யாரையும் கோபத்தில்
எருமை எருமை என்று
திட்டாதீர்கள்.
எருமை என்ற சொல்லை
உங்கள் வசவுச்சொற்களின்
பட்டியலிருந்து
நீங்கள் எடுத்தே ஆகவேண்டும்.
வேண்டுமானால்
பசு பசு பசு
என்று புதிதாகத் திட்ட
பழகிக்கொள்ளுங்கள்
பாதகமில்லை.
குளம் குட்டையில்
ஒரு ஞானியைப் போல
தியானத்தில் இருக்கும்
எங்கள் எருமை.
எவ்வளவு அடித்தாலும்
அமைதியாக நடக்கும்
பொறுமை
எங்கள் எருமை.
புணர்ச்சியும் பிறப்பும்
படுக்கையறைகளைத் தாண்டி
சோதனைக்குழாய்களுக்கு
மாறிவிட்டது.
இறப்பு மட்டுமே என்றும் மாறாதது.
எருமையும் தான்.
அதனால்தான்
எமனுக்கு வாகனமாய்
அசைந்து வருகிறது.
பசுவின் மூத்திரத்தில் கூட
பக்தியைக் கண்ட
உங்கள் தொண்டர்கள்
எருமையை மட்டும்
விலக்கியே வைத்தார்கள்.
கறுப்பாய் இருந்தாலும்
எருமைப்பால்
வெள்ளையாகவே இருப்பதை
இருட்டடித்தார்கள்.
.
எருமையைக் கொண்டாடுவோம்
நாம்.
ஈரோட்டுக் கிழவனின்
கறுப்புச் சட்டையை
எப்போதும் கழட்டாமல்
அணிந்திருக்கும்
எருமையைக் கொண்டாடுவோம்.
முடிவிலும் நன்றாகச் சொன்னீர்கள்...!
ReplyDeleteஎன்ன ஒரு சிந்தனை யாரும் நினைத்திராத சிந்தனை பாராட்டுக்கள் தோழி ........இனி எருமையையும் கொண்டாடுகிறோம் உங்களோடு இணைந்து
ReplyDeleteபசுவை விடவும் திக் காகப் பால் தரும் எருமை தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதன் காரணம் “தீண்டாமை”தான்! அது கருப்பா இருக்கே! வெள்ளைத் தோல் போர்த்திய நாயைக்கூடக் கொஞ்சும் மனிதர் எருமையை ஒதுக்கிவிட வேறுகாரணம் இல்லை! தமிழ்நாட்டின் தேசிய மரமாக இருந்த (?) பனைமரம் குறைந்துவருவதற்கும் வேறு காரணமில்லை.
ReplyDeleteபன்னாட்டு மூலதனப் புழக்கத்தின் பக்க விளைவுகள் இவைஎன்றே நினைக்கிறேன். உங்கள் கவிதை இதுபோலப் பற்பல சிந்தனைகளைக் கிளறி விடுகிறது... நிச்சயமாக இதுஒரு மாற்றுச்சிந்தனைதான். வாழ்த்துகள் கவிஞரே!