Thursday, February 19, 2015

கேள்வியைத் தேடும் பதில்கள்



உங்கள் கேள்வியும் நானே.. பதிலும் நானே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

கவிஞர் ஜெயதேவனின் க்டவுளும் நிலமும் 16/2/15 முகநூல் பதிவை
முன்வைத்து..

கே: முருகன் மணந்தது இந்திராணியையா?
இந்திரனின் மகள் தெய்வானையை அல்லவா முருகன்\
மணந்தார்?

இந்திரனுக்கு மகளே கிடையாது. ஸ்கந்த புராணத்தில்
விஷ்ணுவின் புதல்வியர் தேவசேனையும் வள்ளியும்.
தேவசேனை அம்ரிதவ்லலியில் பிறக்கிறாள். இந்து மதம்
சொல்லியிருக்கும் பூஜை மந்திரங்களைத் தவறாது செய்து
வருகிறாள். அப்பெண்ணை இந்திரன் "தத்தெடுத்துக் கொள்கிறான்"
அப்பெண்ணையே தேவசேனாதிபதிக்கு... அதாவது தேவலோகத்தின்
அரசனான இந்திரன் தன் சேனாதிபதிக்கு அப்பெண்ணை
திருமணம் செய்து கொடுக்கிறான்.
ஆனால் கந்தபுராணத்தில் இந்திரன் தத்தெடுத்த கதை மிஸ்ஸிங்.

தேவசேனா என்பதே தெய்வானையின் பெயர். தேவசேனா என்றால்
தேவர்களின் படை ARMY OF GODS என்ற பொருள்.
தேவ்சேனா பிராஜபதி தக்ஷாவின் பெண். அவளை அசுரகேசி
சிறைப்ப்டித்தான். இந்திரன் அவளை சிறையிலிருந்து மீட்டபோது
அவள் வீராதிவீரனையே மணப்பேன் என்று சொல்கிறாள்.
இந்திரன் பிரம்மனிடம் போய் அறிவுரை கேட்க பிரமன்
அக்னியின் புத்திரனே வீராதிவீரனாக முடியும் என்று சொல்ல
அக்னிபுத்திரன் அவதரிக்கிறான்.
இவ்விடத்து அக்னி என்பது சிவனையும் குறிக்கும்.
அதனால் முருகவழிபாட்டில் சிவனின் இடக்கண், வலக்கண் என்று
முருகனின் இரண்டு மனைவியரும் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து
அவதரித்தவர் முருகன் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

கே: நீங்கள் இன்னும் இந்திராணி க்கே வரவில்லை//!?

பொறுங்கள்.. இந்திர வழிபாடு தமிழ்ச்சமூகத்திலும் வடவரின்
ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரா?
இந்தக் கற்பனையைப் புரிந்து கொள்வதற்கு "ரிக்" வேதத்தில்
இந்திரன் என்னென்ன பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறான்
என்பதை முதலில் பார்க்க வேண்டும். (பார்க்க விக்கிப்பீடியா)
கலாச்சார கலப்பு.. கலாச்சார ஆக்கிரமிப்பு என்ற மனித இன
வரலாற்றில் இக்கலப்புகளை அக்காலத்தில்
கற்பனையில் புராண இதிகாசக்கதைகளாகவும் நம் நடோடிபாடல்கள்
கதை வழியாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
ரிக் வேதத்தில் இந்திரன் தான் எம். ஏ பட்டதாரி.
ஆமால் மாஸ்டர் ஆஃப் ஆல்.. பிற்கால கடவுள்,
கடவுளர்களின் வாகனம் பிள்ளைக்குட்டிகள் எல்லாம்
இதற்குள் அடக்கமாகிவிடும். அப்படி ஒரு விசாலமான
திருநாமங்களுக்குரிய்வர் இந்திரபகவான் .

இதில் பாருங்கள்.. நமக்கோ முருகன் தான் தமிழ்க்கடவுள்.
இப்போது முருக வழிபாட்டில் எலலாவற்றையும் கொண்டு
அடைத்தாக வேண்டும். இப்படித்தான் நம் முருகன்
அவர்களின் தேவசேனாதிபதியாகிறான்...

கே: முருகன் தேவசேனாதிபதியானதற்கும் இந்திராணிக்கும்
என்ன தொடர்பு?
இருக்கிறதே.. அதனால்தானே எப்போதும் நேரடியாக பதிலுக்கு
வந்துவிடும் என்னாலும் இவ்வளவு சுற்றி வ்ளைக்க வேண்டி
இருக்கிறது.
வடக்கே இருந்த தேவசேனாதிபதி கார்த்திக்/ கார்த்திகேயன்.
கார்த்திக மாபெரும் வீரன். ஆனால் அவன் பிரம்மச்சாரி.
இன்றும் ஹரியானா மாநிலத்தில் கார்த்திகேயனை பெண்கள்
நேரடியாக தரிசனம் செய்யக்கூடாது. நவிமும்பையில் இருக்கும்
கார்த்திக்கேயன் ஆலயத்திலும் திரை போட்டு மறைத்துவைத்திருப்பார்கள்
கார்த்திகேயனை. பெண்முகம் பார்க்க மறுக்கும் பிரம்மச்சாரி அவன்!
பகவத்கீதையில் கிருஷ்ணன், "நானே ஸ்கந்தன், யுத்தங்களின்
தலைவன்.. iam skanda, the lord of war " என்று சொல்வதும்
நினைவுக்கு வருகிறது.

கார்த்திகேயன் வழிபாடும் குமாரகுபதன், ஸ்கந்த குபதன் என்ற
குப்த வ்மசத்து அரசர்களின் பெயர்களும் இக்கதையுடன் தொடர்புடையவை.
மவுரியர் காலத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
முருகனின் மயில்வாகனம் மவுரியருடன் தொட்ர்புடையது.
கிரேக்க படை எடுப்பு, மாவீரன் அலெக்ஸ்டாண்டர் வட
இந்திய அரசுகளுடன் போரிட்டது.. இந்த வீரவரலாற்றின்
புராண புனைவுகளும் கார்த்திகேயனின் கதைகளுடன்
இணைகின்றன. கிரேக்க ரோம புராணக்கதைகளில் இருக்கும்
போர்க்கடவுளும் இந்திரனும் ஆசிய நாடுகளில் வழிபாட்டில்
இருக்கும் கார்த்திகேயன் அடையாளங்களும் இக்கதைகளின்
ஊடாக நம்மை விசா இல்லாமல் நாடு கடந்து பயணிக்க வைக்கும்.
இந்திரன் அர்ஜூணனின் தந்தை, சூரியபகவானின் மகன்.
அதே இந்திரன் பவுத்தமதத்தில் சக்ரா/சாக்கா.
சமண மதத்தில் தீர்த்தங்கரர்களின் தொண்டன் சவுந்தரமெந்தர.
எனவே வீரத்தின் அடையாளமாக இந்திரனுனும் கார்த்திகேயனும்.
இதில் கார்த்திகேயன் முழுமையாக முருக வழிபாட்டில்
ஐக்கியமாகி முருகனே கார்த்திகேயன் என்ற நேர்க்கோட்டில்
வந்துவிடுகிறார்கள்.
இதில் கார்த்திகேயனும் இந்திரனும் வீரத்தின் அடையாளம்
என்ற புள்ளியில் இணைந்ததில் இணைந்தும் இணையாமலும்
இந்திரனும் முருகனும். இந்திரன் காப்பாற்றிய /தத்து எடுத்த
தேவசேனை என்ற தேவசேனாதிபதியின் மனைவி
தமிழ்க்கடவுள் முருகனின் மனைவி அந்தஸ்த்தைப் பெறுகிறாள்.
கலாச்சார கலப்பு என்பது கலாச்சார படை எடுப்பாகி
தமிழ்ப்பெண் வள்ளி முருகனின் துணைவியாகி
சின்னவீடாகி சிறுமையடைகிறாள்.

இன்னொரு விநோதமான கடவுள் வழிபாட்டின் ஊடுருவலும்
வந்து சேருகிறது.

கே: அது என்ன கதை?

அதுதான் நம் முருகனின் அண்ணனான விநாயகன்/கணேசன்.
வடநாட்டில் பிள்ளையாருக்கு 2 மனைவியர். சில கதைகளில்
3 மனைவியர் . அவர்கள் புத்தி, சித்தி, விருத்தி.இதில் யார் புத்தி,
யார் ஷித்தி , யார் விருத்தி என்பதற்கும் பல கதைகள் உண்டு.
பிள்ளையாரின் மகள் சந்தோஷிமாதா என்ற கதையும் உண்டு.

நம் தமிழ்ச்சமூகத்திற்கு வரும்போது பிள்ளையார் முருகனின்
அண்ணன் ஆகிவிடுகிறார். அத்துடன் வடக்கே இருந்த கார்த்திகேயனின்
பிரம்மசாரியம் தெற்கின் பிள்ளையார் மீது சுமத்தப்படுகிறது.
எனவே பிள்ளையாரின் மனைவியர் இடம் மாற்றம் பெற்று
முருகனின் கதைக்குள் வந்துவிடுகிறார்கள்!
சைவம் தெய்வானையை க்ரிய சக்தி என்றும் வள்ளியை
இச்ச சக்தி என்றும் சொல்வது இதனால் தானோ என்னவோ!
வடக்கில் பிள்ளையாரின் இடது தொடையில் இருந்த மனைவி
அதே ஆடை அலங்காரங்களுடன் முருகனின் இடதுபக்கத்தில்
உட்காருகிறாள். ஆடை ஆபரணங்கள் கையில் தாமரை மலர்
சகிதம் காட்சி தரும் தெய்வானை.

இன்னொரு கதை என்னவென்றால் இந்திரனை வென்ற கார்த்திகேயன்.
அப்போது இந்திரன் எல்லாம் இழந்துவிடுகிறான். மனைவியும்
ஓர் ஆணின் சொத்து, உரிமைப்பொருள் என்ற பின்னணியில்
இந்திரன் இழந்தது என்னவெல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். ஆனால் வெற்றி கொண்ட் கார்த்திகேயன் இந்திரனின்
ராஜ்ஜியத்தை அவனுக்கே திருப்பிக்கொடுத்துவிட்டான் என்ற கதையின்
பின்னணியில் இந்திராணியின் முகமும் தெரிகிறது.

இந்திரனின் வீரத்தை தமிழ் இனக்குழுத்தலைவன்
முருகனிடம் சேர்த்துக்கொண்ட தமிழ்ச்சமூகம்
இந்திராணியை இந்திரனின் மகளாக்கி முருகனை அவன்
மருமகனாக்கியது. ஆனால் உறவு முறையில் அவன் திருமாலின்
மருமகன். திருமாலின் நாபிக்கமலத்தில் பிறந்தவனே பிரம்மன்.
இப்படிச் சுற்றி சுற்றி வருகிறது புராணக்கற்பனைகள்.

வீரத்தின் அடையாளமான இந்திரன் கார்த்திகேயனில் சங்கம்ம் ஆகி
கார்த்திகேயன் முருகனாகும் போது முருகனின் அடையாளம்
பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், சன்யாசி என்ற 3 நிலையிலும்
காணப்படுகிறது. முருகனுக்கு மட்டுமே இந்த 3 நிலைகளும்
உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திர வழிபாடு வீழ்ச்சியடைந்தது பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியதாகும்.
உலோகப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் வஜ்ராயுதம் வழக்கிழந்து போனதை,
முருகன் தேவசேனாபதியான புராணக் கதையுடன் இணைத்து நா. வானமாமலை அவர்கள் விளக்கியுள்ளார்.
மாயோன் - வாலியோன் (கண்ணன் - பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை - ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும். விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது. திருமகள் ‘இந்திரா' என்றே வடமொழியில் குறிப்பிடப்படுகிறாள். உற்பத்தி சக்திகள் புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டின் தலைமைக் குடிகளிடமிருந்து ‘வம்ப வேந்தர்கள்' கைக்குச் சென்றுவிட்டன என்பதை இவை உணர்த்துகின்றன. இந்திரனின் படைத்தளபதியாக இருந்த வடபுல ருத்ரன் - தமிழகக் கூற்றுத் தெய்வத்தின் அம்சங்களையும் சுவீகரித்து கங்காதரராகவும் காளை வாகனராகவும் வளர்ந்து, நதிநீர்ப் பாசனத்தாலும் உழவு மாடுகளாலும் வளர்ச்சியடைந்த விவசாயப் பொருளாதார நிலையின் யஜமானனாக யக்ஞத் தலைவனாக - வேரூன்றிவிட்ட நிலையைப் பக்தி இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இத்தகைய சமூகவியல் நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், இந்திரியம் என்ற ஜீவசக்திக்குள் புதைந்திருக்கும் வித்து (விந்து, அணு) என்பது பிரம்மாவாக (அண்ட விதையாக) அடையாளம் காணப்பட்டது. இது அல் பிரஹ்மா அல்லது ஆப்ரஹாம் என்ற மனிதகுல மூதாதை பற்றிய செமித்திய சிந்தனைத் தாக்கத்தின் விளைவு ஆகலாம். தத்துவ மட்டத்திலும் இந்திரனின் தனித்தன்மை கேள்விக்குரியதாயிற்று. இந்திர வழிபாட்டின் வீழ்ச்சியை இத் தத்துவச் சிந்தனை மேலும் விரைவுபடுத்திற்று என்பதில் ஐயமில்லை.


வேறு ஏதேனும் நேரடி சான்றுகள் உள்ளதா?

இருக்கிறது. அதுதான் கொஞ்சம் உண்மைக்கு நெருக்கமானது என்பது
என் வாசிப்பில் நான் கண்டது. இந்தியா முழுவது, தாய் தெய்வ
வழிபாடே இருந்தது என்பதை குஜராத், மத்திய பிரதேசம் ,மகாராஷ்டிரா
மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் (நான் பயணித்த மாநிலங்கள்)
கிராமங்களில் இன்றும்
நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அவர்களை சப்தகன்னியர் என்றும்
அழைக்கலாம்.

மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள
தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக்
காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில்
ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சில இடங்களில் தனித்தனி சிற்பமாகவும்,
சில கோவில்களில் நீண்ட செவ்வகக்கல்லில் அடுத்தடுத்தும் இத்தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன

ஆனால் பேரரசுகள் வந்தப்பின் ஆணாதிக்க சிந்தனையில் பெருந்தெய்வ வழிபாட்டில்
பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று ஆண்கடவுளரின் மனைவியராக - சக்தியாக-
இந்த சப்தகன்னியரின் இடம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

சப்த கன்னியர் 7 பேர் : பிராம்மி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி அம்மன்,
இந்திராணி, சாமுண்டி. (எண்ணிக்கையில் சில மாறுதல்கள் இருக்கலாம்)
இதில் இந்திராணி , இந்திரனுடன் சம்பந்தப்பட்ட இந்திராணி முருகனின்
இடதுபக்கம் அமர்கிறாள். முருகனின் 5வது 6 வது கைகள் தான் வேலைப்
பிடித்து சுழற்றும் கைகள். அதே கைகள் முருகனின் இடதுப்பக்கம்.
அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரைப்பூ ஒரு வகையில்
திருமகளின் அடையாளம். திருமகளுக்கு இந்திராணி என்ற பெயரும்
உண்டு. திருமகள் தான் பூதேவியாகவும் ஸ்ரீதேவியாகவும் இருக்கிறாள்.

இத்தனைக் குழப்பங்களுடனும் தான் இந்திராணி தமிழ்ச்சமூகத்தில்
நுழைகிறாள். தமிழ்ச்சமூகத்தின் ஒழுக்க நெறிக்கும் வாழ்வியலுக்கும்
அவள் இந்திரனின் மகள் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருப்பதால் அந்த ஒற்றைப்பார்வையே நமக்குப் போதுமானது
என்று நாம் இருந்துவிட்டோம். !

மேலும் இந்திராணி என்றவுடன் இந்திரனின் மனைவி மட்டும் தானா?
இந்திரனின் மகளாக இருக்கவே முடியாதா! (இது தற்கால பெண்ணியப்பார்வை
என்று நீங்கள் நினைக்கலாம்...!)

கே: இந்திரனை பிரம்மன் என்று சொன்னதன் பின்னணி..?
இது ஒரு குறியீடு. நிலமும் நிலம் சார்ந்த வாழ்வுமே
உற்பத்தியின் அடையாளம். மருத நிலக்கடவுள்
இந்திரன். நிலமே உற்பத்தியின் அடையாளம்.
உற்பத்தியின் கடவுள் - படைப்பு சிருஷ்டி பிரம்மன்.
பிரம்மனின் சிருஷ்டி , உற்பத்தி மருத நிலத்தின்
இந்திரனின் ராஜாங்கத்தின் அடையாளம்.
ஒன்றின் அடையாளன் இன்னொன்றின் அடையாளத்தின் மீது
தத்துவரீதியாக காரண காரியங்களுடன் கலக்கும்போது
அதில் ஏதாவது ஒன்று காலப்போக்கில் மங்கி
மறைந்துவிடும். இந்திரன் எப்போதும் ஆட்சி அதிகாரத்தின்
அடையாளமும் கூட.

கே: இறுதியாக ஒரு கேள்வி..
அடிப்படையில் பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி
இவ்வளவு புராண இதிகாச கதைகளுடன்..

சென்ற மாதம் கோரேகான் தமிழ்ச்சங்கத்தில் "பெண்களும் கண்டுப்பிடிப்புகளும்"
என்ற தலைப்பில் பேசினேன். அப்போதும் என்னிடம் இதே கேள்வி
வேறொரு தோரணையில் வந்தது. அவர்களிடம் சொன்ன அதே பதிலை
உங்களுக்கும்...
பெரியாரிடமிருந்து தான் நான் இதைக் கற்றுக்கொண்டேன்.
ப்ரசுராமனின் கதையில் தந்தையின் சொல் கேட்டு தாயைக் கொன்ற
மகனின் கதை வெறும் கதையல்ல. அதுதான் தாய்வழி சமூகம்
தந்தை வழி ஆணாதிக்க சமூகமாக மாறும் புள்ளி.
புராண இதிகாச கதைகளின் ஊடாக மனித நாகரிகத்தின்
வளர்ச்சி, வாழ்க்கை, கலாச்சார கலப்பு, கலாச்சார எதிர்ப்பு,
கலாச்சார ஆதிக்க படை எடுப்பு ... என்று மறுவாசிப்பு
செய்வது அவசியம் என்பது என் எண்ணம்.

கவிஞ்ர் ஜெயதேவனின் முகநூல் பக்கத்திற்கு என் பின்னூட்டமும்
அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களும் பதிவுகளுக்கும் நன்றி.
மேலே சொன்னதில் சில வரலாறு. பல புனைவுகள்.
எல்லாம் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்
மீண்டும் நன்றி.

3 comments:

  1. மிக்க நன்றி மேடம் .உங்கள் அன்புக்கும் எதிர்வினைக்கும் , முகநூலில் ஒரு பதிவாக போட்டதற்கு இவ்வளவு விளக்கம் தர பெரிய மனம் வேண்டும் .உள்வாங்க சிரமம் இருப்பினும் ஆய்வு ரீதியில் தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நிறைவுதான் .இந்த மெனக்கெடல்தான் என்னை வியக்க வைக்கிறது . உங்கள் வலைபூ முகவரி தந்து பதிவு போட்டுவிடுகிறேன் ,ஆர்வம் உள்ளவர் வாசிக்கட்டும் .நன்றி

    ReplyDelete
  2. நன்றி.ஜெயதேவனுக்கான விளக்கமாக இருந்தாலும்,எங்களுக்கான தெளிவும் இது.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு .” மேலே சொன்னதில் சில வரலாறு. பல புனைவுகள்.
    எல்லாம் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும் “ - பதிவிற்கு மகுடம் சூட்டும் வரிகள் .

    ReplyDelete