சீதை அசோகவனத்தில் பல இரவுகள் கண்விழித்து ஒருநாள் தானும் அறியாமல் தூங்கிவிட்டாள்"
ராஜாஜி தன் சிறுகதையான பச்சதாபம் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார். கம்பனின் சுந்தரகாண்டத்தை
யதார்த்த பாணியில் சிறுகதையாக்க முயற்சி செய்திருப்பார். இதிகாச பாத்திரங்களை அவர்களுக்கான
அவதார அடையாளங்களை விலக்கி அல்லது மறுபார்வையில் விமர்சித்து சாதாரண பொதுஜனப் பார்வையில்
பார்க்கும் கதை முயற்சிகள் புராண இதிகாச காலத்தில் இருந்தே தொடந்து வந்து கொண்ட்டிருக்கின்றன.
நாட்டுப்புறக்கதைகளில் உலாவும் பாண்டவர்கள், கண்ணபிரான், த்ரெளபதை, சீதாப்பிராட்டி, ஸ்ரீராமக்கதைகள்
செவ்விலக்கியங்களில் படைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களுடன் முரண்படும் இடஙகள் நிறைய உண்டு,.
இராமாயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகளில் இன்னும் பலநூறு ஆண்டுகள் மறுவாசிப்பிலும்
முரண்களிலும் மாறி மாறி முகம் காட்டி பன்முகத்தன்மையுடம் பயணித்துக் கொண்டே இருக்கும்.
1930, 40களில் சிறுகதை ஆசிரியர்களுக்கு இதிகாச பாத்திரங்களை சம்ப்வங்களை நவீன மதிப்பீடுகளின்
பார்வையில் திரும்பப்படைப்பது என்பது ஒரு பாணியாகவே இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்
எழுத்தாளர் ராஜ் கெளதமன். (புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ். பக் : 25)
மணிக்கொடி கால எழுத்தாளர்களுக்கு அகல்யை கதைப்பாத்திரம் மிகுந்த கற்பனா சக்தியைத் தூண்டியதாக
இருக்கிறது. ராஜாஜியின் அகலிகை கதை, சிட்டியின் மாசறு கற்பினாள், ச து சு யோகியாரின்
அகலிகை காவியம், கு.ப.ராவின் அகலிகை நாடகம், புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சாபவிமோசனம்
என்று இந்த வரிசைப் பட்டியல் நீளும். இந்த வரிசையில் பாவண்ணன் படைப்புகளை அணுகியது ஏதோ
எதேச்சையான செயலாக இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். திண்ணை இணைய இதழில்
தொடர்ந்து பாவண்ணனின் பக்கங்களை வாசித்திருந்தாலும் அதிலெல்லாம் ஏற்படாத பிரமிப்பு
அவர் செய்திருக்கும் கன்னட நாவலின் ஒரு மொழியாக்கத்தில் ஏற்பட்டது என்பது தான் என்னளவில்
உண்மை.
கன்னட நாவலாசிரியர் பைரப்பாவின் பருவம் நாவல் திரெளப்தையின் பார்வையில்
சொல்லப்பட்டிருக்கும் மகாபாரதக் கதையும் அதனுடன் பின்னிபிணைந்துள்ள இந்திய மண்ணின்
இனவரலாறும். எந்த ஒரு மொழியாக்கத்தையும் இட்லியை அளவாக ஊற்றி அவித்தெடுக்கிற வேலையல்ல.
அந்த மூலக்கதை அதன் கருத்து வீச்சு நடை பாத்திரங்கள் முரண் இப்படியாக அனைத்திலும் தன்னை
முழுவதுமாக கரைத்துக் கொள்ளும்போது தான் பருவம் மாதிரியான பிரமிப்பூட்டும் படைப்புகளை
வசப்படுத்தி மொழியாக்கத்தில் வெற்றி பெற முடியும்.. இந்தப் பிரமிப்புதான்
இதே நேர்க்கோட்டில் பாவண்ணன் படைப்புகளையும் பார்க்கத் தூண்டிய காரணமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.
பத்துத் தலை ராவணனும் ஆறுதலை சுப்ரமண்யனும் உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக
இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக் கூடியது. அதுதான் கலையின் இலட்சியம்
என்று சொல்லுவார் புதுமைப்பித்தன்.
"நீச்சல் தெரியலேன்னு எனக்கு வருத்தமா இருக்குடா சங்கர்"
-எதுக்கு
"நீந்திக்கினே போயி சூரியனைத் தொடரத நெனச்சாலே எவ்ளொ சந்தொஷமா இருக்குது தெரியுமா"
-சைன்ஸ் படிச்சிட்டு இப்படிப் பேசலாமா
"சைன்ஸ் கெடக்கட்டும்டா. குப்ப. கற்பனையே இல்லாம ஆக்கிடுச்சி. க்டல் அகலம், சுரியன் உழற
மாதிரி தெரியற நாடகம் , உலகம் சுத்தறது எல்லாம் தெரியும்டா.தெரிஞ்சிக்கிணெ மறக்கச் சொல்றேன்.மறந்துட்டு
நெனச்சிப் பாரு. ஆஹா ஒடம்பே சிலித்துப் போவுதுடா "
சிலுவை சிறுகதையில் சிலுவை சொல்லும் அறிவியலும் புனைவியலுக்குமான வியாக்கியானம் இது.
புராணக் கதைகளை மறுவாசிப்பு செய்யும் பொது கதாசிரியன் முரண்களின் ஊடாகவே பயணிப்பதைக்
காணலாம். ஒரு பக்கம் புராண இதிகாசம் கட்டி எழுப்பியிருக்கும் பாத்திரங்களும் அதில் படிந்திருக்கும்
சமூக மதிப்பீடுகளும். அதையே இன்றைய எழுத்தாளன் சமூக மதிப்பீடுகளின் ஊடாக கண்டு
புதிய புதிய காரணங்களைக் கற்பித்தும் பெரும்பாலும் பழைய மதிப்பீடுகளை உடைத்து எறிந்தும்
வெளிவருகிறான். புனைவுகளின் வழியாக சமூக மதிப்பீடுகளின் இன்றைய யதார்த்த நிலையைக்
காட்டுவதுதன் மூலம் கலை > அறிவியல் என்ற முரண்களே படைப்புகளின் தளமாக
அமைவதைக் காணலாம்.
"இன்னும் ஒரு கணம்" கதையில் காமத்தை உடலியல் உளவியல் என்ற அறிவியல் பார்வையில்
அணுகி துரியோதனன் இழந்தப் போன அந்த ஒரு கணத்தைப் பற்றி எழுதியிருப்பார்.
காமத்தைப் பெருகிவரும் உடலிச்சையை அவன் அறிவு கட்டுப்படுத்தி இருந்தால் அந்த ஒரு கணம்
மகாபாரதக்கதையை மாற்றிப் போட்டிருக்கும். திரெளபதை ஐவருக்குப் பத்தினியாகாமல்
நூறுபேருக்கும் பத்தினியாகி இருப்பாளோ என்னவோ. அந்த ஒரு கணம், அந்த ஒரு துளி
கை நழுவிப் போனதால் என்னவெல்லாம் நடக்கிறது. அந்த ஒரு கணம் எப்படி இருந்தது..
என்பதுதான் கதை. துரியோதனனுக்கு வில்லைத் தொடும்போது "ஏதோ ஓர் உடலின்
சதைப் பாகத்தைத் தீண்டியதைப் போலச் சிலிர்த்தது. அதெ நேரத்தில் சுனைநீரைத் தீண்டியதைப்
போலக் குளீர்ச்சியாகவும் இருந்தது.. வெடித்து விடுவதைப் போல இதயம் படபடத்தது" என்று
விவரிப்பார் பாவண்ணன்.
துரியோதணன் கிட்டத்தட்ட வில்லை வளைத்து நாணை தொடும் நேரம் அது என்பதை
"அடிவயிற்றைச் சுருக்கி மூச்சை அடக்கி உடலின் முழுச் சக்தியையும் விரல்களுக்கு
கொண்டுவந்தான். எண்ணங்களுக்கேற்ப விரல்கள் இயங்கின. நாணின் முனை வில்லின்
முனையைத் தொட்டுவிட்டது.. இழுத்துக் கட்டி முடிச்சிட இன்னும் சற்றே வில்லை வளைக்க
வேண்டி இருந்தது" அவ்வ்ளவுதான்...
இதெல்லாம் அந்தக் காட்சியை நம் கண்முன் நிறுத்தும் வர்ணனைகள். பொதுவாக இதில் ஓரளவு
எழுத்துப் பயிற்சி பெற்ற எல்லா எழுத்தாளர்களும் வெற்றி பெறலாம். ஆனால் அந்த கணத்தில்
அவன் உணர்வை, வெற்றியை அவனிடமிருந்த பறித்த அந்த கண நேர உணர்வு பேரலையை
எழுத்தில் வடிக்கும் போது அந்த கணம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் பெரும் சவாலாகவே
இருக்கிறது. இந்தச் சாவாலை பாவண்ணனின் இக்கதை மிகவும் வெற்றிகரமாக
தன் கையகப்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு கணம் பாவண்ணனின் படைப்புலக
வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
வில்லை வளைக்க வேண்டியதுதான் பாக்கி.. அப்போது
"கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும் வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைப் போல
தோன்றின. காந்தமாக ஈர்த்தன அவள் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை. சின்னப் ப்ழத்துண்டுகளைப் போன்ற உதடுகள்.
அவற்றுக்கு மேலே பூத்திருந்த பூனைமயிரின் வரிசை. எல்லோமே
எதிரிலே காணபதைப் போல தோற்றம் தந்து மறைந்தன. கன்னத்துடன் கன்னம் இழைபடுவதைப் போல
ஓர் உணர்வு. ஒரு வேகம். விரல் நரம்புகளில் முறுக்கேறியபடி இருந்தது. இளகி இளகி நாண் இழுபட்டது.
தலைமீது ஒரு பெரிய பாரம் இறங்கி அழுத்தியதைப் போல இருந்தது. ஒரு கணம் முழுக்க அந்த உணர்வு
நீடித்தது. "
இந்த வரிகள் முழுக்க முழுக்க ஓர் ஆணின் பாலியல் இச்சையில் புணர்ச்சியில் நிகழும்
உடலியல் உணர்வுகளும் மாற்றங்களும். அடுத்து வருகிறது
"விரல்களின் இடையே எஞ்சிய நாணின் நீளத்தை மறுநுனியில் பூட்டுவதற்குள் அக்கணம் உடைந்துவிட்டது.
அடுத்தக் கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியிலே வீசியதைப் போல
தரைமீதி விழுந்தான் துரியோதனன்"
வாசகனை அந்தக் கணநேர உணர்வுக்குள் மூழ்க வைக்கும் வரிகள் இவை. (கடலோர வீடு பக் 52)
புராணக்கதைகளின் ஊடாக படைப்பாளி சில தத்துவ விசாரணைகளில் இறங்கிவிடுகிறான்.
"பிரிவு" கதையில் மகாபாரதக் கதைப் ப்டைத்த உலகமகா கவிஞன் வியாசர் தன் மகன் சுகர் வயதானக் காலத்தில்
தன்னைவிட்டுப் ப்ரிந்து செல்லக் கூடாது என்று மகனுடன் வாதிடுகிறான்.
வாக்குவாதம் என்று வந்திவிட்டாலே அதில் மனிதன் படைத்திருக்கும் தத்துவங்களை மனிதனே
மறுவாசிப்பு செய்ய நிறைய வாய்ப்புகள் அமையும். இக்கதை முழுக்க முழுக்க பின்நவீனத்துவத்தை
ஒட்டி என்ன இருக்கிறது உலகத்திலே, எல்லாம் வென்றபின் எஞ்சி நிற்கும் வெறுமை என்ற
தளத்தில் கட்டப்பட்டிருகிறது.
"மோட்சம் என்பது மிகப்பெரிய கனவு மகனே. ஒரு போதும் ஒரு உயிரும் அங்கே செல்ல முடியாது.
மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இந்தக் கனவு ஒரு வியாதிப் போல பீடித்துக் கசக்குகிறது.இந்த
உலக உறவை உதற முடியாதடா மகனே. தாய், தந்தை, மகன் உறவு , சுற்றம் இவைதான் உண்மை.
மோட்சம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உலக உறவை விஷமாக வெறுத்த யாரோ ஒரு ஆதிக் கிறுக்கன்
கண்ட கனவு மோட்சம்" என்கிறான் வியாசன். கண்ணபிரானின் பகவத்கீதைக்கு உரைவடிவம் கொடுத்த
வியாசனைக் கொண்டு மோட்சத்தைப் பற்றி இப்படி சொல்லவைப்பதன் மூலம்
மோட்சம். வீடுபேறு இத்தியாதிகளைப் பற்றிக் கவலைப்படாத கடவுளுக்கு முன் பிறந்த
ஆதிவாசிகளின் குரலாக , ஆத்த்தமிழரின் குரலாக விரிந்த விவாதத்துக்குரிய தளத்திற்கு
கதையை நகர்த்திச் செல்கிறார் பாவண்ணன்.
மகாகாவியத்தைப் படைத்த அவன் தன் படைப்பு அனுபவத்தையும் சொல்லுகிறான்.
இரண்டு மரங்கள் விழுந்தக் காட்சி பாண்டவர்களையும் கவுரவர்களையும் வியாசருக்கு நினைவூட்டுகிறது.
" என் மனம் தெம்பை இழக்கும் போதெல்லாம் மறுபடியும் மறுபடியும் மரங்கள் விழுந்த காட்சியை
மனசுக்குள் வரவழைத்து உத்வேகத்தைக் கூட்டிக் கொள்வேன்" என்கிறான்.
பாவண்ணன் தன் படைப்பனுவத்தையே வியாசரின் படைப்பனுபமாக்கி காட்டியிருக்கிறாரோ
என்று எண்ணத் தோன்றுகிறது.
"ஒரு சம்பவம் நிகழும் கணத்தில் மனத்தளவில் அதன் தாக்கம் வலிமையாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக
அது பின்னோக்கி நகர்ந்து எங்கோ ஒரு மூலையில் தேங்கி நிற்கிறது. கால நகர்வில் கசப்பும் இனிப்புமற்று
அசைபோட்டு அசைபோட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தக்க ஓர் அனுபவப்புள்ளியாக மாற்றம்
பெறுகிறது. அசைபோடப்படும் ஒரு புள்ளி ஏதொ ஒரு தருணத்தில் விசித்திரமான வகையில் வேறொரு
அர்த்தத்தைக் கொடுக்கிறது. வேரொரு புதிரை அவிழ்க்கிறது. ஒரே ஒரு கணமேனும் நம்மை வேறொன்றாக மாற்றி நிறுத்துகிறது.
அத்தகு கணங்களே ஒருவர் வாழ்வில் மகத்தானவையாக இருக்க முடியும்" என்று
சொல்வதுடன் ஒப்பு நோக்கிப் பார்க்க வைக்கும் வரிகளாக அமைந்துள்ளன.
புராணக்கதையின் பாத்திரங்களை தன் புனைவுகளுக்குள் இழுத்துவந்து பாத்திரங்களின்
செயல்பாடுகளுக்கும் கதையின் நிகழ்வுகளுக்கும் வேறொரு பரிமாணத்தைக் காட்டுவது
இன்னொரு வகை. அந்த வகையில் அமைந்துள்ளது "சாபம்" சிறுகதை.
வருசத்துக்கு ஒருமுறை சரயு நதியில் நீராடி சரயு நதிக்கு நன்றி சொல்லும் திருவிழாவில்
கலந்து கொள்ள விரும்பும் வயதான தந்தை. தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யும்
மகன் லிங்கேஷ்வரன். ஆனால் அதே சரயு நதியில் நீராட பூசை செய்ய பட்டத்து அரசி
சீதையும் வருகிறாள். அவளைப் பார்க்க நெருக்கித் தள்ளும் கூட்டத்தில் சிக்குண்டு
அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். லிங்கேஷவரனும் தன் தந்தையை இழந்துவிடுவதுதான்
கதை. இழப்புக்கு அரசு வருத்தம் சொல்கிறது.
"செத்துக்கொண்டே இருக்க ஒரு மக்கள் கூட்டம். வருத்தப் பட்டுக்கொண்டே இருக்க ஓர் அரசு.
அரசியலில் கற்றுக் கொண்டது இதுதானா லட்சுமணரே"
சீதை.. " உனக்கு மகாராணி எனக்கு கொலைகாரி"
அரண்மனை முகம் என்றாலே ஆவென்று வாயைப் பிளக்கிற கூட்டம் இது. இங்கு மகாராணி
நீராட வந்தது வீணான விளம்பரம்"
கதையின் போக்கும் நறுக்குத் தெறித்த மாதிரி லிங்கேஷ்வரன் கேட்கும் கேள்விகளும்
புராணக்காலத்து நிகழ்வு மட்டுமல்ல. சமகாலத்திய அரசியல் விளம்பர உலகத்தை நோக்கி
வீசப்பட்டிருக்கும் கூராயுதம்.
சீதை முடியிழப்பதும் அவள் வாரிசுகள் தந்தை அறியாமலேயே வளர்க்கப்படுவதும்
லிங்கேஷ்வரன் இட்ட சாபம் என்று புராண நிகழ்வுக்கு புதுக்காரணம் சொல்வதாக
கதை முடியும்.
இக்கதையை வாசித்தவுடன் ஒரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
மும்பையில் 11/7/2006ல் நடந்த தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் முடிந்தப் பின்
மறுநாளே உள்துறை அமைச்சரும் எந்த அமைச்சராகவும் இல்லாமல் ஆனால் எல்லா
அமைச்சர்களை விடவும் சர்வ அதிகாரம் படைத்த சோனியாகாந்தி அவர்களும் மும்பைக்கு
உடனே வந்தார்கள். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் போய் அடிபட்டவர்களுடன் பேசி போஸ் கொடுக்க..
அதை செய்தியாக்க அவர்கள் பின்னாலேயெ ஓடிக்கொண்டிருந்தது மும்பையின் ஊடகங்கள்.
அவர்களின் அந்த வருகையும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் சொல்லி மாளாது.
தன் உறவுகளின் இழப்ப்புக்காக அழுதுக் கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவில் ஒருவேலை
எங்காவது அடிப்பட்டு மருத்துவமனையில் பிழைத்திருப்பானொ என்று நம்பிக்கையுடனும் அங்குமிங்கும்
அலைந்த மக்களை வேறுவழியின்றி காவல்துறை விரட்டியது மிகப் பெரிய அவலம்.
மறுநாள் பத்திரிகையில் மும்பை காவல்துறை அதிகாரி " இம்மாதிரியான சம்பவங்கள்
நிகழ்ந்து உடனேயே எல்லா பெருந்தலைவர்களும் சம்பவ இடத்திற்கு வருவதன் மூலம்
நிலைமை இன்னும் மோசமாகிறது. அவர்களுக்கான பாதுகாப்ப்பு என்ற இன்னொரு
பெரும்சுமையும் காவல்துறை மீது சுமத்தப்படுகிறது என்று வருத்தப்பட்டிருந்தார்.
போர்க்களம் சிறுகதை பாற்கடலைக் கடைந்த கதைதான். கதை முழுக்க அசுரர்கள் தேவர்களால்
எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்பதுதான். க்தையில் வெளிப்படையாக எங்குமே வர்க்கப் பிரச்சனையோ
சாதிப்பிரச்சனையோ இனக்குழு பிரச்சனையோ பேசப்படவில்லை. ஆனால் இந்த தளங்கள் அனைத்திலும்
பொருந்தி வரும் பன்முகத்தன்மையுடன் இக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் பாவண்ணன்.
பாவண்ணன் கதைகள் பெரும்பாலும் இப்போக்கிலேயே படைக்கப்பட்டுள்ளன.
அசுரர் குலத்தைச் சார்ந்த ராகு தன் இனத்தைப் பார்த்து பெருமை கொள்கிறான்.
"ஓரமாய் ஒதுங்கி நின்று இறுகி நெகிழும் உடல் தசைகளையும் தோல் வலிமையையும் கட்டான
உடல் வனப்பையும் பார்த்ததும் உலகிலேயே முக்கியமான குலம் நம்முடையதெ என்று தோன்றிய
பெருமையால் விம்மியது அவன் மனம். அவர்கள் தொடாமல் உலகில் எக்காரியமும் இல்லை.
அவர்கள் வலிமைதான் உலகையே தாங்கிக் கொண்டிருக்கிறது"
உலகில் எல்லாவற்றையும் உருவாக்கும் இனம் அடிமைப்பட்டும் ஏழையாகவும் ஒடுக்கப்பட்டும்
இருக்கின்ற இனவரலாற்றை இதில் நாம் மறுவாசிப்பு செய்து கொள்ள முடியும்.
அமுதக்கலசத்தை மகாபலி மோகினியிடம் கொடுத்தது ஏன் என்று சொல்லும்போது
அசுர குலத்தின் வாழ்க்கை மதிப்பீடுகள் எவ்வளவு மேன்மையானது என்றும்
ஏமாற்றிய தேவர் குலத்தின் மதிப்பீடுகள் எவ்வளவு கீழ்த்தரமானது என்றும்
புரிய வைப்பதன் மூலம் வாழ்வியல் அறங்களும் மனித குல
மேல் > கீழ் , உய்ர்ந்தவர் > தாழ்ந்தவர்/தாழ்த்தப்பட்டவர் ப்ரிவுகளுக்கும்
உள்ள முரண்பாடுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்.
"பிடுங்கிக் கொண்டு ஓடியது நம் அவநம்பிக்கையைப் புலப்படுத்த மட்டும்தான். நாமே குடித்து நாம் மட்டுமெ
அமரர்களாக வேண்டும் என்கிற பேராசையால் அல்ல. பாவம். உழைத்தே அறியாத தேவர்கள் நம்முடன்
சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தானே
காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு? அவர்களுக்குத் தராமல் நாம் மட்டுமே அமுதம் பருகினால்
வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் போல நடப்பவர்கள் தாம் என்று இன்னொருவர் நம்மைச் சுட்டிக்
காட்டிப் பேச வழி செய்து தராதா?"
மகாபலியின் கூற்றாக இங்கே பேசப்படுவது வெறும் அசுரர்குல பெருமை மட்டுமல்ல.
காற்றில் கரைந்து வரும் குரல் கதை புராணக்கதையிலிருந்து பாவண்ணன் எடுத்துக் கொண்டிருக்கும்
பெண்ணியப்பார்வை. ஜமதக்னியின் குரல்.. தன் மகன் பரசுராமனிடம் கற்பிழந்த உன் தாயின் தலையைக்
கொண்டுவா என்று கர்ஜிக்கும் குரல்.. காலம் காலமாய் பெண்ணைக் கற்பு என்ற சிறையில் அடைத்து
ஆளும் ஆணின் அதிகாரம். எதற்காக ஜமதக்னி முனிவரின் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும்?
இங்கே தான் பாவண்ணன் நிறைய புதிர்களை அவிழ்க்கிறார். புராணக்கதை எல்லொருக்கும் தெரியும்.
கந்தர்வனின் அழகில் தன் மனைவி மயங்கியதாகவும் அதனாலே அவள் கற்பிழந்தவள் என்றும்
அவள் தலையைக் கொய்துவர ஆணையிட்ட முனிவனின் கற்பு என்ற மிகப்புனிதமான வஸ்து
எதில் பொதிந்திருக்கிறது என்ற போகிற போக்கில் வாசகனை யோசிக்க வைக்கவும் இக்கதைக் கரு
கை கொடுக்கும். தன் தாயின் தலையை வெட்டிவந்த மகன் முனிவரிடம் கேட்கும் வரம் மீண்டும் தன்
தாய்க்கு உயிர்க்கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி உயிர்க்கொடுக்கும் போது
தவறுதலாக ஒழுக்கம் குறைந்த பெண்ணின் உடலுடன் தாயின் தலையைப் பொருத்திவிட
இனி அந்த தவறை திருத்த முடியாது.. அப்படியே இருக்கட்டும் என்று முனிவர் ஏற்றுக்கொள்கிறார்
இது புராணக்கதை.. முனிவன் உரக்கப் பேசிய கற்பு ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டதைப்
பார்க்கிறொம். இத்தனை கருத்துகளையும் ஜமதக்னியின் மனைவி என்று சொல்வதன் மூலமே வாசகனுக்கு
உணர்த்திவிடுகிறார் பாவண்ணன். புராணக்கதைப் பாத்திரங்களைக் கதையாக்கும் போது கூடவே அந்தப் பாத்திரங்க;
சுமந்துவரும் கதைகளும் கதாசிரியனின் புதிய படைப்புக்குள் நுழைந்து கதைத்தளத்தை வெகு கம்பீரமாக கட்டி
எழுப்புகிறது. கோபுரங்களைச் சரிப்பதும் மணல்மேட்டுக்குள் வைரங்களை அடையாளம் காட்டுவது
படைப்பாளனுக்கு எளிதாகிறது. இந்தப் பின்னணியில் கேலியும் கிண்டலுமாக கோவிலில்
அம்மனாகிப் போன முனிவரின் மனைவியின் கதையை எடுத்துச் செல்கிறார்.
