Saturday, July 9, 2011

தமிழக அரசு தீர்மானமும் சாத்தியக்கூறுகளும்.



தமிழ்நாட்டு சட்டசபையை துவக்கிவைத்து ஆளுநர்ஆற்றும் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
உரைகளை இடைநிறுத்திவிட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாழ்க!
என்று ஒவ்வொருவரும் வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து ஓய்வாக
இருக்கும் போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அவரை வாழ்த்துவதில் எனக்கொன்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால்
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று சொன்னதும் இவர்தான்
என்பதை மறக்க முடியவில்லை.

இலங்கை மீது பொருளாதர தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை
தீர்மானத்தில் சொல்லப்படுகிறது. தடைவிதிக்க நடுவண் அரசு சம்மதிக்குமா?
ஏனேனில் போர் முடிந்தவுடன் சுவிட்சர்லாந்தில் 24 நாடுகள் கூடி போர்க்குற்ற
தீர்மானம் இலங்கை மீது கொண்டுவந்தப் போது அத்தீர்மானம் தோல்வியுற
காரணமாக இருந்ததே நம் இந்திய அரசுதானே!

ஜோதிபாசு மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமும்
மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போலீஸ் படையைக் கொண்டு
போரிடப்போவதாக முழங்கியதும் அடிக்கடி இப்போது நினைவுப்படுத்தப்படுகிறது.
பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா அரசால் தெற்கெல்லையில்
இருக்கும் இலங்கை மீது அதே நடவடிக்கைகளை எடுக்கும் சூழல்
இருக்கிறதா?

இதை எல்லாம் கடந்து தமிழக முதல்வர் போர்க்கோலம் பூண்டால்
இந்திய அரசு வழக்கம் போல அவர் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு
வழக்குகளைக் கொண்டு தன் வளையத்துக்குள் இறுக்கிப்பிடிக்காது
என்பது என்ன நிச்சயம்?

இந்தத் தீர்மானமே நடுவண் அரசை மிரட்டுவதற்கும்
அரசியல் சுயலாபங்களுக்கும் கையில் எடுத்திருக்கும்
சாட்டையாக மட்டுமே இருக்குமானால் ....

கடந்தக் கால தமிழர் குறித்த வரலாற்று நிகழ்வுகள் இப்படியான
கசப்பான உணர்வுகளையும் அச்சத்தையும் தருகின்றன.

வடக்கு மாநிலங்களில் தன் இராணுவத்தை வைத்தே மனித
உரிமைகளைச் சிதைத்தாலும் இந்திய அரசு , சர்வதேச அளவில்
மனித உரிமைகளை மதிக்கும் இந்திய தேசம் என்ற பிம்பம்
சுக்கு நூறாக உடைவதை நம் தேசத்தலைவர் வகையறாக்கள்
அப்படி ஒன்றும் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது
வசமாக இலங்கை அரசை மட்டும் மாட்டிவிட்டு தப்பித்துக்
கொள்வார்கள். அதில் நம்மவர்கள் கில்லாடிகள்.
அந்தக் கில்லாடித்தனம் மட்டுமே இப்போதைக்கான
நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை.

1 comment:

  1. கில்லாடித்தனமா அல்லது சகுனித்தனமா?ரசித்தேன்:)

    ReplyDelete