Tuesday, December 1, 2009

பாட்டுலகின் பாட்டனார்கள்

பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்
-------------------------------------------------



புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்றும் - நம்
தந்தையர் நாடென்றும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வேஷமிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலை காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியை
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
-------

தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்- என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.

-------------


திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி..
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்துப் போன
என்னையும் உன் மண்ணையும்.

---

எங்கள் போர்முரசே
தெந்திசையைப் பார்த்து
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த
புத்தனின் கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளை கனவுகளை
அக்னிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.

உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதற கதற
ரத்தம் சொட்ட சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.

----

உன் வீட்டில்
உன் கவிதைகளை
உரக்க வாசித்தே
ஊராளும் கூட்டம்
தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
இலவசமாக பல்பொடி
வழங்கலாம்
போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
மருத்துவர்கள் மாறி மாறி
கூட்டணி அமைத்து
கூட்டணி உடைத்து
தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
காலை 10 மணிமுதல்
பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும்
அதிசயங்கள் நடக்கலாம்
பார்வையாளர் வரிசையில்
பதுங்கி இருக்கிறது
உறைக்குள் வாளாக
உறங்கும் போர்ப்படை.

---


தமிழ்த் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக-
முலை வீசி எறிந்த -எம்
கொற்றவை சாட்சியாக-
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
'கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்'

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல- அவன்
பாடல்களும் கனவல்ல.

-----

(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
"பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்..
"பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் உரைவீச்சு.)

3 comments:

  1. N. Ganesan (naa.ganesan@gmail.com)
    Sent: 02 December 2009 18:51PM
    To: tamil_ulagam@googlegroups.com; tamilmanram@googlegroups.com; tamizhamutham@googlegroups.com; Santhavasantham (santhavasantham@googlegroups.com); panbudan@googlegroups.com; anbudan@googlegroups.com


    தமிழ் இசைமரபில் வந்த பாரதிதாசனார்
    முதலில் பழைய மரபிலே பாடல்களை இயற்றினார்.
    புதுச்சேரி மணக்குள விநாயகர் மீது பாரதிதாசன்
    1926-ல் பாடிய திருப்புகழைத் தருகிறேன்:
    http://nganesan.blogspot.com/2009/08/manakkula-ganapati.html
    (பல புத்தகங்களில் சில எழுத்துக்கள் பிழையாக
    இருக்கும் - பொருள் தெரியாததால் நேரும் பிழை.
    எனவே என் வலைப்பதிவில் சரியான பாட்டைப்
    பதிந்து வைத்தேன். பதம் பிரித்தும் அளித்தேன், பாருங்கள்.)

    யாராவது மணக்குள வினாயகர் திருப்புகழைப் பாடித்தர முடியுமா?
    கிண்டியில் என்னுடன் படித்த ராஜ்குமார் பாரதி (பாரதியார் பேரன்)
    - திருமதி. சாந்தலட்சுமி மகன் நிரஞ்சன் பாரதி
    சந்தவசந்தம் குழுவில் இருக்கிறார். கேட்டுப் பார்க்கலாம்.


    பாரதிதாசனின் இன்னொரு அழகான அகப்பாட்டும் இருக்கிறது:
    http://nganesan.blogspot.com/2009/11/tamilmanam-songs.html
    (அதில் அவர் குறிப்பிடும் ஒரு தொடர் எங்கள்
    வாழ்நாள் தமிழ்க்கொடைகளில் ஒன்று.)

    ----------

    இந்த இழையில் பாரதிதாசன் பாடல்கள்
    - சினிமா, வெளியே பாடப்பெறவை
    - ஆடியோ, விடியோ தொடுப்புக்கள்
    இருந்தால் தொகுக்கலாம் என்று தொடங்குகிறேன்.

    'கொலை வாளினை எடடா
    கொடியோர் செயலறவே..

    தேனிசை செல்லப்பா
    http://www.youtube.com/watch?v=yu07YdALtHM

    வலியோர் சிலர் ...
    http://www.youtube.com/watch?v=lQVQ52LYAgs

    விரிந்த வானே
    http://www.youtube.com/watch?v=yQWAXjNfmdU

    தமிழுக்கும் அமுதென்று பேர்!
    http://www.youtube.com/watch?v=ox18GMDLDRk&feature=related

    ....

    இந்த இழையில் பாரதிதாசனாரின்
    பாட்டுகளின் தொடுப்புகள் இருப்பின்
    மக்களிடம் பகிர்ந்துகொள்ள
    உங்களை அழைக்கிறேன்.
    வாருங்கள். உங்களுக்கு நல்வரவு. நனிநன்றி.

    வணக்கம் கணக்கில!

    நா. கணேசன்

    ReplyDelete
  2. N. Ganesan (naa.ganesan@gmail.com)
    Sent: 02 December 2009 18:19PM
    To: tamil_ulagam (tamil_ulagam@googlegroups.com)


    அருமை! கவிதாயனி அவர்களே.

    சிற்பியுடன் பேசி நாளாயிற்று.
    இதை அனுப்பி உங்களுக்கும் படி இணைக்கிறேன்.

    வலைப்பூவிலும் பதிந்து வாருங்கள்.
    தமிழ்மணம் நட்சத்திரமாக்க கு்ழுவினருக்கு எழுதுகிறேன்.
    ஊரை, மும்பை வாழ்க்கையை, சந்தித்தோரை,
    கவிதைகளை இடுங்கள்.

    அன்புடன்,
    நா. கணேசன்

    ReplyDelete
  3. From: வே.மதிமாறன் (askmathi@gmail.com)
    Sent: 02 December 2009 15:44PM
    To: Puthiyamaadhavi (puthiyamaadhavi@hotmail.com)
    தோழருக்கு வணக்கம்.
    எப்படி இருக்கிறீர்கள்?
    உங்கள் கவிதை-உரைவீச்சு ஈழப்பிரச்சினையை திராவிட இயக்க பார்வையில் உணர்வோடு சிறப்பபாக அலசுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete