Wednesday, October 24, 2018

முக்திபவன்


"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன்.
உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்..
உயிருக்கு..?!
முக்தி பவன்
"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன்.
உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்..
உயிருக்கு..?!
Mukti Bhawan - Poster.jpg

77 வயதான அப்பா தயா, +50 வயதில் மகன் ராஜீவ்
அப்பாவுக்கு மரணத்தைப் பற்றிய கனவுகள்.
அதுவும் காசியில் கங்கைக் கரையில்
மரணித்து நேராக அப்படியே எந்த டிராபிக்
ஜாமும் இல்லாமல் சொர்க்லோகம் செல்ல
ஆசை. மகனுக்கோ சாப்பிடும் போதும்
கைபேசியில் தன் வாடிக்கையாளர்களுடனும்
மேலதிகாரியுடனும் பேசிக்கொண்டிருக்கும்
அளவுக்கு வேலைப்பளு.
ஒரே மகன். அப்பாவின் கடைசி ஆசை..
காசியில் மரணிக்கும் ஆசை...
வீட்டில் பேத்தி நண்பர்களையும் உறவினர்களையும்
அழைத்து தாத்தாவுக்கு கேக் வெட்டி பிரியாவிடை
கொடுக்கும் பார்ட்டி.. மகன் வந்தவர்களிடமும்
சொல்லிப் பார்க்கிறான்... நீங்களாவது அப்பாவிடம்
சொல்லக் கூடாதா.. இந்த விபரீத ஆசையை விடச் சொல்லி
என்று..
ம்கூம்.. பிடிவாதக்கார அப்பா...
கான்பூரில் இருந்து காசிக்கு அப்பாவுடன் பயணம்..
போகும் போது மனைவி கேட்கிறாள்...
"எப்போது திரும்பி வருவீர்கள் ? என்று.
கேள்வி மனைவியர் கேட்கும் சாதாரணக் கேள்வி.
மகனுக்கோ எரிச்சல் வருகிறது..
"அப்பா எப்போது சாவார்னு எப்படித் தெரியும்?!"
மனைவி தான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை
என்று எவ்வளவு சொல்லியும் அவன் கோபம்
அடங்கவில்லை. அவனே காசியில் முக்தியடைய
அப்பாவுடன் தங்கி இருக்கும் நாட்களில்
அதே கேள்வியை குருவிடம் கேட்கிறான்...
" என் அப்பாவுக்கு அந்த நாள் வந்துவிட்டதா?"
என்று..
வயதான அப்பாவோ தன்னைப் போலவே
முக்தியடைய காத்திருக்கும் மனிதர்களுடன்
ஜாலியாக இருக்கிறார். காலையில் யோகா
சாப்பாடு , நதியில் படகுப்பயணம் , மாலையில்
டிவியில் தொடர் பார்ப்பது குல்ஃபி சாப்பிடுவது
தூள் கிளப்புகிறார் நடிப்பில் லலித் பகல்.
அப்பாவும் மகனும் நெருக்கமாகும் தருணங்கள்
முதல் முறையாக மகன் இளவயதில் எழுதியிருந்த
கவிதையை புரபோசர் அப்பா சிலாகித்து சொல்லும்
போது மகன் எரிச்சல் அடைகிறான்...
என்னை எங்கே எழுதவிட்டாய்..?
ப்படி எல்லாம் எழுதியவனைத் தான் 
நீ இந்த மாதிரி வேலைக்கு அனுப்பி எனக்குள்
இருந்தக் கவிஞனை இல்லாமல் ஆக்கிவிட்டாய் 
என்று குற்றம் சுமத்துகிறான்..
ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஒட்டுமொத்தக் குரலாய்
அவன்...
தயா தன்னைப் போலவே மரணிக்க காசியில்
18 வருடம் காத்திருக்கும் விமலாவின் நட்பு..
காமிரா.. திரும்புகிறது..
ஒரு காட்சியில் விமலாவும் தயாவும் அருகருகே
தூங்குகிறார்கள்.. இருவரின் கைகளும்
ஒன்றை ஒன்று எட்டிவிடும் தூரத்தில்.
மகன் அதைப் பார்த்துவிட்டு வெளியில் போகிறான்.
முகத்தில் எந்த உணர்வுகளும் வெளிக்காட்டாமல்.
மரணிக்க காத்திருக்கும் உடல்களில்
ஆணுடல் பெண்ணுடல்... இரண்டும்
காணாமல் போயிவிடுகிறது.
முதுமையில் உடலும் மனமும்
குழந்தைகளாகி ஒவ்வொரு தருணத்தையும்
கொண்டாட்டமிக்கதாக்குகிறது.
15 நாட்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதிக்கப்படும்
விடுதியில் தன் கணவனின் முக்திக்குப் பின் தானும்
முக்தியடைய 18 ஆண்டுகள் காத்திருக்கிறாள் விமலா.
பெயர் மாற்றிக்கொண்டு தங்கி இருக்கிறாள்..
ஆம் உடலுக்குத் தானே இந்தப் பெயர்கள்..!
என்ற தத்துவ விசாரணைக்குள் பார்வையாளனை
எளிதாகத் தள்ளிவிடுகிறது இக்காட்சிகள்...
அப்பாவும் மகனும் நெருக்கமாகிறார்கள்..
ஒரு தருணத்தில் மரணிக்க காத்திருப்பவனுக்கு
ஏன் வேண்டும் இந்த நெருக்கமும்.. உணர்வுகளும்..
என்ற அடுத்தக் கட்டம் வருகிறபோது...
தயா தன் மகன் ராஜீவை தன்னைத் தனியாக
விட்டுவிட்டு செல்லும்படி சொல்லுகிறார்.
மகனிடம் கண்டிப்புடன் இருக்கும் அப்பா
தன் பேத்தியிடம் ஜாலியாக இருப்பதும்
உன் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீயாகவே
இருக்க வேண்டும் என்று சொல்வதும்
திரைப்படத்தின் இன்னொரு திருப்புமுனையாக...
ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் கதை..
கங்கைக்கரையில் இறந்தால் சொர்க்கம் போகமுடியுமா
என்ன? என்ற கேள்வியை மகன் அப்பாவிடம்
வைக்கலாம்.
ஆனால் போதும்பா.. இந்த உடம்பும்.. ஆட்டமும்...
நான் இனி ஓய்வெடுக்கப் போகிறேன்.. என்ற
தயாவின் குரலும் அந்த நாளுக்கான காத்திருப்பின்
கம்பீரமும்...
முக்திபவனின் வெற்றி.
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்.
ஆனால் இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி
பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும்
விருதுகள் பெற்ற திரைப்படம்..

No comments:

Post a Comment