ஹே சிவா...
தெரியும் தானே நான் கருப்பி
என்பதும்
அது என் நிறம் மட்டுமல்ல
என்பதும்.
என் திறம்
என் வலி
உன் அழகியல் தோற்றுப்போன
யோனியின் சுழி.
வெள்ளை எலிகளும்
வெள்ளை பன்றிகளும்
உலாவரும் உன் தேசத்தில்
பச்சையமாய் உயிர்த்திருக்கும்
மழைத்துளியின் கருவறை
இந்தக் கருப்பி.
உன் புனைவுகள்
எட்டாத வானம்.
உன் கவிதைகள்
அறியாத மொழி.
வெண்மை புனிதம்
கருமை இருமையென
எவன் சொன்னான்?
ஏன் சொன்னான்?!
போடா போ.
ஆத்தாவும் அப்பனும்
கறுப்பாக இருப்பதை
வெளியில் சொல்லாதே.
ஃபேர் அண்டு லவ்லி
தேவதைகளைத் தேடிக் கண்டுப்பிடி.
பசுவின் பால் மட்டும்
வெள்ளை.
எருமைப் பால் கறுப்பாக
இருக்கும்.
நம்பு.
சொர்க்கலோகத்தில்
சிவப்பிகளுடன்
ஆடிப்பாடு.
உன் பிறவிப்பயன்
கிட்டும்.
தாகமெடுக்கும் போது
தண்ணீர்க் குடிக்காதே.
கார்மேக நீர்த்துளி
கறுப்பின் அடையாளம் டே.
வேண்டாம்.
சிவப்பு வெள்ளையின்
மூத்திரம் குடி.
ஹே.. சிவா..
போடா போ..
கங்கையைத் தலையில்
வைத்துக் கொண்டாடு.
பிரம்படி பட்டும்
பித்து தெளியாத உன்னை
நம்புவதற்கில்லை.
சிவசூத்திரங்கள்
மெளனிக்கின்றன.
பச்சைக்கிளியின்
புதிய சிறகுகள்
முளைக்கும் காலம்.
தவக்காலம் முடியும் தருணம்..
கண்முழித்தவுடன் வா.
உன் பித்தம் தெளிய
வழிப் பிறக்கும்.
பிறக்கும்.
No comments:
Post a Comment