Saturday, June 21, 2014

மும்பை மெட்ரோ.பிடிச்சிருக்கு ஆனா பிடிக்கலை!





இரு தினங்களுக்கு முன் மும்பை மெட்ரோவில் பயணம் செய்தேன்.
மும்பையின் பெருமை மும்பை மெட்ரோ என்று பத்திரிகைகள்
செய்திகளை பக்கம் பக்கமாய் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
மேலும், எதோ பிக்னிக் போவது போல எங்கள் மும்பைவாசிகள்
குடும்பம் குடும்பமாக மெட்ரோவில் போய் பயணித்து புளகாங்கிதம்
அடைந்து கொண்டிருந்தார்கள்.

மதிய உணவுக்குப் பின் திடீரென எனக்கும் அந்தப் பித்து பிடித்தது.
என் வீட்டிலிருந்து இரண்டு  ஸ்டேஷன் தாண்டி காட்கோபர். காட்கோபர்
மின்சார ரயில்நிலையத்துடன் சேர்ந்தே பயணிகள் வசதிக்காக
மெட்ரோ ஸ்டேஷனும் ஆரம்பிக்கிறது.
மெட்ரோவில் பயணிக்கும் போது நாம் எங்கோ ஐரோப்பாவில்
பயணிப்பது போல ஒரு பிரமை. ஒரு சின்ன வித்தியாசம்
அவர்கள் அமைதியாக பயணிப்பார்கள். நம்மவர்கள் கேட்கவா
வேண்டும், வீட்டுக்கதையிலிருந்து மோதி அரசியல் வரை
ஒரு சலசலப்பு.. சந்தைகக்டை இரைச்சல். ஆனாலும் மெட்ரோவின்
குளிர்ச்சாதன வசதியும் அப்படியே உயரத்தில் கண்ணாடி சன்னல்கள்
வழியாக மும்பையைப் பார்க்கும் போது அதன் கம்பீரமான தோற்றமும்..
அடடா... அம்ச்சி மும்பை என்ற பெருமிதம் வரத்தான் செய்தது.
மும்பையின் மின்சார ரயில் வசதியைக் கொண்டு அதை 3 பிரிவுகளாகப்
பிரிக்கலாம். செண்ட்ரல் லைன், வெஸ்டர்ன் லைன், ஹார்பர் லைன்.
முலுண்ட் தானா கல்யாண் பகுதி  விடி ஸ்டேஷன் வரை செண்ட்ரல் லைன்,
மேற்கே பாந்திரா ,அந்தேரி, போரிவலி , மீரா ரோட்  லைன்  சர்ச்கேட் ஸ்டேஷன் வரை வெஸ்டர்ன் லைன். செம்பூர், திலக் நகர் , மான்கூர்ட்,
விடி ஸ்டேஷன் வரை ஹார்பர் லைன்.  இதில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பயணம் செய்ய 95% பயணிகள் பயன்படுத்தியது
தாதர் ஸ்டேஷன் தான். அங்கேதான் லைன் மாற்றிக் கொண்டு பயணிக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
எனக்கு அந்தேரி செல்ல எப்படி பார்த்தாலும் ஒன்றரை மணியிலிருந்து
இரண்டு மணிநேரம் ஆகும். பேருந்தில் சென்றால் 1 மணி நேரத்திற்கு அதிகமாகவே எடுக்கும். ஆனால் மெட்ரோ வில் பயணிக்கும்  போது
அரைமணி நேரத்தில் என்னால் அந்தேரி செல்ல முடிகிறது.
காட்கோபர் மெட்ரொ ஸ்டேஷனிலிருந்து அந்தேரி செல்ல சரியாக 20
நிமிடம் ஆகிறது. அவ்வளவுதான். உண்மையில் இந்த நேர அளவை
கணக்கில் கொண்டால் இந்த வசதி மும்பைக்காரர்களுக்கு ஒரு
வரப்பிரசாதம்.

மிகவும் தூய்மையாகவும்  லிஃப்ட் வசதி தானியங்கி படிக்கட்டுகள்

கழிவறையின் தூய்மை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவையாக
இருக்கின்றன. போகப் போகத்தெரியும் என்கிறார்கள் சிலர்.
பார்க்கலாம்.

இந்த மகிழ்ச்சியை என்னால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லையே!
என்ன செய்யட்டும். மும்பை மெட்ரொ மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்
மெட்ரோ அல்ல, இது ரிலையன்ஸின் மெட்ரோ.
ரிலையன்ஸின் முதலீடு 69%
மும்பை மாநகர வளர்ச்சி குழுமத்தின் முதலீடு 26%
பிரான்ஸ் நாட்டின் வியோலிய டிரான்ஸ்போர்ட் முதலீடு 5%

இந்தியாவிலேயே மிக அதிகமான வருவாயைப் பெறும் நகரம் மும்பை.
சில இந்திய மாநிலங்களின் வருவாயை விட அதிகம் கொண்ட
மாநகரம் மும்பை. அப்படி இருந்தும் ரிலையன்ஸின் கை ஓங்கி
இருக்க வேண்டிய காரணம் என்ன? அரசு நிர்வாகம் இம்மாதிரி
பிராஜெக்ட்டுகளை எடுத்து செய்ய முடியாமல் இருப்பது ஏன்?

மெட்ரோ பயண டிக்கெட் விலையை ஏற்றக்கூடாது என்று மராத்திய மாநில முதல்வர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நத்திங் டுயிங் என்று
ரிலையன்ஸ் பயண டிக்கெட் விலையை விரைவில் தற்போதைய பத்து
ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரைக்கும் ஏற்றலாம் என்கிறார்கள்.
கட்டாயம் ரிலையன்ஸ் டிக்கெட் விலையைக் கூட்டுவார்கள்.
யார் என்ன கூப்பாடு போட்டாலும் கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு
இல்லை!

மும்பை மெட்ரொ எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த திட்டத்தில்
இருக்கும் பெருமுதலைகளைக் கண்டா பிடிக்கலை. இந்த திட்டத்தின்
பயன் மும்பை வாசிகளுக்கு முக்கியமானது என்றாலும் இத்திட்டத்தின்
பெருலாபம் தனிப்பட்ட ஒரு குழுமத்திற்கு உரியதாகிறது.






தாமஸ் பிக்கட்டியின் வார்த்தைகளில் சொல்வதானால்,
(CAPITAL IN THE TWENTY FIRST CENTURY)
தண்ணீர் தாழ்வான இடத்தை நோக்கிப் பாயும். அது இயற்கை,
பணம், மனிதர்கள் உருவாக்கிக் கொண்டது. அது  மேட்டை நோக்கிப்
பாய்கிறது."
 பணம் பணத்தை நோக்கிப் பாய்கிறது. இந்தியப் பொருளாதரம்
மேடு நோக்கிப் பாயும் நீர்.








3 comments:

  1. ரிலையன்ஸுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலா
    ஆகா

    ReplyDelete
  2. 100% ரிலையன்ஸ் மெட்ரோ என்கிற காட்சியை மெட்ரோ ஸ்டேஷனில் காட்டுவதன் மூலம் தன்னால் மட்டுமே இவ்வளவு தரம் வாய்ந்த மெட்ரோவை
    மக்களுக்கு வழங்க முடியும் என்கிற எண்ணத்தை வேறு உருவாக்கி விட்டார்கள், தனியார்மயமாவதால் தான் தரம் உயர்வாக இருக்கும் என்று பொதுபுத்தியில் ஏற்றியாகிவிட்டது! இதுதான் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை. நன்றி கரந்தை ஜெயக்குமார்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete