Saturday, October 8, 2011

தேவபிரசன்ன ராஜ்யம்






தடுக்கி விழுந்தால் தங்கச் சுரங்கங்கள், ஓடைகள் எங்கும் வைரக்கற்கள்
என்று எங்குப் பார்த்தாலும் செல்வம் கொட்டிக்கிடக்கும் ராஜ்யம் தான்
தேவபிரசன்ன ராஜ்யம். அந்த ராஜ்யத்தில் தான் உலகிலேயே
அதிகமாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவில்லாதவர்களே
கிடையாது என்பது ராஜ்யத்தின் இன்னொரு சிறப்பு.
ராஜ்யத்தின் பெண்கள் ரொம்பவும் அழகானவர்கள்.
கனத்த முலைகளுடன் இறுகக்கட்டிய கச்சை.மாராப்பு அணியாத
தாமரைக்கூட்டங்கள் அந்தப் பெண்கள். இதுவே ராஜ்யத்தின்
பெண்களுக்கான தேசிய உடை. கணினி, அது இது என்று பல்வேறு ராஜ்யங்களுடன்
ஏற்பட்ட தொடர்புகளால் இப்போதெல்லாம் பெண்கள் ராஜ்யத்தின் தேசிய
உடைகளை எப்போதும் அணிவதில்லை.

ராஜாங்க காரியங்கள், விசேஷங்கள், கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள்
தவிர மற்ற நாட்களில் எல்லாம் மாராப்பு போட்டு மறைத்துக் கொள்ளும்
உடைகளையே மற்ற ராஜ்யத்தின் பெண்களைப் போல அணிகிறார்கள்.
இதனால் தான் இப்போது பெண்ணியம் சார்ந்த பலப் பிரச்சனைகள் வந்துவிட்டதாக
சில சமூகவியாலார் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள்.\
அந்தக் காலத்தில் பெண்டுகள் மாராப்பு அணிவதில்லை என்பதால் அவர்களை
நேரில் சந்திக்கும் எவரின் பார்வையும் நேரடியாக அந்த இடத்தில் தான் விழும்.
பிறகென்ன..? வேறு எங்கும், மேலும் கீழும் பார்வை பயணிக்க சந்தர்ப்பமே
இருக்காது. 'தோள்கண்டார் தோளே கண்டார் மார்பு கண்டார் மார்பே கண்டார்'
என்று அந்தப் பெண்டிரிடம் கண்டதைத் தான் பிற்காலத்தில் காவியங்களில்
எழுதி வைத்திருக்கிறார்கள். அது தெரியாமல் இப்போது மாராப்பு போட்டதால்
உடம்பில் மற்ற அங்கங்களுக்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்
வந்துவிட்டது. அதனால் ஜிம், முகத்தை வசீகரமாகக் காட்டும் அழகுச் சாதானங்கள்:
என்று என்னவெல்லாமோ வந்துவிட்டது என்றும் இதுவும் உலகமயமாதலின்
தாக்கம் என்றும் மின்னிதழில் ஒருவர் எழுதி இருந்தார்.

முதலில் ராஜ்யத்துக்கு ஏன் தேவபிரசன்ன ராஜ்யம் என்ற பெயர் வந்தது?
என்பது ரொம்பவும் சுவராஸ்யமானக் கதை. தேவபிரசன்னம் என்பது கோவிலில்
சாமியின் முன்னால் குறிபார்த்து சொல்வது. அதாவது சோழி, வெற்றிலை, கண்ணாடி
போன்றவற்றைப் பயன்படுத்தி கோவிலின் கிழக்கு வாசலில் கோவிலின் தந்திரி
ராஜாங்கத்தின் பிரபலமான ஜோதிடர்கள் முன்னிலையில் சோழியை உருட்டி பார்ப்பார்கள்.
இது ஒருவகையில் எண் ஜோதிடம், கிளி ஜோதிடம் மாதிரிதான். இதிலிருந்து தான்
இன்றைக்கு மேனாட்டினர் பெருமையாகப் பேசும் TAROT CARD READING ஜோதிடமெல்லாம்
வந்தது என்பது உண்மைதான்.

ராஜியத்தின் எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பது மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும்
மந்திரிசபையோ அல்லது நீதிபதியோ அல்ல. அவர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம்
தேவபிரசன்னத்திற்கு உண்டு. மந்திரிமார்கள், கனம் நீதிபதிகள், கல்வியாளர்கள்,
பத்திரிகை மேதாவிகள் எவராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளையும்
ராஜாங்கத்தில் தேவபிரச்சன்னம் பார்த்து தீர்த்துக் கொள்வார்கள். .
எதற்கெடுத்தாலும் போராட்டம், பேரணி, கதவடைப்பு என்று கலகக்குரல் கொடுக்கும்
"காசே தூங் ' கட்சிக்காரர்கள் கூட தேவபிரச்சன்னம் என்று சொல்லிவிட்டால்
போதும் கப்சிப். அப்புறம் அவர்களின் ஆ ஓ எல்லாம் புஸ்வானமாகிவிடும்.
அந்த விசயத்தை விட்டுவிட்டு வேறு எதையாவது கையில் எடுத்துக் கொண்டு
கூட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படித்தான் ராஜாங்கத்தின் கடற்கரையில் சுனாமி வந்து ரொம்பவும் சேதம் அடைந்துவிட்டது.
ராஜ்யத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம். தேவபிரசன்னம் பார்த்ததில் பழைய ஏடு பக்கம் 888ல்
பார்க்கும் படி வந்தது. பழைய ஏடு முழுசாக யாரிடமும் இல்லை. இருப்பதும் கிழிந்து
நைந்துப்போய் தொட்டால் அப்படியே பொடிப்பொடியாகிவிடும் நிலையில் இருந்தது.
கணினி மேதாவிகள் நிறைந்த அந்த தேசத்தில் அதை அப்படியே ஒளித்தகடாக
மாற்றிவிடலாம் என்று சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் பழைய ஏட்டின் முதல் பக்கத்திலேயே
அதை நகல் எடுக்கவோ பிரதிகள் செய்யவோ கூடாது, மீறினால் என்று பத்துப் பக்கத்திற்கு
எழுதி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது என்ன செய்வது?
அதுவும் 888 ஆம் பக்கம் என்றால் பழைய ஏட்டில் கடைசி அத்தியாயமாக இருக்கும்
என்றார் வயதான கோவில் தந்திரி.
ராஜாங்கத்தில் பெரிய குழப்பமே வந்துவிட்டது. தேவபிரசன்னம் பார்த்துவிட்டால்
அதில் வருகிறபடி கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லை என்றால் அதுவே
ராஜாங்கத்திற்கு சாபமாகிவிடும் என்று எல்லோரும் கவலைப்பட்டார்கள்.
இதையே சாக்காகப் பயன்படுத்தி இம்மாதிரியான காரியங்களுக்கு தேவபிரசன்னம்
பார்ப்பது சரியாகுமா? என்று 'காசே துங்' கட்சிக் காரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு
எழுதவும் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ்,ஆர்க்குட் என்று உலகம்
பூரா இந்தச் செய்திப் பரவியது.
எப்படியொ இலண்டனில் இருக்கும் ஒரு ஆய்வு மாணவர் பழைய ஏட்டின் 888 ஆம்
பக்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுப்பிடித்து மை ஸ்பேஸில்
போட்டுவிட்டார். இலண்டன் லைப்பரரியில் அவர் வாசித்ததையும் பழைய ஏட்டின்
ஒரு பிரதி அங்கிருப்பதையும் அந்த ராஜாங்கத்தினரும் ஒத்துக்கொண்டார்கள்.

மை ஸ்பேஸ் என்ற கணினி சமூக தளம் பெரும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அதில் வேலைப்பார்த்தப் பலர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
மை ஸ்பேஸின் எதிர்காலம் என்ன? என்று அமெரிக்காவில் எல்லா பத்திரிகைகளும்
எழுதிக்கொண்டிருந்தன. இந்த பழைய ஏட்டின் செய்தி மை ஸ்பேஸ் மூலமாகப்
பரவியதிலிருந்து ஏகப்பட்ட ஜனங்கள் மை ஸ்பேஸில் புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தக் கம்பேனி இந்தியாவுக்கு அனுப்பிய சாஃப்ட்வேர் எஞ்சினியர்களை எல்லாம்
திருப்பிக்கூப்பிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அப்படி அந்த 888ஆம் பக்கத்தில் சொல்லப்பட்டிருந்தப் பரிகாரம் என்ன?
தீயர், சாணார், முக்குலர் இனத்தைச் சார்ந்த தலைப்பிள்ளையாகப் பிறந்த
குழந்தைகள் 2 வய்து முதல் 5 வயதுக்குள் இருக்கும் பால்குடி மாறாதக்
குழந்தைகள் 15 பேரின் கழுத்தில் அமாவாசை அன்று பூஜையில் வைத்திருந்த
மாந்திரித்த செப்பேடுகளைக் கட்டி தேசத்தின் நான்கு திசைகளிலும் திசைக்கு
4 வீதம் உயிருடன் புதைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும்.
15வது குழந்தையை ராஜாங்கத்தின் ராஜ்ய காரியங்கள் நடக்கும் ராஜதானி
வாசலின் முன்னால் புதைக்க வேண்டும். இப்படி செய்தால் ராஜாங்கத்திற்கு
ஏற்பட்டிருக்கும் ஜலகண்டம் நிவர்த்தி அடையும். பத்து நூறு வருடங்களுக்கு
ராஜாங்கத்திற்கு எவ்விதமான தண்ணீரால் ஏற்படும் அழிவும் வராது
என்று எழுதப்பட்டிருந்தது. 1746ல் பூத்தாண்ட கர்மாவின் ஆட்சியில்
பெருமழைப் பொழிந்து ஏரிகள் எல்லாம் உடைந்து பேரழிவு வந்தப்போது
இந்தப் பரிகாரம் செய்யப்பட்டது என்று பழைய சரித்திரத்திலிருந்து
பலர் ஆதாரங்களுடன் எழுதினார்கள். இப்போது இந்தப் பரிகாரத்தைச் செய்தார்களா?
என்பது தெரியவில்லை.
ஆனால் பல்வேறு கிராமங்களில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில்
அதிகமாகக் காணாமல் போனதாகச் செய்திகள் வந்ததைத் தயவுச்செய்து
யாரும் இத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டாம்.
அது வேறு இது வேறு ... என்று காவல்துறை ரொம்பவும் கறாராக
சொல்லிவிட்டது. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பதும் எழுதுவதும்
தீவிரவாதத்தை வளர்க்கும் என்று மந்திரிசபையும் கொஞ்சம் கடுமையாக
பேசியதால் டிவிக்காரர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

தேவபிரசன்னம் என்று ராஜாங்க காரியங்களுக்குப் பார்ப்பது போலவே தான்
அந்த ராஜியத்தில் மற்ற காரியங்களுக்கும் பிரசன்னம் பார்ப்பார்கள்.
அஸ்தமங்கள பிரசன்ன ஜோதிடம் என்று சொல்லுவார்கள்.
பிறந்த ஜாதகமெல்லாம் தேவையில்லை. அஸ்த என்றால் எட்டு. மங்கள என்றால்
மங்களகரமானப் பொருட்கள். குங்குமம், கண்ணாடி, தங்கம். மலர்கள், நெல் அல்லது அரிசி,
பழவகைகள், வெற்றிலை, தேங்காய் என்ற எட்டு மங்களகரமான பொருட்களைக்
கொண்டு சொல்லும் ஜோதிடம்.
இதன் கிளைகளாக தாம்பூல பிரசன்னம், நிமித்திக பிரசன்னம், பூ பிரசன்னம்
இத்தியாதிகள் வந்தது. இப்படித்தான் அந்த ராஜியத்தில் பிரசன்னங்கள் பிரசித்திப்
பெற்றன. எல்லாவற்றிலும் பிரசன்னம் பார்த்து செயல்படுவது அவர்களுக்கு
நம்பிக்கை என்று சொல்வதை விட அதுவே வாழ்க்கையாக இருந்தது.

ராஜாங்கத்தில் கணினி வல்லுநர்கள் அமெரிக்காவில் எல்லாம் போய் நிறைய சாதித்தார்கள்.
நாட்டில் நல்ல பணப்புழக்கம் இருந்தது. அவர்கள் எதற்கும் பிரசன்னம் பார்த்து செய்வது தான்
இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக
நம்ப ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் நாசாவில் கூட தேவபிரசன்ன ராஜாங்கத்தின்
விஞ்ஞானிகள் அதிகமாக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
ராக்கெட்டை அனுப்புவதற்கு முன் அந்த டீமிலிருந்து நம்பிக்கையான ஒருவர்
ரொம்பவும் ரகசியமாக தங்கள் ராஜ்யத்திற்கு வந்து அஷ்ட மங்கள பிரசன்னம் பார்த்து
ராசியான காரியவெற்றி தரும் நேரத்தைக் கணித்துவிட்டு போவாராம்.

தேவபிரசன்ன ராஜாங்கத்தின் இந்தப் பெருமையை அறிந்த இந்தியர்கள்
அதிலும் நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒலிம்பிக்
விளையாட்டில் மல்மாடி செய்த கசமாலம், பூதர்ஷவழக்கில் மாட்டிக்கொண்ட
ஆளும்கட்சி, சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம்
இத்தியாதியான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவபிரசன்னம்
பார்த்தால் என்ன? என்று ஒரு பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்கிறது.
டுடா, ரம்பானி எல்லாரும் இதற்கு ஒத்துக்கொண்டாலும் அது என்னவோ
சிறையில் இருக்கும் காஜா மட்டும் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்று
மக்கீரன், கீபோர்ட் வகையாறாக்கள் அவரவர் ஊகங்களை எழுதிக்
கொண்டிருந்தார்கள். அப்படியே தேவபிரசன்னம் நடந்து பழமொழி
வெளியில் வந்துவிட்டால் "சிறையில் ஒரு தேவிபிரசன்னம்"
என்று தான் சிறையில் எழுதிய கவிதைகளை தலைப்பிட்டு வெளியிடலாம்.



தேவபிரசன்ன ராஜாங்க வனப்பகுதி ரொம்பவும் அடர்த்தியானது. அங்கிருக்கும்
ஆதிவாசிகள் ராஜாங்க தேவபிரசன்னம் நடக்கும் போது மட்டும் வருவார்கள்.
பூவும் பழமும் தேங்காயும் புதுநெல்லும் வெற்றிலையும் அவர்கள்தான்
எடுத்துவந்து தேவபிரசன்னத்திற்கு வைப்பார்கள். காலம் காலமாய் இதுதான்
வழக்கம். தேவபிரசன்ன வனப்பகுதியில் பாக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகத்திலேயே அதிகமான பாக்சைடு இந்த வனப்பகுதியில் தான் இருக்கிறது
என்று சொன்னார்கள். வல்லரசுகள் எல்லாம் போட்டிப்போட்டுக்கொண்டு
தேவபிரசன்ன ராஜாங்கத்துடன் தொழில் வளர்ச்சி ஒப்பந்தங்கள் செய்யப்
போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்தன.
எந்த தேசத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்வது என்று ராஜாங்கம் ரொம்பவும்
குழம்பிப்போனது. வழக்கம்போல தேவபிரசன்னம் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள்.

"நீங்கள் தூங்கும் போது விழித்திருக்கும் ஓரு வல்லரசு ராஜ்யம் ஒரு பெண்ணை
உங்களுடன் பேச அனுப்புவார்கள். அந்தப் பெண் பெயர் ர, ரா, ரி, ரீ என்ற
ஏதாவது ஓர் எழுத்தில் முடியும். அவர்களுடன் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு
ஒப்பந்தம் செய்யலாம்" என்று கணித்து சொன்னார்கள்.

தேவபிரசன்னம் இதில் அப்படியே பலித்துவிட்டது. தேவபிரசன்ன ராஜியத்தில்
இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அங்கிருந்து ஹிரல்ராரிரீ என்ற பெண்மணி
வந்தார். தேவபிரசன்னத்தில் சொல்லிய எல்லாம் அவருக்கு மட்டுமே
ஒத்துப்போனதால் மேள தாளங்கள் முழங்க வெண்கொற்றக்குடைப் பிடித்து
பெண்கள் எல்லாம் மராப்பு போடாத தேசிய உடை அணிந்து வரிசையாக
நின்று மலர்த்தூவி யானைகளின் அணிவரிசை முன்னே செல்ல
நிமித்திகர் அஸ்த மங்கல பிரசன்னம் ஜோதிடம் கணித்த ஒரு நல்ல நேரத்தில்
ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்கள்.

இதுதான் தேவபிரசன்ன ராஜாங்கத்தின் சரித்திரம்..
இப்போது இந்த ராஜாங்கம் வறண்ட நிலமாக இருக்கிறது. மக்களுக்கெல்லாம்
பெயர் தெரியாத வியாதிகள் வேறு. என்ன குற்றம் என்று தெரியவில்லை.
சரி பரிகாரம் கண்டுப்பிடிக்க தேவபிரசன்னம் பார்க்கலாம் என்றால்
பழங்களோ, பூக்களோ, வெற்றிலையோ, சந்தணமோ, தேங்காயோ எதுவுமே
அந்த ராஜாங்கத்தில் இப்போது கிடைப்பதில்லை. அதாவது விளைவதில்லை.
இதெல்லாம் இல்லாமல் எப்படி பிரசன்னம் பார்ப்பது?
லண்டன் லைப்ரரியில் இருக்கும் அவர்களின் பழைய ஏட்டில் இதெல்லாம்
இல்லாமல் தேவபிரசன்னம் பார்க்கும் வழி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால்
தயவுச் செய்து தெரியப்படுத்தவும்.

-----------------------



கதைக்கான சில பின்புலங்கள்:

*1746ல் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியில் மேற்கண்ட 15 குழந்தைகளைப்
பலியிட்ட சம்பவம் உண்மையான வரலாறு.

*தங்கம், வைரம் இருந்தவரை வல்லரசுகள் ஆட்கொள்ளாத ராஜியத்தை
பாக்சைடு இருப்பது தெரிந்தவுடன் ஆட்கொண்டதும் அழிப்பதும்
நடக்கப்போகும் வரலாறு.
*இந்திய மண்ணில் பாக்சைடு கண்டுபிடிக்கப்பட்ட வனப்பகுதிகள் தான்
இன்றைக்கு இந்திய தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மாவோயிஸ்டுகளின் போராட்டக்களம்.

1 comment:

  1. ஒரு மிகப் புதிய சரித்திர விஷயமாக சுவாரசியமாக படித்து இறுதியில் மனம் கனத்து போன உணர்வு...:( விடையற்ற கேள்விகளாய் தொடரும் நிகழ்வுகள்...

    ReplyDelete