Saturday, February 16, 2013

அப்சல் குரு - தூக்குமேடையில் உயிர்த்தெழும் கேள்விகள்




அப்சல் குருவைத் தூக்கிலிட்டதன் மூலம் இந்திய அரசு ஒரு வழக்கை முடித்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் இந்த வழக்கின் முடிவில் இன்னும் முடிவு பெறாத கேள்விகள் அவை அப்படியே தான் இருக்கின்றன. தூக்குமேடையில் அந்தக் கேள்விகள் மீண்டும் உயிர்த்தெழுந்திருப்பதை இந்தியவின் கூட்டு மனசாட்சி என்ற கல்லறைக்குள் அடைத்துவிட முடியாது.
கேள்வி எண்: 1
அப்சல் குரு பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகி இந்திய பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தவர் என்பதை அவருடைய ஒப்புதல் வாக்குமூலமும் பாதுகாப்பு படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றன. அப்சல் குரு தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை நம்பி எப்படி பாராளுமன்றத்தை தாக்கும் தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டார்கள்? எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதைக் கண்காணிக்க எப்படி தவறிவிட்டார்கள்?
கேள்வி எண் : 2
டிசம்பர் 19, 2001ல், பாராளுமன்றத் தாக்குதலுக்கு ஆறுநாட்கள் கழித்து காவல் துறை ஆணையர் எஸ்.எம்.ஷங்காரி பாராளுமன்றத்தை தாக்கிய முகமது யசின் என்பவரை அடையாளம் காட்டினார். அதாவது நவம்பர் 2000ல் மும்பையில் கைது செய்யப்பட்ட முகமது யசின் ஜம்மு காஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஷங்காரி சொல்வது சரி என்றால், ஜம்மு காஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முகமது யசின் எப்படி இந்தத் தாக்குதலில் இடம் பெற்றார்?
கேள்வி எண்: 3
பாராளுமன்றத் தாக்குதல் நேரடியாக CCTV காமிராவில் பதிவு செய்யப்பட்டிருந்ததை அனைத்துக் கட்சியினரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசு கட்சியின் பிரியரஞ்சன் துஷ்முன்ஷி பாராளுமன்றத்தைத் தாக்கியது ஆறு பேர் என்றும், அவர்கள் காரில் வந்து இறங்கியதை தான் கண்டதாகவும் சொல்கிறார். ஆனால் இந்திய பாதுகாப்புப் படை 5 பேரை மட்டுமே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எங்கே அந்த ஆறாவது நபர்? காமிராவும் ஆறு பேர் என்றுதான் பதிவு செய்திருக்கிறது. அப்படி இருக்க ஏன் காவல் துறையினர் பாராளுமன்றத்தைத் தாக்கியது 5 பேர் தான் என்று சொன்னார்கள்? தாக்குதலை நேரடியாக பதிவு செய்திருக்கும் CCTV/ காமிரா  நீதிமன்றத்தில் ஏன் சாட்சியமாக்கப்படவில்லை?
கேள்வி எண் : 4
பாராளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அந்த ஐவரைப் பற்றி எந்த விவரமும் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லையே! ஏன்? யார் அவர்கள்?
கேள்வி எண் 5:
பாராளுமன்றம் தாக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இத்தாக்குதல் குறித்து காவல்துறையும் அரசாங்கமும் அறிந்திருந்தன. அத்துடன் டிசம்பர் 12, 2001ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு இது குறித்த எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த நாள் தாக்குதல் 13, டிசம்பரில் தாக்குதல் குறித்த இத்துணை விவரங்கள் அறிந்திருந்தும் பயங்கர வெடிமருந்துகள் ஆயுதங்களுடன் கூடிய கார் எப்படி பாதுகாப்பு படையின் கண்காணிப்புகளைத் தாண்டி பாராளுமன்றத்தில் நுழைந்தது?
கேள்வி எண் : 6
அப்சல் குருவை சித்திரவதை செய்ததை அப்சல் குரு மட்டுமல்ல, செய்த அதிகாரி சிறப்பு பாதுகாப்பு படை டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் ஒத்துக் கொண்டிருக்கிறார். அந்த தேவிந்தர் சிங் தான் டில்லியின் ஒரு சின்ன வேலை இருக்கிறது என்றும் அந்த சின்ன வேலையைச் செய்ய வேண்டியும் அப்சல் குருவை பணித்திருக்கிறார் ( அதாவது ஆணையிட்டு மிரட்டி இருக்கிறார்) அது என்ன சின்ன வேலை?
கேள்வி எண் : 7
அது என்ன CRACKDOWN - CORDON AND SEARCH OPERATION? காஷ்மீரில் இந்திய அரசு கட்டவழித்து விட்டிருக்கும் இந்த தீவிரவாதத்திற்கு என்ன பெயர்?

