Sunday, August 18, 2013

நேர்படப்பேசு, ஆனா பேசாதே!

.

அண்மைக்காலங்களில் புதியதலைமுறை தொலைக்காட்சி
 மட்டுமல்ல, சன், தந்தி , வின் என்று இந்த நேர்படப்பேசுகின்ற
 நிகழ்ச்சியை அவரவர் விருப்பம் போல வெவ்வேறு பெயர்களில்
 நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பையில் என் தோழி ஒருவர், அவரும்  ஊடகத்துறையில்
இருப்பவர்தான், அடிக்கடி இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசிக்
 கொள்வோம்.
ந கைச்சுவை நடிகர் வடிவேலு புதுசா படங்களில்
நடிக்கவில்லையே என்ற குறையை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்
கொள்ளும்  சிலர் தீர்த்து வைக்கிறார்கள், மனம்விட்டு வாய்விட்டு
சிரிக்கலாம், சிரிப்பது உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லது,
அதுவும் இரவு தூங்குவதற்கு முன் இந்த நிகழ்ச்சிகள்
 இருப்பதால் ரொம்பவே நல்லது என்று அடிக்கடி
எனக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பார்.அப்படித்தான் ஒருநாள் திமுக அரசியல் கட்சி சார்பாக
 கலந்து கொண்டவர்    நிகழ்ச்சியாளர் கேட்காமலேயே
 'அப்படியானால் ராஜ்யசபா  தேர்தலில்நீங்கள் ஏன்
கனிமொழிக்கு  ஆதரவு தேடி காங்கிரசிடம் போனீர்கள்?
என்று கேட்க கூடும்" என்று சம்பந்தமே இல்லாமல்
உளறிக்கொட்டினார். கனிமொழியின்
பெயரை உச்சரிக்க வேண்டிய அவசியமோ அல்லது
 ராஜ்யசபை தேர்தலில் திமுக ஏன் தன் ஒரே ஒரு உறுப்பினருக்காக காங்கிரசின் உதவியை நாடியது ஏன் என்பதைப் பற்றி
கேள்வி எழும் சூழலே அந்த நிகழ்வில் இல்லை,
இல்லவே இல்லை. ஆனால் பாவம் அவர், அப்படி ஒரு காமெடி
நிகழ்ச்சியைக் கொடுத்ததைக் கண்டு நிகழ்ச்சி நடத்துபவருக்கே
சிரிப்பு வந்தது.
கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நாம் கேட்காமலேயே
கனிமொழி குறித்த  இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி என்று கூறி அந்த நிகழ்ச்சியை கஷ்டப்பட்டு நடத்தினார் .

இப்படித்தான் அரசியல் கட்சிகள் சார்பில் கலந்துக்
கொள்பவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும் போல.
கனிமொழி குறித்து கட்டாயம் கேட்பார்கள், நீங்கள் இந்தப் பதிலைச் சொல்லுங்கள் என்று எழுதிக் கொடுத்து
அனுப்பி இருப்பார்களோ, அதற்குப் பயந்து அவர்கள்
கேட்டாலும் கேட்காவிட்டாலும் நாம சொல்லிடுவோம்னு
அவரு சொல்லியிருக்கலாம்!
காங்கிரசு கட்சி சார்பில் கலந்துக் கொண்ட ஒருவர்
இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.
" உங்க டி.,வி எப்பவும் காங்கிரசுக்கு எதிரா இருக்கு,
சிபிஐ ரெய்டு நடத்திடுவோம் , ஜாக்கிரதை ; என்று
 போட்டார் பாருங்கள் ஒரு போடு,
சிபிஐ ரெய்டுக்கான காரணங்கள் என்ன என்று
அறியாதவர்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில்
 அவர் ரகசியங்களைப் போட்டு உடைத்துவிட்டு போனார்.

 மார்க்சியவாதிகளும் அறிவியல் பொறியியல்
பொருளாதர வல்லுநர்களும்  கலந்துக் கொள்ளும் போது
 குடுமிப்பிடி சண்டை மாதிரி இருக்கும்.
அந்த நிகழ்ச்சிகளை ஒலி ஒளி காட்சியாக பார்க்க கூடாது,
 ஒலியின் அளவை முழுவதுமாக நிறுத்திவிட்டு
வெறும் ஒளிப்படமாக பார்த்தால் மட்டும் போதும்.
 பயமில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.

ரொம்பவும் சூடான பிரச்சனைகளை எல்லாம் நம்ம டிவிக்காரர்கள்
பேசுகின்றார்களே, சமூக மாற்றத்திற்கான புரட்சியை அறவழியில்
அறிவு ஆயுதம் ஏந்தி நடத்துகின்றார்களே என்றெல்லாம் சில நேரங்களில்
அவர்கள் பேசுகின்ற தலைப்புகளை வைத்து நாம் கனவுகளுடன்
டிவி முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
அப்படித்தான் அண்மையில் இரண்டொரு நாட்களுக்கு முன்
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை என்ற தலைப்பில் நேர்படப்பேசு
நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் குழுமத்திலிருந்து தோழர் சீனிவாசன்
கலந்து கொண்டு பேசினார்.

தன் கருத்தாக " இந்த தாதுக்கள் நிரம்பிய மணலை அள்ளும் வேலையைச்
செய்பவர்கள் பெரும்பான்மையோர் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் " என்றார். உடனே நிகழ்ச்சியாளர் குறிப்பிட்ட எந்தச் சாதியின் பெயரையும் சொல்லாதீர்கள் என்று இடைமறித்தார்.
என்னவோ சாதியின் பெயரைச் சொல்லிவிட்டால் மணல் கொள்ளை விவகாரம் சாதிக்கலவரமாகிவிடுவதைப் போல ! மணல் கொள்ளைக்கும்
சாதியைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தமில்லை என்று புதியதலைமுறை
நிகழ்ச்சியாளர்  நினத்தாரோ என்னவோ!!

ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயல், தொடர்ந்து நடக்கிறது, அரசும்
சட்டமும் இதை எல்லாம் அனுமதிக்கிறது, இதைப் பற்றி எல்லாம் பேசுலாம்,
பேசுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.
ஏன் அரசு மவுனமாக இருக்கிறது? என்பதற்கான காரணத்தின் முடிச்சை
அவிழ்க்க வந்தால் அடிமடியில் கை வைத்தது போலிருக்கிறது நம் அறிவுஜீவிகளுக்கு! பாதிக்க்கப்படும் மக்கள் தலித்துகளாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பதால் தான் இந்த நாட்டின் அரசும்
சட்டம் ஒழுங்கும் கள்ளமவுனம் சாதிக்கிறது! இந்தக் கருத்தையோ இந்தக் கருத்து நோக்கி இட்டுச் செல்லும் எந்த ஒரு புள்ளியும்இருந்தால் நம் டிவிக்காரர்களுக்கு அலர்ஜி.

சாதிகள் இல்லையடி பாப்பா... பாரதி, உன்னிடமும் சொல்கிறேன்.
நீ சொன்ன அதே ரெளத்திரம் பழகி உன்னிடன் சொல்கிறேன்.
பாரதி , நேர்படப் பேசு. 
சாதிகள் இருக்குதடி பாப்பா..

No comments:

Post a Comment