Tuesday, October 27, 2015

வலைப்பதிவர் போட்டியில் நடுவராக ..



அண்மையில்  (11 oct 2015)புதுக்கோட்டையில் நண்பர்கள் கணினி வலைப்பதிவர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினார்கள்.
 அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெண்முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் - பகுதிக்கு நடுவராக இருக்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டேன்.
அந்த அனுபவம் எனக்கு சில கருத்துகளை எழுதியே ஆக வேண்டிய
நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பது தான் உண்மை.
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் மொத்தம் 39.
தனித்தனியாக வாசித்தும் அதன்பின் என் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு முன் மொத்தமாக ஓரிரவில் உட்கார்ந்து ஒட்டுமொத்த
39 கட்டுரைகளையும் வாசித்தேன்.
 ஒரு நடுவராக என் கருத்துகள், மதிப்பெண்கள்
குறித்த என் விமர்சனங்களையும் சேர்த்தே அனுப்பியிருந்தேன்.

.
* பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " என்ற
மகாகவி பாரதியின் வரிகளை 98% கட்டுரைகளில் வாசித்தேன்.
இந்த வரிகளை வெறும் மேற்கோளாக காட்டிவிட்டால் மட்டுமே
பெண்முன்னேற்றம் குறித்து எழுதிவிட்டதாகிவிடுமா?
 எட்டாவது வகுப்பு படிக்கும்போது எங்கள் தமிழ் வாத்தியார்
 சொல்லுவார்.. ஒரு திருக்குறள், அத்துடன் பாரதி/பாரதிதாசன்
இவர்களுடன் சேர்ந்து திருவிக, மு,வ, இவர்களின் பொன்மொழிகள்
 என்று கட்டாயம் கட்டுரையில் இருக்க வேண்டும் என்றும்
 அதற்கு மதிப்பெண் உண்டு என்றும் சொல்லி இருக்கிறார்..
ஆனால் இன்று அதே வரிகளை எடுத்துக்கொண்டு மறுவாசிப்பு
செய்கிறோம்.
அக்காலச்சூழலில் அவர்கள் சொன்னதை
இன்றைய பெண்ணிய தளத்தில் உரசிப்பார்க்கிறோம்.
இந்த மறுவாசிப்புக்கு அதிக வாசிப்புகள் தேவை.
அம்மாதிரியான வாசிப்புகள் இன்று அருகிப்போய்விட்டன என்பதையே
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் வெளிப்படுத்தி இருந்தன.
எதையும் நுனிப்புல் மேய்வது என்பதுடன் நம் தேடல் முடிந்துவிடுகிறதா?
என்ற ஐயப்பாடு இக்கட்டுரைகளை வாசித்தப்பின் ஏற்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யும் போது
 இன்றைய காட்சி ஊடகத்தின்
மிகப்பெரிய தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.
கட்டுரைகளின் ஊடாக அவர்கள் வெளிப்படுத்தி
 இருக்கும் கருத்துகள்
பெரும்பாலும் பட்டிமன்றத்தில் அவர்கள் கேட்ட கருத்துகள்/
 நீயா நானாவில் கேட்டவை என்பதைத் தாண்டி பயணிக்கவில்லை.
பட்டிமன்ற கருத்துகளையோ நீயா நானா விவாதங்களையோ மட்டுமே
குற்றம் சொல்லிவிடமுடியாது.
 அக்காட்சி ஊடகத்தில் சில அரிதான  கருத்துகள்
எப்போதாவது  வெளிப்படத்தான் செய்கின்றன.
 ஆனால் அதைக் கேட்டப்பின்,அது குறித்த அடுத்தக் கட்ட தேடல்
 முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
கணினி யுகம் இன்று நமக்கு எண்ணற்ற தகவல்களை ஒரு "க்ளிக்"கில்
நம் பதிவுக்கு கொண்டுவந்து விடுகின்றன. அத்தகவல்களின் பின்னணி,
அது குறித்து வெளியாகி இருக்கும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள்,
பல்கலை கழக கருத்தரங்குகள், அரசின் சட்ட திட்டம், அரசின் நிலைப்பாடு,
இப்படியாக ஒரு தொடர் தேடல் இருந்தால் மட்டுமே தரமான கட்டுரையை
ஒருவர் கொடுக்க முடியும்.
கட்டுரை வெறும் தகவல் களஞ்சியம் அல்ல,
கட்டுரைக்கு தகவல் என்பது சொல்ல வரும் கருத்தை வலுப்படுத்தவோ
அல்லது அதை மையமாக கொண்ட அடுத்த கட்ட பயணத்திற்கான
பாதையாகவோ இருக்க வேண்டும்.
வாசகனுக்கு முடிந்தால் ஒரு புதுத் தகவலைக் கொடுக்க வேண்டும்.
கட்டுரையை வாசித்து முடித்தப்பின் வாசகனை அடுத்தக்கட்ட
தேடலுக்கு இழுத்துச் செல்லும் வீரியமிக்கதாக இருக்க வேண்டும்.
கட்டுரையில் சொல்லப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடன்
இருப்பது மிகவும் அவசியம்.
புனைவு மட்டுமல்ல இலக்கியம் ,
அ-புனைவுவும் இலக்கியம் தான். இரண்டுக்குமே வாசிப்பு
வாசிப்பு  வாசிப்பு.. அவசியம்.
அதைவிட முக்கியம் நாம் எதை வாசிக்கிறோம் என்பதும்
அதை எப்படி தெரிவு செய்கிறோம் என்பதும் தான்.
நடக்கும் துணிவிருந்தால் கடக்கும் தூரம் அதிகமில்லை.

10 comments:

  1. அருமை... உண்மை...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  2. உண்மைதான் தற்போதைய காலகட்டத்தில் எழுதுவதற்கு முன்வருகிறார்கள், வாசிப்பதற்கு யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  3. உண்மைதான்! மிக அருமையாக எளிமையாக கட்டுரை புனைவதை விளக்கி இருக்கிறீர்கள்! நன்றி!

    ReplyDelete
  4. உண்மை..படிப்பது வேறு,,எழுதுவது வேறு,புரிந்துகொள்வது வேறு புரிந்து கொண்ட விஷயத்தையும் தம் சொந்த கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தவும் வேண்டும் என்கிற தன்மை குறைந்துதான் வருகிறது

    ReplyDelete
  5. அருமையான தகவல்
    பதிவர்களுக்குப் பயன்தரும்
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  6. வந்திருந்த கட்டுரைகளின் திறனாய்வு இது.
    கட்டுரை எழுதுபவர்களுக்கு பயன்படக்கூடிய நல்ல ஆலோசனைகள்.

    ReplyDelete
  7. சொல்ல வந்த கருத்தை மையமாக்கி, அது பற்றிய தன் கருத்து, பிறர் கருத்து ,மேற்கோள்கள் ;அவற்றின் ஒட்டிய அல்லது எதிரான விரிவுகள் ; சிந்தனைகள் ; அத்தனையும் சொல்லிய பின் தன் காரணத்துடன் தன் நிலைப்பாடு / முடிவு கூறி முடிக்கப் படும் கட்டுரை புதிதாய் மேலும் சிந்தனைக்கு வழி வகுக்குமாயின் சிறப்பாயிருக்கும். திருத்தங்கள் சொல்லப் பட்டு விட்டதால் அடுத்த முறை சரியாகி விடும் .

    ReplyDelete
  8. நானும் எழுதினேன் அம்மா...உங்கள் ஆலோசனையய் முன்னமே தெரிந்திருந்தால்..இன்னும் நன்றாகவே செய்திருக்கலாம்....இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்..இனி கட்டுரை எழுதி உங்கள் கண்களை காயப்படுத்த வேண்டாமென....

    ReplyDelete
  9. உண்மைதான்..

    ReplyDelete
  10. மேற்கோள்கள்களின் பயன்பாடு குறித்தும்
    அதற்கான திறன் மேம்பட வாசிப்பின் அவசியம் குறித்தும்
    சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete