Tuesday, June 21, 2011

காயங்களுக்கு மயிலிறகாய் கவிதைமொழி....


என் கவிதை தொகுப்பு "ஐந்திணை"
இருவாட்சி பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.
அந்நூலுக்கான என்னுரையில்.....


காதல் ஒரு நினைவுச்சுருள்.
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் ஆண்டுகளின் நினைவுகளைப்
புரட்டிப் போடும் வேகம்
காதலின் நினைவுச்சுருளுக்குள் பத்திரமாக
நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்
நமக்குள் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
அந்த நினைவுகளைப் புரட்டிப்பார்ப்பதும் அசைப்போடுவதும்
பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பொழுக்கத்தில் ஒரு கரும்புள்ளிஎன்று
காலம் காலமாக அவளுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான்
அந்த நினைவுச்சுருளைத் தொட்டுப்பார்க்கவே பெண்கள் அச்சப்படுகிறார்கள்.
சமூகம், சமூக அந்தஸ்த்து, குடும்பம்..
இப்படியாக சொல்லப்படும் காரணங்கள்
அனைத்தும் பெண்ணை மையமாக்கி
சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் வளையங்கள்.
அந்த வளையத்துக்குள் இருந்துக்கொண்டே
பிரபஞ்சம் போல பரந்து விரிந்து
தன்னை ஆட்கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்பது
சங்ககாலம் தொட்டே பெண் எதிர்நோக்கும் பிரச்சனையாகவே
வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
புறம் சார்ந்தக் காரணிகள் ஒருபக்கம் என்றால்,
புறக்காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும்
அகம் சார்ந்த உணர்வுகளே குற்றமாகி
அவள் கழுத்துக்கு மேலே தூக்குக்கயிறாய்
எப்போதும் அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது
.

காதல் இயல்பானது-
காதல் இயற்கையானது -
என்ற உண்மையை அவள் உணர்ந்து கொள்ள நடக்கும் போராட்டத்தில்
அவள் சமூகத்துடன் மட்டுமல்ல,
'நான் - பெண் ' என்ற தன் சுயத்துடனும்
போராடிக் கொண்டே இருக்கிறாள்.
இந்தப் போராட்டத்தில்
உண்மையை அப்படியே நிர்வாணமாக்க
அவள் உடல் கூசுகிறது.
மொழிகளின் வசீகரமான வார்த்தைகளால் உண்மைகளை
அவள் அலங்காரம் செய்துக் கொள்கிறாள்.
கவிதைமொழி அவள் காயங்களுக்கு மயிலிறகாய் தடவிக்கொடுக்கிறது.

**

காதலும் பெண்ணும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து கரைந்து நிற்பதை
அவள் உணரும் தருணத்தில்..
அவள் தான் காதல்
காதல் தான் அவள்.
அவளிடமிருந்து எவராலும் எக்காலத்தும் காதலைப் பிரித்தெடுக்க முடியாது.
குட்டிப்போட்டு பாலூட்டுவது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்ற வட்டத்தை
அவள் உடைத்துவிட்டாள். காதல் மட்டுமே அவளுக்கான அடையாளம்.
ஆகாயத்தின் கீழிருக்கும் அனைத்தையும் அவள் காதல் தனதாக்கிக் கொள்கிறது
களவும் கற்பும் ஊடலும் கூடலும் மட்டுமே காதலாகி இருந்த அவள் வாழ்க்கையில்
நெய்தலும் பாலையும் காதலின் வலிமையைக் காட்டும் அவள் ஆயுதங்களாகின்றன.

**

உங்கள் காதல் கவிதைகளின் போதையில் பெண் தள்ளாடுவதை
உங்களின் வெற்றி என்று கொண்டாடினீர்கள்.
அப்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது
காதல் என்ற பெயரால் அவள் கட்டப்பட்டிருக்கும் சூக்குமம்.
காதலுக்கு கூட இனி அவள் அடிமையாக இருக்க மாட்டாள்.
காதல் மட்டுமே விட்டு விடுதலையாகி பறக்கும் சுகத்தைத் தரும்
என்பதை அவள் தனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் சேர்த்தே பாடிக்கொண்டிருப்பாள்.
வேடனின் வலையுடன் பறந்தப் புறாவின் கதையை நீங்கள் அறிவீர்கள்.
வேடன் வலையையே சிறகாக்கி பறக்கும் புறாவாக அவள்

இதோ.. உங்களுடன்.

**

கவிதைகளில் "கூறியது கூறல்" இருப்பதை நானறிவேன். வெவ்வேறு காலக்கட்டத்தில்
எழுதியவை என்ற காரணங்களுக்கெல்லாம் அப்பால் அபாயங்கள் இருப்பதை
அடிக்கடி நினைவுபடுத்தினால் விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்ற நப்பாசைதான்!
உள்ளாடையிலிருந்து உள்ளாட்சி தேர்தல் வரை இங்கே அரசியல் இருக்கும் போது
ஐந்திணையிலும் அரசியல் கலந்திருப்பது ஆயுள் தண்டனைக்கான குற்றமா என்ன?

**


ஐந்திணையை என் அப்பச்சி - அப்பாவின் அம்மா - நினைவில் வாழும்
என் பாட்டி அமராவதி சுப்பையாவுக்கு... என்று ஒற்றைவரியில்
அறிமுகப்படுத்துவது அவளுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்காது.
என் பாட்டியின் புகைப்படம் இல்லவே இல்லை. நாங்கள் யாரும் அவளைப்
பார்த்ததில்லை. ரவிக்கையும் காலில் செருப்பும் அணிவது மறுக்கப்பட்ட
சமூகத்தில் அவள் 1915வாக்கில் தன் திருமணத்தின் போதே திருநெல்வேலி சீமையிலிருந்து
ரவிக்கை அணிந்து காலில் செருப்புடன் எங்கள் கிராமத்தில் அடியெடுத்து வைத்து
மவுனமாக ஒரு புரட்சியைச் செய்திருக்கிறாள்..கொழும்பு, கராச்சி, பம்பாய் என்று
தாத்தாவுடன் கப்பலில் பயணம் செய்திருக்கிறாள். அவள் செய்த புரட்சிகளைப்
புரிந்துக் கொள்ளவும் பெருமையுடன் உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஐந்திணையில்
ஒரு புள்ளி வைத்திருக்கிறேன்.

**

கடுகளவு உதவி செய்தாலும் அதைக் கடலளவாய் எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும்
பேருள்ளம் சிலருக்குதான் உண்டு. என் நட்புவட்டத்தில் எப்போதும் அந்த
அலைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் அன்பாதவன் அவர்கள். அவருடைய முயற்சிதான்
என் எழுத்துகள் பல அச்சேற உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றன.
தன் பணிகளுக்கு நடுவில் இக்கவிதைகளுக்கு அவரே அணிந்துரையும் தந்து
சிறப்பு செய்திருக்கிறார்.
வடிவமைத்த கோவை பாலா, வெளியிடும் உதயக்கண்ணன், என் கவிதைகளுக்கு
இடமளிக்கும் சிற்றிதழ், இணைய இதழ் தோழமை உறவுகளுக்கும் என் வணக்கமும்
நன்றியும்.

3 comments:

  1. congrats.
    how will we read ur fifth collection of poems...?
    Try to put it in ur blog.
    eagerly ur poetry reader,
    Naa.Muthu Nilavan,
    Pudukkottai.
    www.valarumkavithai.blogspot.com

    ReplyDelete
  2. comments ellaam padippathe illaiyaa ?
    allathu pathil alikka neram illaiyaa? anbudan,
    naa.mu.

    ReplyDelete
  3. NO No sir
    nothing like that.
    i have already arranged to send my
    book directly from the publisher.

    ReplyDelete