Sunday, February 16, 2014

மாயை வரும் நாளில்...







மாயை என்னைச் சுற்றி
மந்திரக்கயிறாய் வலைவீசி
கண்ணாமூச்சி ஆடும் ஆட்டத்தில் ..
மூகமுடியுடன் முத்தமிடுகிறது.
கட்டிப்பிடிக்கிறது.
காதலாய், காமமாய், நட்பாய்,
உறவுகளாய்
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது..
கனவுகளில் வந்து பயமுறுத்துகிறது.
பக்கத்தில் வந்து
கடித்து துப்புகிறது.
கண்களால் எரித்து
கால்களைச் சுடுகிறது
கைகளைப் பிடித்து
விரல்களை நறுக்குகிறது.

கண்விழித்து அலறுகின்றேன்.
மெதுவாக பக்கத்தில் வருகிறது.
அவனைப் போல அருகில் வந்து
என்னைப் பருகி தாகம் தீர்க்குமோ?
உன்னைப் போல உறவுகொண்டு
என்னைத் தின்று பசி தீர்க்குமோ?
மாயை எப்படி இருக்கும்?
யாரைப் போல இருக்கும்?
கறுப்பா சிவப்பா?
காதலா கவிதையா?
மாயை என்னைத் தொடும்போது
உணர்வுகள் உயிர்த்தெழுமா?
இல்லை மரத்துப்போகுமா?
மரணத்தைப் போல
மாயை நிஜமானதா?
இல்லை , மரணம்தான் மாயையா?
மாயைக்கு மறுபிறவி உண்டா?
மரணத்தில் மாயை மரணிக்குமா? ஜனிக்குமா?
மாயையைப் பெற்றெடுத்த மாயாவி யார்?
எங்கே இருக்கிறாள்?
மாயை கண்ணுக்குத் தெரியாதாமே
கடவுளைப் போலவே!
உண்மைதானா?
மாயப்பிசாசு என்று
மாயையைப் பிசாசாக அலையவிட்ட
புண்ணியவான் யார்?

மாயை எனக்குள்
என்னை அறியாமல் நுழையுமோ?
அகண்ட வானத்தின் கருமேகமாய்
என் கருப்பை நிரப்புமோ? 
மேகங்கள் மறைத்த மலைமுகட்டில்
என்னை எனக்குள் பிரசவிக்குமோ?
சித்தம் கலங்க அலைகிறது மாயை
தன்னை தனக்குள்  தேடுவதாய்
வேதாந்தம் பேசும் மாயை
வரும்நாளில்  நானிருக்கும்
வாசல் திறந்திருக்க 
கதவுகளில்லாத மாளிகையைத்
கட்டிக்கொண்டிருக்கிறேன்.




2 comments:

  1. புதிராக இருப்பதை எல்லாம் ப்ரிந்து கொள்ளும் பயணத்தில் எழுவது எப்போதும் கேள்விகள் தானே தனபாலன்.

    ReplyDelete