Sunday, January 18, 2026

பெண் எழுத்து - பெருவெளி




பெண்களுக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

கைப்பிடித்த கணவனின் பிரதாபங்களை எழுதுவதைத் தவிர.

 காலை முதல் இரவு வரை அவள் வாழும் சமையலறையின் சமையல் குறிப்புகளை பெண்கள் எழுதலாம். குழந்தை வளர்ப்பு எழுதுவது தாய்மையின் வரப்பிரசாதம். நவீன நாகரீகப் பெண்மணியா.., அப்படியானால், அவள்

அழகுக்குறிப்புகளை எழுதலாம். ஓய்வான நேரம் வாய்த்தால் உங்கள் பூ பின்னல் கலைகளைப் பதிவிடலாம். உங்கள் கலை உள்ளத்தை வெளிப்படுத்த கோலம் வரையலாம். இப்படியாக பெண்கள் எழுதலாம். இப்படியாகத்தான் பெண்கள் எழுத வேண்டும் என்பதே இன்றும் கூட “பெண்கள் சிறப்பிதழ்கள்” மற்றும் ‘மங்கையர் மாத இதழ்கள்’ களின் அடிப்படை அம்சங்கள். இதைத்தாண்டி ஆண்டுக்கு ஒருமுறை வந்துப்போகும் மகளிர் தினத்தில் (மார்ச் 08) பெண்களின் உரிமைகள் என்று முழங்கி தொண்டை வறண்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் பத்திரமாக ஒதுங்கிவிடும் பெண்ணுலகம். .

 பெண்கள் சுயசரிதைகள் எழுதினால் கூட அதில் எழுதுவதற்கு எதுவுமில்லை. அதை ஒரு ரிவென்யு ஸ்டாம்பின் பின்பக்கத்தில் எழுதிவிடலாம் என்றுதானே ஆணுல அறிவு ஜீவிகள் சொல்லி இருக்கிறார்கள். அம்ருதா ப்ரீதமின் சுயசரிதைக்கு ரிவென்யு ஸ்டாம்ப் என்று குஷ்வந்த் சிங் ‘நக்கலாக ‘ சொன்னதையே தலைப்பாக்கியதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியுமா என்ன?

 ஆனால், இம்மாதிரியான குறுகலான பாதைகளில் பயணித்தாலும் பெண்களின் பார்வைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடவில்லை.

சன்னல் கம்பிகளின் ஊடாகத் தெரியும் வானத்தின் சிறியத் துண்டுகளும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்தவள் பெண். அந்தச் சின்னச் சின்ன துண்டுகளை ஒன்றாக்கி விரித்து பார்க்கும்போது நாம் காணும் பெண்ணுலகம் அண்டவெளியை சிறியதாக்கிவிடுகிறது. ‘எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்’ பெண்ணிய வாசிப்பு கட்டுரைகள் .. இந்த அசாதாரணமான பெண்வெளியை அவர்களின் எழுத்துகளின் வழியாக அடையாளம் காட்டி இருக்கிறது. பேராசிரியர்.அ. ராமசாமி அவர்கள் , பெண்களின் சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பெண்ணியப் பெருவெளியை ஒரு கோட்டோவியாமாக வரைந்திருக்கிறார். இதில் பிரபலங்கள் புதியவர்கள் என்ற அளவுகோல்களை அவர் முற்றிலும் விலக்கி வைத்திருப்பது இக்கட்டுரை தொகுப்பின் தனித்துவம்.

 பெண்கள் எழுதுவதால் அவை பெண்ணிய சிறுகதைகளா, தலித்துகள் எழுதுவதால் அவை தலித்தியமா என்ற விவாதங்களுக்கு பேராசிரியர் தன் தன் முன்னுரையில் ஒரு வகுப்பெடுத்துவிட்டுதான் நகர்ந்திருக்கிறார்.

“பொதுச்சொல் உணர்த்த நினைப்பது எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை. ஆனால் சிறப்பு சொற்கள் உணர்த்துவது அறிதலின்தொடக்கம். வேற்றுமையைக் கண்டறிவது மூலமே சிறப்புச் சொற்கள் உருவாகின்றன “ (பக் 20) என்று வகுப்பு எடுக்கிறார் பேராசிரியர்.

ஓளவையை ஓர் அறிவாளியாக காட்டும் எழுத்துகள் ஒளவை ஒரு பெண் என்பதையும் காட்டுகின்றன என்று சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் தன் பெண்வாசிப்பு தளத்தை நகர்த்தி இருக்கிறார். பேராசிரியரின் இந்த வகுப்பு நேரம் இக்கட்டுரைகளின் ஊடாக பயணிக்கும் புதிய வாசகர்களுக்கு தேவையானதாக இருக்கிறது. சில தெளிவுகளுடன் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட முடிகிறது.

 இக்கட்டுரைகள் 26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதை வடிவத்தை எடுத்துக் கொண்டு கதைகளை கோட்பாட்டு ரீதியாகவும் கதையின் உள்ளடக்கத்தில் பயணிக்கும் பெண் கதாப்பாத்திரங்களின் வழியாகவும் என்று இரண்டு வகையிலும் எழுதப்பட்டிருப்பது இதுவரை எழுதப்பட்ட பெண் எழுத்துகளின் பக்கங்களிலிர்ந்து இக்கட்டுரைகளை தனித்துவப்படுத்தும் இன்னொரு முக்கியமான அம்சமாகும். சமகால அரசியலுடன் கோட்பாடு ரீதியான புரிதலையும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு தனி சிறுகதையை மட்டுமே எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த சிறுகதைகளை எடுத்துக்கொள்ளாமல், பேராசிரியர் ஒவ்வொரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை மட்டும் எடுத்துக்கொண்டு அதைக் கோட்பாட்டு ரீதியாக அணுகி இருப்பதால் கட்டுரை தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் , அவர் எடுத்துக்கொண்ட 26 பெண் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புகளுடன் கட்டுரையாளருக்கு இருக்கும் வாசிப்பு அனுபவத்தையும் இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

 டாக்டர் திரிபுரசுந்தரி என்ற எழுத்தாளர் லட்சுமியின் ‘ ஏனிந்த வேகம்’ சிறுகதையை எடுத்துக் கொண்ட கட்டுரையில் ‘ லட்சுமியின் வாழ்க்கையை அவர் புனைகதைகளுக்குள் தேடினால் வாசிப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. ஆனால் முடிவு எடுத்தல், தனித்து வாழ்தல், சார்பற்ற வாழ்க்கைக்கு பெண்கள் தயாராதல் போன்றவற்றை முன்மொழியும் கதைகளின் வழியாகத் தன்னைக் கதைகளுக்குள் கொண்டுவந்தவர் அவர்”

(பக் 41) . இப்படியாக பல கட்டுரைகளில் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் குறித்த ஒரு கோட்டோவியத்தை வாசகரின் முன் வைத்துச் செல்கிறார் பேராசிரியர். இதில் அவருக்கு இருக்கும் தெளிவு அவரின் ஆழ்ந்த வாசிப்பு பின்புலத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒளிவட்டங்களிலிருந்து விலகி அவரவர் எழுத்துகளின் தனித்துவத்தைக் கண்டடையும் முயற்சியாக வெளிப்பட்டிருக்கிறது. இனி எதிர்காலத்தில், இலக்கிய உலகமும் பெண்ணியத் தளமும் , இக்கட்டுரைகளின் இந்த கோட்டோவியங்களை அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புலக அடையாளமாக அடிக்கோடிட்டு காட்ட முடியும்.

 சிறுகதை வடிவம் என்பது ஓர் உணர்வு நிலை, அதன் வெளிப்பாடு என்ற கட்டுமான நெருக்கடி கொண்டதுதான். எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளர் இந்த நெருக்கடிகளைத் தாண்டி, கதை மாந்தரின் இரண்டு மூன்று நிலைகளையும் உணர்வுகளையும் ஒரே கதைக்குள் கொண்டுவர முடியும். எழுத்தாளர் திலகவதியின் ‘போன்சாய் பெண்கள்” சிறுகதை இந்த நெருக்கடியை அனாயசமாக கடந்து வந்திருக்கிறது என்பதை பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் எழுத்துகள் சிறுகதை வடிவத்தில் எம்மாதிரியான சோதனை முயற்சிகளையும் செய்திருக்கின்றன என்பதை முன்வைக்கிறது ‘ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் ‘ (பக் 74) என்ற கட்டுரை.

 பெண்ணிய வெளியில் இக்கட்டுரைகள் முன்வைக்கும் கலை வடிவமும் அரசியல் வடிவமும் முக்கியமானவை. ஒவ்வொரு கட்டுரையின் முன்பாதி விளக்கங்கள் கோட்பாட்டு ரீதியாகவும் சமகால அரசியல் ரீதியாகவும் பெண்ணியத்தை அணுகி இருக்கின்றன.

“நிகழ்காலத்தில் பெண்ணியம் எனும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்ட து. இப்படியொரு கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறை தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. உடலியல், உளவியல், சமூகவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள் “ (பக் 31) என்று பெண்ணியம் என்ற அரசியல் கலைச்சொல்லின் இயக்க வரலாற்றை எழுதிச் செல்கிறார்.

  காதலையும் காமத்தையும் பசலையாகவும் புலம்பலாகவும் கட்டமைத்த ஆண் எழுத்துகளிலிருந்து பெண் எழுத்துகள் முற்றிலும் வேறானவை. பெண்ணுடல் என்பது காமத்தின் கொள்கலன் மட்டுமல்ல. அது அவளுக்கான உடலரசியலாக இருந்ததையும் தாண்டி அவள் வாழும் நிலத்தின் சமகால அரசியலில் என்னமாதிரியான வினை புரிகிறது என்பதை ஈழவாணியின் ‘வெண்ணிறத்துணி’ சிறுகதையை எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது சிறப்பு.

