"I STAND WITH FARMERS .. என்று எழுதமுடியாமல்
தலை குனிந்து நிற்கிறேன்"
இப்போதும் அரிசி தான்  எனக்கும் 
என் குடும்பத்திற்கும் முக்கியமான உணவு 
RICE ஏன் முளைவிடவில்லை?
விவசாயிகளின் போராட்டம் தலை நகரில் நடந்து 
கொண்டிருக்கும் போது  நானும் சங்கீதாவும் அரிசி
ஏன் முளைவிடவில்லை என்று அல்லாடிக்கொண்டிருந்தோம்.
சங்கீதா எனக்கு வீட்டு வேலையில் உதவியாக இருக்கும்
பெண். பூர்வீகம் கேரளா. ஓரளவு மலையாளம் பேசுவார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 
மும்பை மராட்டிய இளைஞரை காதல் திருமணம் 
செய்து கொண்டவர். அன்பானவர். கடின உழைப்பாளி.
அவருக்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் மகன். 
அவனுக்கு ப்ராஜெக்ட் தானியங்களை சேகரித்து 
முளைவிட வைத்து ஒவ்வொரு தானியமும் 
எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்ட து 
என்று காட்ட வேண்டுமாம்.
சங்கீதா தினமும் என்னிடம் ரைஸ் மட்டும்
 இன்னும் வரவில்லை,, என்ன செய்யலாம்
 என்று நச்சரித்தாள். நானும் என்னவோ
 எனக்கு விவசாயம் ரொம்பவும் தெரிந்த மாதிரி டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
நேற்று தான் அரிசியின் கதை முடிச்சு அவிழ்ந்த து. 
அழுவதா சிரிப்பதா!
மும்பை அரிசி முளைவிடாது.
 பாலிஸ் செய்திருக்கிறார்கள்.  
நீங்கள் ஊரிலிருந்து கொண்டுவந்திருக்கும் 
அரிசி கொஞ்சம் தாருங்கள்
என்று கேட்டாள்… 
அவள் இந்த ஒரு மாதமாக அரிசியைப் போட்டு 
முளைவிடும் என்று காத்திருந்திருக்கிறாள். 
என்பதே அப்போது தான் எனக்கும் புரிந்தது. 
நெல் தான் முளைவிடும்.
நெல்தான் விதை.. என்று புரிய வைப்பதற்குள் 
போதும் போதுமென்றாகிவிட்ட து. 
தசாரா நாட்களில் லட்சுமி பூஜை நாட்களில் 
மும்பை மார்க்கெட்டில் நெல் கதிரை
 பூ மாலைக்கு நடுவில் வைத்து கோர்த்திருப்பார்கள். 
அதை நினைவூட்டி அது தான் நெல் என்று
 புரியவைத்தேன். என்னிடமும் இதுதான் நெல் என்று
 காட்டுவதற்கு நெல் இல்லை.
இனி ஊருக்குப்போனால் ஒரு குட்டிச்சாக்கு
 நிறைய நெல் எடுத்துக் கொண்டு வர வேண்டும்… ! 
இந்த அல்லாடலில் இன்னொரு விஷயமும் 
தெரியவந்த து. என் மருமகளுக்கும் நெல் தெரியாது.. 
என் மகனுக்கும் தான்!
இவர்கள் நாளை அரிசியைப் போட்டு 
நெல் விளைவிக்கலாம் என்று 
சொல்லிக்கொடுப்பதற்குள் ..
என் பேரனுக்காவது இதுதான் நெல் என்று காட்ட வேண்டும்..
இதை எழதும் போது அவமானமாக இருக்கிறது.
இந்த உண்மை ரொம்பவும் குரூரமானது.
இதில் I STAND WITH FARMERS என்று எழுதமுடியாமல்
தலைகுனிந்து நிற்கிறேன்.
No comments:
Post a Comment