Tuesday, September 16, 2008

அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா

என்னை என் நிழல் தேடி வந்து
தொடரும் முன்பே
தொடர்ந்தக் காற்றின் அலைகள்.
எங்கிருந்து புறப்பட்டு வந்தது இந்த அலைகள்?.
கருவில் தொடர்ந்து வந்தக் காற்றின் ஈரமா?
மரபணுவில் ஒட்டிக்கொண்டிருந்த உயிரின் வாசமா?.
எத்தனைப் புயல், எத்தனை இடி , எவ்வளவோ மழை..
அனைத்திலும் ஆடிப்போய் ஒடிந்துவிட்டோம் என்று
உருவம் மாறி நின்றாலும் மீண்டும் மீண்டும்
இந்தக் காற்றின் வாசம் என் சுவாசத்தில் கலக்கிறது..
நான், என் இனம், என் மண், என் மனம்
எதுவும் அறியாத வயதில்
என்னை ஆட்கொண்ட
உயிரலையின் மிச்சமாய்-
இப்போதும் என் நினைவுகளில்
அரபிக்கடலோர கடலலையைப் போல
என்னை என் உயிரை
என் நினைவுகளை
என் எழுத்துக்களை
என் நட்புவட்டத்தைச்
சுற்றி வரும் பூமியாய்..
.






அன்று..
09 டிசம்பர் 1961
அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணாவின் குரல்.
நெப்பூ பூங்காவில் மனித அலைக்கூட்டம்.
கடலின் அலைகள் அனைத்தும் சேர்ந்து வந்து மோதி நின்ற காட்சி..
சின்ன உருவம்.. ஆளுயர மாலை.. அதையும் ஐந்துபேர் சேர்ந்து
தூக்கிப்போடும் காட்சி..
கூட்டத்தில் கடைசியாக பெருமாள் தாத்தாவின் தோள்களில் நான்.
என்ன பேசினார்?
யார் இவர்? ஏன் இவ்வளவு கூட்டம் ?
எதுவும் புரிகின்ற வயதில்லை.(5 வயது கூட நிரம்பாத சிறுமி நான். இச்சம்பவத்தைப் பலமுறை பலர் சொல்லியதால் என் நினைவுகளில்
அழியாமல் செதுக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்)
மேடையில் இருப்பது என் தந்தையும் அவருடைய தோழர்களும்.
எனக்கு அவர்களை மட்டும் பார்க்க வேண்டும்..
நான் அவர்களைப் பார்த்தேன் என்பதை நாளை மறுநாள் பெருமையாக
சொல்லவேண்டும்.
அவ்வளவுதான்.
பார்த்தேன். பம்பாய் தி.மு.க. அண்ணாவுக்கு இதயம் அளித்தல்
ஒரு இதயம் வெள்ளியில் செய்யப்பட்டு "ஷீல்டாக.
அதைப்புன்னகையுடம் கொடுக்கின்றார் என் தந்தை.
தந்தையின் முகத்தில் தெரிந்தப் புன்னகை, ஆனந்தம்..
அப்படி ஒரு முகப்பொலிவை அதன் பின் என்றுமே நாங்கள் கண்டதில்லை.
அது என்ன ஆனந்தம்?
அப்போது அறிஞர் அண்ணா அவர்களை யாருமே தங்களின் இல்லத்திற்கு
அழைக்கவில்லை. அதை அண்ணாவே சொல்லுகின்றார்.
"என் தம்பிகள் என்னை அன்புடன் கவனித்தார்கள். ஆனால் யாருமே
"அண்ணா வா என் வீட்டுக்கு!" என்று அழைக்கவில்லை. அழைக்காத
வருத்தமில்லை, ஆனால் அழைக்கமுடியாத வாழ்க்கைத்தரத்தில் தான் என்
தம்பிகளின் வாழ்க்கைத்தரமிருக்கின்றது என்பதை எண்ணித்தான் வருத்தம்"

அண்ணா அவர்கள் சொன்னது அன்று உண்மைதான்.
அண்ணாவை அழைத்துச் சென்றால் அவருடைய தம்பிகள் எத்தனைபேர்
இல்லத்தில் அவரை அமர வைப்பதற்கு நாற்காலி இருந்திருக்கும்?
எண்ணிப் பார்க்கின்றேன்.

இது மட்டுமா..?
அன்று அப்படித்தான்..
தமிழ்ச் சினிமா பார்க்க குடும்பத்துடம் அனைவரும் மகிழ்வூர்தியில்
ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒன்றிரண்டல்ல.. ஐந்தாறு பிள்ளைகள்.
நானகைந்து குடும்பம்.. எழெட்டு மகிழ்வூர்தி..
எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்..
திரையரங்கில் நுழைந்தவுடன்.. ஒரே கசமுசா..
சத்தம், குழப்பம்..விசாரித்ததில் அவர்கள் பார்க்க வந்தக்காட்சி முடிந்துவிட்டது.
மிகவும் முக்கியமானக் காட்சியாம். அவர்களைப் பொறுத்தவரையில்.
என்ன காட்சி தெரியுமா?
கலைஞர் அவர்கள் பூம்புகார் படத்தின் ஆரம்பத்தில் பேசும் காட்சி.
படம் பார்க்காமலேயே திரும்பி வந்தோம்.

முதுகலை படிக்கும்போது தந்தையாரிடம் அறிஞர் அண்ணாவின் பார்வதி பி.ஏ.
நாவலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் சொல்ல வேண்டிவந்தது
சொல்லாமலிருந்திருக்கலாம்.
"அறிஞர் அண்ணாவின் நாவலில் பிரச்சார நெடி.. மிகச் சிறந்த இலக்கியம்
படைக்கும் திறமை இந்த மாதிரி பிரச்சாரத்தில் வீணாகிவிடுகின்றது.."இப்படி
சொல்லி வைத்தேன். விளைவு..
அறிஞர் அண்ணாவை விமர்சிக்கும் அளவுக்கு நீ வளர்ந்துவிட்டாயா..?
அவ்வளவுதான்.. பிறகென்ன.. என் முனைவர் படிப்பு கனவாகிவிட்டது.
முதுகலையில் வாங்கிய தங்கப் பதக்கம்கூட தந்தையின் மனசை மாற்றவில்லை..

இப்படி .. இப்படித்தான்.

சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞர் அண்ணன் அறிவுமதியும் இதைப்போல
அவருடைய தந்தையாரைப் பற்றியும் நிறைய என்னிடம் சொல்லியிருக்கின்றார்.
இது ஒரு தலைமுறை..
எங்கள் தந்தையர் தலைமுறை.
ஆரியமாயையும் கம்பரசமும்தான் எங்களுக்கு அன்று வாசிக்க கிடைத்தப் புத்தகங்கள்.
திராவிடநாடு, விடுதலை, நம்நாடு ..இதெல்லாம் தான் எங்களுக்கு வாசிக்க
கிடைத்தப் பத்திரிகைகள்.
வீட்டின் சூழல் இப்படி..
பள்ளியிலோ இந்துத்துவா கொள்கைகளின் உரைகல்
கல்லூரியோ கத்தோலிக்க சிஸ்டர்களின் புனித பைபிள்
நாத்திகம் கொள்ளைதான். ஆனால் அதுவே எங்களிடம் திணிக்கப்படவில்லை.
அன்று வந்தவர்கள் தங்கியது எங்கள் மாடி அறையில் ..
அவர்கள் வந்தால் போனால் தங்க வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே
மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தை ஊரில் வைத்துவிட்டு வாழ்ந்த
வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்..
மதுரையில் மாநாடா, திருச்சியில் மாநாடா...?
சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் கட்டாயம் தன் தோழர்கள் புடைச்சூழ
எங்கள் ஒவ்வொருவரையும் தந்தை விடுதிக்குப் பார்க்க வருவார்..
அவர் தோள்களில் நீண்ட நேரியல் தொங்க வெள்ளை நிற ஜிப்பாவில்
வந்திறங்கும்போது..
பெருமையாக இருக்கும். எல்லோரும் விடுதியில் அன்று
என்னையே பொறாமையுடன் பார்ப்பது போல ஓர் ஆனந்தம்...

வளர வளர எல்லாம் புரிந்தது.
புரிய புரிய மனசில் வெறுப்பும் வேதனையும்தான் மிஞ்சியது.
இப்போதும் இவர்களில் சிலர்.. இதே அரபிக்கடலின் காற்றில்
காற்றில் கரைந்த கற்பூரமாய்
பார்க்கப் பார்க்கப் பதைக்கின்றது மனசு.
எதை எல்லாமோ சாதிக்கப் போகிறொம் என்று எழுந்த அலைகள்
எங்கே போனது?
இப்போதும் தலைவர்கள் வருகின்றார்கள்.
வந்தால் தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்.
போய்வர ஆகாயவிமானம்தான்.
அன்றிருந்த வறுமை இன்று இல்லை.
ஆனால் யாருக்கும் சொல்லத்தான் முடியவில்லை.
"நானே வருகின்றேன். என் செலவில் என்று."



அப்படிச் சொன்னவர்கள் இருந்தார்கள் என்று தான் எழுதமுடிகின்றது.
இருக்கின்றார்கள்... என்று எழுதும் பாக்கியம் என் எழுத்துக்களுக்கு கிடைக்கவில்லை.
இது திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல..
காந்தியம் பேசிய காங்கிரசு..
பொதுவுடமை பேசிய கம்யூனிசம்..
அரபிக்கடலோரத்தில் இருக்கும் எல்லா இயக்க கொடிகளின் கதையும்
ஒரே கதைதான். தலைப்பை மட்டும் மாற்றினால் போதும். அப்படியே
அதே தொண்டர்கள்.. ஒரே மாதிரியான தலைவர்கள்..
ஒரே மாதிரியான அறிக்கைகள், பிரச்சாரங்கள், உத்திகள்
ஊமையாக அனைத்தைக்கும் சாட்சியாக அரபிக்கடலோரம்
அதே அலைகளுடன் நானும் .....
கடலைத் தாண்டாத அலையாய்..
கரையைத் தொடும் கனவுகளுடன்
நித்தமும் ஓயாதப் போராட்டம்..
சலிப்படையவில்லை. தோற்றுவிடுவேன் என்ற அச்சமில்லை.
கால்களை நனைத்த ஈரம்
மனக்கண்களை ஈரமாக்கும் நாட்களுக்காக ..
மீண்டும் மீண்டும் என் அலைகள்..

அலையின் கவிதை..

நடக்கும் என்ற
கனவுகளில் நடந்தார்கள்
கிடைக்கும் என்ற
நினைவுகளில் வாழ்ந்தார்கள்

இன்று
அவர்களே கனவாகிப் போனார்கள்
அந்தக் கனவுகளின்
ஈரக்கசிவாய்
எங்கள் அலைகள்
உங்கள் கரைகளில்.


(புகைப்படத்தில் அறிஞர் அண்ணாவுக்கு "இதயம் வழங்குவது" அண்ணாவின்
பாசத்திற்குரிய பம்பாய் தம்பி பி.எஸ்.வள்ளிநாயகம் (என் தந்தையார்) . அண்ணா தமிழகத்தில் திமுக ஆரம்பித்தவுடன் பம்பாயிலும் திமுக அமைப்பை ஆரம்பித்தவர். பல வருடங்கள் பம்பாய் திமுக செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்தவர். அண்ணாவின் மறைவுக்குப்  பின் அரசியல் துறவறம் பூண்டவர்)

2 comments:

  1. ''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். என்ற அண்ணாவின் எண்ணம் ஈடேறும் நாள் எப்போது?????

    ReplyDelete
  2. Re: [tamil-ulagam] அரபிக்கடலோரம் அ���ிஞர் அண்ணா‏
    From: Mugu (emugu@yahoo.com)
    Sent: 19 September 2008 10:53AM
    Reply-to: emugu@yahoo.com
    To: puthiyamaadhavi@hotmail.com
    Anbulla Sakothari,

    Ungalin Malarum Ninaivalaikal mikavum arumai.

    Anna is always remembered for his wonderfull contribution towards
    tamilan and Tamilnadu.

    anbudan,
    MUGU
    Please visit my blog at emugu.blogspot.com

    ReplyDelete