Monday, January 27, 2025

ஃ கவிதைகள் தஞ்சை தவசி

 


"மாடித் தோட்டத்தில் பனை மரங்கள் 

             முளைப்பதில்லை " ...

............................................................

உங்கள் மாடித் தோட்டத்தில்

ரோஜாக்கள் பூக்கலாம்

துளசியைக்கூட வளர்க்கலாம்

ஆனால்  ....

பனை மரங்கள்

முளைப்பதில்லை...

~ புதியமாதவி ~

..................................................

ஃ கவிதைகள்

நூலாசிரியர் : புதிய மாதவி

....................................................

"கவிதை நூல் வாசிப்பனுபவம் "

........................................................

புதிய மாதவி தமிழின் முதன்மையான

பெண்ணியக் கவிஞர்களில் ஒருவர்...

அவரது புனைக் கதைகள் உள்ளடக்கத்தில் 

தொடர்ந்து விசாரணைகளை முன் வைத்துக் கொண்டிருப்பவை ...அதற்கேற்ப புதிய வடிவ 

சோதனைகளையும் செய்பவர்...

தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு 

புதிய புதிய பெண்களை சந்தித்துக் கொண்டிருக்கும் 

அவர்.பெண்கள் சந்திப்பின் வெளிப்பாடாக இருக்கும்

 ஊடறுவின் முதன்மையான பங்கேற்பாளராகவும் இருக்கிறார் ...அவரது குரல் தமிழின் பெண்ணியக் 

குரல்களில் தனித்துவமானது...

~ பேராசிரியர் அ. ராமசாமி ~

.............................................................

பெண்ணுயிரின் வாதனையை  நேர்படப்பேசி 

கைநீட்டி உணர்த்தலும் வீச்சுமொழியும் கொண்ட

புதியமாதவியின்  ஃ கவிதைகள் ,சுவை புதிது ,

பொருள் புதிது ,வளம் புதிது ,சொல் புதிது ,

ஜோதிமிக்க நவ கவிதை ,எந்நாளும் அழியாத 

மா கவிதைகள் பாரதி புத்திரி புதிய மாதவியின்

ஃதொகுப்பிலிருந்து சில அக்கினி தெறிப்புகள்...

🔳🔳..........................................................

🍁🍁

பாடல்களையும் கதைகளையும்

வாய்மொழியாக 

வாழ வைத்தவர்களுக்கு

அ ஃகேனம் தலை வணங்குகிறது...

உயிரும் இல்லை மெய்யும் இல்லை

தனி நிலையாக நிற்கிறாய்

தனித்தும் இருக்கிறாய்

என் அஃகேனம்  நீ...

காற்று உன்னைத் தீண்டி வெளியேறும் 

போதெல்லாம் இசையாகிறது...

சிரசில் பிறக்கும் உன் ஒலியின் மெல்லிய

அதிர்வில் படபடக்கின்றன சிகரங்களின் 

நெற்றிக்கண் இமைகள்...

பசியில் அலையும் சொற்களும் பாறைகளின் 

மௌனமும் கவிதை மொழியாய் மாறும்போது முப்பாற்புள்ளிகளை மறைத்திருக்கும் 

திரை விலகி ரகசியக்கதவு திறக்கிறது...

கடவுச்சொல் : ஃ

~ ஃ கவிதைகள் ( பக் : 10 ) ~

🍁🍁....................................................................

~இந்த வரிகளுடன் திறக்கிறது  ஃ கவிதைகள்

பிரவாகமெடுக்கும் படைப்பில் உணர்வுகளும்,

கொந்தளிப்புகளும், பாத்திர உருக்களும்,

சம்பவங்களும் குழைந்து சமைந்து விடுகின்றன.

இழைபோல் அவற்றைப் பிரித்தெடுப்பது நமக்கு

இந்த நூல் வாசிப்பில் சாத்தியமாகலாம்...

அங்ஙனம் எந்திரத்தினத்தைக் கட்டுடைக்கும்

கூட்டுத் திரளாக பயணங்களில் அடைகாத்து

பதியப்பட்ட மொழி திரண்டிருப்பதை உள்வாங்க

வாசகர்களுக்கு ஒரு முயற்சி தேவைப்படுகிறது...

🔳🔳 ..............................................................

முற்றுப்புள்ளிகள் அர்த்தமுள்ளவை

ஒரே ஒரு புள்ளி 

அதை "கமா "வாக மாற்றி தொடரலாம் ...

ஒரே ஒரு புள்ளி அதோடு 

இன்னும் ரெண்டு புள்ளிகள்

விழிகளானால்

ஆயுத எழுத்தாக்கி போராடலாம்...

ஒரே ஒரு புள்ளி

அதை புள்ளிகளின் தொடராக்கி

தொடரும் போடலாம்...

ஒரே ஒரு புள்ளி 

எத்தனையோ அர்த்தங்கள் ...

ஆனாலும் தொட நினைத்தபோது

புள்ளிகள் வெடித்து அதிலிருந்து

புறப்படுகின்றன ஓராயிரம் புள்ளிகள்...

புள்ளிகளால் நிரம்பி இருக்கிறது 

என் பிரபஞ்சம்...

~  ஃ கவிதைகள் ( பக்: 103  ) ~

🍁🍁........................................................

விலகிச் செல்லும் உன்னிடம்

நெருங்கி நெருங்கி வருகிறது 

திருவந்தாதி...

திரும்பிக் கூட பார்க்கவில்லை நீ...

