Friday, March 11, 2016

எழுதாதே ....ஆபத்து

அரசியல் பற்றி எழுதாதே
ஆபத்து .. 
எங்கிருந்து ஆட்டோ ரிக்‌ஷா பாய்ந்துவரும் என்று
எவராலும் சொல்லமுடியாது..
எச்சரிக்கிறார்கள் என்மீது கொஞ்சம் அக்கறைக்கொண்டவர்கள்.

கவிதை எழுது என்று சொல்கிறாள் தோழி..
எழுதலாம் தான்..
என் கவிதைகளைத் தற்காலிகமாக "கடமை"
என்ற கடன் தீர்க்க அடமானம் வைத்திருக்கிறேன்..
கடனும் வட்டியும் சேர்ந்து என்னை மூச்சுத்திணறடிக்கிறது.
கவிதை எழுதுவது இப்போதைக்கு முடியாதுதான்.

சரி.. எழுத ஆரம்பித்து முற்று பெறாமல் இருக்கும்
நாவலை எழுத ஆரம்பிக்கலாம்..
ஆனால் நாவலின் கதவுகள் சாத்தி இருக்கின்றன.
பெரிய பூட்டு வேறு தொங்கிக்கொண்டிருக்கிறது.
வழக்கம் போல நான் சாவியைத் தொலைத்துவிட்டேன்.
கதைமாந்தர்கள் வேறு கட்சிமாறிவிட்டார்கள்.
கூட்டணியும் உறுதியாகவில்லை
.
'நாவல்'பழம் சர்க்கரை வியாதிக்கு நல்லதாமே
சுட்டப்பழமோ சுடாதப்பழமோ
வாங்கித்தின்று கொட்டையை துப்பி
தூரவீசாமல் பத்திரப்படுத்தி
காயவைத்து பொடி செய்து
தேனில் குழைத்து சாப்பிட்டால்
அவ்வையைப்போல அதிகநாட்கள் வாழலாம்
.
அவ்வைக்கு கிடைத்த அதியமான்
எனக்கும் கிடைக்காமலா போய்விடுவான்?

No comments:

Post a Comment