( பத்தமடை எங்கள் வீடு அன்பகம் )
இக்கதை எழுபதுகளில் நடந்த உண்மைக்கதை. இக்கதையின் களம்
என் சொந்த ஊர் பத்தமடை. பத்தமடை இராமசேஷய்யர் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தக் காலக்கட்டத்திலும் சாராள் தக்கர்
பெண்கள் கல்லூரியில் இளங்கலை படித்த 70களில் நடந்தக் கதை.
அப்போதெல்லாம் எங்கள் பத்தமடையில் டூரிங் டாக்கீஸில் சினிமா.
சினிமாக் கொட்டகையிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் என் வீடு.
அப்போது பத்தமடையில் பேருந்து நிலையத்தின் அருகில், ரோட்டோரமாக
உதயசூரியன் போட்ட "அன்பகம்" என் வீடு. வீட்டில் அம்மாவழி பாட்டி, சின்னப்பாட்டியின் பாதுகாப்பில் நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.
சர்வணப்பொய்கையில் நீராடி என்ற பாட்டு போட்டுவிட்டால் அடுத்து
5 நிமிடங்களில் சினிமா ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம்.
என் வீடு உதயசூரியன் போட்ட வீடு என்று சொன்னேன் அல்லவா..
அந்த உதயசூரியன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.
(மேலே உள்ள படத்தில் இருக்கும் பத்தமடை என் வீடு அன்பகம்,
இப்போதும் எம் ஜி ஆருக்காக கட்டிய பால்கனியும் பால்கனிக்கு
மேல் செதுக்கப்பட்டிருக்கும் உதயசூரியனும் அப்படியே அந்த நினைவுகளின்
அடையாளமாக... )
வீடு கட்டியவுடன் கிரகப்பிரவேசத்திற்கு மக்கள் திலகம் எம், ஜி., இராமச்சந்திரன் வருவதாக நாள் கொடுத்துவிட்டார். அவ்வளவுதான்.
வீட்டைக் கட்டிய பொறியியல் படிக்காத அந்தக் காலத்து எங்கள்
மேஸ்திரி, கொத்தனார் மறைந்த திரு. இலட்சுமணத்தேவர் அவர்கள்
உடனே மாடியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார்.
என் அப்பாவும் சம்மதித்தார். மாடியில் ரோட்டைப் பார்த்து ஒரு ஆள்
அவருடன் இரண்டு பக்கத்திலும் இருவர் நிற்கிற அளவுக்கு ஒரு சின்ன
பால்கனி போட்டார்கள். திறந்தப் பால்கனி. அந்தப் பால்கனிக்கு மேல் உதயசூரியன் சின்னம். இப்போதும் அந்தப் பால்கனியும் உதயசூரியனும் அப்படியே இருக்கிறது. அப்போதெல்லாம் பள்ளி மாணவி நான்.
எம்.ஜி. ஆர் உங்க வீடு திறப்புவிழாவுக்கு வருகிறாராமே என்று உடன்
படித்தவர்களும் வாத்தியார்களும் கேட்கும் போது ரொம்பவும் பெருமையாக
இருக்கும். அப்படியே ஜிவ்வுனு வானத்தில் றக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற மாதிரி இருக்கும். பத்தமடை மாமா ந.பரமசிவம் அவர்கள் மற்ற ஏற்பாடுகளை
எல்லாம் கவனித்துக் கொண்டார். 1967ல் தேர்தல் நேரம். தேர்தல் சுற்றுப்பயணத்தில் எங்கள் வீட்டுத் திறப்புவிழாவும் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் தான் எம் ஜி ஆர் சுடப்பட்டார்.
1967 ஜனவரி 12ல் எம் ஜி ஆர் சுடப்பட்டார் என்ற செய்தி காட்டுத்தீப் போல
பரவியது. இப்படியாக எம் ஜி ஆர் எங்கள் வீட்டுக்கு வரவில்லை.
இறுதியில் அன்பகம் திறப்புவிழா ரொம்பவும் எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொள்ள நடந்ததில் ரொம்பவும் வருத்தப்பட்டது நான் தான்.
என்னைவிட அதிகம் வருத்தப்பட்டது எங்கள் வீட்டுக்கு அடுத்தவீட்டில்
வாழ்ந்த சீதப்பாட்டி. சீதப்பாட்டிக்கு இரண்டு பெண் குழந்தைகள். எங்கள் வீட்டு
காம்பவுண்டு சுவர் தான் அவர் வீட்டின் காம்பவுண்ட் சுவராக இருந்தது. குடிசைவீடு என்று சொல்வதற்கில்லை. ஒடு வேய்ந்த வீடு. நாங்கள் அவரைப் சீதப்பாட்டி என்றழைத்தாலும் அவருக்கு அதிகம் வயதிருக்காது. அவர் தலைவாரியோ புதிதாக ஒரு புடவையைக் கட்டியோ நான் பார்த்ததே இல்லை. ஒரு மூக்குத்தி மட்டும்தான் அவர் அணிகலன். வெற்றிலைப் போட்டு எப்போதும் சிவந்திருக்கும் வாய். அவர் வீட்டில் சோறு மட்டும் தான் வடிப்பார்கள்
என்று நினைக்கின்றேன். எப்போதும் சாம்பார் அல்லது தொட்டுக்கொள்ள
கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது கேட்பார். கொஞ்சம் சோறு போட்டுக் கொண்டு எங்கள் வீட்டு வராந்தாவுக்கு வந்து கேட்கும் போது எங்கள் பாட்டிக்கு
கோபம் வரும் . தினமும் இதே பிழைப்பா போச்சு இவளுக்கு என்று சொல்லிக்கொண்டே கொடுப்பார். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்பவும் பிடிக்கும். ஏனேனில் அவர் ஒரு தீவிரமான எம் சி ஆர் ரசிகை. எம். சி ஆர் படங்களை விடாமல் பார்ப்பார். சரவணப்பொய்கை பாட்டு போட்டவுடன்
போட்டுட்டான் போட்டுட்டான் நேரமாகுது என்று அவர் ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனை நாட்கள் எம். சி ஆர் படம் ஓடினாலும்
சீதப்பாட்டி முதல் காட்சியிலோ இரண்டாவது காட்சியிலோ இருப்பார் கட்டாயமாக.. எம். சி. ஆரின் கண்ணசைவையும் வாள் சண்டையையும்
துள்ளும் இளமைப் பாடல்களையும் அவர் சொல்லக் கேட்பதே ஒரு தனி
ஆனந்தம் தான். அவர் தன் மறைந்தக் கணவரைப் பற்றி எதுவுமே பேசி
நாங்கள் கேட்டதில்லை. தினமும் சினிமா பார்க்க (80 பைசா என்று நினைக்கின்றேன்) தரை டிக்கெட்டுக்கு
காசு வைத்திருப்பார். அவர் ஒரு இசுலாமியர் வீட்டில் வேலைப் பார்த்தார்.
விடிவதற்குள் அந்த வீட்டுக்குப் போய் தொழுவத்தில் மாட்டுசாணத்தை
அள்ள வேண்டும். அந்த வீட்டில் ஒரு மந்தை மாடுகள் இருப்பதாகச் சொல்லி
இருக்கிறார். மாடுகள் மந்தைக்குப் போகும் வரை அவருக்கு வேலை இருக்கும்.
அதன் பின் அந்த வீட்டுப் பெண்கள் சொல்லும் - சாதியப் படிமுறை ஏற்றுக்கொள்ளும் சில வேலைகள் - செய்வார். மதியம் அவர்கள் கொடுக்கும்
பழங்கஞ்சி அவருக்கு உணவு. மாலையில் மந்தையிலிருந்து மாடுகள் வந்தவுடன் இவர் வீடு திரும்புவார். வரும் வழியிலேயே எங்க ஊரு வாய்க்காலில் குளித்துவிட்டு புடவையைச் சுற்றிக்கொண்டு இன்னொரு பக்கத்தை காற்றில் காட்டும் வகையில் பிடித்து காய வைத்துக் கொண்டே வீட்டுக்கு வருவதற்கும் புடவைக் காய்வதற்கும் சரியாக இருக்கும்.
வந்தவுடன் பழைய சோறு இல்லை என்றால் உலை கொதிக்கும்.
வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய எம் சி ஆர் புராணம் ஆரம்பித்துவிடும்.
அவர் சொல்லும் எம் சி ஆர் கதைகளைக் கேட்ட அவர் தூரத்து உறவினர்
அவருடைய அண்ணி ஒரு முறை அவருடன் சேர்ந்து எம். சி ஆரைப் பார்க்க
கொட்டகைக்குப் போனார். வரும் போது கேட்டிருக்கிறார் சீதப்பாட்டி "நம்ம எம் சி ஆர் எப்படி? "னு.
'ஏட்டி எங்கட்டீ எம் சி ஆர் தெரிஞ்ச்சாரு. அந்த ஓட்டையிலிருந்து
வெளிச்சமா வந்திச்சி. சத்தமும் பாட்டும் கேட்டுச்சி. அவரு எங்கட்டி தெரிஞ்சாரு? " என்று சொல்ல பிறகென்ன மைனிக்கும் சம்மந்திக்கும் ஒரே சண்டை. சீதப்பாட்டி தன் அண்ணியைப் பார்த்து கூமுட்டை என்று சொல்ல
"யாருட்டீ கூமுட்டை, நீ கூமுட்டை, உன் மவ கூமுட்டை" என்று பேச
கெட்ட வார்த்தைகளின் அகராதி அங்கே சிதறி எங்கள் வீட்டுவரை வந்தது.
ஒரு வழியாக இருவரையும் சமாதானப் படுத்தி வைத்தோம். சீதப்பாட்டி
அதன் பின் அவருடைய அண்ணியுடன் பேசவதே இல்லை. இந்தக் கதை
அன்றைக்கு எம் சி ஆர் கதையை விட சுவராசியமாக எங்கள் வட்டத்தில்
ஓடிக்கொண்டிருந்தது. இப்படியாக சீதப்பாட்டியின் ரசிகையாக மாறிய நான்
அவர் பொருட்டு எம் சி ஆர் ரசிகையாகவும் இருந்தேன் என்பதை
ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
திரு இரத்தினவேல் பாண்டியன் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில்
வேட்பாளாராக நின்ற போது அவருக்கு பிரச்சாரம் செய்ய எம் ஜி ஆர்
வந்திருந்தார். பத்தமடை ரோட்டில் எம் ஜி ஆரும் இரத்தினவேல் பாண்டியன் மாமாவும் ஒரே வாகனத்தில் நின்றார்கள். கருக்கல் மாலை நேரம்
என்று நினைக்கின்றேன். எம் ஜி ஆரும் இரத்தினவேல் பாண்டியனும்
அருகருகே நின்ற காட்சி... ! இப்போதும் மனத்திரையில் பதிந்திருக்கிறது.
எம் ஜி ஆர் பிரச்சாரத்திற்கு வந்தும் இரத்தினவேல் பாண்டியன் தோல்வி
அடைந்தார். ஆனால் அது தான் அவருக்கு ஒரு வகையில் திருப்புமுனையாக
இருந்தது என்றார் இரத்தினவேல் பாண்டியனுக்கு மிக நெருக்கமான நண்பரான என் தந்தையார். அதன் பின் இரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதி மன்ற நீதிபதி ஆனார்.
எம் ஜி ஆர் , பம்பாய் தமிழ்ச் சங்க வளர்ச்சி நிதிக்காக நாடகம் போட்டிருக்கிறார் என்றும் அதன் பொருட்டு பம்பாய் வந்து தங்கி
இருக்கிறார் என்பதும் அப்பாவுடனான அவர் நட்பையும்
மும்பையில் வசிக்கும் பெரியவர் கொ. வள்ளுவன் அய்யா என்னிடம்
சொல்லி இருக்கிறார்.
எம் ஜி ஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்த நேரம். அப்போது பம்பாய் தாராவி வி. கே. வாடி நெல்லை மஹாலில் எங்கள் வீடு. தமிழக அமைச்சராக
இருந்த சத்தியவாணி முத்து அவர்கள் வி.கே. வாடிக்கு ஒரு நிகழ்வுக்காக
வந்திருந்தார். அப்பாவுக்கு ஆள் மேல் ஆள் தூதுவிட்டார். அதிமுக கட்சியை
மும்பையில் பலப்படுத்த சில இலட்சங்கள் அப்பாவுக்கு பேரம் பேசப்பட்டது.
கடைசி தூதுவர் தான் அப்பாவுக்கு மிக நெருக்கமான சத்தியவாணி முத்து
அவர்கள். சத்தியவாணி முத்து அப்பாவை தன் தம்பியாகவே கடைசிவரை
நினைத்திருந்தார். அரசியலை விட்டு முழுக்கவும் துறவற நிலையில் வாழ்ந்த
என் அப்பா சத்தியவாணி முத்துவைப் பார்க்க மறுத்துவிட்டார்.
ஆனால் சத்தியவாணி முத்து பேசியதை வாராந்தாவில் நின்று கேட்டுக்
கொண்டிருந்தார்!
இப்போதெல்லாம் எம். ஜி ஆர் படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது சீதப்பாட்டி தன் முகம் காட்டி வெற்றிலைப் பற்கள் வெளியில் தெரிய
சிரிக்கிறாள்.
சீதாப்பாட்டியை எங்களாலும் மறக்க முடியாது...
ReplyDeleteஎம்.ஜீ.ஆரை யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் தாய்மார்களை சொல்லவும் வேண்டுமோ... கட்டுரை நடை மிகவும் அருமை அம்மா!
ReplyDeleteஅருமையான விவரணம். ரசித்தோம் பதிவை.
ReplyDeleteஒரு சின்ன சஜஷன். வேர்டில் அடித்து ஜஸ்டிஃபிக்கேஷன் செய்தால் வரிகள் சரியாக வரிசையாக இருக்கும் பாரா பிரித்து அடித்தால் வாசிக்கவும் எளிதாக இருக்கும்.
நன்றி தொடர்கின்றோம்..