கதையில் ஓரிடத்தில் அம்மன் " உலா முடிச்சி வந்துகிட்டே இருந்தேனா, ஒரு மூலையில் நாலஞ்சி
எளவட்டப்பசங்க நின்னுட்டிருந்தாங்க. என்ன பாத்ததும் கட்ட கட்ட நாட்டுக்கட்டன்னு ராகமா பாடனாங்க.ஒடம்பே நடுங்கிடுச்சி எனக்கு.
நிமுந்து பாக்காமகூட வந்துட்டேன்" என்ற
காட்சி வருணனை ஒரு கவிதையை நினைவூட்டுகிறது.
உன்னைத் தரிசிக்க வரும்
உன் மகளை
உன் மகனே
கேலி செய்கிறான்
அழகி மீனாட்சி
உன் காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
(கவிஞர் இரா.மீனாட்சி)
ஏவாளின் இரண்டாவது முடிவு கதை அறிவியல் கணினியுகமும் ஆதிவாசிகளின் உலகமும்
என்ற இரண்டு முரண்களுக்கு நடுவில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு கற்பனைக் கதை.
கதைச் சொல்லி தான் அந்த நாட்டில் பிறந்திருக்கும் கடைசிக் குழந்தை. அவருக்குப் பின்
எந்தப் பெண்ணுக்கும் குழந்தைப் பிறக்கவில்லை. ஏன் என்பதற்கு சகுந்தலைக் கதையைப்
பின்னணி ஆக்குகிறார். துஷ்யந்தன் மகாராஜாவின் குழந்தையைப் பிரசவிக்காமல்
மாதக்கணக்கில் கருவறையில் அடைத்து வைக்கும் மந்திரச் சொல்லை சொல்லிக்கொடுத்தவள்
அவள் தோழி ஆதிவாசி பெண். அந்தச் சொல் காற்றில் கலந்து விட்டதால் கருவறைகள்
பிரசவங்களை ஒத்திப் போட்டுவிட்டதாக அதீதக் கற்பனைக்குள் கதையை எடுத்துச் செல்கிறார்.
ஆனால் ஆப்பிரிக்க ஆதிவாசிகளிடம் மரணத்தை வெற்றிக்கொள்ளும் மருந்து, மனிதர்களின்
உடலைச் செயலிழக்கச் செய்து உயிர்மட்டும் துடிக்கும் காட்சி, தன் விருப்பப்படி எதிராளியைச் செயல்பட
வைக்கும் வசிய மருந்துகள் எல்லாம் இருந்ததாக இன்றைக்கு ஏகப்பட்ட ஆங்கில நாவல்களும்
திரைப்படங்களூம் வருகின்றன.
கிணறு சிறுகதையில்
பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில்
நிறைகுட நீஎடுத்துத் திரும்பம் பெண்டிரை
என்ற கல்வெட்டு சான்றை வைத்துக் கொண்டு மாரப்பன் கதையைப் படைத்துள்ளார்.
கல்வெட்டு சான்றுகள், நாட்டுப்புறக்கதைகளின் ஊடாக பயணித்து கதைகளைப் புனையும்பொது
அடிக்குறிப்பாக சில தகவல்களைத் தருவது பின்னர் வரும் ஆய்வாளர்களுக்கும் எங்களைப் போல
தமிழகச் சூழலில் இருந்து சற்று விலகி வாழும் வாசகர்களுக்கும் துணைபுரியும்.
வாசவத்தை கதையில் உதயணன் பலமணதாரத்தையும் அதனால் ஒரு பெண்ணின்
மன உணர்வு எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல வந்து ஆனால் முழுமையாகச் சொல்லாமல்
" தன் மனசை உதயணன் என்ற ஆணால் புரிந்து கொள்ள முடியுமா ? என்ற கேள்விக்குள்
சிக்குண்டு தவிக்கிறாள் வாசவதத்தை. ஆனாலும் உதயணனை விட்டு விலகவில்லை.
அவளுக்கு மனைவி, பட்டத்து அரசி என்ற சமூக அந்தஸ்த்துகள் தேவையாக இருக்கிறது.
அதனால் புதிதாக உதயணன் காதலிகள் வரிசையில் சேர்ந்திருக்கும் ஸாங்கிருத்யாயனியை
"இருக்கும் ராணிகளோடு மற்றொருத்தியாக இருந்துவிட்டுப் போகட்டும் , விடுங்கள் அரசே" என்று
சொல்ல முடிகிறது. வாசவத்தத்தையில் காலத்திலிருந்து இன்றைய அண்ணாமலை, செல்விகள்
காலம் வரை பெண்ணின் கதையில் இந்த வசனத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல்
ஒலிப்பதை உணர்கிறொம்.
நளன் தமயந்தி சுயம்வரம் கதையைப் பேசும் "முற்றுகை"யில் பாவண்ணனின் எந்த முத்திரையும்
இல்லை.
அதுபோலவேதான் ஆண்டாள்-பெரியாழ்வார் கதையைச் சொல்லும் "புதிர்: "
அல்லியின் கதை ஆகியவற்றில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இவைத் தவிர பாவண்ணன் சிறுகதைகளில் நான் மிகவும் விரும்பி வாசித்தவை
ஆறு: காவிரி ஆறு : கர்நாடகா தமிழர்கள் என்ற சமகால பின்னணியில்
எழுதப்பட்டிருக்கும் கதை.
அடுத்து சிலுவை.. இக்கதையில் கதையின் தலைப்பு கதாப்பாத்திரமான சிலுவையின் பெயராக
மட்டுமின்றி ஓர் ஆணின் பார்வையில் வாழ்க்கையும் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும்
எதிர்பார்ப்புகளும் சிலுவையாகிப் போனதை பூடகமாக உணர்த்துகிறது.
தீ என்ற சிறுகதை மிகவும் நுண்ணிய மன உணர்வும் அதனால் ஏற்படும்
மன அழுத்தம் பின் விளைவுகள் என்று மனிதனின் உணர்வுகளை மிகவும்
சரியான அளவைகளில் கலந்திருக்கும் கதை.
"மண்ணின் சாரத்தை உறிஞ்சித் தேக்கிக் கொள்ளும் தென்னையைப் போலவே எழுத்தாளனுடைய
மனமும் வாழ்வின் சாரத்தை உள்வாங்கிக் கொள்கிறது. தான் உண்ட நீரையே தன்வயப்படுத்தி இளநீர்
எனத் தருவத்தைப் போலவே ஒரு அனுபவப் பொறியின் வழியாகத் தன்னை வந்தடைந்த வாழ்வின்
தருணங்களை வெவ்வேறு வண்ணங்களொடு மாற்றியளிக்கிறான் படைப்பாளீ" என்று
பாவண்ணன் தன் படைப்பனுவத்தை முன்வைக்கிறார்.
சிலம்பாட்டம், நண்பனின் குழந்தைகள், ரயில்கள் இல்லாத ஸ்டேஷன்,
விடுமுறைக்கு காத்திருக்கும் அரசு பணியாளன், ஊரைவிட்டு கலவரத்தில்
தாய்க்காக ஓடிப்போன ஒடுக்கப்பட்ட இளைஞன், காதலை கல்யாண வரைக்கும்
எடுத்துச் செல்ல முடியாத யதார்த்தத்தம், பணி மாற்றலில் சந்திக்கும் புதிய மனிதர்கள்,
மொழி எல்லைகளைத் தாண்டிய மனித நேசங்கள்.. .. இப்படியாக வாழ்வின் ஒவ்வொரு
கணத்தையும் தனக்குள் செரித்துக்கொண்டு தென்னந்தோப்பாக நிற்கும் பாவண்ணனுக்கு
வாழ்த்துகள்.
(மும்பையில் பாவண்ணன் படைப்புகளைக் குறித்து
முதல் நாள் 11/10/08 பம்பாய்த் தமிழச்சங்கத்திலும்
இரண்டாம் நாள் 12/10/.08 நவிமும்பை தமிழ்ச்சங்கத்திலும்
கருத்தரங்கு, பாவண்ணனுடன் கலந்துரையாடல் , பருவம் நாவலின் இறுதிக்காட்சி ஓரங்கநாடகமும்
நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வில் பாவண்ணனின் சிறுகதைகள் குறித்த என் பதிவு)
No comments:
Post a Comment