Tuesday, July 16, 2013

இளவரசன் சவ ஊர்வலத்தில் உயிர்த்தெழுந்த சிலக் கேள்விகள்இளவரசன் : தமிழ் சாதியின் அடையாளம்
அவன் மறைவு தற்கொலையா?
கொலை செய்யப்பட்டானா/
எப்படி இருந்தாலும் அவன் முடிவுக்கு அவன் மட்டும்
பொறுப்பல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் முகத்தில்
காறித்துப்பிவிட்டு அவன் மறைந்திருக்கிறான்.

காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில்
நெய்தல் நிலத்துப் பெண்ணை மருத நிலத்துக்காரன்
களவு மணம் செய்து காத்திருக்க வைத்ததை
பாடமாகப் படித்துக் கொண்டிருக்கும் இலக்கிய மேடையை
தன் புழுதிக்காலால் உதைத்து தள்ளி இருக்கிறான்.

காதல் தெய்வீகம்
காதல் ஒரு  முறைத்தான் வரும்
காதல் இல்லை என்றால் சாதல்
அவன் வீட்டு இலவச தொலைக்காட்சி நித்தமும் காட்டிய
காதல் ராஜாங்கத்தின் இளவரசனாக தன்னைக் கற்பனை
செய்து கொண்டதன் வீபரீதம்...
அவன்.

அரசியல் தலைவர்கள் வீட்டில் காதல் திருமணமும் சாதி மறுப்புத் திருமணமும் அவர்களைப் புரட்சிக்காரர்களாக சமூக சீர்திருத்தவாதிகளாகக்காட்டும் அடையாளங்கள்.
சாதி ஓட்டுகளை வாங்கும் சம்பந்தி முறை உறவுகள்.
ஆனால் அதையே இளவரசன்கள் செய்தால் ...
ரயில் தண்டாவளங்களில் அவர்களின் சீர்திருத்தம் தூக்கி எறியப்படும்.

இளவரசனின் முடிவு காதலர்களின் தற்கொலை முடிவாக மட்டுமே
அவன் எழுதிய / எழுதாதக் கடிதங்களைக் கொண்டு
நாளைக்கு ஒரு திரைப்படமே உருவாகலாம்.
அத்திரைப்படத்தை தமிழ்ச் சமூகமே கொண்டாடலாம்.
இளவரசன் திவ்யா வேடங்களில் நடித்தவர்களுக்கு
தேசிய விருதுகள் கூட வழங்கப்படலாம்.
எதுவும் நடக்கலாம்.


திராவிட அரசியல் சூத்திர வயல்களுக்கு நன்றாகவே தண்ணீர்ப் பாய்த்து
வளர்த்தது என்பது உண்மை. அப்படி அவர்கள் தண்ணீர்ப் பாய்த்தப்போது வயலோரங்களில் வாய்க்கால் கரைகளில் வரப்புகளில் இருந்த தலித்துகளும் பயனடைந்தார்கள். அது, அது மட்டும் தான் சூத்திர சாதிக்கு கண்களையும்
கருத்தையும் உறுத்தும் காட்சியாக இருக்கிறது. வெட்கம் கெட்டு தங்கள்
பெண்களைக் கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை, இளவரசனளிடம்
தங்கள் சாதி அதிகாரத்தைக் காட்டும் ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.

ஒருபக்கம் மது ஒழிப்பு என்று மேடைகளில் முழங்கும் இவர்கள்
இவர்களின் தொண்டரடிகள் மதுவில் மிதந்து மரக்காணத்தில் வெறியாட்டம்
ஆடியதை ரசிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் சிலர்,
"ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியைக் கொல்ல நினைக்கலாமா?
ஒரு கை இன்னொரு கையை வெட்டலாமா? ஒரு கால் இன்னொரு காலை
உதைக்கலாமா? " என்று மார்க்சியம் பேசுகிறார்கள்.
கொள்கை ரீதியாக அவர்கள் பேசுவது நடைமுறையில் அவர்களே தலித்துகளுக்குக் கற்றுக்கொடுத்த பாடத்திலிருந்து ரொம்பவும் வித்தியாசமாக
இருக்கிறது.


2500 பேர் சற்றொப்ப 20 கீமீ தூரத்திலிருந்து 150 லிட்டர் பெட்ரோலும் 200லிட்டர் மண்னெண்ணெயும் எடுத்துக்கொண்டு சிறியதும் பெரியதுமான வாகனங்களில் பயணிக்கிறார்கள். அதைக் காவல்துறைக் கண்டு பிடிக்கவே முடியவில்லையாம்! எப்படி இருக்கிறது நாட்டின் சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு? காவல்துறையும் நீதிமன்றமும் யாருக்காக ?
யாருடைய பாதுகாப்புக்காக?
குஜராத்தில் ஒரு மோதி தான். தமிழ்நாட்டிலோ ஆயிரக்கணக்கான மோதிகள்.
வெவ்வேறு பெயர்களில். வெவ்வேறு முகமூடிகளுடன்.ஈழத் தமிழனுக்காக உருகி உருகி போராடும் வீரத்தமிழன் ஒருவனும்
இளவரசனுக்காக போராட வரப்போவதில்லை. மாணவர்கள் போராட்டங்களோ இது குறித்த விவாதங்களோ கல்லூரிகளில் இல்லை.
சாதியத்தின் பெயரால் இளவரசன்களை வாழ அனுமதிக்காத தமிழ்ச்சமூகத்தில் இளவரசனின் இன அடையாளம் தமிழன் என்பதல்ல, தமிழ்த்தேசியத்தில் அவனுக்கான இடம் இட ஒதுக்கீடாக கூட ஒதுக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை இளவரசன்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்,
இனி தமிழ்த்தேசிய அமிர்தம் கூட நஞ்சாகிப்போனது என்பதை அறிந்துக்
கொண்டார்கள். அமுதமே நஞ்சானால், அவர்கள் இந்தியனாக இருந்தால் என்ன? தமிழனாக இருந்தால் என்ன? தமிழனின் அடையாளம் சாதி
என்பதற்கு இளவரசன்களே சாட்சி.


ஒரு பெண் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்/
யாரைக் காதலிக்க வேண்டும்?
யாருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
யாருடைய பிள்ளையைக் கருவில் சுமக்க வேண்டும்?
யாருடன் களவு மணம் செய்து கொள்ள வேண்டும்?
யாருடன் உடன்போக்கு செய்ய வேண்டும்?
இதை எல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தக் குறிப்பிட்ட
பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அவளுடைய அதிகாரத்தில்
தலையிட அவள் பெற்றோர்களுக்கே உரிமையில்லை. தங்கள் அனுபவ
அறிவைக் கொண்டு பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்லலாமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது, முடியாது. அப்படி இருக்க தங்கள் சாதிப்
பெண்களின் காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஓடீப்போரதுக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் மொட்டை அதிகாரத்தைச் சாதித் தலைவர்களுக்கு கொடுத்தது யார்?
இதற்காக போராட வேண்டியது திவ்யாக்கள் மட்டுமே.
எங்கே ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் முலை-யோனிகளின் விடுதலையைப் கவிதைகளாக்கி தங்களைப்  பெண்ணிய போராளிகளாக அடையாளம் காட்டிக் கொண்ட எம் பெண்ணிய வாதிகள்?


பார்ப்பன சாதியில் பிறந்தவர்களுக்குப் பார்ப்பனியப்புத்தி இருக்கிறதோ இல்லையோ சூத்திர சாதியில் ஒவ்வொருவரிடமும் அவர்களின்
அடையாளமாக சாதி மட்டுமே பாதுகாக்கப்பட்டிருகிறது.
தந்தை பெரியார் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டை இனி
நாம் ஒவ்வொருவரும் மறுவாசிப்பு செய்தாக வேண்டி இருக்கிறது.
பெருந்தெய்வங்களையும் அதன் காவலர்களாக இருந்த பார்ப்பனர்களையும்
சாடிய பெரியார், சூத்திர சாமிகளையோ சூத்திர தர்மகர்த்தாக்களையோ
கை  வைக்க வில்லை. அப்படி கை வைத்திருந்தால் அப்போதே சூத்திர சாதியின் பார்ப்பனியப் புத்தி வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.
தமிழனைச் சூத்திரனாக விட்டுச்செல்வதற்காக வருத்தப்பட்ட பெரியார்,
அதே அளவு வருத்தமும் போராட்டங்களும் சூத்திரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பஞ்சமர்களுக்கும் காட்டினாரா? அவர் காலக்கட்டத்தில் பார்ப்பனிய அதிகாரத்துடன் மோதவே அவருக்கு காலம் போதவில்லை என்பதால்
இரண்டாவது கட்ட நகர்வுக்கு செல்ல முடியவில்லை என்று நாம் என்னதான்
சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அவை எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் உத்திகள் மட்டுமே. பெரியாருக்குப் பின் பெரியார் வழி
வந்தவர்கள் பெரியாரின் சாதி ஒழிப்பு போரட்டத்தை வெறும் பார்ப்பனிய வெறுப்பாக மட்டுமே துப்பி விட்டு வாயைத்துடைத்துக்கொண்டார்கள்.

ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதிதிராவிடன் உயர்ந்தவனா?
என்று அவர்களிடம் இன்று காலம் வைக்கும் கேள்வியின் கனம் தாங்க முடியாமல் தலித்துகள் பெரியாரையோ திராவிட இயக்கத்தையோ விமர்சனம் செய்தால் கூட உடனே "நன்றி கெட்டவர்கள்" என்று வசைப்பாடுகிறார்கள்.
பெரியாரின் சாதி ஒழிப்பு கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தாமல்
காலம் தள்ளிக்கொண்டிருப்பவர்களிடம் பெரியார் ஒரு பிள்ளையார் சிலையாகிப் போன அவலம் நடந்துவிட்டது. கொடைத்திருவிழாவின் போது மட்டும் நினைக்கப்படும் ஊர்க்காட்டு சாமி மாதிரி பெரியாரும் இன்றைக்கு
பெரியாரிஷ்டுகளுக்கு இருக்கிறார்.

இந்து மதக்குரு காஞ்சி மடாதிபதியைக் கை வைத்த அம்மாவின்
அபார துணிச்சல் சூத்திர சாதி தலைவர்களின் வானளவு அதிகாரத்தின் முன்னால் நாய்க்குட்டியாக இருப்பதன் காரணம் என்ன?
பிராமணர்களிடம் இருக்கும் பார்ப்பனியப்புத்தியை விட ஆபத்தானது
சூத்திரர்களிடம் குடி கொண்டிருக்கும் பார்ப்பனியம் என்பதால் தான்.

தொடரும் இளவரசனின் சவ ஊர்வலங்களும் மரக்காண ம் தர்மபுரி
எரிந்தச் சாம்பலும் சூத்திர பார்ப்பனியம் விதைத்த சாதி விதைகள்.

மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது என்றார் அம்பேத்கர். அவர் மொழியிலேயே சொல்வதானால் " பெரியார்கள் வருவார்கள் , போவார்கள், ஆனால்
தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது"

இளவரசன் சாதியத்திற்கு எதிராகக் காலமெல்லாம் போராடிய அந்த ஈரோட்டுக்கிழவனின் கறுப்புச் சட்டையைப் பிடித்து கிழித்து உரக்க
கேட்கிறான்... அவன் கேட்கும் கேள்வியை இனி எவரும் உதாசீனப்படுத்தவோ
இல்லை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை மாத்திரையில் வியாதியைக்
குணப்படுத்திவிடலாம் என்று எதிர்பார்ப்பதோ முடியாது, முடியவே முடியாது.


3 comments:

 1. இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆக்கிரமித்திருந்த “பார்ப்பனப் பார்ப்பனியம்”, இப்போது தன் வேலையை எளிதாக்கிவிட்ட “பார்ப்பனரல்லாதாரின் பார்ப்பனியம்” பற்றி மிக மகிழ்ச்சியோடிருக்கும்.
  அவர்களை நல்லவர்களாக நினைக்கும்படி எல்லாம் நடக்கிறதே! அப்பவும் சரி, இப்பவும் சரி, “அடுக்கு மூட்டையில் அடிமூட்டை”தான் நசுங்கிக்கொண்டே கிடக்கிறது... இரண்டுகாலில் நடப்பது என்னும் மாவோவின் சிந்தனை, இந்தியாவில் இப்படித்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும்... இந்த ரெண்டுபேரையும் வென்றாக வேண்டும்...

  ReplyDelete
 2. இளவரசனின் சதையை புதைத்து ..அவனின் சாதியை அணைக்க பார்த்தார்கள்..ஆனால் அது மேலும் மேலும் எரிந்து பிரகாசித்து கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 3. உண்மையில் நல்ல கட்டுரை. மணி மும்பை

  ReplyDelete