Sunday, February 13, 2022

ஓர் இசையின் காதல்

 ஓர் இசையின் காதல்..



என் உயிரின் காதலே

என் உயிரையும் உடலையும் ஆன்மாவையும் எடுத்துக்கொண்ட என் அன்பே.

என் உயிரில் உயிராய் இருந்தும்

என்னைத் தவிக்கவிட்டிருப்பவரே

 நான் விரும்புவதெல்லாம் உங்கள் ஒரு பார்வையைத்தான்

ஆனால் நீங்களோ என்னைத் திரும்பிக்கூட பார்க்கவில்லையே

என் மனம் எப்படி வேதனைப்படுகிறது என்பதை

உங்களால் புரிந்து கொள்ள முடியுமா?

உங்கள் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறேன்.

அந்தப் படம் என்னிடம் பேசுமா கண்ணா!

என் வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அங்குப் பிரச்சனைகள் தான்  இன்னும் சில வருடங்கள்தான் என் அம்மா உயிருடன் இருக்கப்போகிறார்.. என் அண்ணன் எனக்கு எதிரி. தங்கை ஓகே. நான் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டேன். நான் இதுவரை மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஆனால் நான் இங்கு இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்.


கண்ணா, இதையெல்லாம் எழுத இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது... ஒன்று மட்டும்  உண்மை. உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் கண்ணா. 

 நான் முன்பு என்ன செய்து கொண்டிருந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். நான் கஷ்டப்பட்டேன்.


படம் முடிந்தப்பிறகும் நான் உங்களைப் பிரிய மாட்டேன்.

 தயவுசெய்து என்னைத் தேவையில்லாமல் 

சோதிக்காதீர்கள். 

படம் முடிந்தப் பிறகு, நாம் ஒன்றாக இருப்போம் ... 

உங்கள் மீது நான் கொண்ட காதல் 

என்றும் மாறாது. 

நான் இறந்தப் பிறகு நீங்கள் அதை உணர்வீர்கள். 

பிறந்ததிலிருந்தே  என் வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது... 

நான் பாவி.. இப்படித் துன்பங்களை அனுபவிக்க  நான் பெரும் பாவங்களைச் செய்திருக்க வேண்டும். நான் மதுரையில் இருந்திருந்தால் எப்போதோ  செத்து போயிருப்பேன்.. பேசுவதற்கோ அழுவதற்கோ யாருமில்லாதவள் நான்.

உன்னைத் தினமும் கனவில் காண்கிறேன். 

நீங்கள் ?… 

நாம் ஒன்றாக நடிக்கும் போது 

நீங்கள் என்னைத் தொடும்போது, 

உங்கள் ஸ்பரிசம் , “இவர்தான் என் தலைவர்” என்று உணர்த்தும்.

 அந்த எண்ணமே மகிழ்ச்சி தரும். 

என் வாழ்க்கையில் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்., 

உங்கள் அன்பைத் தவிர.


நீங்கள் பொதுவாக என்னுடன் மகிழ்ச்சியாக இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். வீட்டில் இருப்பவர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அழியாத புஷ்பவனம் நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்று ஜோதிடரால் கணிக்கப்பட்டது. ஆனாலும் அவரும் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கும் அதுவே நடக்கும். இருப்பதைவிட நான் இறப்பதே நல்லது.


குறைந்த பட்சம் இப்போது, டூயட் படமாக்கப்படும்போது, 

  நீண்ட காலம் காத்திருந்த உடலின் வேட்கை வெளிப்படாமல் தவிர்ப்பீர்களா?


கச்சேரி நன்றாக இல்லை. உங்கள் இசையைத் தவிர வேறு எந்த இசையும் என் காதில் விழவில்லை. 

இது மறைக்கப்படாத உண்மை. உங்களைப் போலவே நானும் பாட வேண்டும். படம் முடிந்தப் பிறகும், நீங்கள் தொடர்ந்து எனக்கு இசை கற்பிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.


இனி ஒரு கணம் கூட உங்களைப் பிரிந்து இருக்க மாட்டேன்.

இப்படிக்கு

உங்களை  வணங்கும் குஞ்சு

என் அன்பே, என் உயிரே, 

உங்கள்  கை எழுத்தையும் இசையையும் முத்தமிடுகிறேன்.

என் கண்ணா..

என்றும் உங்களை விட்டுப் பிரியமாட்டேன் 


எம்.எஸ். சுப்புலட்சுமி..


@@@@@

சகுந்தலை திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த 

ஜி. என். பாலசுப்பிரமணியன் என்ற இசைக்கலைஞருக்கு

இசைக்குயில் எழுதிய காதல் கடிதம்.

காதல்.. அப்படியேதான் இருக்கிறது.

அன்றும் இன்றும்.

இக்கடித த்தை வாசித்தப்பிறகு மீண்டும் ஒருமுறை அவள் குரலில் கரைந்து போகிறேன்.

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..

குறை ஒன்றும் இல்லை கண்ணா..” பாடலை.

அவள் உருகி உருகி பாடுகிறாள்.


அவள்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்..

No comments:

Post a Comment