இமயத்தின் பனிக்கட்டி வெடித்து 

கங்கையில் வெள்ளக்காடு...

~ ஃ கவிதைகள் (பக் : 72 ) ~

🍁🍁...............................................................

ஆறுதல்களற்ற தனிமையில் வரம்புகளற்று

விரிகிற வானத்தின் கீழே அடைபட்டுக் கிடக்கிற

அத்தனை கதவுகளையும் மறுபடியும் திறக்கிற

கவிதைகள் இவை. இன்மையின் அதீதம் பாரித்த 

இருப்பின் அகவெளியை இப்படி முன்வைக்கிற 

உயிரும் உணர்வும் உறைந்த லயம் பிசகாத 

இயக்கம் வாழ்வின்மேல் கவிகிற பரிவுணர்ச்சி   

இத் தொகுப்பில் மிகநுட்பமானது.

🔳🔳..................................................................

🍁🍁

 வெள்ளை உடையில் இருக்கிறேன்

யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்

எந்தக் கறையுமின்றி 

இந்த இரவைக் காமாட்டிபுரம் 

கடந்து விட வேண்டும்...

🍁🍁.................................................................

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

ஒவ்வொரு இதழாக 

இரவின் விரல்கள் தீண்டி 

உதிர்வதற்குள் விடிந்து விடாதா

காமனை எரித்த முதல் இரவு ...

~ஃ கவிதைகள் : பக் : 13 ~

🍁🍁..................................................................

~ என்று நவராத்திரி முதல்  நாள் இரவு

பரிசோதனைகளின் நோவுடன்  பிசிரற்ற 

அன்பின் பூரணத்தில் தொடங்குகிறது 

நவராத்திரி  ஃ கவிதைகள்....

🔳

நவராத்திரி நான்காம் நாள் இரவில் ~

🔳

எரித்தாயா? புதைத்தாயா?

என்ன செய்து அவளைத் தொலைத்தாய்?

பரணி வெள்ளம் மூச்சு திணறிய பஃறுளி

இறுகப் பற்றிய விரல்களில்

மதுரையின் தீராத பசி

வைகை படிக்கட்டுகளில் 

ஒட்டிக் கொண்டிருக்கும்

பச்சை மஞ்சள் காய்வதற்குள்

ஹே ... சென்னிமல்லிகார்ஜுனா....வந்துவிடு...

சிறை எடுத்த நெற்றிக்கண்ணைத்

தந்து விடுகிறேன் வாடா...

~ ஃ கவிதைகள் : பக் : 16 ~

🍁🍁.........................................................

~ என்று கூவி அழைக்கும் மூடிக்கிடந்த 

ஞாபகத்தின் வனாந்திரத்திலிருந்து

வெவ்வேறு உருவமெடுக்கும் ஒவ்வொரு

கதவையும் தட்டும் புராணபூதம்  ஏகமாய்

விரிந்த கவிதையாய் நிகழ்காலத்துடன் 

பாதை வெட்டிக்கொண்டே கடக்கிறது..

🍁

🔳

நவராத்திரி ஆறாம் நாள் இரவில் ~

🔳

எல்லம்மாவின் இரவுக்கு

விடியல் எப்போது சாமுண்டி ?

இன்னும் இருக்கிறது 

கண்ணுக்குத் தெரியாத 

யுத்தகளம் ...

இரவுப் பசி தீர்க்க 

மிச்சமிருக்கிறது 

கருக்கலின் படையல்...

~ ஃ கவிதைகள் : பக்: 18 ~

🔳 ~ என்று 

தொடர்கிற அறுந்த உரையாடல்களின்

துண்டங்கள் தொங்கிக் கொண்டிருக்க

நவராத்திரி எட்டாம் நாள் இரவில்...

🍁🍁

காரைக்கால் வீதிகள் 

தலை குனிந்த இரவு 

ஆயிரம் கண்ணுடையாள் 

அகிலாண்டேஸ்வரி 

அருள் வந்து ஆடுகிறாள்...

 பராசக்திக்கு 

ஏதடா பழியும் பாவமும்?

ருத்ராட்சக் காடுகள் 

விழித்துக் கொள்ளும் சாமம் 

நெற்றிக்கண் படபடக்கிறது

பேயுரு களைந்த திருவந்தாதி 

தலைகீழாய் நடக்கிறாள்

படைப்புக்கு பிரம்மத்திற்கும் 

நடுவில் வெந்து தணியுமோ காடு?

~ ஃ கவிதைகள் : பக் : 21 ~

🍁🔳

~ என்று இருளில் நகரும் பயணம் 

மஹா ஆழத்தின் ஊற்றுக்கண் 

ஃகவிதையாய் அரூப நடனமாடுகிறது...

🔳🔳............................................................

இப்படியாக இன்னுமாக நவராத்திரி ஒன்பது 

இரவின் கவிதைகளும் அதிகாரத்தின்  

புகை கவிழ்ந்த காலவெளியில் ஒழுங்கைச் 

சிதறடிப்பதன் மூலம் தொன்மத்துக்குள் 

அழைத்துச் செல்லும் கவிதைகளில் இருப்பின் 

பொருள்தேடி நின்று சுடரும் ஒளிக்கசிவில் அசல்

பெண்ணிய மொழியை  தரிசிக்க முடிகிறது...

🔳 🔳    ..........................................................

ஒரு பெண்ணால் மட்டுமே எழுத இயலுமான 

இப்படியான ஆயுத எழுத்தை ஒரு ஆணால் 

எழுத முடியுமா? எனக்குத் தெரியவில்லை..

🔳🔳

ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில்

வார்த்தைகள்தான் இருக்கின்றன..

இத்தொகுப்பின் தனித்துவமான  58 கவிதைகள் 

பெண்ணின் மனம், உடல் தாங்கிய  சிறுமை,

குரூர வலிகளை மெய்யான மனத்தகிப்புகளை 

தெருப்புழுதியில் வீசிஎறியப்பட்ட பழங்காகிதமாக

பெண்கள் மீது ஏவப்படும் பயங்கரவாதத்தை

எங்கோ நடக்கிற அதிகார அநீதியை இங்குள்ள 

நீதிக்கான அச்சுறுத்தலை வெற்று ஆக்ரோஷம்

 சற்றேனும் இல்லாத தத்தளிக்கும் வலியின் 

மொழியிலேயே பேசுகிற ஃகவிதைகள்; யார் 

யாரோவுடையதோ அல்ல. நாங்கள் நீங்கள்

அவர்கள் அங்கும் இங்கும் இங்கும் எங்கும்

இருக்கும் ஒன்றுதான் அது...  எல்லைகள் 

வெவ்வேறாயினும் வலிகள் ஒன்றுதான்...

முரண்பாடுகளின் சமநிலை எல்லைகளை

அழிக்கும் அற்புதம்; சமகால களநடைப் பாடல்

இந்நூலில் எந்தக் கவிதையை படித்தாலும்

நமக்குள் இருப்பது தான் இத்தொகுப்பில் 

இருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை...

🔳🔳....................................................

"போக வழியின்றி

பூனையை மரித்துப் பார்

புலியைக் காண்பாய் ... "

~ என்றெழுதிய இன்குலாப் விட்ட 

இடத்திலிருந்து தொடர்வது போல

தொடங்குகிறது 

 ஃ கவிதைகளின்  உரையாடல்கள்...

வாசலுக்கு விடிந்தால் வீட்டிற்கும் வந்துவிடும்...

🔳 🔳  .......................................................

 "பூமியின் மீது அக்கினியைப் போடவந்தேன்

அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் 

என்று விரும்புகிறேன்... " ~ கனலும் இத்தகு 

விவிலிய நடைச்செறிவின் புதிய வீச்சுடன் 

தனக்குள் தான் விரையும் ஒரு நதியின் விசை

புதியமாதவியின் ஃ கவிதைகள்...

யுத்தத்தின் எதிர்பாராத கட்டங்களை சொல்லில் 

நிகழ்த்தும் இவரது 

மொழியில் காலம் உறைந்து கிடக்கிறது. 

அதில் வெளியும் நுண்மையாக உறைந்திருக்கிறது...இலக்கியத்தில் சுவையம்சம்

இப்படியான ஜீவத்துடிப்பில்தான் இருக்கிறது...

🔳

நமது சமூகம் விசித்திரமானது ஜாதியாலும் 

மதத்தாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது...

வாழ்ந்து தீராத ஒரு கனவில் இருக்கிறது 

சமூகம் விழித்தெழும் வேளை வரவே இல்லை...

ஒரு கலாச்சாரம் எவ்வளவு நாகரிகமானது 

என்று தெரிந்து கொள்ள அவர்கள் பெண்களை 

எப்படி நடத்துகிறார்கள் என்பது ஒன்றே போதும்.

வரலாறு அறியாமல் ஒரு வரலாற்றை படைக்க 

முடியாது ..இது இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் 

பொருந்தும்.. இலக்கியம்தான் அத்தனை

சீரழிவுகளுக்கு மத்தியிலும் ஒரு நீதியின் 

குரலாக ஒரு சரியான வழிகாட்டியாக திகழ்கிறது...

🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳

🍁🍁

கொலையுதிர் காலத்தின் சங்கீதம்

குயில்களுக்கு ஆயுள் தண்டனை

காக்கையின் கூடுகளில்

காக்கைப்பாடினிகள் பிறக்கட்டும்...

அந்நாளில் 

எழுதுவேன் என் முகவரியை...


உன் முகவரியை அழித்து 

எழுதப்போவதாக உத்தேசமில்லை...

என் முகவரியே 

உனக்குமானதாக எழுதும் காலம் ...

அந்நாளில்

எழுதுவேன் நம் முகவரியை ...

~ ஃ கவிதைகள் (பக் : 32 )~

🍁🍁

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

சுடுகாட்டில் ஆடும் உன் ஆட்டத்தில்

நீண்டு தொங்கும் சடைமுடிகள்

மறைத்திருக்கின்றன 

உன் முதுகில் இருக்கும் 

பொய்யின் தழும்புகளை ...


ஆடியது போதும் , வா

பொய்கள்தான் பொய்களை அறியும் ...

காதல் பிணங்களை எரிக்க 

பொய்களால் மட்டுமே முடியும் ...

அவள் பிணம் எரியும் வாசனை

 உன் தேசமெங்கும் 

பொய்களை விதைக்கட்டும் ...

அதில் உன் 

நெற்றிக் கண்ணும் சிதையட்டும்...

கொற்றவை களி நடனம் ...

அடியே மீனாட்சி அழுகை நிறுத்து...

~ ஃ கவிதைகள் (பக் : 34 ) ~

🍁🍁

என்னிடம் 

ஒட்டிக்கொண்டிருக்கும்

உன்னைப் பிய்த்து

உன்னிடமே 

கொடுத்துவிட முடியாமல்

என்னை நானே 

புதைத்துக்கொள்கிறேன்...

இருதலின்

 துயரத்தை எரித்து எரித்து

சாம்பலாக்கி 

கரைத்துவிட முடியாமல் 

காலநதி மணல்மேடாய்...

~ ஃ கவிதைகள் (பக் : 36 ) ~

🍁🍁

கவிதைக்குள் பேய் இருக்கிறது

கவிதையை வாசிப்பதற்கு

நீங்கள் 

கோடாங்கியாக மாறவேண்டும் ...

திருநீறு 

பூசுவதும் பூசாமல் இருப்பதும்

உங்கள் பகுத்தறிவு உரிமை ...

கவிதைப் பேய் அதையெல்லாம் 

கண்டு கொள்வதில்லை...

கவிதையைத் தொடுவதற்கு

ஒரு நவீன சேவல்கோழியைப் பிடித்து

தலையைத் திருகி 

படையலிட வேண்டும்

அது முக்கியம்...

~ ஃகவிதைகள் (பக் : 56 ) ~

🍁🍁

கருவறையில் 

அர்த்த ஜாம பூஜையில்

உன் மொழி மந்திரமாகட்டும் ...

யெளவனம் மறந்தவள்

பேயுரு களைந்து உனக்காக 

உயிர்த்தெழக்கூடும் ...

அப்போது 

அவளை வாசித்துப்பார்...

~ ஃ கவிதைகள் ( பக் : 70 ) ~

🍁🍁

சுட்ட மண்ணில் இன்னும் 

சூடு ஆறாமலிருக்கும்

பொம்மையின் சிதைந்த மார்பில்

எழுதப்பட்டிருக்கிறது அவன் விதி...

கொட்டும் மழையில் எரியும் தீயை

இனி எவர் அணைக்க முடியும்???


ஹே சென்னிமல்லிகார்ஜுனா

காலக்குகை விரியும்போது

சிதையும் சிவலிங்கம் ...

~ ஃ கவிதைகள் (பக் : 75 ) ~

🍁🍁

உன் தியாக வரலாற்றில்

யார் யாருக்கோ வாழ்க்கை

எனக்கு ?

அதில் ஒதுங்கிக் கொள்ளவும்

நிழலில்லை...

வந்து போனவர்கள் 

இடையில் வந்தவர்கள் 

இவர்களுக்கு 

நடுவில் என்னை தேடாதே...

உன் சந்தன சோப்புக்கரைசலில் 

கரைந்து 

போகிறவள் அல்ல நான்...

~ ஃ கவிதைகள் (பக் : 89 )

🍁🍁

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

வெற்றுக் காகிதத்தை விட்டுச் செல்கிறேன்

என்னை அழித்து அழித்து

எழுதிய வெற்றுக் காகிதத்தை

விட்டு செல்கிறேன்

உன் பேர் சொல்லமுடியாத

நம் பிள்ளைகளுக்காக...

~ ஃ கவிதைகள் (பக் 100 )

🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳

இப்படியான தற்கால வாழ்பரப்பின் மீது 

நின்றுகொண்டு தனது நெடும் 

புராதனக்கொடி மரபின் கூட்டு நனவிலியை 

புறவயப்படுத்துகிற ஃ கவிதைகள் ஒவ்வொரு 

முறை வாசிக்கப்படும் போதும் புதிதாக நிகழ்கிறது, 

கவிதை தன்னை நிகழ்த்திக் கொள்கிறது..

சமகால அரசியல் மற்றும் சமூக வாழ்வின் 

அமைப்பாக்கத்தின் உள்ளமைவுகளின் 

தன்மைகளையும் தனது உட்கலனாக்குகின்ற;

 வாழ்க்கையின் முரண்களை முன் வைத்தே

புதியமாதவியின் கவிதை உலகம் நகர்கிறது...

படைப்பின் நோக்கம் புரியும்போது படைப்பாளியும்

புரிந்துகொள்ளப்படுகிறார் என்பதே வரலாறு...

🔳

பல நூற்றாண்டுகளின் குரல்வளையிலிருந்து 

பெறப்பட்ட கவித்துவ குரலை புதிய மாதவி  

தனது குரலாக மீட்டெடுக்கிறார்... வாழ்க்கை 

பேரிழப்பின் ஆற்றாமையிலிருந்தும் 

தன்னிலை இழப்பிலிருந்தும் விடுவித்துக் 

கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளவை 

இவரது  ஃ கவிதைகள்...

🔳🔳

பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல இயற்கையாகவும் ; சமூகத்தின் அங்கமாக அல்ல

சமூகமாகவும்; ஆணின் சார்பாக அல்ல ஆணை நிர்ணயிப்பவளாகவும்;  மாற்றும் மானுட மனதின்

சொற்பெருக்கே இவரது கவிதைகளின் ஆதாரம்.

பெண்ணியம் ,பெரியாரியம்  அம்பேத்கரியம்

மார்க்சியம் இவைகளின் சாரங்களை 

எடுத்துக் கோர்த்து நவீன தமிழின் 

இலக்கிய வெளியில்கொண்டு சேர்க்கிறது 

ஃ கவிதைகள் தொகுப்பு...

🔳🔳

நவீன கவிதை என்பது, .’உயர்ந்து எழுந்து 

வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ? 

என்று வாசகர் எண்ணும்படி, வாசிப்பவரை 

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக 

இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், 

தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்...

🍁🍁

எழுத்தாளரின் வேலை என்பது முற்றிலும் 

தெரியாத ஒன்றை சொல்வது அல்ல

“ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று 

வாசகனை அகம் திறந்து சொல்ல வைப்பது. 

ஏற்கனவே தெரிந்த ஆனால் வாசகன்

சொல்லத்துணிந்திராத ஒன்றைச் சொல்வது” 

என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். ... 

இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் 

இயைந்த புதியஏற்பாடு ஒன்றின் துவக்கம்

புதியமாதவியின்  ஃ கவிதைகள்...

🍁🍁

ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் 

போதாமையை நிரப்பும் தேவையின் 

பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. 

ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் 

களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, 

நீண்டு விரிந்து துயரமான முடிவை 

நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை.  

🍁🍁

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல 

முடியாமல் போனவை ; சொல்லப்பட்ட 

எதையும் விட பிரகாசமாகிக்கொண்டே இருக்கிறது...

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 

பரவலாக அறியப்பட்ட,  அழகியலை மீறிச்செல்லும் 

நோக்கத்தில் தோன்றிய பாணியின் வீச்சே 

நவீனக்கவிதைகளின் வடிவியலை தீர்மானிக்கும் விசை. ஆகவேதான் அன்றாட வாழ்வின் எளிய, சாதாரணமான, சிறப்புகள் ஏதுமற்ற விஷயங்களும்கூட நவீனக்கவிதையின் 

திறப்புகளாகி பாடுபொருளாகி விடுகின்றன. 

🍁🍁

அன்றாட எளிய விஷயங்களை அவதானித்து 

அதன் அண்மையில் சென்று காட்சிப்படுத்துவதும், 

அதன் வழி கேள்விகளை எழுப்பிக்கொண்டு தத்துவவிசாரத்துக்குள் புகுந்து செல்வதுமான 

சுயவிசாரணையே புதியமாதவியின் சிருஷ்டிகள்...

🍁🍁

தற்கால வாழ்வின் பரப்பில் நாம் அறியாத வண்ணமாக

 நம் மீது வேரோடியுள்ள அதிகாரத்துவ அரசியலில் கடுங்கரங்களில் சிக்குண்டு தவிக்கிறோம் ...

அன்றாடங்களில் காணக் கிடைக்கும் மனிதமற்று போனவர்களின் கையறு நிலையை 

அகவயப்படுத்தும் அரசியல் பிரதிகளின் தேவை இலக்கியத்திற்கு மிக முக்கியமானது ...

அத்தகைய கவிதைகளை எழுதுவதும் மிக மிக அவசியமானது .அதற்கான மொழி தேர்வும் மற்றும்

கவித்துவமும் மற்ற கவிதைகளின் போக்கிலிருந்து 

முற்றிலும் மாறுபட்டது...ஆகையால் அத்தகைய 

வகைமையில் ஏன் நிகழ்கிறது என்பதை விட 

எப்படி நிகழ்கிறது என்பதை ஆராயும் 

புதியமாதவியின்ஃ கவிதைகளை வாசகர்கள் 

அணுகும் போது

 அதற்குரிய தளத்தில்தான் அணுக வேண்டும்...

🍁🍁

செவ்விலக்கியம் பெரும்பாலும் கவிதைகளை 

முன்வைத்தே மதிப்பிடப்படுகிறது , காரணம் 

செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழமை தேவை.

இலக்கிய வகைகளில் பழமைச் செறிவுள்ள

வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது...

செவ்வியல் வாய்ப்பாட்டையும் மரபின் கட்டற்ற

தன்மையையும் உள்ளடக்கிய நவீன மொழியின்

விஸ்தரிப்பு புதிய மாதவி படைப்புகள் ...

🔳🔳

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?

புதியமாதவியின் அனைத்துக் கவிதைகளிலும்

இந்த சுயபிம்பத்தின் இருப்பை நாம் காணலாம்..

மொழியில் உயிர்ச்சக்தியாக இயங்கும் கவித்துவ 

வேகம் காலத்தைக் கிழிக்கும் நியதி நெருப்பு 

இவரது கவிதைகள் சமகால தமிழின் மிகச்சிறந்த

மொழிச்சாத்தியங்களை நிகழ்த்தியவை 

என்று கூறலாம்... தேர்ந்த வாசகன் அதை 

எப்போதும்

ஒத்துக்கொள்வான் மறுதலிக்க முடியாது ...

🔳🔳

ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் 

எழுத்தாளர்தான்...

இதில் உள்ள ஒரே கேள்வி

அது யாருக்கான அரசியல்??

~ என்று கூகிவா தியாங்கோ 

முன்வைத்த விசாரணை அறிக்கையின் 

சிறைத்தகர்ப்பு கேள்விகள் ,எதிர்வினைகள் , 

கனல் பிடித்தெரியும்  நுண்ணரசியலின்

நியூட்டனின் மூன்றாம் விதி உரையாடல்கள்தான்

புதிய மாதவியின்  ஃ கவிதைகள் 

🔳🔳

தனித்திருப்பதற்கான தைரியமே வீரம்

-~ என்றார் வர்த்தமான மகாவீரர்.

தனித்து நிற்கிறது ஃ கவிதைகள்  தொகுப்பு 

தனித்திருப்பதில் எல்லாம் அடங்கி இருக்கிறது

வாழ்த்துகள் தோழர் புதியமாதவி ...

தோழமையுடன் ...

~ தஞ்சை தவசி

     27 ~ 1 ~ 2025

     சென்னை . 16

🔳🔳

நூலைப் பெற :

நூல்  ~ ஃ கவிதைகள்

நூலாசிரியர் ~ புதிய மாதவி

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

விலை : Rs .120 

தொடர்புக்கு: 94446 40986

🔳🔳

பேரன்பும் மிக்க நன்றியும் தவசி.

💥🙏🙏

Tuesday, January 21, 2025

கலைஞரும் மும்பையும்



டிச.1983. தாதாவாக இருந்த வரதாபாய் பம்பாய்த் தமிழர் பேரவை நிறுவி மும்பை அரசியல்வாதிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருந்த தருணம்.

அதுவே அவருக்கு முடிவுரை எழுதியது என்பது வேறொரு கதை.


இங்கே இந்த அழைப்பிதழில் அவர் இருக்கிறார். (மு. வரதராசனார்/ முனுசாமி வரதராசனார் )ஆனால் நிகழ்வில் அவரில்லை!!!அவர் சம்மத்துடன்தான் அவர் பெயரைச் சேர்த்திருக்க முடியும். ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு சுவராஸ்யமான திருப்புமுனை.

கலைஞரிடம் வரதாபாய் நெருங்குவதா..?

விடலாமா!

என்று அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைக்கிறார். ஏன் அப்படி நினைச்சார்னு யாருக்குத் தெரியும்?!🙃

எம்ஜிஆர் அதே நாளில் வரதாபாய்க்கு சிறப்பு செய்ய மாபெரும் நிகழ்வு சேலத்தில் ஏற்பாடு செய்கிறார்.அமைச்சர் ராஜாராம் மூலம் வரதாபாயுடன் பேசுகிறார்கள். எனவே கலைஞரின் நிகழ்வில் வரதாபாய் வரவில்லை.

வரதாபாய் சார்பாக தமிழர் பேரவை செயலாளர் பரமசிவம் அவர்கள் கலைஞருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்கிறார்..கலைஞர் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு தன் உரையில் குறிப்பிடுகிறார்.

" வரவேண்டிய வரதராசன் வராத ராசன் ஆகிவிட்டார்."

மும்பையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் இதைச் சொல்லிச் சொல்லி ரசிக்கிறார்கள்.



நன்றி மும்பை ஜேசுராஜ்.

#கலைஞர்_மும்பை

#கலைஞர்_மும்பைதமிழர்

Monday, January 20, 2025

ஃ கவிதைகள் விமர்சனம் 2




உரிமைக்குரல்


அறச்சீற்றம் என்பது கவிஞர்களுக்கு பிரிக்கமுடியாத உரிமை.அந்த நியாயத்தின்

சுதந்திரக்காற்றை சுவாசிக்கும்  ஒருத்தி

மற்றவர்களுக்காய் குரல் கொடுக்கிறாள்.

சொற்களால் சலங்கைகட்டி சன்னதம் செய்கிறாள்.அன்புக்கும் துரோகத்துக்குமிடையே அலைபாயும் பெண்மையின்  காயத்தை,வலியை,தன்சொற்களால் ஒளியேற்றி சென்னிமல்லிகார்ஜூனின் இருளை சுட்டிகாட்டுகிறாள்.


"ஹே சென்னிமல்லிகார்ஜூனா

காலக்குகை விரியும் போது

சிதையும் சிவலிங்கம்"என்கிறார் 


நவராத்திரியின் ஒன்பது இரவுகளிலும் சிவனை உலுக்கும் சக்தியின் மொழியில்

இந்த சமூகத்தின் அவலத்தை புதியமாதவி அவர்கள் தன் சொற்சாட்டையால் வெளுக்கிறார்.


எந்தக் கறையுமின்றி இந்த இரவைக்

காமட்டிபுரம்

கடந்துவிட வேண்டும்...


இந்த ஓரிரவிலேனும்

வெள்ளைத்தாமரையில்

என்னுடல் பூத்திருக்கட்டும்...


 என்னும் வேளையில் ஒட்டுமொத்த பெண்களுக்கும்

குரல் கொடுக்கிறார்.எத்தனையோ நிர்பயாக்கள் கண் முன்னே வந்துசெல்கிறார்கள்.


பெண்கடவுளே வந்தாலும் திக்...திக் மனநிலையில் தான்   செல்லவேண்டிய கொடூரச் சூழலை புடம் போட்டு காட்டுகிறார்.


துலுக்க நாச்சியார்

காதலிப்பது ஊரறிந்த ரகசியம்

பாவம் நீ... என்கிற போது

எள்ளல் தொணியில் அழகரை  கேள்விக்கேட்பதோடு,துலுக்கநாச்சியார் வீரம் கொண்டவள் என்பதையும் சொல்லிச்செல்கிறார்


செல்லியம்மன்

இசக்கி அம்மன்

அக்கம்மா தேவி

தவ்வை

பச்சையம்மன்

எல்லம்மா

கொற்றவை

காரைக்கால் அம்மை

துலக்க நாச்சியார்

சீதை


பெண்கள்,பெண் சிறுதெய்வங்கள் அவர்களின் உடல்கள்,உணர்வுகளின் வழி

நின்று நியாயத்தை,அவர்களுக்கான உரிமையைக் கேட்டு நிற்கிறார். அதே நேரத்தில்


சக்தியுகம் செத்துவிடவில்லை

அமிர்தமே நஞ்சாக 

கசக்கிறது. உன் எச்சில்பருக்கை...

தகத்தக தகத்தன தகவென

ஆடும் காற்றில் எரியும்

நான் நீ காலம் என்பதை தீர்க்கமாய் கூறுகிறார்.


பெண்மையைவாசிக்கத்தெரியாத ஆண்மை அரசியலை தொன்மம் வழியே

நம் முன் வைக்கிறார்.


யௌவனம் மறந்தவள்

பேயுரு களைந்து

உனக்காக

உயிர்த்தெழக்கூடும்

அப்போது அவளை

வாசித்துப்பார்... என்கிறார்.


பெண்களுக்கான வலியை,காயத்தை அவர் சொற்களின் வழியே கடத்துவது,அனைவரும் விழிப்புணர்வை பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் 

திண்ணமாய் விளங்குகிறது.

பசியில் அலையும் சொற்களும்,பாறையின் மௌனமும் கவிதை மொழியாய் மாறும்போது ரகசியக்கதவு திறக்கிறது.

அதுவே ஃ.அதுதான் எல்லோருக்குமான உரிமைக்குரல்.

அற்புதம் புதிய மாதவி அம்மா .


செ.புனிதஜோதி

(முகநூல் பதிவு 20/01/25,)

நன்றி புனித ஜோதி

#ஃகவிதைகள்_புதியமாதவி

#Puthiyamaadhavi_ஃPoems

திமுகவும் புத்தகவாசிப்பும்

 



திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை.

அது கலைஞருடன்

முடிந்துப் போனதாகவே நினைக்கிறேன்.

காரணம் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற சூல் நாவலில் தந்தை பெரியாரை நாயக்கர் என்றும் நாயக்கர் கட்சி என்றும் விமர்சனம் படுத்தி இருப்பார். 

எந்த ஒரு தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.

பெரியாருக்கு குழந்தை இல்லை என்ற அவர் தனிப்பட்ட வாழ்க்கையை

கதை மாந்தர்களின் உரையாடல் வழி நக்கல் அடித்திருப்பார்.

பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கதையில் காலவழுவாக சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசு ஆண்டதை மறந்து அதை 1967க்குப் பிறகான கதைக்களம் ஆக்கி இருப்பார்.

சூல் வாசித்தவர்கள் யாருக்கும்

இது புரியவில்லையா?

அல்லது சூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதும்

தர்மன் அய்யாவுக்கு திராவிட மாடல் கனவு இல்லம் வழங்கி கெளரவித்ததும் கூட

இதற்காக தானா!!!

யாருக்குத் தெரியும்.


ஆ ஓ என்றால் எழுத்தாளர் ஜெயமோகனை வரிந்துக் கட்டிக்கொண்டு விமர்சிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை!???

மில்லியன் டாலர் கேள்வி இது.


பெரியார் அண்ணா கலைஞர் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அவர்களின் கருத்துகளுடன் முரண்பட லாம். ஆனால் ஒரு நாலாந்தரமான அருவெறுப்பு தரும் வகையில் மஞ்சள் பத்திரிகை தரத்தில் புனைவுகளில் ஊடாக..

எழுதி ...அதையும் இவர்கள் எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதையும் சாதித்துக் காட்டி...

இதெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது???


காரணம் திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை!

அவ்வளவுதான்!


#திமுக_புத்தகவாசிப்பு


#DMK_dravidamodel


#DMK_Lit

Thursday, January 16, 2025

ஃ கவிதைகள் விமர்சனம் 1



ஃ கவிதைகள

முதல் விமர்சனம்.

நன்றி எஸ்தர் ராணி🙏💐

     "பறவைகளின் மொழியை

மரங்களின் மொழியைக் கூட

கேட்டதுண்டு

பாறைகளின் மொழி?"


     இக்கவிதைத் தொகுப்பை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். இல்லாவிடில் நீங்கள் தொலைந்து விடுவது திண்ணம்.

     பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இறுகிப் போயிருக்கும் வரலாறை, புராணங்களை, புனைவுகளை, கற்பிதங்களை மையமாக்கி அதை உடைக்கத் துணிந்திருக்கிறது இத்தொகுப்பு.

     அப்போதும் பசி அடங்கவில்லையா

என் கருப்பைக் கிழித்து

கனவுகள் எடுத்து ருசி

பாறையில் கசியும் ரத்தம்

பருகியது போக மீதியைத் தொட்டு 

உன் மேனி எங்கும் பூசிக் கொள்

    இப்படியாக பயணித்து இங்கு வந்து நிற்கிறது.

  யூ

     அக்கமாதேவியின் குரலுக்கும், காரைக்கால் அம்மையின் குரலுக்கும் என்ன வேறுபாடு? காரைக்கால் அம்மை தன்னை ஒறுத்துக் கொண்டார். அக்கமாதேவியோ தன்னை அப்படியே சென்னிமல்லிகார்ஜூனாவுடன் பிணைத்துக் கொண்டாள். அக்கமாதேவியின் குரல் எதிர்ப்பின் குரல். புராணங்கள், கற்பிதங்களை எள்ளி நகையாடிய குரல். 

    புதிய மாதவியின் அகக்கேள்விகள் கவிதைகளாகி நிற்பது இந்த இடைவெளிகளில்தான். மீப்பெரு இடைவெளிகளை சிறுசொற்கள் நம் முன்னே காட்டி விடுகின்றன.

  காரைக்கால் வீதிகள் தலைகுனிந்த இரவு

....

பேயுரு களைந்த திருவந்தாதி 

தலைகீழாய் நடக்கிறாள்

படைப்புக்கும் பிரம்மத்திற்கு நடுவில் 

வெந்து தணியுமோ காடு?!

      துலுக்கநாச்சிக்கும், துர்க்கைக்கும், சீதைக்கும், கர்ணபுத்ரிக்கும், காந்தாரியின் மக்களுக்கும் விடுதலையைத் தர விரும்புகின்றன கவிதைகள். கிடைத்தால் மகிழ்ச்சி தானே.

    போகிற போக்கில் பூம்பூம் மாடுகள் என்று தமிழ்க் கவிஞர்களுக்கு குத்து விட்டிருக்கிறார். உண்மையாகவே  நேற்று ஒரு சம்பவம். வீதியில் ஒரு அம்மா தன் குடும்பத்தோடு மாட்டிற்கு பூஜை செய்து கொண்டிருந்தார். நான் கூட பூம்பூம் மாடென்று நினைத்தேன். அது பசு. மாட்டுக்காரர் அழைத்து வந்து இருந்தார். அந்த அம்மா பசுவின் மேல் பொன்னாடை போர்த்தி கன்றுக்கு என்று மற்றொரு பொன்னாடையைக் கொடுத்தார். இனி நான் இதை மறப்பதெப்படி. 

  "முட்டுகின்ற மாடுகளைவிட

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் 

மாடுகள்...

'கால்' நடைகளின் அவமானம் 

ச்சே.."

     இதில் நான் சேர்த்தி இல்லை என்று நம்புகிறேன். 

   கவிதை என்னவாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.

   "இருளின் நிர்வாணத்தில் கவிதை 

தன்னை அழகூட்டிக் கொள்கிறது

கவிதை இருளின் ஆன்மா

...

கவிதையை எப்போதும் பகலில் வாசிக்காதீர்கள்

கவிதை இரவின் மொழி."

     நவராத்திரி முதல் நாள் ஆரம்பித்த கவிதைத் தொகுப்பை இறுதியாக இப்படி முடித்திருக்கிறார்.

 "சிவப்பு வெள்ளையின்

மூத்திரம் குடி

போடா போ..

நான் கருப்பி

கறுப்பு என் நிறம் மட்டுமல்ல!"

     எனக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது. யுத்தப் பேரிகை ஆயத்த அழைப்பு. புரியவும், ரசிக்கவும் அது இடம் கொடுப்பதில்லை. 

    அஃகேணம் கவிதைகள் என் இரவுகளின் துணைகளில் ஒன்றாகி விட்டது. வாழ்த்தும், அன்பும்...


   - எஸ்தர் ராணி


ஃ கவிதைகள்

புதியமாதவி

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 

Wednesday, January 8, 2025

Real DHARAVI bank



 " தாதாக்களை உங்கள் புனைவுகள் அறிந்ததை விட எங்கள் நிஜ வாழ்வில்

அதிகம் அறிந்தவர்கள் நாங்கள்"


வன்முறையின் உச்சம்.

வன்முறை காட்சிகளில்

மனப்பிறழ்வு கொண்ட அதீத  கொடூர வன்முறைகள்.

இத்தொடரில் இடம்பெறும்

ஓவ்வொரு இடமும்

மூலை முடுக்குகளும்

காலடித்தடங்களும் நான் அறிந்தவை.

சினிமா உலகம் தாதாக்கள் என்று காட்டுபவர்கள் பலரும் தாராவியில் தான் பிறந்து வளர்கிறார்கள் என்ற உங்கள் சான்றிதழ் எங்களுக்கு நகைச்சுவை!

இந்த தாதாக்களை உங்கள் புனைவுகள் அறிந்ததை விட அதிகமாக நாங்களும் அறிவோம்.

அவர்களும் மனிதர்கள் தான்.

மண்ணும் மனிதர்களும் நிஜமாக காட்சிப்படுத்தப்படும் போது

அதில் இடம்பெறும் காட்சிகளும் உண்மைக்கு நெருக்கமானவையாக மாறிவிடும் ஆபத்தான பொதுஜன உளவியல்

அது ஏற்படுத்தும் பின் விளைவுகள்...!

இதை எப்படி இந்திய தணிக்கை குழு ஏற்றுக் கொண்டது?

அல்லது...

இவர்களுக்கு விதிவிலக்காக!


தாராவி பேங்க் எது தெரியுமா..

நீ காட்டுகின்ற பொய்யும் புரட்டும் அல்ல.


தாராவியின் பொருட்கள் உலகெங்கும் ஏற்றுமதி ஆகின்றன. ஓராண்டு பணப்புழக்கம் ( Turn over) USD 500 மில்லியன் முதல் 650 மில்லியன் வரை.

15000 ஒற்றை அறை தொழிற் கூடங்கள்!

மும்பையின் ஒட்டுமொத்த கழிவுகளையும் மறுசுழற்சி ஆக்கி இருமி இருமி

வாழாமலேயே செத்து தொலைக்கும் எம் மக்கள்..

இதெல்லாம் தான் டா

தாராவி பேங்க்.

DHARAVI Bank.


நீ உன் அதீத கற்பனையில் காட்சி படுத்தும் எழுதக் கூசும்...

வன்முறைகள்..

தாராவி தாதாக்களும் அறியாதவை.

எங்கள் மீது காலமெல்லாம்

நீங்கள் சுமத்தும் இரத்தக்கறைகளைப்

பொறுத்திருந்தோம்.

இனி,

பொறுப்பதில்லை!

யூ ஆர் க்ராசிங் த லிமிட்.


இப்படிக்கு

தாராவியின் புதல்வி.


#தாராவி_ அசலும்புனைவும்

#DharaviBank

#realDharaviBank