Thursday, December 2, 2021

அம்மாவின் காதலன்(ர்)

 அம்மாவின் காதலன்(ர்)

அப்பாவின் காதலி அல்லது காதலியர் குறித்து

எழுதுவதும் பேசுவதும் எளிது மட்டுமல்ல,

கொஞ்சம் கவித்துவம் கலந்து பெருமைக்குரியதாக

மாறிவிடுகிறது. அப்பாவின் காதலும் காதலியரும்

பிள்ளைகளுக்கு விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக அப்பாவின் காதலியர் காதலியராக

மட்டுமே இருப்பதால் சொத்துப்பிரச்சனை எழுவதில்லை.

இதில் அப்பாவின் “சின்னவீடுகள் “ விதிவிலக்கு.

அங்கே சொத்துப்பிரச்சனை , வாரிசுப்பிரச்சனை வந்துவிடுவதால்

அதை விட்டுவிடுங்கள்.


அப்பாவின் காதலியரை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு

அம்மாவின் காதலனை மட்டும் ஏற்க முடிவதில்லை!

அம்மா என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கு

அம்மாவின் காதலன் ஒரு வில்லன் மாதிரி தெரிகிறான்.

எனக்குத் தெரிந்து அம்மா இறந்தப்பிறகு அப்பாவுக்கு

மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள் பலர் உண்டு.

இதில் சுய நலமும் இருக்கிறது ..( வயதான காலத்தில்

கிழவனுக்கு யார் பணிவிடை செய்வது?)

அம்மாவுக்கு..?

எனக்குத் தெரிந்து ‘புதியபெண்ணியம்” இதழ் நடத்திய

தோழர் லலிதா அவர்களுக்கு அவர் பிள்ளைகள் ஒரு

வாழ்க்கை துணைவரைத் தேட முயற்சி செய்தார்கள்.

அதுவும் நடக்கவில்லை!

அப்பாவின் காதலியர் .. அப்பாவின் மறுமணம்

மகிழ்ச்சியாக மட்டுமல்ல, புரட்சியாகவும்  இருக்கிறது.

அம்மாவின் காதலர் , அம்மாவின் மறுமணம்

நெருடலாகத்தான் இருக்கிறது.

@@@

என் சிறுகதை தொகுப்பு “பெண்வழிபாடு”

அதில் “அம்மாவின் காதலன்” என்று ஒரு சிறுகதை.

முதலில் அந்தப் புத்தக தொகுப்புக்கு  நான்

“அம்மாவின் காதலன்(ர்) “ என்ற தலைப்பை தான்

தெரிவு செய்திருந்தேன். புதியமாதவியின்

“அம்மாவின் காதலன்’ என்று சொல்லிப்பார்த்தேன்.

என் புரட்சி முகம் விழித்துக்கொண்டது.

பெயரை மாற்றிவிட்டேன். “பெண்வழிபாடு” என்ற

தலைப்பில் அப்புத்தகம் வெளிவந்தது.

இப்படித்தான் அம்மாவின் காதலும்

“பெண்வழிபாடு” என்ற வெளிச்சத்தில் காணாமல்

போய்விடுகிறது.

பாவம்.. என் அம்மாக்களும்.

அவர்களின் மனம் கவர்ந்த 

அம்மாவின் காதலன் (ர்)களும்.


No comments:

Post a Comment