கெளதமன் எழுதிய “ஜே கே சார்” –
💥💥💥💥
தோழர் கெளதமன் எழுதிய ஜே கே சார் புத்தகம் அண்மையில் வாசிக்க நேர்ந்தது. இப்புத்தகம் என் புத்தக அலமாரியில் கட்டாயமிருக்க வேண்டும் என்று தோழர் கெளதமன் விரும்பி புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்,
ஜே கே என்று பேரன்புடன் அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகங்களை (நாவல், சிறுகதை) அனைத்தும் என் கல்லூரி காலங்களில் வாசித்து கொண்டாடி இருக்கிறேன்.
மதுரை பல்கலை கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கிறபோது எங்கள் சீனியர் அண்ணன்மார்கள் – முதுகலை இரண்டாமாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ) ஜே கே மதுரை வந்திருக்கிறார் என்றும் அவரைச் சந்திக்கப்போவதாகவும் ஒரு காதலியைச் சந்திக்கப்போவது போல த்ரில்லிங்க் காட்டினார்கள். நானும் ஜே கே வாசித்திருக்கிறேன், நானும் உங்களுடன் வருவேன் என்று அவர்களிடம் அடம் பிடித்து தர்ணா செய்கிற அளவுக்கு போனேன்.
ஆனால் அங்கெல்லாம் நீங்க வரமுடியாது ! பொதுவாக பெண்கள் அவர் இலக்கிய அரட்டைக் குழுமத்தில் கலந்து கொள்வதில்லை என்பதை ரகசியமாக என்னிடம் சொன்னார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியும் ஜே கேவை சந்தித்தே ஆகவேண்டும் என்றும் அவருடைய ‘சக்கரங்கள் நிற்பதில்லை” சிறுகதைக்கு நான் எழுதிய விமர்சனத்தையும் அவரிடம் கொடுத்தாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினேன்.
என் மன சாந்திக்காக அந்த விமர்சனக் கட்டுரையை மட்டும் ஜே கே சாரிடம் கொடுத்துவிடுவதாக சொல்லி வாங்கிச் சென்றார்கள். கொடுத்தார்களா ? இதுவரை எனக்குத் தெரியாது. இப்படியாக ஜே கே சாரை நேரில் தரிசிக்க பெண் வாசகர்களுக்கு அனுமதி இல்லை என்பதன் ரகசியம் எனக்குப் புரிய பல ஆண்டுகள் ஆனது. (ட்யூப் லைட் தான்)
கெளதமன் எழுதிய ஜே கே சார் புத்தகத்தை வாசிக்கிறபோது அன்று புரியாதவைகளும் அன்று கேள்விப்பட்டவைகளும் என்று பல பக்கங்கள் இந்த எழுதிய பக்கங்களுக்கு ஊடாக என் வாசிப்பில் கலந்துவிட்டன.
கெளதமன் எழுதி இருக்கும் ஜே கே சார் புத்தகம் ஜெயகாந்தனின் தன் வரலாறு அல்ல.( BIOGRAPHY) , இப்புத்தகத்தை எழுதி இருக்கும் கெளதமனின் தன் வரலாறும் அல்ல. ஆனால் இந்த இரண்டும் கலந்த ஒரு கலவை. என் போன்றவர்களுக்கு கிடைக்காத / பெண் என்பதால் மறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு கெளதமனுக்கு எளிதாக கிடைத்திருக்கிறது. அந்த நட்பை பேணிக்கொள்ளும் வாசக மனமும் கெளதமனுக்கு வாய்த்திருக்கிறது, ஜே கேயுடனான தன் சந்திப்புகளை கெளதமனின் மனம் அசைபோடுகிறது. அதில் கொஞ்சம் எடிட் செய்கிறது. ஜே கே சாருடனான கெளதமனின் நினைவலைகளாக இப்பிரதி தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது.
அவருடனான சந்திப்புகளின் ஊடாக ஒரு பிரமாண்டமான எழுத்தாளர் என்ற ஜெயகாந்தனின் பிம்பத்தைப் பார்க்கிறார். மிக அருகில் பார்த்ததால் மற்றவர்கள் பார்க்க முடியாத ஜே கேயின் நிழல்களையும் அதன் மாறிவரும் தன்மையையும் போகிறபோக்கில் மிக நுணுக்கமாக பதிவு செய்திருப்பது கெளதமனின் தனி சிறப்பு .
ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ நாவல் ஆனந்த விகடன் இதழில் 1965ல் தொடராக வெளிவந்து 1966ல் டிசம்பரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அக்கதையில் இடம்பெறும் சாரங்கன் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்தியாவின் இசைக்குடும்பத்தில் பிறந்து லண்டனின் மேற்கத்திய இசைப் பயின்று கலைகளின் சொர்க்கமான பாரீசில் சில காலம் வாழ்ந்து சென்னை திரும்பிய சாரங்கனை படைத்த ஜே கேவால் , .. அதைப் போலவே ஒரு வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட இளையராஜாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை கெளதமன் அவர்கள்
“ தென்மேற்கு தமிழ் நாட்டு எல்லையோரம் அமைந்த சின்னஞ்சிறு கிராமமான பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு நேராக ஜெயகாந்தனிடமே வந்து நின்றபோது , தனது சாரங்கனுக்கு இருந்த எவ்வித சலுகைகளும் இல்லாது , தான் பாரீசில் இருந்து உருவாக்கி தருவித்த சாரங்கனே தான் மெலிந்த கறுத்த உருவமாய் வந்து நம் முன் நிற்கிறான் என்று ஜெயகாந்தனால் உணரத்தான் முடியவில்லை” பக் 321
ஏ ஆர் ரஹ்மானையும் ஜெயகாந்தன் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சேர்த்தே பதிவு செய்கிறார் கெளதமன். (பக் 334)
“ ஒரு பிரச்சனையை நான் அணுகும் முன் , இதற்கு காந்தி இருந்திருந்தால் அவர் முன்வைக்கும் தீர்வு என்னவாயிருக்கும்? என்பதில் இருந்தே நான் யோசிக்க தொடங்குவேன்” என்பார் ஜெயகாந்தன் ( பக் 306)
இதை வாசித்தவுடன் ஜெயகாந்தன் அப்படி என்ன பிரச்சனையை காந்தியாக இருந்து யோசித்தார் என்று யாரும் மயிர்ப்பிளக்கிற மாதிரி யோசிக்க வேண்டியதில்லை. காரணம் ஜே. கே எப்படி தன் இலக்கிய உலகில் தன் இலக்கிய சகாக்களுடன் தன் பொழுதுகளைக் கழித்தார் என்பதை கெளதமன் எழுதி இருக்கிறார். இரண்டையும் வாசிக்கும் வாசகருள்ளம் ஜெயகாந்தன் காந்தியாக யோசித்திருக்கவே முடியாது. MY LIFE IS MY MESSAGE என்று வாழ்ந்த காந்தியுடன் ஜெயகாந்தனை எந்த வகையிலும் ஒப்பிடவோ அல்லது அவர் அப்படி யோசித்ததாகவோ நாம் கனவிலும் யோசிக்க முடியாது.
ஜெயகாந்தனுக்கு போட்டோ ஷூட் பிடிக்காது. “ எனக்கு போட்டோ எடுக்கிறப்ப போஸ் கொடுக்க வராது “ பக் 263
“ஒரு மணிதான் ஆவுது. பரவால்ல. அதுதான் சின்ன நம்பர்” – பக் 269
ஜெயகாந்தன் நண்பர்களுடன் ஆடிய ‘சோப்பெங்கப்பா ‘ ஆட்டம். -345
ஜெயகாந்தனின் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹென்றியும் தேவராஜனும் ஆடிய சோப்பெங்கப்பா ஆட்டத்தை ஆடி இருப்பார்கள் !)
“ ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் அடித்தளம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அறிவார்ந்த மூத்த தோழர்களால் வடிவமைக்கப்பட்டது என்று அவரும் பலரும் எழுதியுள்ளதை நான் படித்திருக்கிறேன். அதில் உண்மையும் உள்ளது. “ என்பார் கெளதமன் ஜே கே சார் 91 கட்டுரையில் ( கணையாழி இதழ் ஏப்ரல் 2025 ) ஆனால் அவர் மொத்த வாழ்வின் போக்கை நிர்ணயிக்கும் அடித்தளம் அவர் வளர்ந்த அக்ரஹாரத்திலே கட்டமைக்கப்பட்டதாக அவருடைய எழுத்துகளிலிருந்தே நான் அறிகிறேன் பத்து வயதுவரை அமைந்த அக்ரஹார வாழ்க்கைச் சூழல் வாழ் நாள் இறுதிவரை அவரை பிராமண சார்பில் அழுத்தமாக வைத்திருந்த்து ” ( கெளதமன் கட்டுரை மேலது பக் 11 & 12)
சனாதனம் பற்றி ஒன்றுமே அறியாத வயதில் அதில் மயங்கி , குழந்தமையோடு அதை ஆதரித்தது போலவே , திராவிடர் பற்றிய எந்த அறிதலோ புரிதலோ இல்லாமலேயே அதைக் கடுமையாக எதிர்க்கும் சிறுபிள்ளை மனமும் அவருக்கு அந்தப் பருவத்திலேயே உருவாகிவிட்டது .
கெளதமன். (மேலது கணையாழி கட்டுரை பக் 12)
ஜெயகாந்தனும் தன் திராவிட எதிர்ப்பை மிகவும் வெளிப்படையாகவே பேசியவர்தான். அவருடைய பிராமண ஈர்ப்பும் அதில் மறை பொருளாக இருந்து காலப்போக்கில் ‘ஜெய ஜெய சங்கர’ வாக வெளிப்பட்டது.
இந்த அனைத்தின் முரணாக ஜெயகாந்தனுக்கு அறிவிக்கப்பட்ட முரசொலி அறக்கட்டளை விருதும் அதை ஏற்றுக்கொண்டு நேரில் சென்று விருது வாங்கிய ஜேகேவும்!!!!!. இது தமிழக அரசின் விருதல்ல. திமுக முரசொலி அறக்கட்டளை விருது. டிசம்பர் 2006ல் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 23, 2007 திமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முரசொலி விருது நிகழ்வில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஜெயகாந்தனுக்கு விருது வழங்கினார் என்ற செய்தி தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றி ஒரு செய்தி மட்டுமல்ல. தமிழ் நாட்டு இலக்கிய அரசியலின் மிக முக்கியமான ஒரு செய்தியுமாகும். இங்கே சமரசங்களுக்கும் விருதுகளுக்கும் யாரும் விதிவிலக்கல்ல, ஜேகே உட்பட. !
ஜே கே சாரின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் கெளதமனும் முரசொலி விருது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.
30 வயது ஜெயகாந்தனைவிட இளையவர் கெளதமன். ஒரு தீவிர வாசகராக ஜெயகாந்தனுடன் மாலை நேரங்களை கழித்தவர். ஜெயகாந்தனும் பயணித்தவர். ஜெயகாந்தனின் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். ஆளுமை கொண்ட ஜே கே சாருடன் பழகிய நினைவுகளை ஒரு புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு ஜே கேயின் பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பவர். தன் 29 வயதிலிருந்து ஜெயகாந்தன் மறையும் வரை ஜே கே சாரை அருகிலிருந்து பார்த்த கெளதமனின் ஜே கே சார் நினைவலைகள் ஒரு சுனாமியைப் போல ஜே கே என்ற பாறையின் மீது மோதுகின்றன. அந்த இடம் இப்புத்தகத்தின் ஒரு திருப்புமுனை. க்ளைமாக்ஸ் காட்சிபோல வாசகனின் நினைவுகளில் பதிந்துவிடுகிறது. அது காந்தியும் நாரயணம்மாவும் கட்டுரை ( பக். 318 – 319)
“ ஐம்பத்திரண்டு வயது வரை அலட்சியமாக இருந்த எனக்கு , உடனே அம்பேத்கரை வாசிக்கும் உத்வேகம் பிறந்தது. அம்பேத்கரின் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ ‘ நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்’ ‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ ஆகிய புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கிய 2017-18 ஆண்டுகள் , நான் புதிதாக பிறந்ததாக எனக்கு உணர்த்தியது” – கெளதமன்.
கெளதமனிடம் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் பிறக்கிறான்.
வாழ்த்துகள் கெளதமன்.
நூலின் விவரங்கள்:
நூல்: “ஜே கே சார்” (J K Sir)
எழுத்து: கெளதமன்.
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 2024.
பக்கங்கள்: 441
விலை: ரூ.500.
எழுதியவர் :
✍🏻 புதியமாதவி
நன்றி: bookday.in
dated 22/20/2025
புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.வாழ்த்துகள் தோழர்.
ReplyDeleteகண்டிப்பாக வாசிக்க வேண்டும். உடன் நூல் வாங்கி வாசிக்கிறேன்.
ReplyDeleteசரோஜினி கனகசபை
ReplyDeleteசனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த ஒருவரைப் பற்றிய செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? முரசொலி அறக்கட்டளை விருதை திமுக தலைவர் வழங்கினார் என்றால் அதில் அரசியல் உள்ளது.அதில் பெருமைப் பட வேண்டியது எதுவும் உண்டா? அரசியலில் தகுதியானவர்களுக்கு விருது வழங்கும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.நன்றி தோழர்.
ReplyDelete