 ஈழவாணியின் இக்குறிப்பிட்ட சிறுகதை பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு அரசியலை எடுத்துக்கொண்டு அதை அப்பெண்ணுடல் எம்மாதிரியான சமகால அரசியல் ஆயுதமாக கையாண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான தளம் இக்கதை. இக்கதையைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் பெண்ணுடல் பெண்கதைகள் என்பதை தமிழ்ப்பெண்ணுடல் தமிழ்ப்பெண்களின் பண்பாடு கலாச்சாரம் இத்தியாதிகளை எளிதில் கடந்து பயணிக்கும் எழுத்தாக்கி, சமகால அரசியலில் பெண்வெளியின் மிக முக்கியமான புள்ளிகளை அடையாளம் காட்டுகிறது இக்கட்டுரை.

 இக்கட்டுரையின் அரசியல் களம் : இலங்கை., கதையை எழுதியவர் ஈழவாணி. கதையில் எழுதப்பட்ட பெண் சிங்களப்பெண். அவளும் அவள் முன்வைக்கும் அரசியலும் மொழி இன எல்லைகளைக் கடந்த பெண்ணுடலின் அரசியல்.

 நிர்மலி அவள் ஆர்மிக்காரனின் மனுஷி. ஆர்மிக்காரனின் மனுஷி என்பதால் இளசுகள் முதல் முதியவர்கள் வரை தள்ளி நின்றாலும் திமிரிக்கொண்டு திரியும் அந்த அரபுக்குதிரையை ரசிக்க அந்தக் கண்கள் தவறியதில்லை. சிங்களவர் கலாச்சாரப்படி திருமணம் முடிந்தப்பின் முதலிரவில் விரிக்கப்படும் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இருக்க வேண்டும். அது அப்பெண்ணின் கன்னிமைத்தன்மையை உறுதிப்படுத்தும். இல்லை என்றால் அவள் திருமணத்திற்கு முன் உடலின் காமத்தை அனுபவித்தவளாகி, கற்பிழந்தவளாக கருதப்பட்டு, விலக்கி வைக்கப்படுவாள். இக்கதையில் நிர்மலியின் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இல்லை. ஆனாலும் அவள் கணவன் கொடித்துவக்கு அவளை விலக்கி வைக்கவில்லை. கொடித்துவக்கு என்ற ஆணுடலின் அரசியல் என்னவாக இருக்கிறது. அதை நிர்மலி என்ற காமம் கொப்பளிக்கும் பெண், தன் பெண்ணுடலை அரசியலாக்கி எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதே அப்பெண்ணுடலில் கதை. இக்கதையின் அதிர்வலைகள் பெண்ணுடல் எழுதிய போர் அதிகாரம்.

 “ அவன் அடங்காத காமத்தோடு அவளைத் தீண்டி உச்சமடையும் தருணங்களில் எல்லாம் கற்பழித்து சீரழிக்கப்பட்ட இசைப்பிரியாவை பற்றி கேட்கத் தொடங்கினாள். இன்னும் சில கூட்டு புணர்ச்சியால் சீரழிக்கப்பட்டம் வன் காமப்புணர்வால் சாகடிக்கப்பட்ட பெண்களிற்கும் காரணமாக இருந்தவர்களில் நீயும் ஒருத்தன் தான் எனவும், எப்படி.. எந்த முறையில் இப்படியா.. இப்போது நீ என்னைப் புணர்வது போன்றா.. என்ற கேள்விகளை ஒவ்வொரு தொடுகையின் போது சத்தமிட்டு ஆவேசமாக கேட்கத் தொடங்கினாள்…..” (பக் 231)

  தேச மொழி இன அரசியலை பெண்ணுடல் வழியாக எழுதி அதிகாரம் எப்போதும் பெண்ணுடலுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற நுண்ணரசியலையும் பெண்கள் எழுதுகிறார்கள் என்பதற்கு ஈழவாணியின் இக்கதை ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. “ ஒரு பெண்ணாக எனக்கு தேசமில்லை, ஒரு பெண்ணாக நான் தேசத்தை விரும்பவும் இல்லை. ஒரு பெண்ணாக என் தேசமே என் உலகம் “ என்ற வர்ஜீனியா வுல்ஃப் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

தேசம் இனம் மொழி போர் வெற்றி இப்படியாக அதிகார மையத்தை நோக்கி நகரும் அனைத்தும் பெண்ணுடல் எதிர்கொள்ளும் சவாலாகவே இருக்கின்றன.

 இந்தியாவிலிருந்து கு ப சேதுஅம்மாள், பாவை, லட்சுமி, ஆர், சூடாமணி, எம். ஏ. சுசிலா, ஜோதிர்லதா கிரிஜா, திலகவதி, ச.விசயலட்சுமி, பாமா, காவேரி, புதியமாதவி, அம்பை, உமாமகேஸ்வரி, கவிதா சொர்ணவல்லி, சந்திரா, தீபு ஹரி, இலங்கையிலிருந்து தமிழ்க்கவி, லறீனா, கறுப்பி சுமதி, தமிழ் நதி, மஜீதா, ஈழவாணி, பிரமிளா பிரதீபன், சிங்கப்பூரிலிருந்து சுஜா செல்லப்பன், ஹேமா, அழகு நிலா ஆகியோரின் கதைகளை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைத் தொகுப்பு. சிறுகதை இலக்கிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதையும் தெளிவாக முன்வைக்கிறது.

  பெண்களின் உடலரசியல், உளவியல். குலம், குடும்பம் , தாலி ,பிள்ளைப்பேறு, பெண்களின் இரட்டை மன நிலை, ஒன்றாகவே பிறந்து வளர்ந்தாலும் பெண்களின் விருப்பங்களும் வாழ்க்கை முடிவுகளும் வேறுபடுவதன் காரணங்கள், கணவன் நண்பன் என்ற சொல்லாடல்களின் ஊடாக சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டும் பெண்கள், குடும்ப நிறுவனத்தின் கற்பிதங்களும் அதன் மீறல்களும் என்று பெண்ணின் அகமும் அவள் வாழும் சூழலின் அரசியலும் எழுதும் பெண்களின் எழுதப்படும் பெண்களை எவ்வாறெல்லாம் கதைகளாக்கி அக்கதைகளின் ஊடாக ஒரு பெருவெளியில் பயணித்திருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன

 . பெண்ணிய சிந்தனைவெளியில் ஓர் அரை நூற்றாண்டு பெண்வெளியை தொகுத்திருக்கும் இக்கட்டுரைகள் தனித்துவமானவையாகவும் கோட்பாட்டு ரீதியாக கதைகளை அணுகும் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆவணமாக கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. . விசாலமான வாசிப்புத் தளமும் கவனமாக தெரிவு செய்திருக்கும் கதைகளும் அதன் போக்குகளும் பெண்ணிய தளத்தில் கவனிப்புக்குரியவை.

  26 பெண் எழுத்தாளர்களைப் பற்றிய சிறுகுறிப்பு பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டிருந்தால் ஆய்வு மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மேலும் எடுத்துக்கொண்ட கதைகள் எழுதப்பட்டு வெளிவந்த ஆண்டுகள் சில கதைகளில் மட்டுமே தெரியவருகிறது. அக்குறிப்பு இணைக்கப்பட்டிருந்தால் கதைகளில் எழுதப்பட்ட பெண்களையும் முழுமையாக அக்காலப் பின்னணியுடன் எதிர்கால வாசகர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவை இம்மாதிரி கட்டுரை தொகுப்புகளின் ஆய்வு ரீதியான பார்வைக்கு வழிவகுக்கும்..

 -----------------------

கட்டுரை நூல் : பெண்ணிய வாசிப்புகள் :

 எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்.

எழுத்தாளர். அ. ராமசாமி

வெளியீடு : ஜீரோ டிகிரி.

பக் : 246 விலை ரூ 300.

------------------------------

நன்றி. அம்ருதா இதழ் 

Sunday, January 4, 2026

இந்தி வாத்தியாரு பொண்ணு.


பரமு சித்தப்பா டோம்பிவலியில்தான் இருக்கிறாராம். கேள்விப்பட்டதிலிருந்து அவரைப் போய் எப்படியும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை அதிகமானது. டோம்பிவலி ஒரு குட்டி மெட்ராஸ். அவரோட அட்ரஸ் இல்லை. அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் எந்த விவரமும் இல்லை. பரமு சித்தப்பா வீட்டில ட்யுஷன் போகிறாளாம்

என்னோட ப்ரெண்டோட மகளோட பிரண்டுக்கு மகள்.. அதுவும் இந்தி

டியுஷனாம்! பரமு சித்தப்பா வீட்டில இந்தி டியுஷனா என்ற மாபெரும்

சரித்திர கேள்விக்கு விடை தெரியாட்டி தலை சுக்கு நூறா வெடிச்சிடும்போல ஆயிடுச்சி நிலைமை.

 பரமு சித்தப்பாவும் இந்தி டியுஷனும் என்பது எம்புட்டு பெரிய ஷாக் நியுஷ், ப்ரேக் நியுஷ்னு பரமு சித்தப்பா பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். அதுக்கு கொஞ்சம் ப்ளாஷ் பேக் தேவைப்படும். ப்ளாஸ்பேக்கில் பரமு சித்தப்பாவைக் காட்டினா தானே எனக்கு ஏன் பரமு சித்தப்பாவைப் பார்த்தே ஆகனும்னு பரபரப்பா இருப்பது புரியும்!

 பரமு சித்தப்பா அந்தக் காலத்தில எங்க ஊரு ஹீரோ. அவரு தலைமுடியை நெற்றிக்கு மேலே ஒரு நத்தைக்கூடு மாதிரி சுருட்டு விட்டிருப்பாரு. எப்பவும் இப்படித்தான் அவரு முடி சுருண்டிருக்குமானு அவர் தூங்கி எந்திருக்கிறப்போ பார்த்தவங்களுக்குத்தான் சொல்ல முடியும். அது என்னவோ தெரியல.. அவரு முடியை சுருட்டி சுருட்டி வாரியதில அவரு வாய்க்காலில் குளிச்சிட்டு தலையைத் துவட்டினா கூட முடி அதே மாதிரி முன்னாலே சுருண்டிடும்னு எங்க பக்கத்துவீட்டுக்கார ரத்தினம் சித்தி அடிக்கடி சொல்லும்.

 ரத்தினம் சித்திக்கு ரெண்டு பிள்ளைங்க. சித்தப்பா துபாய்ல. சித்திக்கு பரமு சித்தப்பா மேலே ஒரு ‘இது’ . தன் புருஷன் துபாயிலிருந்து கொண்டுவந்த செண்டுபாட்டில், டீஷர்ட், பாட்டு கேசட்டு, கூலிங்க்ளாஸ் .. இப்படியா எதையாவது பரமு சித்தப்பாவுக்கு கொடுக்கும்.

இது ஊர்ல எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்.. எப்போதாவது தெருச்சண்டை வந்தாதான் இந்தக்கதை எல்லாம் வெளியில வரும். இல்லாட்டி கண்டும் காணாம அவுங்கவுங்க பாடுஜோலியைப் பார்த்திட்டு இருப்பாங்க எங்கத்தெரு பொம்பளங்க.

 எங்கத் தெருவில இருந்து ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்க எல்லாருக்குமே பரமுதான் லீடர். அரைமணி நேரம் நடந்துதான் ஸ்கூலுக்குப் போகனும். நாங்க நடப்போம். பரமு சித்தப்பா அப்போவே ஸ்டைலா சைக்கிளில்தான் ஸ்கூலுக்குப் போவாரு. அவரு சைக்கிள் பின்னால மற்ற பசங்க சைக்கிள் போகும். என்னவோ ஒரு மந்திரி பின்னால வண்டிகள் போறமாதிரி இருக்கும். படிப்பும் நல்லா படிப்பாரு. அதிலும் கணக்கு நல்லா போடுவாரு. இங்கிலீஷ் பேசுவாரு.

 எங்கத் தெருவில அவரோடு குடும்பம்தான் அந்தக் காலத்திலேயே படிச்சக் குடும்பம். வக்கீலு குடும்பம்னு பேரு. வக்கீல்னு சொன்னவுடனே என்னவோ கறுப்பு அங்கியை மாட்டிக்கிட்டு கோர்ட்டு வாசலில் நடக்கும் எல் எல் பி வக்கீலானா கேட்டிடாதீங்க. அப்படி எந்தக் கோர்ட்டு வாசலிலும் எட்டிப்பார்க்காத வக்கீலு குடும்பம். பரமு சித்தப்பாவோட அப்பா அந்தக் காலத்திலேயெ இலங்கைப் போயி வெள்ளைக்காரங்கிட்டே வேலைப்பார்த்தவரு. வெள்ளைக்காரதுரைக்கு மனு எழுதறது, கலைக்டர் ஆபிஸ்க்கு மனு எழுதிக்கொடுக்கறது, அப்புறம் சட்டப்படி என்ன செய்யலாம்னு ஊர்ப்பஞ்சாயத்தில அட்வைஸ் செய்யறது, அவரு வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவாராம். ஆதலால் அவரு எங்க ஊரு வக்கீலானாரு. அவரோட வீடு தான் வக்கீல் வீடு. அவரோட குடும்பமே வக்கீல குடும்பம்னு ஆயிடுச்சி. அவருக்கு 14வது பிள்ளையா அவரோடு மூணாவது பொண்டாட்டிக்கு பிறந்தவரு பரமு சித்தப்பா.

 பரமு சித்தப்பாவை எப்படியும் உண்மையான வக்கீல் தொழிலுக்கு படிக்கவச்சிடனும்னு கிழவனுக்கு ஆசை இருந்திச்சி. எல்லாம் இந்த 65 ல இந்திப்போராட்டம் வந்து கெடுத்திடுச்சி.. அதுவரை அவரு பெரியார் கட்சியில இருந்தவருதான்.. கட்சி மாறி காங்கிரசுக்குப் போயிட்டாரு.. இதெல்லாம் எங்க ஊரு போராட்டத்தில் நடந்த உபகதைகள்.

 இந்தி ஒழிக , தமிழ் வாழ்க .. மாணவர்கள் போராட்டம் .. ஸ்கூல் காலேஜ் எல்லாம் காலவரையறையின்றி மூடப்போறதா அறிவிப்பு வரப்போவதுனு செய்திவருது. மூடிட்டா எப்படி போராட்டம் நட்த்தறதுனு பரமு சித்தப்பா டீம் யோசிக்கிறாங்க. போராட்டம் ஆரம்பிச்சிடறாங்க. எந்த ஒரு முன் அறிவிப்பு ப்ளான் எதுவும் கிடையாது. ஆனால் போராட்டம் பத்திக்கிடுச்சி. ஸ்கூலுக்கு வெளியே இருந்து கிளம்பின வரிசை அப்படியே ஸ்கூல் எல்லையைத் தாண்டி மெயின்ரோடு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வருவதற்குள் பேரணி பெரிசாயிடுச்சி. மாணவர்களோடு சேர்ந்து ரோட்டில நின்னவுங்க கட்சிக்காரங்க வேடிக்கையா கலந்துக்கிட்டு வரிசையில வந்தவுங்கனு வரிசையில் தலைகள் எண்ணிக்கை கடல் அலைமாதிரி வந்திட்டே இருந்திச்சி. கலைக்டர் ஆபீஸ்க்குப் போகணும். அதுதானே ஸ்ட்ரைக் பேரணி முடியற இடமா இருக்கும்.

 போகிற வழியில தான் போலீஸ் ஸ்டேஷன். கூட்டத்திற்கு போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடனே வீரம் வெறியா மாறிடுச்சி.. யாரு முதல்ல கல்லை எறிஞ்சானு யாருக்கும் தெரியாது. ரோடு போட ரோட்டோரம் இருந்தக் கல்லே ஆயுதமாச்சு.. சரமாரியா கல்லைத்தூக்கி வீசுனாங்க.போலீஸ் வெளியில வந்து கூட்டத்தைக் கலைஞ்சிப் போகச்சொல்லி அடிக்க ஆரம்பிச்சாங்க. .. புகைவெடியை வீசினவுடனே கூட்டம் கலைஞ்சிடுச்சி.. மாணவர்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் ஓட்டம்.. எதிரே வாய்க்கால். வாய்க்காலைத் தாண்டினா அக்கிரஹாரம். கூட்ட்த்தில லீடரா இருந்தவுங்களத்தான் போலீஸ் குறிவைச்சதா செய்தி வந்திச்சு. இருக்கலாம். பரமு சித்தப்பாவை விரட்டுனதில அவரு ஓடிப்போயி வாய்க்காலைத்தாண்டி எதிரே இருக்க அக்ரஹாரத்து கொள்ளைப்புறத்தில சுவரேறி குதிச்சிருக்காரு.

 கதையில இந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ். அவரு குதிச்சப்போ இந்தி வாத்தியாரு பொண்ணு விசலாட்சி குளிச்சிட்டு இருந்திருக்கு. அம்புட்டுத்தான்.

அது திடீர்னு குதிச்சவனைப் பார்த்து அலற.. ..

வேறென்ன..! அதோடு முடிஞ்சிப்போச்சு எல்லாமும்.

 சினிமாவில காட்டறமாதிரி இந்தப் பரமு சித்தப்பா விசாலம் வாயைப் பொத்தி இருக்கலாம். அப்புறம் அதுவே காதலா மாறி எங்க ஊரு வாய்க்காலில் “வேதம் புதிது” அப்பவே வந்திருக்கும். . சவத்தே..அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. இதில பரமு சித்தப்பா ஒரு ஹீரோ அந்தஸ்த்தை இழந்திட்டாருனு தோணிச்சு.

 பவாம்.. விசாலாட்சிதான். அவ இந்தி வாத்தியார் பொண்ணா வேற போயிட்டாளா.. கதையை டுவிஸ்டு பண்ணி பெரிய ப்ரேக் நியுஸ் ஆக்கிட்டாங்க.

 விசாலம் கத்தினதை கமுக்கமா வச்சிருக்கனும். ஆனா பாவம் அந்த இந்தி வாத்தியாரும் ஏழைதான். வாத்தியாரு ஆத்து மாமி அக்ரஹாரத்தில நல்லது கெட்டதுக்கு எல்லா ஆத்திலேயும் போய் கூடமாட உதவி செய்வாளாம். விசாலாட்சி சொல்லி இருக்கு. பிரைவேட் ஸ்கூல். இந்தி வாத்தியாருக்கு வேற பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்கவும் தெரியல. அதனால ஸ்கூலில் அவருதான் ஹெட்மாஸ்டருக்கு கையாளுமாதிரி எல்லா வேலையும் செய்வாரு. மனுஷன் இந்தி சொல்லிக்கொடுக்கறதிலேயும் குத்தம்சொல்ல முடியாது. கொஞ்சம் சாதுவானவருதான்.

 விசாலம் கத்தினப்போ பக்கத்து வீட்டு மாமிதான் அதை அக்ரஹாரத்திற்கே செய்தி ஆக்கிட்டா.

“ஏன் டீ,, நீ குளிச்சிட்டிருக்கிறப்போ குதிச்சானா.. இல்லை குளிச்சி முடிச்சப்போ குதிச்சானானு எதுவும் விவரமா கேட்கவே இல்லை! “

 கேட்கும் போதே.. “ஏன் டீ.. பார்த்திட்டானா.. பார்த்திட்டான்லியோ.. கர்மம்” தலையில அடிச்சிக்கிட்டு மாமி கேட்கும்போது விசாலத்தின் அழுகை சத்தம் இன்னும் அதிகமானது. அதனால வேற மாமி இன்னும் அதிகமா அதே காட்சியை விரிவாக்கிட்டா.

“ பொட்டுத்துணி இல்லாம குளிச்சாலாமே விசாலம்,”

“அப்போன்னா அந்தப் பிள்ளை எட்டிப்பார்த்துட்டான்’

‘அது எப்படி.. கரெக்டா .. விசாலம் குளிக்கறப்போ அந்த

சுவத்தை ஏறி குதிச்சானாம்.. டவுட்டா இருக்குதுனோ’’

‘ பாரோன்..தாயும் மகளும் ஊமை மாதிரி இருந்திட்டு

என்ன காரியம் செய்திருக்கா , பாருங்கோ’

“எப்பவும் துணி இல்லாம குளிக்கப்பிடாதுனு சொல்லியாச்சு.

அது என்ன அம்மண குளிப்போ! யாரு கண்டா விவஸ்தை கெட்ட

ஜென்மங்கள்’

அக்ரஹாரமே இந்தி வாத்தியாரு பொண்ணுப்பத்தி இப்படியாக வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேச ஆரம்பிடுச்சி. இந்திப் பாடமே ஸ்கூலில் கிடையாதுனு அறிவிச்சிட்டா.. பாவம் .. இந்தி வாத்தியாருக்கு வேலையும் போயிடுமோனு பயம் வந்திடுச்சி.. மாமியையும் இப்போதெல்லாம் யாரும் எந்த உதவிக்கும் கூப்பிடறதில்ல. என்ன நடந்திச்சோ.. மனுஷன் என்ன நினைச்சாரோ .. இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கிட்டாரு.. பெத்த பொண்ணு மானம் போயிடுச்சினு தூக்கில தொங்கிட்டதாதான் அக்கிரஹாரமே சொல்லிச்சே தவிர அந்த தெரு மனுஷாள் எல்லாம் வாத்தியாரை ஒதுக்கிவைச்சியே கொன்னுட்டதை ஒத்துக்கலை.

 இந்தி வாத்தியார் தற்கொலைனு தந்திக்காரன் கொட்டை எழுத்துல செய்தி போட்டு தெரிஞ்சவா தெரியாதவா எல்லாருக்கும் விசாலாட்சி குளிச்சக்கதையைப் பரப்பிவிட்டா. அதனாலே அதிகமா.. ரோஷம் வந்திடுச்சி வக்கீலுக்கு.

சிலம்பம் ஆடற கம்பாலா சுழட்டி சுழட்டி பரமு சித்தப்பாவை அடிச்சித் துவைச்சிட்டாராம். அப்பன் மகனுக்கு எப்போ சண்டை வந்தாலும் அப்பன்னு பார்க்காம எதிர்த்து கையை ஓங்கற பரமு சித்தப்பா அன்னிக்கு மட்டும் கிழவரு கொடுத்த அடியை தலையை நிமிர்ந்துப் பார்க்காம வாங்கி கிட்டாராம். ஒரு வார்த்தை ஐயாவை எதிர்த்து பேசலியாம். அதை எப்பவும் பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தி சொல்லி சொல்லி பரமுவை இந்த ஊரே விரட்டுடுச்சினு சொல்லும்.. அதுக்குப்பிறகு பரமு சித்தப்பா படிப்பை பாதியிலேயே விட்டுட்டு பம்பாய்க்கு டிரெயின் ஏறிப்போயிட்டாருனு கேள்வி.

 இப்போ பம்பாயி மும்பை ஆகி கதை எல்லாம் பழைய கதையாகிப் போனப்பிறகு இதே கதையில இப்படி ஒரு திகில் திருப்பம்தான் பரமு சித்தப்பாவைத் தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கு..

 இதைக் கேள்விப்பட்டதிலிருந்து விதம்விதமா கனவுகள் வேறு வந்து தொலைக்குது..

கனவு 1:

பரமு சித்தப்பா இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கினதினாலே மனசு பாதிச்சி அதுக்குப் பிராயசித்தமா இந்தி படிச்சி அவரே இந்தி வாத்தியாராயிட்டாராம்!

இந்தி வாத்தியாருக்கு கணக்குப்பாடமும் நல்லா வரும் , அதில அந்தக் காலத்திலேயே அவரு இங்கிலீசு பேசின ஆளுங்கிறதால இந்தியோட சேர்த்து கணக்கும் இங்கிலீசும் டியுஷன் எடுக்கறதால அவரு டியுஷன் ஃபேமஸ் ஆயிடுச்சி. நம்ம தமிழ்ப்பிள்ளைங்களுக்கு இந்த 3 பாடமும் கொஞ்சம் வீக் என்பதால அவரு காட்டில வருஷம் பூரா மழையாம்.

கனவு 2:

பரமு சித்தப்பா டாக்சி ஓட்டினாராம். அப்பொ அவரோட டாக்சியில விசாலம் ஏறிச்சாம். பரமு கண்டுப்பிடிச்சிட்டாராம். இது நம்ம இந்தி வாத்தியாரு பொண்ணு விசாலமாச்சேனு. ஆனா விசாலம் பரமுவை அடையாளம் கண்டுக்கலியாம்.. இப்படியா பல நாளு டாக்சி ஸ்டாண்டில விசாலத்திற்காக காத்திருந்து கூட்டிட்டுப்போயி .. எப்படியோ நான் தான் பரமுனு சொல்ல

அப்படியே அந்தக் கனவு பாதியில முடிஞ்சிப்போச்சு….ச்சே..

 என்னவெல்லாமோ தொடரும்போது கனவு மட்டும் தொலைக்காட்சி தொடர்மாதிரி தொடரக்கூடாதா என்ன?! அதே கனவின் தொடர்சி மறுநாள் பகல்கனவா வந்திச்சி.. அதில …

கனவு 3:

 பரமு சித்தப்பா சொல்றாரு “ விசாலம், செளக்கியமா இருக்கியா? என்னைத்தெரியுதா , நான் தான் பரமு” அப்படினு

விசாலம் ஒண்ணுமே சொல்லாம உட்கார்ந்திருக்கு. ஸ்கூல் வந்தவுடனே விசாலம் காரிலிருந்து இறங்கும்போது

” தெரியும் , நீதான் பரமுனு முதல் நாளே தெரியுன்மு” சொல்லிட்டு இறங்கியாச்சு.

கனவு கட் கட் கட்.

அதன்பிறகு கனவு தொடரலை. அதனாலே கதை ரொம்ப சஸ்பென்சா இருக்கு.

பரமு சித்தப்பாவை எப்படி தேடிக் கண்டுப்பிடிப்பதுனு தெரியல.

டோம்பிவலி தமிழ்ச்சங்கம் நெல்லைப் பைந்தமிழிடம் விசாரிச்சதில

டோம்பிவலியில் முக்குக்கு முக்கு டியுஷன் நடக்கு. ஒவ்வொரு பில்டிங்க்லேயும் எதாவது ஒன்றிரண்டு வீடுகளில் டியுஷன் நடந்திட்டு இருக்கும். வேறு எதாவது க்ளு கொடுங்கனு சொல்றாரு.

 எங்க ஊரு ஆட்கள் ஒன்றிரண்டு பேரிடம் நைசா விசாரிச்சதில்

பரமு சித்தப்பா முழுப்பேரு பரமு இல்லையாம். பரமானந்தம், பரமேஸ்வரன், பரசுநாதன், பிரம்மானந்தம் இப்படியாக பல பெயர்களைச் சொல்கிறார்கள்.

வக்கீலு மகன் பரமுனு ஊர்ல கேட்டா இப்போ அந்த வீட்டுக்கதையைத் தெரிஞ்ச யாரும் உசிரோட இல்லை. பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தியும் மண்டையைப் போட்டாச்சு. அது உயிரோட இருக்கும்போதே கேட்டிருந்தா அவரோட பெயராவது உருப்படியா தெரிஞ்சிருக்கும்.

 என்னவோ.. இப்போதும் பரமு சித்தப்பா எனக்கு ஹீரோ அந்தஸ்தில முடி நரைச்சிப்போன தல தள அஜீத் மாதிரி இருக்காரு. விசாலம்தான் யாருனு இன்னும் சரியா முகம் நினைவுக்கு வர மாட்டேங்கு. அதனால என்ன இப்போ..!

 இந்தக்கதையை இப்படி எந்த முடிவும் சொல்லாம முடிக்கறதில எனக்கும் விருப்பமில்ல. அதுக்காக பரமு சித்தப்பாவும் விசாலமும் எங்க ஊரு வாய்க்காலில் நீந்திக்கொண்டே டூயுட் பாடற மாதிரியோ இல்ல டோம்பிவலி ஸ்டேஷனில் டிரெயின் ஓடிட்டு இருக்கும் பின்னணியில் நாலாவது ப்ளாட்பாரத்திலிருந்து இரண்டாவது ப்ளாட்பாரத்திற்கு பாடிக்கொண்டே ஸ்லோமோஷனில் வருகிறமாதிரியோ கதையை முடிச்சிட முடியுமா என்ன! ம்கூம்.. முடியாதுங்கறேன்.

 எப்படியும் பரமு சித்தப்பாவை கண்டுப்பிடிக்கிற வரைக்கும் கதை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்.!

(ஐவருமாய் தொகுப்பிலிருந்து)