Friday, January 20, 2023

கருஞ்சட்டை தோழர்களும் அய்யப்ப பக்தர்களும்

 


பெரியாரே கருப்பு சட்டையுடன் வந்தாலும்

அவரும் அய்யப்பன் பக்தராகிவிடுவார்!
கருஞ்சட்டை தோழர்கள் என்னை மன்னிக்கவும்.
விமான நிலையத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய மரியாதையுடனும் புன்னகையுடனும் என்னைப் பார்ப்பதாக நினைத்தேன்.
போர்டிங்க் காத்திருப்புக்கு நுழைவதற்கு முன் பாதுகாப்பு சோதனை செய்த பெண்மணி நான் போர்த்தி இருந்த சால்வையை எடுக்கச் சொன்னார்.
அய்யப்பன் கோவில் போயிட்டு வரீங்களா
என்று கேட்டார்.
என் டுயூப் லைட் வழக்கம்போல எரியல.
ஏன் அப்படி கேட்கறீங்கனு ட்டப்போதான்
அப்பெண் என் சந்தேகத்தை தீர்த்தார்.
கருப்பு கலர் சால்வை போர்த்தி இருப்பதைதான்
அவர் அப்படியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
அது அவர் குற்றமல்ல.
அன்று விமானம் தாமதமாக வேறு கிளம்பியது.
எங்குப்பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள்.
கருப்பு சட்டைப் போட்டுக்கொண்டு
தந்தை பெரியாரே வந்தாலும்கூட
இனி,
சாமியே சரணம் அய்யப்பாதான்.
இப்படி ஒரு கற்பனையில் நானும்
கருப்பு சால்வையைப் போர்த்திக்கொண்டு.
புத்தமத அடையாளங்களை
இந்துமதம் தனக்கானதாக்கிக் கொண்டதாக
படித்திருக்கிறேன்.
இன்றும் அதெல்லாம் தொடர்கிறது.
இது தந்தை பெரியாரின் தோல்வி அல்ல.
பெரியார் அங்கீகாரம் பெற்றுள்ள அதே நேரத்தில்
அவர் தகர்க்க விரும்பிய பலவும் இன்றும் நிலவுவதை
பெரியாரியத்தில் தோல்வியாக கருத முடியாது.
அவர் பெயரை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு
அவர் கருத்துகளை புறக்கணித்துவிடும் இன்றைய
சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவரைப் பொறுப்பாக்க
முடியாது.
சமூக அரசியலில் கிராம்சி சொல்வதுதான் சரி,
“மரபு வழிபட்ட நிலைபாடுகளுக்கு எதிரான
புதிய நிலைபாடுகளை பெருமக்கள் திரள்
தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்ப முடியாது”
20.10.1945 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் கருஞ்சட்டைப்படை
குறித்த அறிவிப்பை எடுத்து வாசிக்கிறேன்.
திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாடு
11.05.1946, 12.05.1946 ஆகிய நாட்களில் மதுரையில்
நடைபெற்றபோது மாநாட்டுப் பந்தல்
வன்முறையாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திராவிடர் கழகக் கொடிகள் கொளுத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்றோர் மீது
வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன.
கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர்
நிர்வாணமாக்கப்பட்டார்.
கருப்பு ஆடை அணிந்தவருக்கு இதுவும் நடந்திருக்கிறது!
எதையும் முழுமையாக எதிர்த்து நிற்கமுடியவில்லையா
அதையே தனதாக்கி கொள்வதன்மூலம்
அதன் அடையாளத்தை துடைத்துவிடமுடியும்..
இப்போது நானும்..இதை நம்புகிறேன்.
என் வாழ்நாளில் நடந்து கொண்டிருக்கும்
இந்த சமூக அரசியலின்
நான் பார்வையாளர் மட்டும் தானா?!

1 comment:

 1. உண்மைதான்.அன்று கருப்பு ஆடை அணிந்ததால்தான் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டார்.
  இன்று கருப்பு ஆடை அணிபவர்கள் புறந்தள்ளப்படுகின்றனர். காரணம் அவர்களை ஆதரிக்க அவர்களுக்கு சாதி அடையாளம் இல்லை, அரசியல் பின்புலம் இல்லை.
  தமிழகத்தில் கொண்டாடப்படுகிறவர்கள் உண்மையில் கருப்புச் சட்டை அணியும் அய்யப்ப பக்தர்களே.
  பெரியார் மேடைகளில் பேசும் பொருளாக மட்டுமே இருப்பார். இதுவும் எவ்வளவு காலத்திற்கோ.
  அரசு வழங்கும் பெரியார் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுபவராக இருந்தால்தானே அந்த விருதுக்கு பெருமை.

  ReplyDelete