Saturday, March 8, 2014

குஷ்புவுக்கு - சங்கடப்படாத சாதனைப் பெண்மணி விருது


இன்று பெண்கள் தினம் - மார்ச் 8.
குறுஞ்செய்திகளாலும் வாழ்த்துகளாலும் நிரம்பி வழிகிறது கைபேசி.
எந்த நிகழ்விலும் இந்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. ஏன்.. வழக்கமாக
பெண்கள் தினத்தில் சந்திக்கும் தோழியரையும் சந்திக்கவில்லை.
1/365.25  அதாவது முந்நூற்று அற்பத்து ஐந்து புள்ளி 25ல் ஒன்றாக இருக்கும்
நாளை உணர்த்தும் இந்த நாளைக் கொண்டாடுவதில்.. அப்படி என்ன
சாதித்துவிட்டோம்? வாழ்த்துகளும் விழாக்களும் சடங்குகளாகிக் கொண்டிருப்பதில் விலகி இருக்கவே மனம் விரும்புகிறது.

என் மவுனம் கலைக்க எப்போதும் போல  கலகலப்பான சிரிப்புடன் 
என் அறைக்குள் வந்தாள் முனியம்மா. அவள் வந்தது தெரியுமென்றாலும்
தெரியாதது மாதிரி நடிப்பதில் தோற்றுப்போய் பேச ஆரம்பித்தேன்.

என்னமா.. டிவியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு விருது வழங்குகின்றார்களே பார்த்தீர்களா என்று விசாரித்தாள். இதுவும் வருடாவருடம் நடக்கும் எங்க அம்மன் கோவில் கொடைத் திருவிழா மாதிரிதானே என்று நினைத்துக் கொண்டேன். எப்படியோ எங்கள் பேச்சு
2013 ஆம்  ஆண்டின்  சாதனைப்  பெண்மணி யார்? என்று அலச ஆரம்பித்தது.
என் முனியம்மா நாட்டு நடப்புகளை அலசுவதில் கைதேர்ந்தவள்.

நான்: சோனியா காந்திக்கு கொடுக்கலாமா?

முனியம்மா:  அட.. பாவம் அந்தம்மா.. இந்த ஊரு ஆட்களை நம்பி
இறங்கிடுச்சி.. பிள்ளைய கொண்டுவர்றதுக்குள்ள அது படற பாட்டைப் பார்த்தா பாவமா இருக்கு. விடுங்கம்மா அதை.

"அப்புறம் நம்ம தமிழ்நாட்டு சி. எம், அதுதான் உங்க "அம்மா"வை செலக்ட்
செய்யலாமா..?

> பாவம்மா.. எங்கம்மாவும். அதுதான் ஒரு காலத்திலே என்ன பாடுப்பட்டுதுனு நினைக்கீங்க.., அதக் குடியும் குடித்தனமுமா இருக்கவிட்டாடுகளாஎவனாவது?>

அப்போ கவிஞர் கனிமொழிக்கு, அதுதான் கலைஞரோட மக கனிமொழிக்கு
கொடுத்திடலாமா..?

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னாள் முனியம்மா.

<உங்களுக்கு எப்பவும் கனிமொழியை இழுக்காமாப் பொழுதுப் போகாதே!
அதுவும் தான் சிறைக்கெல்லாம் போயி ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிட்டேம்மா.. அதுவும் பாவம் கெதக் கெதக்குனு பயந்துக்கிட்டுத்தான் இருக்கும், அத்த விட்ருங்க..

பின்னே... யாருக்கு கொடுக்கலாம்னு நினைக்கிறே முனியம்மா?

ஒன்னும் கஷ்டப்படாமா பட்டுனு மேலே வந்தவங்களுக்குத்தாம்மா
அவார்டு கொடுக்கனும். எனக்கென்னவோ குஷ்புக்கு அவார்டு கொடுக்கலாம்னு தோணுதும்மா... கலர் கலரா நல்ல நல்ல டிசைனில்
ப்ளவுஸ் போட்டுட்டு ஜெயா டிவியிலே  ஜெக்பாட் விளையாட வந்தாங்கா,... அப்புறம் பார்த்தா திடீர்னு ஒருநாள் கலைஞர் டிவி வந்தாங்க.
என்ன ஜெக்பாட் அடிச்சுதோ..?
 அப்புறம் செம்மொழி மாநாட்டில் கலைஞர் குடும்பதில் விஜபி மாதிரி ஜொலிச்சாங்கா... இப்போ என்னனா
சென்னையில் தென்சென்னையோ வன்சென்னையோ எதோ ஒரு சென்னை
தொகுதியிலே எம்.பி எலக்ஷனிலே நிக்கப்போறாங்களாம். !
என்று சொல்லிவிட்டு அவள் என்னை ஒரு பார்வை பார்த்தாள் பாருங்கள்...

அந்தப் பார்வையில் முனியம்மா சொன்னதெல்லாம்...
"அட நீயும் ......நீ பேசற பெண்ணியம், கொள்கை ... கத்திரிக்கா..
வெங்காயம், வெங்காயம்.." !!!


 

No comments:

Post a Comment