Monday, June 16, 2008

சாகித்திய அகதெமி பன்மொழி கவிதைகள் அரங்கம்




சாகித்திய அகதெமி- மும்பை 13-6-2008 மாலை 6 மணிக்கு
சாகித்திய அகதெமி அரங்கில் பன்மொழி கவிஞர்களின் கவிதைக்கூடல்
நிகழ்ச்சியை நடத்தியது. முதல் முறையாக தமிழ்க் கவிதைக்கு
மும்பை இடமளித்தது.
ஒருவழியாக பன்மொழி கவிதைகளின் அரங்கத்தை தமிழுக்கு இடமளிக்காமல்
நிறைவு செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ!

தமிழ்க் கவிதைக்காக என்னை அழைத்திருந்தார்கள்.
என் கவிதைகளில் ஹேராம், மகளே வந்துவிடு, கேட்டவரம் கவிதைகளை
இந்தியில் விளக்கமளித்து ஆங்கில மொழி பெயர்ப்பில் வாசித்தேன்.
அதன் பின் தாய்மொழிக் கவிதையாக அண்மையில் எழுதி இம்மாத யுகமாயினி
இதழில் வெளிவந்திருக்கும் தொலைந்து போனச் சாவி என்ற தலைப்பிலான
கவிதையை வாசித்தேன். சாவி என்பதைக் கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா மொழிகளிலும்
வழக்கில் பயன்படுத்துகிறார்கள். பெண்ணியம் பேசும் அக்கவிதையின் சாரத்தை
இந்தியில் விளக்கமளித்து பின் தமிழ் மொழியில் வாசித்தேன்.



தொலைந்து போனச் சாவி
-----------------------------


எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்துவிட்டேன்.
இத்தனைக் காலமும்
பாதுகாத்துவைத்திருந்த
சாவிக்கொத்தை.

எந்தப் பூட்டுக்கு
எந்தச் சாவி?
சொல்லவில்லை யாரும்
சோதிக்கவில்லை நானும்.
சாவிக்கொத்தை
இடுப்பில் சொருகிக்கொண்டு
இருப்பதே பழகிப்போனதால்
அச்சமாக இருக்கிறது
சாவிகள் இல்லாத
இடுப்பைச் சுமந்து கொண்டு
திறந்தவெளியில்
எப்போதும் போல
எழுந்து நடமாட.

யார் தந்தார்கள்
என்னிடம் இந்தச் சாவிக்கொத்தை?
எப்போதாவது
எந்தப் பூட்டையாவது
என்னிடமிருந்த
எந்தச் சாவியாவது
திறந்திருக்கிறதா?

யோசித்துப் பார்க்கிறேன்.
அம்மா,
அம்மாவின் அம்மா,
அவளுக்கு அம்மா,
அம்மம்மா..
இத்தோடு சேர்ந்து கொண்டது
புதிதாகத் திருமணமாகி
புக்ககம் வந்தப்பின்
மாமியார் கொடுத்தச் சாவிகளும்.

ஒவ்வொரு சாவிகளையும்
பத்திரமாக வளையத்தில் கோத்து
அலங்காரமான
விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்
தொங்கவிட்டு
பாதுகாத்துவந்த
எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து
காணவில்லை..
தொலைத்துவிட்டேன்.

இனி,
எதைக்கொடுப்பேன்
என் மகளுக்கும்
வரப்போகும் மருமகளுக்கும்!
எப்படியும்
அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்
தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல
சாவிகள் இல்லாமல்
பூட்டுகளை உடைக்கும்
புதிய வித்தைகளை.

-----------------------------
என்னுடன் கவிதை வாசித்த பிற இந்திய மொழிக் கவிஞர்கள்:

நிதின் மேத்தா - குஜராத்தி
கைலாஷ் சென்கர் - இந்தி
சந்திரிகா பட்கோன்கர் - கொங்கணி
அவினாஷ் கெய்க்வாட் - மராத்தி
அர்ஜூன் சாவ்லா - சிந்தி
சஃபிக் அப்பாஸ் - உருது

3 comments:

  1. Thanks. Im Inspired again.

    ReplyDelete
  2. Your blog is very creative, when people read this it widens our imaginations.

    ReplyDelete
  3. thanks a lot,madhavi.
    amongst the socalled youth oriented KADHAL KADHAIKAL kamal's attempt is to be appreciated with all its minuses as they are abundant in a lot of other things too!
    savi is a derivation of CHABI.THIRAVUKOL is the unused tamizh word(thamizheezharkal THIRAPPU yenru ippothum solkiraarkal)
    CHITHAN -YUGAMAYINI

    ReplyDelete