Friday, January 30, 2015

மகாகவி பாரதியும் செங்கோட்டை ஸ்ரீஆவுடை அக்காளும்




ஆண்டுகள் ஒன்றிரண்டு அல்ல. சற்றொப்ப 400
ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் ஆவுடையக்காளின்
பெயரைச் சொன்னவுடன் கூட்டத்திற்கு வந்திருந்தப்
பெண்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியதை
பார்த்தேன். அந்த அனுபவம் எனக்குள் ஏற்படுத்திய அலைகளின்
தாக்கம் ஓயவில்லை.

முதல் முறையாக எனக்கு ஸ்ரீஆவுடையக்காவை அறிமுகப்படுத்தியவர்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள். சொல்வனம் இணையத்தில்
அக்காள் குறித்த அவர் கட்டுரை இருக்கிறது.
அதன் பின் மும்பை கோரேகான் தமிழ்ச்சங்க கூட்டத்தில் என்
பேச்சைக் கேட்ட திருமதி வேதா ராமஸ்வாமி "செங்கோட்டை
ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரச)
பாடல் திரட்டு - (ஸ்ரீ ஞானானந்த நிகேதன் வெளியீடு 2012
324 பக்கங்கள்) வாங்கி ஹைதராபாத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
நேற்று (2015) ஜனவரி 1 முதல் இன்றுவரை
அககாளின் பாடல்களை முழுமையாக வாசித்தேன்.
அடிப்படையில் நான் ஒரு பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவள்.
அக்காளின் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்படுவது
சாத்தியமில்லை என்றாலும் ஒரு பெண்ணாக ஸ்ரீ ஆவுடை
அககாளின் வலியும் வேதனையும் அவள் தேடலும்
என்னை ஆட்கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
காரைக்கால் அம்மையார் இவர் என்று சொல்லலாம்.

மகாகவி பாரதி ஸ்ரீ ஆவுடை அக்காளைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதால்
பாரதியின் படைப்பு நேர்மையைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கிறார்
என் பேராசிரியர் சு. வேங்கடராமன். அதிரடி கவனிப்புகளுக்காக
எதையும் எழுதும் இயல்பு கொண்டவர் அல்ல என் பேராசிரியர்.
சு.வேங்கடராமன் அவர்கள் அகிலன் படைப்புகள் குறித்து முனைவர்
பட்ட ஆய்வு செய்து முடித்தவுடன் மதுரை பல்கலை கழகத்தில்
தற்கால இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராக சேர்ந்தார்.
அவருடைய முதல் மாணவர்களில் நானும் ஒருத்தி.
நான் தான் புதியமாதவி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பது அவருக்குத் தெரியுமோ என்னவோ..?

நேற்று கூட ஆவுடையககாள்  பாடல்களையும் பாரதியின் பாடல்களையும்
அருகருகே வைத்துக் கொண்டு வாசித்தேன். பாரதியை மிகவும்
அதிகமாகப் பாதித்த ஆளுமை ஸ்ரீ ஆவுடை அககாள் என்பதை
என் வாசிப்பு அனுபவத்திலும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

"செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில்
மகாகவி பாரதியாரின் கவிதைகளைப்  பாதித்த ஆளுமைமிக்கவர்.
"ஸ்ரீசுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு "ஸ்ரீஅக்காள்" அவர்களின்
பாடல்கள் என்றால் உயிர். அவரும் "ஸ்ரீஅக்காள்" வரலாற்றை
அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப்பாடல்களின்
கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப்
புனைந்திருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களுக்கு சகோதரியின்
கணவராகையால், (பாரதி) அவர் மூலமாகவும் சில தகவல்கள்
அறியும் பாக்கியம் கிடைத்தது" என்று பதிவு செய்திருக்கிறார்
ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம்.

தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே -
என்கிறார் ஆவுடையக்கா.

பாரதி,

மோகத்தைக் கொன்றுவிடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு

ஸ்ரீஅக்காள் எழுதிய பாடல்கள் 1000க்கும் மேலாக இருக்கும்.
திருநெல்வேலி வட்டாரத்தில் அவளுடைய பாடல்கள் மக்களுக்குப்
புத்துயிரும் சாந்தியும் ஊட்டின. பல இடங்களில் பெண்கள் சங்கங்கள்
அமைத்து அவள் பாடல்களைப் பாடி ஞானம் பெற்றனர்.
அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே
தாரகம். சுந்தரபாண்டியபுரம், சாம்பூர், வடகரை, ஆம்பூர்,
ஆழ்வார்குறிச்சி, நாகர்கோவில், வடுவீஸ்வரம், முன்னீர்பள்ளம்,
கல்லிடைக்குறிச்சி முதலிய கிராமங்களில் மத்தியான உணர்விற்குப்பின்
பத்துப் பெண்கள் கூடிக்கொண்டு, அக்காள் பாட்டைப் பாடி
தங்களுக்குள் ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்" எங்கிறார்
ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம்.


.
பாரதியை மிகவும் பாதித்த ஆளுமை ஸ்ரீ ஆவுடை அக்காள்.
ஆனால் அக்காளின் பெயரை  பாரதி எவ்விடத்தும் பதிவு செய்யவில்லை
என்பதாலேயே
பாரதியின் நேர்மையில் களங்கம் வருமா?
பேராசிரியர் சு.வே. அவர்களின் கேள்விக்குப் பின் பலர் இந்த
விவாதங்களை முன் எடுத்துச் சென்றுள்ளார்கள். இந்த
விவாதங்களுக்குள் நுழைவதில் எனக்கு விருப்பமில்லை
பாரதி தன் உறவுப் பெண்ணான கோமதியிடம் அக்காளைப் பற்றி
பேசி இருப்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். எனவே
ஆவுடை அக்காளின் பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டும்
என்ற உள்நோக்கம் பாரதியிடம் இருந்ததாக முடிவுக்கு வர
வேண்டியதில்லை.மேலும் ,
பாரதி வாழ்ந்த காலத்தில் அன்றாட எல்லா நிகழ்வுகளையும்
பதிவு செய்யும் வசதி இருந்ததா?
மேலும் தன்னைப் பாதித்த அனைத்தையும் பதிவு செய்ய
நம்மைப் போல முகநூல்/வ்லைப்பூ என்ற வசதிகளும்
பாரதிக்கு இல்லை.
அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில்
அவர் வாழ்ந்த அக்கால சமூக அரசியல் சூழலும் அது சார்ந்தப் பிரச்சனைகளும்
எப்போதும் முன்னிலை எடுத்திருக்கும். மேலும் "நீண்ட புகழ், வாழ் நாள்,
நிறை செல்வம்" வேண்டிக் கேட்ட பாரதிக்கு அவை வெறும் கனவாகவே
போய்விட்டன. தான் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கும் கால
அவகாசத்தை காலன்  பாரதிக்கு வழங்கவில்லை.

பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடக்கிறது.
பால்யவிவாகத்தின் கொடுமையை அனுபவிக்கிறார்
ஆவுடையக்கா. ஆம், ஆவுடையக்காவின் கணவர் இறந்துவிட
இளம்வயதிலேயே கைம்பெண் கோலம், ஆனால் அதுவே
அவர் அறிவுதேடலின் ஆரம்பமாகிறது. கல்வி ஞானம் பெறுகிறார்.
 ஞானப்பெண்ணாக ஆவுடையக்கா தன்னை வளர்த்துக் கொள்கிறார். பாடல்கள் புனைகிறார்.
விளைவு?  இந்தச் சாதி சமூகம் ஆவுடையக்காவை "ஜாதிபிரஷ்டம்" செய்கிறது.

ஒரு ஆடிமாத அமாவாசை நாளில் குற்றால அருவியில்
குளிக்கச் சென்றவள், மலையிலேறி தியானம் செய்துவிட்டு
வருவதாக தன் சிஷ்யைகளிடம் கூறிவிட்டு தன் புடவைப் பெட்டியுடன்
மலையேறி சென்றவள் என்ன ஆனாள் என்பது யாருக்குமே தெரியாது.
நம் ஆவுடையக்கா குற்றால அருவிக்கு குளிக்கப் போனவள்
மலைமீதேறி மறைந்துவிட்டாள் என்கிறார்கள். சிலர் அருவியில் விழுந்து
விட்டாள் என்கிறார்கள். ஆனால் எவ்வளவு தேடியும் அவள் சடலம்
எங்கும் கிடைக்கவில்லை. ஸ்ரீ ஆவுடை அக்காளின் முடிவை வாசிக்கும் போது
எனக்கு இன்னும் சில பெண்களின் அடையாளங்கள் நினைவுக்கு வருகிறது.

ஆண்டாளும் மீராவும் கோவிலுக்குள் சென்றவர்கள் திரும்பிவரவில்லை.
ஆண்டவனுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
கர்நாடக மண்ணில் வாழ்ந்த அக்காமகாதேவி அவள் வாழ்ந்த குகைக்குள்
மறைந்தாள். மாயமாகிவிட்டாள் என்று சொல்கிறார்கள்
காஷ்மீரின் லல்லா ஆகாய மேகக்கூட்டத்தில் மறைந்தாள்.
என்னவானாள்? யாருக்கும் தெரியாது. இந்தப் பெண்ணுடல்கள்
செய்த குற்றம் என்ன? ஏன் இந்தப் பெண்பால் ஒவ்வாமை?

ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்

ஞான ரஸ கீர்த்தனைகள் (பக் 186)

(ராகம் - ஸாவேரி)

பல்லவி

ஆசையானேன் வெங்கடேச ஸ்வாமி மேலாசை ஆனேனே

அனுபல்லவி

ஆசையானேன் அவருடைய லீலையை தேசமெங்கும்
தேடியும் காணேன் கோசபஞ்சக மேல்விளையாடும்
வரத வெங்கடேசநாதன் மேலாசையானேன்         (ஆசை)

சரணம்

அகமுருகுதடி பெண்ணே, மோகம் பெருகுதடி, ஒருவகை
யாக வருகுதடி தேகஸாக்ஷியானவன் ஸரஸம்
அனேகமாமதை என்ன சொல்வேனடி போகபோக்ய ஸாதன
சித்கனபோதமாகிய ரதிவிலாஸன்மேல்   (ஆசை)

அடுத்த நாயகன் வந்து என்னை பிடித்தநாள் முதலாய் மானம்
கெடுத்த கலவியிலே மனம் பிடித்தமாகுதடி
படுத்தவுடனிது கடுத்துக்கொண்டு உடுத்த துகில் தன்னை
விடுத்து அடுத்தவேளையி லானந்தாமிருதம் குடித்து   (ஆசை)

என்னுள்ளம் குமுறுதடி பெண்ணே கடத்துக்குள்
வான் போலே ஜடத்துக்குள்ளே சிதாகாசத்தை கண்டேன்
தன்னையும் தானவன் கண்டுபடர்ந்த லீலைகள் செய்யும்
அவன்மேல் மோகமதாகினேன் அடியே, பெண்ணே     (ஆசை)





2 comments:

  1. ஆவுடை அக்காள் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. பாரதியின் வேர் - ஆவுடையக்காள்! நன்றி புதிய மாதவி!

    ReplyDelete