Thursday, July 18, 2013

தமிழ்த் தாயும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும்

1) இது வேண்டுகோள்
தமிழ் மொழி இனி தரணி ஆளும்
தேமதுர தமிழோசை தெருவெல்லாம் ஒலிக்கும்
ஆட்சி மொழி, அலுவலக மொழி, கல்வி மொழி, வழக்குமன்ற மொழி, கோவில்கள் எங்கும் வழிபாட்டு மொழி என்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
நான் பகற்கனவு கண்டு உளறிக்கொண்டிருப்பதாக எவரும் எண்ண வேண்டாம்.
தமிழ்த்தாய்க்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சிலை வைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துவிட்டதே.. இனி என்ன வேண்டும்? அமெரிக்க வல்லரசின் சுதந்திரதேவி சிலையைப் போல தமிழ்த்தாய்க்கும் சிலை என்றால், அதன் அருமை பெருமைகளை சொல்லவும் வேண்டுமோ? சுதந்திரதேவியின் சிலை இருக்கும் அமெரிக்காவில் தனி மனித சுதந்திரம் இருக்கிறதா என்றெல்லாம் நாம் அதிகமாக யோசிக்க கூடாது. ஆனால் சுதந்திர தேவியின் சிலையைத் தன்வசம் மட்டுமே வைத்திருக்கும் காரணத்தாலோ என்னவவோ சுதந்திரத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து விட்ட நினைப்பில் அமெரிக்கா அடுத்த நாட்டவர் சுதந்திரத்தை எப்போதும் அனுமதிப்பதில்லை.
.
இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத செய்திகள். நம் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை வைத்தப் பின் தமிழ் மொழிக்கு மீண்டும் பொற்காலம் பிறந்துவிடும். இதைப் பற்றி எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் பிற மாநிலத்தவர் சொல்லும் எதிர்வினைகளைக் கண்டு அச்சப்படவோ மனக்குழப்பமடையவோ வேண்டவே வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
செந்தமிழ் மாநாடு நடத்துவது, தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இதெல்லாம் தமிழனின் சிறப்பம்சங்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லையே! தமிழ்ச் சமூகத்திற்கு பிடித்திருக்கும் மனநோய் என்று மலையாளத் தாயும் கன்னடத் தாயும் தெலுங்குத் தாயும் ஒரியா தாயும் வங்காளி தாயும் அசாமி தாயும் மராட்டி தாயும் காஷ்மீரி தாயும் ஏன் இந்தி தாயும் கூட நம் தமிழ்த் தாயைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள். அதைக் கண்டு தமிழர் எவரும் வருத்தப்படவோ அல்லது அவர்களுடன் வாக்குவாதம் செய்யவோ வேண்டாம் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.!
(2) யார் தமிழைக் காப்பாற்றுவது?
2013 - 14 கல்வியாண்டில் தமிழக அரசு மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் தமிழகம் எங்கும் 3200 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கற்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்தப் பின் "போச்சு, போச்சு எல்லாம் போச்சு" என்ற கூப்பாடு கொஞ்சம் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. என்னவொ திடீரென தமிழத்தில் அனைவருக்கும் தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பாசமும் பற்றுதலும் வந்துவிட்டதாக மாயக்கண்ணாடியில் ஒரு தோற்றம். என்னவோ இந்த அறிவிப்பு வந்ததால் மட்டுமே தமிழ்மொழிக்கு ஆபத்து வந்துவிட்ட மாதிரி ஒரு எண்ணத்தை அனைத்து ஊடகங்களும் தமிழ் ஆர்வலர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க அவர்களின் ஆர்வமும் தமிழ்ப் பற்றும்.!
உண்மையாகவே அவர்கள் அனைவரின் தமிழ்ப் பற்றின் மீது நமக்கு நம்பிக்கையும் அவர்களால் நிச்சயமாக தமிழைக் காப்பாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத எண்ணமும் இருப்பதால் நாம் அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த சுப்பன் வீட்டுப் பொண்ணும் குப்பன் வீட்டு மகனும் கொஞ்ச நாளைக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்றுவிட்டுப் போகட்டுமே!
