இமயத்தில் சுனாமி, இடைவிடாத மழை, பொங்கும் நதியலை, எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, பத்ரிநாத் பகவானை கங்காவே கபாளீகரம் செய்த கொடுமை, நிலச்சரிவுகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் பக்த கோடிகள், நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் - இத்தனைக்கும் நடுவில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. எந்திரன் படத்தில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட செய்து காட்டாத ரோபோ காட்சிகள். சாட்சாத் பகவான் கிருஷ்ணனே அவதாரம் எடுத்து அப்படியே தன் குஜராத் குடும்பங்களை மட்டும் காப்பாற்றிய சம்பவத்தைத் தான் சொல்கிறேன்.
21ஆம் தேதி (21-06-2013) வெள்ளிக்கிழமை மாலை உத்தரகாண்ட் மாநிலத்திலும் இமாச்சல பிரதேசத்திலும் இயற்கையின் கோரதாண்டவம். அதில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றி கேள்விப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோதி தன் அதிகாரிகள் புடைசூழ டேராடூன் வந்திருங்குகிறார். சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்குள் சற்றொப்ப 15,000 குஜாராத் யாத்தீரிகர்களைக் காப்பாற்றி பத்திரமாக தன் மாநிலத்திற்கும் அனுப்பி வைத்து விட்ட செய்தியை டைம்ஸ் முதலான செய்தி ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், டிவிட்டர், முகநூல், கூகுள் இத்தியாதி சமூக வலைத்தளங்களும் சொல்லிச் சொல்லி அப்படியே பூரித்துப் போய்விட்டன.
இந்தக் காங்கிரசுக்கார மாங்க மடையர்கள் ரொம்பவும் புத்திசாலித்தனமாக இதைப் பற்றி கருத்து சொல்வதாக நினைத்துக் கொண்டு, “வருங்கால பிரதமர் என்று பிஜேபி கொண்டாடும் ஒருவர் இம்மாதிரி தன் மாநில மக்களை மட்டும் காப்பாற்றலாமா? ஒட்டு மொத்த இந்தியர்கள் என்ற பரந்த விரிந்த அகண்ட பார்வை வேண்டாமா?” என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள். அந்த மாங்கா மடையர்களுக்குப் பதில் சொல்ல வரும் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் நாங்கள் காப்பாற்றிக் கொண்டுவந்த யாத்தீரிகர்களில் கேரளக்கார பகதர்களும் இருந்தார்களாக்கும் என்று வேறு பதில் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
இச்செய்தி வெளியான நாளிலிருந்து இந்திய இராணுவம் இன்றுவரை 40,000 யாத்தீரிகர்களைக் காப்பாற்ற முடியவில்லை, அதுவும் 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருக்க இரண்டே நாட்களில் நரேந்திர மோதியால் மட்டும் எப்படி 15000 பேரைக் காப்பாற்ற முடிந்தது? என்ற கேள்வி ரொம்பவே பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. தினமும் இந்திய இராணுவம் ஹெலிகாப்டரில் சென்று ஆபத்திலிருக்கும் மக்களைத் தேடுவதிலும் அவர்களைக் காப்பாற்றவும் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் மனிதர்களை வெளியில் கொண்டுவர செய்யும் சாகசங்களும் மனதைப் பிழிய வைக்கின்றன. இந்தப் பின்னணியில் உண்மை என்ன என்று உசாவிய போது அதிர்ச்சி தரும் பல உண்மை சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தெரிய வருகின்றன.
ரீடிஃ மெயில் டாட் காம் செய்திப் பிரிவு குஜராத் அதிகாரிகளிடம் எப்படி செயல்பட்டீர்கள் என்று கேட்டால் பதில் சொல்கிறார் ஓர் அதிகாரி “பூகம்ப இயற்கைப் பேரழிவை ஏற்கனவே அனுபவத்த குஜராத் பேரிடர் நிவாரணக்குழு திறமையானது” என்று.
காப்பாற்றியவர்கள் 15000 பேராமே, எப்படி சாத்தியப்பட்டது? என்று கேட்டால் "கப் சிப்" ஆமாம் இல்லை ... இரண்டு பதிலும் இல்லை! நூற்றுக்கணக்கான கார்கள், பேருந்துகள், லாரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் போயிங் விமானம் குஜராத்துக்கும் டெராடூனுக்கும் 5 டிரிப் அடித்ததாகவும் கதை அளக்கிறார் குஜராத் அரசு அதிகாரி.
சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலை, எங்குப்பார்த்தாலும் வெள்ளக்காடு இந்தச் சூழலில் நரேந்திர மோதிக்கும் அவர் அழைத்துச் சென்ற அதிகாரிகளுக்கும் பறக்கும் கைகள் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஆங்கிலப் படங்களில் காட்டுகிற மாதிரி ஏதாவது புதிய கார் + ஹெலிகாப்டர் + பறக்கும் பலூன் + படகு + வசதி கொண்ட புதியதோர் வாகனத்தில் குஜராத் டீம் உத்தரகாண்ட் சென்றிருக்க வேண்டும், இப்படி எதுவும் இல்லாமல் இரண்டே நாட்களில் 15000 குஜராத் பக்தர்களைக் காப்பாற்ற சாட்சாத் அந்த துவாரகைக் கண்ணன் வந்திருந்தால் கூட சாத்தியப்படாது என்பது தான் உண்மை.
டேராடூனுக்கும் கேதர்நாத்துக்கும் இடைப்பட்ட தூரம் 221 கி,மீ. ஒரு இன்னோவா காரில் 7 பேர் பயணம் செய்யலாம். சரி ஆபத்து நேரத்தில் 10 பேர் பயணம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் 15000 பேரைக் காப்பாற்ற எத்தனை கார்கள் பயன்படுத்தப்பட்டன? எத்தனை தடவை கார்கள் டிரிப் அடித்தன? மோதியின் இன்னோவா கார்கள் இரண்டே நாட்களுக்குள் செய்த அதிசயத்தை இந்திய வல்லரசின் இராணுவம் செய்ய முடியவில்லையா?
செய்தியை இக்கோணத்தில் அணுகும் போது தெரியவருகிறது, நரேந்திர மோதியின் சாம்ராஜ்யம் எத்தனை வலிமை மிக்கதாக தன் இந்திய எல்லைகள் கடந்தும் தன் கிளைகளைப் பரப்பி வளர்ந்து நச்சு மரமாக ஊடகங்கள் எங்கும் பரவிக் கிடக்கும் கொடுமை.
2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தின் நாயகன், 2000 பேரைக் கொன்று 140,000 பேரை தன் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக அலைய விட்ட மோதி இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வெவ்வேறு அவதாரங்களுடன் ஆபத் ரட்சகனாக இன்று காட்டப்பட்டிருக்கிறார்.
நரேந்திர மோதியின் அவதாரங்களை ஊதிப் பெருக்கி வெளிச்சம் போட்டுக் காட்ட ஆப்கோ (APCO) அமைப்புக்கு மாதந்தோறும் 25000 டாலர் செலவு செய்கிறது மோதி டீம். நரேந்திர மோதியின் பப்ளிக் ரிலேஷன், இமேஜ் கன்சல்டன்ட் எல்லாம் கவனித்துக் கொள்கிறது ஆப்கோ. வாஷிங்டனில் இருக்கும் இந்த தனிப்பட்ட நிறுவனத்தில் 2007 முதல் முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவர் மோதி. இந்நிறுவனத்தில் முயற்சியால் தான் 2011க்குள் குஜராத்தில் வெளிநாட்டாரின் முதலீட்டுத் தொகை 20.83 இலட்சம் கோடியாக உயர்ந்தது என்கிறார்கள்.
ஆப்கோ தவிர மோதியின் சாம்ராஜ்ய காவலர்களாக பல்வேறு அமைப்புகள், குழுக்கள் பரந்து விரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
* தேஷ் குஜராத் : மோதியின் பொதுஜன உறவுகளையும் செயல்பாடுகளையும் பரப்பும் இணையதளம்.
