Tuesday, February 14, 2012

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்
திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு
இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.

இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.
ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க
முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க
அவன் மட்டும் தான் காரணமா?

உண்மையான குற்றவாளிகள் யார்?

*பள்ளி நிர்வாகம்*
. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்
என்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்
வகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்
மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்
பள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு
வந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்
வகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது
அவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு!

சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்
வடிகாலாக "நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்!" என்ற போர்வையில்
நடத்தும் அதிகார துஷ்பிரயோகங்கள்.

குடும்பம்
----------

அம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்
ஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்
பி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது
இதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு
மேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்
மீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்
வாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் நகல்கள் அல்ல. இந்தப் புரிதலை
அதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்
வாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,
நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்
எப்படியும் எஞ்சினியர் ஆகியே தீரவேண்டும். இல்லையென்றால்,
அந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே
முடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்
நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்
அவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..?
ஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,
பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்
எரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.
90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்
விரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே
இப்போது நாம் பார்க்கிறோம்.
அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு
வந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து
அந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு
நடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.

கோச்சிங் க்ளாஸ்
-----------------
ஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல
அவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செயலாக பார்க்கப்பட்டது.
இன்று? பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் போதாது என்று கோச்சிங்
க்ளாஸ்கள்.... ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்
அதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்!
இந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.
ஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி
வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட
நேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்!
காலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க
வேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்
கண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்
கோச்சிங் க்ளாஸ்களையும் நானறிவேன்.

விளைவுகள்
-----------------

மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை
விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்
சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.
நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற
அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.
யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்
கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை
மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.

(சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில்
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களை, திட்டமிட்டு
தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 14 இடத்தில் குத்தி கொடூரமாக கொலை
செய்திருக்கிறான். அந்தச் செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,
பள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்
நோக்கமல்ல. ).

3 comments:

  1. நமது கல்வி முறையைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

    ReplyDelete
  2. Saravana Rajendran
    Schedule cleanup
    To tamil_ulagam@googlegroups.com
    வணக்கம் அம்மா நலமா?

    இதில் மற்றேருகாரணமும் உண்டு தாய் மொழி ஒருவரைபக்குவ படுத்தும்,
    குழந்தைபருவத்தில் தாய்பால் என்றால் பள்ளிபருவத்தில் தாய்மொழி. ஆனால்
    தாய்மொழியை ஏட்டுச்சிரைக்காயாக்கிவிட்டோம். கிழக்காசிய நாடுகளில்
    இரண்டாம் நிலைப்பருவத்தில்தான் பிற மொழிப்பாடம் போதிக்கப்படுகிறது. இது
    கொலை என்பதால் வெளியே வந்திருக்கிறது காலசென்டர் அசிங்கங்களைவிட
    காண்வெண்ட் அசிங்கங்கள் அதிகம்ஆணால் அதைகண்கொள்ளா மனப்பாங்கு
    பெற்றோர்களுக்கு வந்துவிட்டது. அப்படியே இந்த கொலையையும் கண்டுகொள்ளாமல்
    விட்டுவிடுவார்கள்.

    ReplyDelete
  3. முழுக்க முழுக்க பெற்றோர்களே காரணம். கௌரவத்திற்காக படிக்க வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள். அதனால்தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகக்காரணம். பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப படிக்கவிடுவதில்லை. பெற்றோரின் எண்ணங்கள் திணிக்கப்படுகின்றன. மதிப்பெண் ஒன்று மட்டும்தான் வாழ்க்கை என எண்ணுவதும்தான் காரணம். உங்களுடைய கருத்துக்கள் சிந்திக்கவைக்கின்றன. இதற்கு மேலும் அரசாங்கம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் மாணவச் சமுதாயம் பெரும் சீர்கேட்டைச் சந்திக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete