Wednesday, September 24, 2014

விருது வாங்கலியோ... விருது..சின்னக் குழந்தையாக இருக்கும் போது எங்கள் ஊரில் அறுவடைக்
காலத்தில் கீரை வாங்கலியோ கீரை என்று விற்றுக்கொண்டு
ஒரு ஆச்சி வருவார்கள். எல்லோர் வீடுகளிலும் அறுவடைக் காலமாதலால்
நெல் சாக்குகளில் இருக்கும். கீரைக்குப் பண்டமாற்றாக நெல்லை வாங்கிச்
செல்வார்கள். அதுமட்டுமல்ல, சேமியா ஜஸ் விற்பனையும் இதே மாதிரிதான்
நடக்கும். சின்னக்குழந்தைகள் வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல்
சாக்கு மூட்டையில் காம்பஸ் வைத்து துவாரம் போட்டு நெல்மணிகளை
எடுத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு வரும் ஜஸ்க்காரனிடம் கொடுத்து
ஜஸ் வாங்கிச் சாப்பிடுவார்கள். சும்மா சொல்லக் கூடாது,
அந்த சேம்மியா ஐஸ் குச்சியின் சுவையை மும்பையின் ஐஸ்க்கிரீம்
பார்லர்களுடன் ஒப்பிட முடியாது. அப்படி ஒரு சுவை, இப்போது நினைத்தாலும்
வாயில் எச்சி ஊறுகிறது.

இந்த மாதிரி விற்பனைகளைகள் நம் வாழ்வியலின் ஓர் அங்கமாக
இருந்தக் காலம் உண்டு. ஆனால் இன்று விருதுகள் விற்பனைக்கு
வந்திருக்கின்றன. அம்மா அப்பாவைத் தவிர எதை வேண்டுமானாலும்
இன்று மும்பையின் சந்தையில் வாங்கிவிடலாம் என்று அடிக்கடி
சொல்லிக்கொள்வோம். அதில் விருதுகளும் அடக்கம் என்பதை
அறிந்தப் போது கோபம் வந்தது. அந்தக் கோபம் யாரையும் எதுவும்
செய்துவிட முடியாது என்கிற நிதர்சன உண்மை என் கையறு நிலையை
உணர்த்தி என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பல்கலை கழகத்தின் டாக்டர் பட்டம் முதல் "உலக" என்ற அடைமொழியுடன்
கூடிய அத்தனை விதமான விருதுகளும் வாங்க மும்பை தமிழ்ச் சமூகத்தில்
தரகர்கள்  இருக்கிறார்களாம்! ஒரு விருதின் விலை குறைந்தது
ரூபாய் 5000/ அதில் 2000 ரூபாய் தரகர்  கமிஷனாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதி ரூ 3000/ விருது. - ஒரு விருது கேடயமும்
ஒரு சால்வையும்  அடக்கம். எப்படிப் பார்த்தாலும் விருது வழங்கும்
லட்டர் பேட் அமைப்புக்கு இதில் நஷ்டம் ஒன்றுமில்லையாம்.
அதன் பின் அந்த விருது வாங்கியவர் தனக்கு வேண்டியவர்களைப் பிடித்து
விழா நடத்துவார், அவருடைய செலவில் தான். ஆளுயர மாலைப் போட்டு
ரொம்பவும் ஆடம்பரமாக அந்த விழா நடக்கும். அத்துடன் முடிந்துவிடாது,
அந்த நிகழ்ச்சியை மும்பையில் வெளிவந்துக்கொண்டிருக்கும் நாளிதழ்களில்
காசு கொடுத்து புகைப்படத்துடன் நிகழ்ச்சி வெளிவரும். விருது வாங்கியவரை
வாழ்த்தி ஏகப்பட்ட விளம்பரங்கள் நாளிதழ்களிலும் மாத வார இதழ்களிலும்
வெளிவரும்.

சரி இதுதான் இப்படி என்றால், மும்பை பிரமுகர்களைப் பற்றிப்
புத்தகம் போடுகிறேன் என்று சிலர் கிளம்புவார்கள். அதற்கும் ஏஜெண்டுகள்
உண்டு. அந்தப் புத்தகத்தில் இடம் பெற குறைந்தது ரூ 1000/ கொடுக்க
வேண்டுமாம்..

ஒரு நாள் காலை 10 மணிக்கு எனக்கு விருது வழங்கப்போவதாக
ஓர் "உலக" அடைமொழியுடன் கூடிய அமைப்பிலிருந்து
போன் வந்தது. தமிழ் ஆர்வலர் என்ற விருது கொடுக்கப்போவதாக
சொன்னார்கள்! மும்பையின் முக்கியமான நபர்கள் அனைவருக்கும்
இப்படி ஏதாவது ஒரு  விருது கொடுக்கிறார்கள் என்பதையும்
அவர்கள் சொல்லியே அறிந்து கொண்டேன். அவர்களிடன் நான் கேட்டதெல்லாம் இவ்வளவுதான். அதாவது, . "என்னைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என் எழுத்துகளை வாசித்திருக்கின்றீர்களா?" இவ்வளவுதான்.
ஆனால் அவர்களோ நான் கட்டாயம் நேரில் வந்து விருது வாங்கியே ஆக
வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டெ இருந்தார்கள்.
இன்னின்னாருக்கு விருது கொடுக்கிறோம் என்பதையும் சொல்லி
அதனால் நானும் வந்து விருதினை வாங்கிக்கொண்டே ஆக
வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.
இறுதியாக நான் மதிக்கும் ஒரு பெரியவரின் பெயரைச் சொல்லி
அவர் எனக்கு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாக
இன்னொரு அஸ்திரத்தை தொடுத்தார்கள். எனக்கு கோபம்
மாறி சிரிப்பு தான் வந்தது., மன்னிக்க வேண்டும் என்று சொல்லி
வழக்கம் போல விடை பெற்றுக்கொண்டேன்.. இப்படியான அனுபவங்கள்
எனக்கும் உண்டு. சில நிகழ்வுகளை எழுதவும் முடியாது!
என் மும்பை தமிழ் உறவுகள் என்னை விலக்கி வைக்க கூடும்!
என்ன செய்வது?

என்னால் முடிந்ததெல்லாம், எப்போதாவது எனக்கு தமிழ்நாட்டிலிருந்து
என் படைப்புகளுக்கு விருது கிடைத்தால் அதைப் புகைப்படத்துடன்
மும்பையில் எந்தப் பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான்....11


பி.கு: மும்பை விருது சந்தை பற்றி மட்டுமே
எழுதி இருக்கிறேன். இது தமிழகத்திற்கோ அல்லது
தமிழர் வாழும் பிற இடங்களுக்கோ பொருந்தி வந்தால்
அதற்கு நான் பொறுப்பல்ல. 

1 comment:

  1. உண்மைதான் சகோதரி
    இதற்குக் காரணம் விருது பெற ஆசைப் படுபவர்கள்தானே

    ReplyDelete