(crackdown என்பது பயங்கரவாத அமைப்புகளிலிருந்து தப்பிவந்த/ பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் இந்திய பாதுகாப்பு படையின் கைக்கூலிகளாக்கப்படுகிறார்கள். காஷ்மீரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பொதுமக்கள் ஒரிடத்தில் கூட வேண்டும் என்ற அழைப்பு வந்தவுடன் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அப்போது பாதுகாப்புப் படையின் கைக்கூலி அதாவது அவர்கள் மொழியில் சொல்வதானால்\ இன்ஃபார்மர் யாரை எல்லாம் கை நீட்டி அடையாளம் காட்டுகிறானோ அவர்கள் எல்லாம் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்த நிலையில் தெருவில் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது குண்டு பாய்ந்த உடல் சாக்குக் கோணியில் அழுகிக் கிடக்கும். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு மாதத்தில் குறைந்தது 12 கொலைகளாவது நடக்கின்றன, தீவிரவாதத்துடன் எவ்விதமான தொடர்புமில்லாத பொதுமக்கள் மீது)
கேள்வி எண்: 8
நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை இந்தியாவின் கூட்டுமன்சாட்சியைத் திருப்திபடுத்தும் நோக்கில் முடிவு செய்கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது தான்!! ஆனால் எது இந்தியா? இந்திய கூட்டு மனசாட்சியின் நிறம் என்ன? எப்போதெல்லாம் அது விழித்துக் கொள்கிறது? இந்திய கூட்டு மனசாட்சியின் கூண்டில் எப்போதும் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் யார்? ஏன்?
-

3 comments:


  1. யுவர் ஆனர்...
    சோனியாஜியோ பாவம் அரசுப் பதவி யில் இல்லாதவர்...
    மன்மோகன்சிங்ஜியோ பாவம் அதிகாரம் ஏதும் இல்லாதவர்...
    ராகுல்ஜியோ பாவம்... இப்பத்தான் ஏழைவீட்டில் கூழ் குடித்துப் பழகிக்கொண்டு இருக்கிறார்...
    (உயிரைக் குடிக்க இன்னும் நாளாகும்)

    இப்படியிருக்க
    இந்தக் கேள்விகளுக்கு உரிய விடைகள் எந்த உரைநூலில் கிடைக்கும் எனும் விவரத்தை வழக்கறிஞர் புதிய மாதவி அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

    ராஜிவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் பற்றி பத்துக் கேள்விகள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் தினம் ஒன்றாகப் போட்டுக் கிழிகிழியென்று கிழித்தார்கள்....

    அந்தக் கேள்விகளைத் தயாரித்ததும் புதிய மாதவிதானா? என்பதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் யுவர் ஆனர்...

    ஒரே ஒரு பி.கு.-
    ”கட்டவழித்து” - என்பதை,
    “கடடவிழ்த்து” என்று திருத்திப் படிக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. கட்டவழித்து -
    கேள்வி எண்-7இல் உள்ளது

    ReplyDelete
  3. கட்டவிழ்த்து ....
    கட் கட் கட்
    எடிட்டிங்...
    நன்றி சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete