Monday, January 2, 2023

தமிழ் இலக்கிய அரசியல்

 இன்று மனம் திறக்கிறேன். இது ஒரு தலைமுறையின் மௌனம் வெடித்துச் சிதறும் தருணம். எனக்கு வேண்டிய அன்பு உள்ளங்களையும் இது காயப்படுத்தலாம். ஆனால் என் வலியும் காயங்களும் சீழ் வடியும் போது எதைக் கொண்டும் மூடி மறைத்து விட முடியவில்லை.


இந்திய மண்ணில் மும்பையின் புலம் பெயர் வாழ்க்கை தனித்துவமானது . இந்த வரலாறு பிறந்த ஊரில் நீங்கள் வாயில் திணித்த   ' பீ'  தின்ன முடியாமல் ஓடி வந்த தமிழ்ச்சாதியின் வரலாறு. எனவே எங்கள் வாசம் உங்களுக்கு குமட்டலாம். இலக்கிய பீடங்களின் தீண்டாமைக்கு இதுவும் காரணமா என்றால் அதற்கு

நாங்கள் பொறுப்பல்ல! 

மன்னித்து விடுங்கள்.


நாங்கள் கூலிகள்தான். சுயமரியாதையை ஆடையைப் போல அடிக்கடி நிறமாற்றிக் கொள்ளும் அறிவு ஜீவிகள் அல்ல நாங்கள். 

அது எங்களுக்கு 

எங்கள் அடித்தோலின் 

உள்ளடடுக்காக இருப்பது 

உங்கள் நாகரிக மரியாதையை கேள்விக்குறியாக்கியதற்கு நாங்கள் பொறுப்பல்ல. 

மன்னித்து விடுங்கள்.


எங்களுக்கு அரசியல் உண்டு. அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் அவலம் 

எங்கள் அரசியல் உலகில் இல்லை. 

எங்களிடமும் கட்சிகள் உண்டு. ஆனால் எங்கள் எழுத்தும் வாழ்க்கையும் எந்த ஒரு சிபாரிசு கடிதம் கேட்டும் உங்கள் எவரின் கதவுகளையும் தட்டியது இல்லை. 

எங்கள் தலைமுறை இட ஒதுக்கீடுகள் அறியாது. நாங்கள் சுயம்புவாக எழுந்தோம். எங்கள் வாழ்வும் எங்கள எழுத்தும் சுயம்புவானது.

இதைப் புரிந்து கொள்ள உங்கள் இலக்கிய அரசியல் பக்குவப்படவில்லை.!


உங்கள் கருப்பு , சிவப்பு, 

கருப்பு சிவப்பு , 

நீலம்,  

பச்சை....நிறங்கள்..

எங்கள் வெள்ளாவி அடுப்பில்

வெளுத்துப் போகின்றன!

வெட்கப்படுகிறேன்.


முற்போக்கு பிற்போக்கு வகையறா 

இயல் நாடக விளக்கு வகையறா

மதுரை கோவை நெல்லை இலக்கிய தொகை வகையறா

தலைநகர் சென்னை இலக்கிய சங்கம வகை தொகை வகையறா

 வலது,  இடது, சாரி, பைஜாமா..

இத்துடன்

உள்ளூர் வெளியூர் வெளிநாடு

கார்ப்ரேட் வகையறா..

இத்தியாதி சகல வகையறாவும்

எங்களை விலக்கிவைப்பதில்

தங்கள் ஒளிவட்டத்தை

தலையில் சுமந்தலைகிறார்கள்.

தமிழக அரசு என் வீட்டுப்பத்திரம் கேட்கிறது.

இல்லாத வீட்டுக்கு யார் தருவார்

முகவரி.! ?

உதவித்தொகையோ விருதோ எதாக இருந்தாலும் நானும் என் எழுத்தும் 

அகதியாக வெளியில் தள்ளப்படுகிறோம்!


இலக்கிய பீடத்தின்

மீசையில் வளரும் மயிரு

சிரைத்தாலும் வளரும் திமிரா?

அட போடா..

நீங்களும் உங்கள் ஆட்டமும்!


நிராகரிப்புக்கு வரையறை உண்டு.

விதிகள் உண்டு.காரணம் உண்டு.

உதாசீனப்படுத்தலுக்கு!!!!


இதோ,.இதுவரை நடந்ததும்

இனி நடக்க இருப்பதும் கூட

என்னை வாசித்துவிட்டு

நீங்கள் எழுதிய

மதிப்புரை அல்ல.

வாசிக்காமலேயே 

நீங்கள் விலக்கிய

இலக்கியசாதி பிரஷ்டம்

டமில் வால்க.

வழற்க.


இதோ... இதை எழுதி முடித்த

இத்தருணம்...

அனைத்திலிருந்தும் 

விட்டு விடுதலையாகி நிற்கிறேன்.

.....

புதியமாதவி

மும்பையிலிருந்து.

20230102

இரவு 23.15


#புதியமாதவி_இலக்கியஅரசியல்

#tamilliterature_politics

No comments:

Post a Comment