தமிழ் மொழியை வாழ வைத்துக் கொண்டிருந்தது இதுவரை என்ன இந்த சுப்பனும் குப்பனுமா? இவர்கள் வாரிசு தமிழ் படிக்காவிட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? விட்டுத் தள்ளுங்கள். தமிழ் மொழியின் காவலர்கள் நீங்கள், முத்தமிழ் அறிஞர்கள் நீங்கள்... உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் உங்கள் பேரன் பேத்திகளும் தமிழ் படித்து தமிழ் வழியில் கல்வி கற்று நம் தமிழைக் காப்பாற்றட்டுமே! குப்பனும் சுப்பனும் அவர்கள் பிள்ளைகளும் காப்பாற்ற முடியும் என்றால் வாய்ப்பும் வசதியும் படைத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் மிகவும் எளிதல்லவா? எனவே இனி தமிழ்த்தாயைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் தமிழை எப்படியும் காப்பாற்றிவிடுங்கள்! தமிழ்த்தாய் உங்கள் அனைவருக்கும் சங்கத்தமிழை வரமாகக் கொடுத்து தன் தாம்பூல மகிமையை நிலை நாட்டிக் கொள்ளட்டும்!!
(3) இந்தியாவுக்கு எச்சரிக்கை
ஆங்கிலம் வழிக் கல்வி கற்கும் முறையை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இருக்கட்டும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் அழகைப் பார்த்து இங்கிலாந்து அரசு கடுங்கோபம் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இந்தியப் பேரரசை நீக்கிவிடும் அபாயம் ஏற்படலாம். எச்சரிக்கை, எச்சரிக்கை. இது நம் சார்பாக இந்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை.
இப்படி கூட இந்திய அரசை தமிழக அரசு பழி தீர்த்துக் கொண்டதாக தமிழினக் காவலர்கள் முகநூல்களில் நிறைய எழுதி தீர்க்கலாம்.
(4) கலக்டரும் கார்ப்பரேஷன் பள்ளிகளும்
ஆர். ஆனந்தக்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியாளர். தன் மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளியை நாடவில்லை. அவர் மனைவி ஶ்ரீவித்யா தன் மகளுடன் பஞ்சாயத்து யூனியன் நடத்தும் ஆரம்ப பள்ளிக்கூடத்தின் வாசலில் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களுடன் அட்மிஷனுக்காக நிற்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த ராணி அவர்கள் அவர்கள் ஏதோ பள்ளிக்கூடத்தைச் சோதனை செய்ய வந்திருப்பதாகக் கூட பயந்துவிட்டதாக செய்தி. ஆனால் கோபிகா தமிழ்வழி அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டார். அச்செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எங்கும் காட்டப்பட்டது. ஆஹா... அவருடையை செயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு புரட்சி மலர்ந்துவிட்டது என்று எங்களைப் போன்ற உலகம் தெரியாத கிறுக்குகள் எண்ணிக் கொண்டிருந்தோம். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கூட அவருடைய செயல் ஒரு தூசி துரும்பையும் அசைக்கவில்லை. (பாவம், கலக்டர் சார், இப்படியும் ஒரு ஆள் கலக்டரா வந்திருக்காரே என்று அதிகாரிகளும் எடுபிடிகளும் அவரை ஒரு அதிசயமாக பார்த்திருப்பார்களோ என்னவோ!)
தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியாளர் ஓர் உதாரணமாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் அவர் செயலும் ஒரு விதிவிலக்காக மட்டுமே இருந்தது. ஒரே ஒரு சின்ன மாற்றம் மட்டும் ஏற்பட்டது. அதுவும் அரசாங்கமோ அரசு நிர்வாகமோ பெருமைப் பட்டுக்கொள்ளும் காரியமல்ல. அதாவது கலக்டர் மகள் படிக்க வந்தப் பின் அந்த வீரப்பன்சத்திரம் பஞ்சாயத்து உடனடியாக அப்பள்ளி கூடத்தை வந்து பார்வையிட்டு தேவையான வசதிகள் அனைத்தையும் அவசரம் அவசரமாக செய்து கொடுத்தார்களாம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் எவருக்கும் அவர்கள் சொல்லிக்கொடுக்கும் திறமையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? அவர்களில் எத்தனைப் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கல்வி கற்க அனுப்புகிறார்கள்? சந்திரசேகரன் என்ற சமூக ஆர்வலர் இது குறித்த ஒரு கள ஆய்வை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருக்கிறார். அக்டோபர் 2011ல் வெளிவந்திருக்கும் அவருடைய கள ஆய்வு முன்வைக்கும் சில அதிர்ச்சி மிக்க உண்மைகள்:
ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளில் 27% அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள், மீதி 73% தனியார்ப் பள்ளிகளுக்கு தங்கள் குழுந்தைகளை அனுப்புகிறார்கள். இதுவும் உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல் உயர்நிலைப் பள்ளி என்று மேல் வகுப்புகளுக்குப் போகும் போது வெறும் 13% பிள்ளைகள் தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மீதி 87% தனியார் பள்ளிகளில் (அதாவது ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள்) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
என்ன வாத்தியார்களை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்களே என்று சிலர் கேள்வியில் இருக்கும் நியாயத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஏனேனில் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள், தமிழ் காப்போம் என்று முழங்கும் தமிழ் காவலர்கள், நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஜாம்பவான்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்சபை, கீழ் சபை எல்லா சபைகளிலும் முன்வாசல் வழியாகவும் பின்வாசல் வழியாகவும் வந்து உட்கார்ந்திருக்கும் மதிப்புக்குரியவர்கள், தமிழனத்தின் தலைவர் தான் தான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் பெருந்தலைமைப் பீடங்கள்.. இவர்களிடமெல்லாம் வாத்தியார்களிடம் எடுத்த மாதிரி ஒரு கள ஆய்வு செய்தால்.. என்ன மாதிரி முடிவுகள் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கவும்.
இதை எழுதும் போது அம்முடிவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தே ஓர் அச்சம் வருகிறது. வாசிப்பவர்களுக்கும் நிச்சயம் ரொம்பவே பயம் கலந்த ஓர் உணர்வு வந்து தொண்டைக்குழியில் அடைக்கும். எனக்குப் புரிகிறது. இந்த ஒரு புள்ளியில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து, தயவு செய்து அம்மாதிரியான கள ஆய்வு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம், அது தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் எவ்விதத்திலும் நலம் தராது என்று ஓரு கூட்டறிக்கை விடுவார்கள்.! அப்படி வெளிவரும் கூட்டறிக்கைக்கு இருக்கும் வானாளவிய அதிகாரத்தைப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியில் மதுரகீதம் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிவிடுவது பொதுஜனங்களுக்கு நல்லது.
5) கல்வித் தரமும் ஆசிரியர்களும்
கல்வித்தரத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பா? அரசின் கல்விக்கொள்கை பொறுப்பா? இல்லை இது மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டும்தானா? இக்கேள்விகள் தனித்தனியானவை அல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு 96%. இது பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மிகவும் பாராட்டுதலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் அதே அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் தரவரிசையை சோதித்துப் பார்த்தால் 35% மாணவர்கள் கூட தேர்ச்சி பெறாத நிலை இருப்பதை 2011ல் நடந்த ஓரு கள ஆய்வு பதிவு செய்திருக்கிறது. (ASER 2011)
ASER2011
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் 26000 மாணவர்களிடம் நடத்திய கல்வித்தரம் குறித்த சோதனையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32% மாணவர்கள் மட்டும்தான் மிகவும் எளிதான தமிழ் மொழிக் கதையை சரளமாக வாசித்தார்கள். மீதி 68% விழுக்காடு மாணவர்களால் வாசிக்க முடியவில்லை. நான்காம் வகுப்பு மாணவர்களில் 40.6% விழுக்காடு மாணவர்களுக்கு இரண்டு இலக்கு எண்ணில் கழித்தல் கணக்குப் போடத் தெரிந்தது. அதாவது 60% மாணவர்களுக்கு அந்தக் கணக்கு தெரியவில்லை. இது யாருடைய குற்றம்?
தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவனால் வாசிக்கவும் கணக்குப் போடவும் தெரியவில்லை என்றால் அதற்கு பொறுப்பு ஆசிரியர்களும் தமிழக அரசும் தான். இந்த உண்மை நிலவரத்தை எப்போதுமே தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவோ அதற்கு தீர்வு காண வேண்டும் என்றோ எப்போதுமே முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. (அவர்கள் யார் வீட்டுப் பிள்ளைகளும் இந்தப் பள்ளி கூடங்களில் படிக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தக் காரணம் இருக்க முடியும்?)

6) அம்ச்சி மும்பை வாழ்க
தமிழக அரசின் மொழிக்கொள்கை என்ன? வெண்டைக்காய் மாதிரி இருக்கிறது.
தமிழ்மொழி அல்லது தாய்மொழி என்று புரிந்து கொள்கிற வகையில் தமிழ்மொழி/தாய்மொழி என்று அனைத்து அரசாணைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இருமொழிக் கொள்கை தான் எங்கள் மொழிக் கொள்கை என்று திராவிடக் கட்சிகள் எப்போதும் சொல்லிக் கொள்கின்றன.
இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வரை அம்மாநிலங்களில் ஆங்கிலமே நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழியை காங்கிரசுக் காரர்களை விட திராவிடக் அரசியல் கட்சிக்காரர்கள் தான் அடிக்கடி முழங்கி கொண்டிருப்பார்கள்.
