஜியார் ஆட்சியில் இருந்தப்போது...
சூட்கேஸ் வந்தா .. கொண்டுவந்தவரிடம் கேட்பாராம்..
கோபாலபுரத்திற்கு போயிடுச்சா னு.
ஆளும்கட்சிக்கு இத்தனை விழுக்காடு பங்கு
எதிர்க்கட்சிக்கு இத்தனை விழுககாடு பங்கு என்று
உடன்படிக்கை இருக்கிறது .
இந்த தேர்தல் முடிவுகளை ஆழ்ந்து கவனித்தால்
அச்சம் ஏற்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் தமிழக அரசியலில்
ஜனநாயகத்தை கொலை செய்து புதைத்துவிட்டன.
தமிழ்த்தேசியம் கேள்விக்குரியதாகிவிட்டது மட்டுமல்ல
கேலிக்குரியதாகவும் ஆகிவிட்டது.
இது ஏன்? என்று யோசித்தாக வேண்டும்.
அதுவும் ஈழ அரசியலுடன் இணைத்து தமிழ்த்தேசிய அரசியலை
பார்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
தலித் அரசியல் நீர்த்துப் போய்விட்டதா..?
என்ற கனமான கேள்வி எழுகிறது.
தொல். திருமா, சிவகாமி, டாக்டர் கிருஷணசுவாமி மூவருமே
இத்தேர்தலில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்
வெற்றியை இழந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
களத்தில் நின்றவர்கள் இவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு
அதே தொகுதிகளில் (ரிசர்வ் தொகுதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று பார்த்தால்
இந்த அரசியல் களத்தில் தனக்கென தனி அடையாளம் இல்லாத
முழுக்கவும் சார்பு நிலை கொண்டவர்களை ம்ட்டுமே
தனித்தொகுதிக்கான தவப்புதல்வர்களாக முடியும் என்று
காட்டி இருக்கிறது. இதுவும் ஒருவகையில் தனித்தொகுதி
என்ற சலுகையை கேலிக்குரியதாக்கிவிட்டது.
தலித் அரசியல் பேசினால் இடமில்லை.
இரு பெரும் கட்சிகளின் எடுபிடிகளாக இருந்தால் மட்டுமே
அரசியல் களத்தில் தலித் அரசியல் சாத்தியப்படும் என்பதை
இம்முடிவுகள் மூலம் உணர்த்தி இருக்கிறது இந்த இருபெரும்
கட்சிகள். தலித்திய அரசியல் களத்தில் இருப்பவர்கள்
இது குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள்?
நாலு எருதுகளும் இரண்டு ஓநாய்களும் கதை எழுதவேண்டும்.
களப்பணியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பொதுவுடமை
இயக்கத் தோழர்கள் இத்தேர்தல் முடிவுகளை
"பண நாயகம் வெற்றி பெற்றது"
என்று மட்டுமே சொல்லி நகர்ந்துவிடும் கொடுமை..
சிறுதுளி நம்பிக்கையையும் நீர்த்துப்போகச்செய்கிறது.
அரசியலில் வெற்றி தோல்வி என்பது ஒரு பாடம்.
அதைப் பாடமாக கற்று தேர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு
யார் நகரப்போகிறார்கள்?
.
No comments:
Post a Comment