Tuesday, May 21, 2013

காலச்சுவடு கட்டுரையும் என் எதிர்வினையும்

பெரியார் ஒரு பார்வை என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளருக்கு என் வணக்கமும் பாராட்டுதல்களும்.
ஜனவரி 2012இல்* வாசித்தக் கட்டுரையை 2013 மார்ச் காலச்சுவடு இதழ் காலங்கடந்து அச்சில் கொண்டுவந்து இருப்பது ஏன்? என்ற கேள்விகளைத் தாண்டி கட்டுரைக்குள் வரவேண்டி இருந்தது. கிருஷ்ணன் அவர்கள் பெரியார் குறித்த தன் கருத்தை வைப்பதற்கு அவருக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான ஒரு கட்டுரையை எந்த ஒரு தலைவரைப் பற்றியும் எவரும் எழுதிவிட முடியும். காந்தியைக் குறித்து நேருவும் தாகூரும் வைத்திருக்கும் விமர்சனங்களை நாமறிவோம்.
இக்கட்டுரைக்கு கனம் சேர்த்திருப்பது எழுதிய கருத்துகள் என்பதை விட எழுதியவர் யார்? என்கிற உண்மைதான். எழுதியவர் யார் என்று பார்க்காதே, எழுத்துகளை மட்டும் பார்த்து விமர்சனம் செய் என்று சொல்வது ரொம்பவே புத்திசாலித்தனமாக தோற்றம் அளிக்கும். ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்ந்த வளர்ந்த சமூகச் சூழல் அவர்தம் கருத்துகளில் எதிரொலிக்கும். கிருஷ்ணன் தன்னைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து கொண்டுதான் பெரியாரைப் பற்றி எழுத வேண்டி இருப்பதன் காரணம் கூட இதுதான்.
பெரியாருக்கு ‘இது தெரியாது, அது தெரியாது’ என்று அட்டவணை இடுவது எவருக்கும் எளிது. ஆனால் அவரைப் பொறுத்தவரை எப்போதும் எந்த ஒரு கருத்தையும் நறுக்குத் தெறித்தாற் போல சொல்ல வேண்டியே இருந்தது. அப்படித்தான் அவருடைய கம்பராமாயணம் குறித்த கருத்துகளும். கம்பன் எழுதிய காவியத்தில் கதைத்தலைவன் ஒரு அரசனாக மட்டுமே இருக்கிறவரை அது பெரியாருக்குப் பொருட்டல்ல, ஆனால் அவனோ சாட்சாத் திருமால், விஷ்ணுவின் அவதாரமாக மாற்றம் பெற்றதால்தான் பிரச்சனையே! கம்பனின் தமிழை மட்டும் எடுத்துக்கொள், அவனது ராமனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னால் அன்றைக்கிருந்த பெரியார் தொண்டர் எவருக்கும் அது புரிந்திருக்காது. கம்பனின் தமிழ்ப்பற்றும் தமிழ்மொழி ஆளுமையும் இப்படி கருத்தியல் ரீதியாக தமிழனுக்கே எதிராக இருப்பதை முன்வைத்து ‘கம்பனே வேண்டாமய்யா’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்பட்டது. காந்தியைப் பற்றி எழுத வரும்போது கிருஷ்ணன் அவர்கள் “ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அவர் (பெரியார்) ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார். அக்காலக்கட்டத்தில் தான் எழுத்துக்கூட்டி வாசிக்க வந்திருக்கும் தன் தொண்டர்களுக்குத் தன் கருத்துகளை “உண்டு அல்லது இல்லை” என்று மட்டுமே சொல்லிப்புரிய வைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் பெரியாருக்கும் இருந்தது என்பதை வசதியாக எல்லோருமே மறந்துவிடுகிறோம்.
இந்தியா எனது நாடு என்கிறீர்கள். எனக்கும்தான். மும்பையில் க்ளாஸ் 4 தேர்வுக்கு உட்காரும் தகுதிகூட தமிழனுக்கு மறுக்கப்படுகிறது, தமிழ்நாடு வந்தாலோ தருமபுரியும் பரமக்குடியும் எங்களைப் பயமுறுத்துகிறது. எங்களுக்கு என்று நாடில்லை, மொழியும் இல்லை என்ற நிலையில் பெரியாரை விட்டால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒதுங்கவும் நாதியில்லை! நான் சந்தித்த வடகிழக்கு மாநில இலக்கியவாதிகள் எவரும் இந்தியா தங்கள் நாடு என்பதை இன்றுவரை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த யதார்த்த நிலையைப் பேசவோ எழுதவோ முன்வந்தால் பிரிவினைப் பேசுகிறார்கள் என்று எளிதாக குற்றச்சாட்டு வைத்து பிரச்சனைகள் இருப்பதைத் தொடர்ந்து நாம் புறக்கணித்து வருகிறோம். காந்தி கொல்லப்பட்டபோது பெரியார் இந்தியாவிற்குக் காந்திதேசம் என்று பெயர் வைக்கச்சொன்னார் என்பதையும் தோழர் மதிமாறன் பேசியதையும் குறிப்பிட்டிருக்கின்றார் கட்டுரையாளர். The Murder of the Mahatma என்ற புத்தகத்தை 1963ல் எழுதிய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதிய புத்தகம் பெரியாரின் கருத்துக்குப் பல்வேறு கோணத்தில் ஒத்திருப்பது நினைவு கூர வேண்டிய செய்தியாகும். கோட்சே தன் வாக்குமூலத்தில் “இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கியால் நான் சுட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிராகக் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை கலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றுதான் சொல்லியிருந்தார். கோஸ்லா அவர்கள் கோட்சே பற்றி His main theme however, was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures’ என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்துகள்தான் மதிமாறன் சொல்வதுபோல பெரியார் காந்தியைப் போற்றும் ஒரே புள்ளி. இந்தப் புள்ளியை உருவாக்கியது அன்றைய இந்துத்துவா சக்திதானே தவிர பெரியார் மட்டும் காரணமல்ல. இந்த இடத்திலும் பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நாம் மீண்டும் வாசிக்க வேண்டும். காந்தியைக் கொன்றதற்கு காரணம் இந்துத்துவ வெறி என்ற காரணத்தை மட்டும்தான் கையில் எடுத்துக்கொண்டாரே தவிர கொலை செய்தவனின் சாதி - இன அடையாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கவில்லை. பெரியாரைப் பார்ப்பன இனத் துவேஷியாக பார்ப்பவர்கள் பெரியார் தன் இனத் துவேஷத்திற்கு வலுவான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் இன்றைய தலைவர்களைப் போல கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து இயக்கம் நடத்தவில்லை என்பதையும் சேர்த்தே எண்ணிப் பார்க்க வேண்டும். “காந்தி, ராமசாமி ஆகிவிட்டதால் அவரை ஒழித்துவிட்டார்கள்” என்று பெரியார் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளில் மிக அதிகமான பலன்களைப் பெற்றவர்கள் அன்று கல்வி நிலையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த பிராமணர் வீட்டுப் பெண்கள் தான். பெரியார் தன் கூட்டங்களில் பேசும் போது பலர் சொன்ன தகவல்கள், அவரே வாசித்து அறிந்தவை என்ற அடிப்படையில் பேசியும் எழுதியும் வந்தார். கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்கும் முறை எல்லாம் பெரியாரிடம் இல்லை என்பதாலேயே அவர் எங்கிருந்து சில கருத்துகளைப் பெற்றார் என்ற குறிப்புகளைப் பெறுவது எளிதாக இல்லை. சீக்கிய சமூகத்தில் இருக்கும் சாதியம் பற்றி எழுதும் போது கூட அக்கருத்தை வாய்மொழியாக தன்னிடம் சொன்ன குறிப்பை பதிவு செய்திருக்கிறார். கட்டுரையாளர் எழுதியிருக்கும் யூத சமூகம் குறித்த பெரியாரின் கருத்துகளின் ஆதாரம் என்ன என்பது விடுதலை ஏட்டில் தேடினால் கிடைக்கும்.
பெரியார் என்னளவில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவரை விமர்சிப்பதே குற்றம் என்கிற கருத்தெல்லாம் எனக்கில்லை. கிருஷ்ணன் அவர் பார்வையை வைத்திருப்பது போல அந்த வரிசையில் நானும் நான் புரிந்து கொண்டிருக்கும் பெரியாரும்.
புதியமாதவி
மும்பை


நன்றி : காலச்சுவடு 

http://www.kalachuvadu.com/issue-161/page77.asp

No comments:

Post a Comment