Thursday, January 17, 2013

பொங்கல் வாழ்த்துச் சடங்குகள்




பொங்கல் வாழ்த்து சொல்வது வெறும் சடங்காகிப் போனதா?
எனக்கென்னவோ சில வருடங்களாக அப்படித்தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்ல நண்பர்கள் உறவினர்கள்
என்று தொலைபேசி அழைப்புகள் ..
தொலை தூரத்திலிருந்து ஒலிக்கும்  பாசமிகுந்தக் குரல்கள்
ஸ்நேகம் வளர்க்கும் விசாரிப்புகள் ... மனசு மத்தாப்பாய் மலர்ந்து சிலிர்க்கும்.
அண்மைக் காலங்களில்.. அதுவும் கைபேசிகள் வந்தப் பின்
எல்லோரும் ஊமையாகிவிட்டார்களோ என்ற பயம் வந்துவிட்டது.

அதுவும் எப்போதும் பேசுபவர்கள் கூட..
இப்போதெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அந்தக் குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல் வாழ்த்துகளும்
எனக்கே எனக்கானவை மட்டுமல்ல, ஏதோ அந்தக் காலத்தில்
தந்தி கொடுக்கும் போது சில குறிப்பிட்ட எண்களின் மூலம்
வாழ்த்துச் செய்தி அனுப்புவார்களே அதுபோல...
அந்த மாதிரி வாழ்த்து செய்திகளை வாசிக்கும் போது
அதிலும் குறிப்பாக நமக்கு ரொம்பவும் நெருக்கமான ( அதாவது நாம்
அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள்..!!!) இந்த மாதிரி
ஒரு ரெடிமேட் குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ அனுப்பினால்
மகிழ்ச்சிக்குப் பதிலாக கோபம் வருகிறது..
எரிச்சல் வருகிறது.
இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருப்பதற்கு
நீ
அனுப்பாமலேயே இருந்திருக்கலாமே
என்னைப் போல...
என்று சொல்ல நினைக்கிறது மனம்.

நினைப்பதெல்லாம் சொல்ல முடிவதில்லை.

சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையில்
சிலரும் இல்லை.


ஒரு 25 வருடங்களுக்குப் பின்னோக்கி இந்தப் பொங்கல் வாழ்த்துகளை
எண்ணிப் பார்க்கிறேன்.. என் தந்தைக்கு பொங்கல் வாழ்த்துகள் அட்டை
அஞ்சலில் வரும். நிறைய கவிதைகளுடனும் சில அச்சிட்ட வாழ்த்து
கவிதைகளுடனும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்
வாழ்த்து  மடல் வந்திருக்கும். எனக்கு அதெல்லாம் ரொம்பவும் ஆச்சரியமாக
இருந்தது. அப்பாவுக்கு அந்த அட்டையில் கையெழுத்திட்டிருக்கும்
ஒவ்வொரு எழுத்தும் புள்ளியும் சொல்ல முடியாத மகிழ்ச்சியைக்
கொடுத்தது என்பதை அதைப் பிரித்து வாசிக்கும் போது நேரில் பார்த்தவர்கள்
புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்கத்திலும் அறிஞர் அண்ணாவின்
திமுக அரசியலிலும் இருந்தவர் என் அப்பா. அக்காலக்கட்டத்தில் திருச்சி
மாநாட்டில், சேலம் மாநாட்டில் என்று மாநாட்டில் சந்தித்த கொள்கை
உறவுகள்.. அவர்களுக்குள் அடிக்கடி கடிதப் போக்குவரத்துகள் இருந்ததாக
தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் அவர்கள் பரிமாறிக்கொண்ட பொங்கல் வாழ்த்துகள் அவர்கள் பரிமாறிக்கொண்ட
இனிய நினைவுகள்.. எப்போதாவது யாரிடமிருந்தாவது வாழ்த்து அட்டை
வரவில்லை என்றால் அவர் உயிருடன் இல்லை என்கிற இன்னொரு
செய்தியும் இந்த வாழ்த்து மடல்களின் ஊடாகவே பயணம் செய்ததை
நானறீவேன். அது என்னவோ என் தந்தை மறைவிற்குப் பின்
ஓரு பொங்கல் கழித்து அவருக்கு வரும் வாழ்த்து அட்டைகள் நின்று போய்விட்டன! என் தந்தையும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி இருக்க வேண்டும். ஓராண்டு அனுப்புவது நின்றபின் அவருக்கு வந்துக்கொண்டிருந்த
வாழ்த்து அட்டைகளும் தங்கள் மும்பை பயணத்தை நிறுத்திக் கொண்டதை
என்ன வென சொல்லட்டும்?


எனக்கும் வாழ்த்து அட்டை ஒருவர் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவர்தான் மும்பையில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை அமைப்பாளர்,
தூரிகை என்ற காலாண்டு இதழின் ஆசிரியர் நாஞ்சில் அசோகன் அவர்கள்.
என் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். என் கவிதைகளின் தீவிர ரசிகர்.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மராட்டிய மாநிலத் தலைவராக இருந்தார். அவர் 19-11-2006ல் மும்பையில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு ஒன்றை நடத்தினார். தன் கைப்பணத்தைப் போட்டுத்தான். அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அன்றைய மத்திய இணை அமைச்சராக இருந்த க. வேங்கடபதி அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் மும்பையில் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எனக்கும்
"புரட்சிக் குயில்" என்ற விருதை வழங்கினார். (என்னிடம் ஒப்புதலோ இசைவோ கேட்கவில்லை, !) அதன் பின் நான் அவரிடம் கோபித்துக் கொண்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதால் 'என்ன சார், நானெல்லாம் என்ன அப்படி புரட்டி பண்ணிட்டேனு இந்த விருது கொடுத்திருக்கின்றீர்கள்? என்று கேட்டேன். வழக்கம் போல அவர் புன்னகையும் அதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சொல்லிவிட்டார். அதிலும் அவர் கொடுத்த விருதை நான் என் பெயருடன்
சேர்த்துக் கொள்வதில்லை என்ற வருத்தம் வேறு அவருக்குண்டு!!
அவர் ஒவ்வொரு வருடமும் எனக்கு பொங்கல் வாழ்த்தை கூரியரில்
சரியாக பொங்கல் அன்று கிடைப்பது போல அனுப்புவார். இந்த வருடம்
அந்தப் பொங்கல் வாழ்த்து வரவில்லை! ஏனேனில் அவர் உயிருடன் இல்லை.
அவர் இருக்கும் போதெல்லாம் அவர் அனுப்பிய போதெல்லாம் அந்த
வாழ்த்து அட்டையின் அருமையை நான் உணரவில்லை. அவருடைய
வாழ்த்து அட்டை வராத  இந்த வருடம் அந்த வெறுமையை வெற்றிடத்தை
உணர்கிறேன்.

குமணன் நங்கை இணையர்  ஒவ்வொரு வருடமும் பொங்கல் வாழ்த்து அனுப்புவார்கள்.
தற்போது  தமிழ் இலெமுரியா மாத இதழ் நடத்துவதால் அதிலேயே எல்லோருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லிவிடலாமே என்று தனிப்பட்ட வாழ்த்து மடல்களைத் தவிர்த்திருக்கலாம்!

எப்படியோ வாழ்த்துகள் சொல்வது நின்று போய் வெறும் சொற்களாய்
ஊமையாய் உலா வருகின்றன.
பொங்கல் விழாக்கள் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று
வண்ணமிகு அலங்கார அழைப்பிதழுடன் எதிரணிக்குப் போட்டியாக
களத்தில் நிற்பதைக் காட்டும் அடையாளமாய் சுருங்கிப் போய்விட்டது.
பொங்கல் வருகிறது போகிறது...

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே துணை

என்ற தைப் பொங்கலின் முழுமையான அர்த்தங்களை முழுவதும்
இழந்து நிற்பதை அறிந்தும் அறியாமலும் எப்போதும் போல
ஒவ்வொரு வருடமும் பொங்கல் வருகிறது போகிறது
தை அமாவசைச் சடங்கு சம்பிரதாயம் போல.




No comments:

Post a Comment