* சன்ஸ்கர்தம் : மோதி குஜராத் முதல்வராகும் முன்பே அவர் ஆரம்பித்த அமைப்பு. நரேந்திர மோதியின் பாடசாலை என்றே இதை அழைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் வந்தவர்களும் அக்குடும்பத்தின் பட்டதாரிகளும் இரவு பகல் பார்க்காமல் மூன்று ஷிப்டில் இதில் வேலைப் பார்க்கிறார்கள். அவர்களின் ஒரே வேலை சமூக வலைத்தளங்களைக் கவனிப்பதும் தொடர்ந்து நரேந்திர மோதி நமஹ என்ற மோதி ஜயத்தை குறைந்தது 1008 தடவையாவது பதிவு செய்வதும் தான். ஏனெனில் அதில் வேலை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தது 1000 மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
டிவிட்டரில் மோதியின் பக்கம் மிக அதிகமாக பார்க்கப்படுவது என்பதெல்லாம் இந்த மோதி பஜன் காரணத்தால் தான். அதுமட்டுமல்ல, அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் அதிகமாக டாக்டர்களும் பிஸினஸ் கார்ப்பரேட்டுகளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அதிகமாக இருப்பதாகக் காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்கள். டிவிட்டர், முகநூல், கூகுள் என்று சமூக வலைத்தளங்கள் எங்கும் நரேந்திர மோதி சாம்ராஜ்யக் காவலர்கள் பல்வேறு முகமூடிகளில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
* நேஷனல் இந்தியன் அமெரிக்கன் பாலிசி நிறுவனம் : சிகாகோவில் செயல்படும் இந்த அமைப்பு தான் அண்மையில் மூன்று அமெரிக்க காங்கிரசு உறுப்பினர்களுக்கு இந்தியா வந்து போகவும் நட்சத்திர விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்து உல்லாச சுற்றுலா வரவும் ஏற்பாடு செய்த அமைப்பு. அவர்கள் வந்து போன செலவு எல்லாம் கவனித்துக் கொண்டது மோதி டீம்/குஜராத் அரசு. ஆனால் அமெரிக்கா மோதிக்கு விசா கொடுக்க மறுத்திருக்கும் சூழலில் உல்லாசப்பயணிகளாக வந்த அந்த மூன்று உறுப்பினர்களின் வருகைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஊடகங்களுக்கெல்லாம் செய்தி அனுப்பப்பட்டு அவர்களுக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தும் கொண்டாட்டமும்.
*வெளிநாட்டு வாழ் பிஜேபி நண்பர்கள் குழு: இந்துத்துவ நண்பர்கள் வட்டம் மோதியின் அசைக்க முடியாத தூண்களாக இருக்கிறார்கள்.
நமோ குஜராத்: குஜராத்திலிருந்து ஒளிபரப்பாகும் செய்தித் தொலைக்காட்சி. காலையிலிருந்து இரவு தூங்கும் வரை நரேந்திர மோதியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இவர்கள் புண்ணியத்தில்.
*க்ரே வெர்ல்ட்வைட் : விப்ரன்ட் குஜராத் என்ற விளம்பரத்தைக் கொண்டுவந்த விளம்பரக் கம்பேனி.
*இந்து அமெரிக்கன் பவுண்டேஷன் : அமெரிக்காவில் வாழும் குஜராத்திகள் ஒன்று சேர்ந்து மோதியைக் கவனித்துக் கொள்ளும் அமைப்பு.
இவை தவிர ஐரோப்பிய இந்திய சேம்பர் ஆஃப் கமர்ஸ், மற்றும் இந்தியன் அமெரிக்கன் விடுதலை அணி என்று பல்வேறு அமைப்புகளும் நரேந்திர மோதிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
(ஆதாரம்: தெகல்கா இதழ் எண் 13, ஏப் 2013. & Rediffmail news)
-
No comments:
Post a Comment