நேருவிடம் "நீங்கள் எப்படி இந்த உறுதிமொழியைக் கொடுக்கலாம்?" என்று வடமாநிலத்தில் உள்ள பல்கலை கழக துணைவேந்தர் ஒருவர் மடல் எழுதியபோது நேரு சொன்ன பதில்:
"ஒரு நாளில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வந்துவிட முடியும். ஆங்கிலமில்லாமல் அந்த இடத்தில் அவரவர் தாய்மொழி அமர்ந்துவிட்டால் எந்தக் காலத்திலும் அந்த இடத்தைக் கைப்பற்றி இந்தியை அவ்விடத்தில் பொருத்த முடியாது" என்பதுதான். (ஆதாரம்: தென்மொழி ஏப் 2013 பக் 3)
மராத்தி மாநில மொழிக்கொள்கை ரொம்பவும் வெளிப்படையானதாகவும் எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் இருக்கிறது. மராத்தி மொழித்தாய்க்கு சிலைகள் வைக்கும் பக்தி எதுவும் இல்லாதவர்கள் தான் மராத்தியர்கள். ஆனால் குஜராத்தி சிற்பான்மையினர் நடத்தும் ஆங்கில வழிக் கல்வி நிறுவனத்திற்கும் மராத்திய அரசுக்கும் நடந்த மொழிக்கொள்கை குறித்த வழக்கில் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. (பார்க்க: usha mehta vs maharashtra state govt court case)
மகாராஷ்டிர அரசு தங்கள் மொழியான மராத்தி மொழியை கட்டாயப் பாடமாக எட்டாவது வகுப்பு வரை அறிமுகப்படுத்தியது. அச்சூழலில் சிறுபான்மையினராக இருக்கும் அயல்மாநிலத்தவர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் (பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் தான்) அவர்களின் தாய்மொழி, அதன் பின் ஆங்கிலம், அவர்கள் இந்திய தேசிய மொழியாக நினைக்கும் இந்தி என்று மூன்று மொழிகளுடன் மராத்தி மொழியையும் நான்காவது மொழியாகக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் இது இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் தனி மனித உரிமை, மொழிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றும் குஜராத்தி கல்வி நிறுவனம் வழக்கை முன்வைத்தது.
"அதாவது எந்த மொழி வழிக் கல்வி கற்க வேண்டும் என்று தேர்வு செய்யும் வாய்ப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எந்த மொழி வழி தன் குழந்தை கல்வி கற்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் உரிமை குழந்தையின் பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது. (It is the choice of the parents to select the language for the child) மராத்தி மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதன் மூலம். இக்கொள்கை அர்த்தம் இழந்து விடுகிறது” என்று வாதிட்டார்கள் குஜராத்தி கல்வி நிறுவனத்தார். ஆனால், உயர்நீதி மன்றம் மிகவும் தெளிவாக மராத்திய மாநிலத்தில் வாழ்ந்து கொண்டே அந்த மாநிலத்தின் அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும் இருக்கும் மராத்தி மொழியைத் தங்கள் மாணவர்களுக்கு கற்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதைக் கண்டித்ததுடன் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சட்ட ரீதியான காரணங்களையும் உடைத்தது.
7) வரப்போகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு:
கர்நாடக அரசு கன்னட மொழி தான் தொடக்கப்பள்ளிகளில் பாடமொழியாக இருக்க வேண்டும் என்று பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன்கோகாய் ஆகியோர் மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனை கர்நாடக மாநிலத்திற்கான தனிப்பட்ட பிரச்ச்னை மட்டுமல்ல, பல்வேறு தேசிய இனங்களையும் மொழிகளையும் கொண்ட ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் பிரச்சனை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு வழிகாட்டுதலான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 5 பேர்கள் கொண்ட ஒரு குழுவை (பெஞ்ச்) அமைத்திருக்கிறார்கள். இக்குழு ஒரு மாணவன் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? தொடக்க கல்வியில் என்ன பயிற்று மொழி என்பதை அந்த மாணவனோ அவன் பெற்றோரோ தீர்மானிக்க உரிமை உண்டா? தாய்மொழியைத் தான் எடுத்துப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? அப்படி கட்டாயப்படுத்துவது அரசியல் சட்ட விதி மீறலா? தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானதா? என்று பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலிருக்கும் தீர்ப்பை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வரும் போகும். விதி முறை மீறல்கள் நமக்குப் புதிதல்ல என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதிலும் கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை ரொம்பவும் சரிதான்.


குறிப்புகள்: www.indiankanoon.org & ASER 2011
-

2 comments: