Sunday, January 4, 2026

இந்தி வாத்தியாரு பொண்ணு.


பரமு சித்தப்பா டோம்பிவலியில்தான் இருக்கிறாராம். கேள்விப்பட்டதிலிருந்து அவரைப் போய் எப்படியும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை அதிகமானது. டோம்பிவலி ஒரு குட்டி மெட்ராஸ். அவரோட அட்ரஸ் இல்லை. அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் எந்த விவரமும் இல்லை. பரமு சித்தப்பா வீட்டில ட்யுஷன் போகிறாளாம்

என்னோட ப்ரெண்டோட மகளோட பிரண்டுக்கு மகள்.. அதுவும் இந்தி

டியுஷனாம்! பரமு சித்தப்பா வீட்டில இந்தி டியுஷனா என்ற மாபெரும்

சரித்திர கேள்விக்கு விடை தெரியாட்டி தலை சுக்கு நூறா வெடிச்சிடும்போல ஆயிடுச்சி நிலைமை.

 பரமு சித்தப்பாவும் இந்தி டியுஷனும் என்பது எம்புட்டு பெரிய ஷாக் நியுஷ், ப்ரேக் நியுஷ்னு பரமு சித்தப்பா பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். அதுக்கு கொஞ்சம் ப்ளாஷ் பேக் தேவைப்படும். ப்ளாஸ்பேக்கில் பரமு சித்தப்பாவைக் காட்டினா தானே எனக்கு ஏன் பரமு சித்தப்பாவைப் பார்த்தே ஆகனும்னு பரபரப்பா இருப்பது புரியும்!

 பரமு சித்தப்பா அந்தக் காலத்தில எங்க ஊரு ஹீரோ. அவரு தலைமுடியை நெற்றிக்கு மேலே ஒரு நத்தைக்கூடு மாதிரி சுருட்டு விட்டிருப்பாரு. எப்பவும் இப்படித்தான் அவரு முடி சுருண்டிருக்குமானு அவர் தூங்கி எந்திருக்கிறப்போ பார்த்தவங்களுக்குத்தான் சொல்ல முடியும். அது என்னவோ தெரியல.. அவரு முடியை சுருட்டி சுருட்டி வாரியதில அவரு வாய்க்காலில் குளிச்சிட்டு தலையைத் துவட்டினா கூட முடி அதே மாதிரி முன்னாலே சுருண்டிடும்னு எங்க பக்கத்துவீட்டுக்கார ரத்தினம் சித்தி அடிக்கடி சொல்லும்.

 ரத்தினம் சித்திக்கு ரெண்டு பிள்ளைங்க. சித்தப்பா துபாய்ல. சித்திக்கு பரமு சித்தப்பா மேலே ஒரு ‘இது’ . தன் புருஷன் துபாயிலிருந்து கொண்டுவந்த செண்டுபாட்டில், டீஷர்ட், பாட்டு கேசட்டு, கூலிங்க்ளாஸ் .. இப்படியா எதையாவது பரமு சித்தப்பாவுக்கு கொடுக்கும்.

இது ஊர்ல எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்.. எப்போதாவது தெருச்சண்டை வந்தாதான் இந்தக்கதை எல்லாம் வெளியில வரும். இல்லாட்டி கண்டும் காணாம அவுங்கவுங்க பாடுஜோலியைப் பார்த்திட்டு இருப்பாங்க எங்கத்தெரு பொம்பளங்க.

 எங்கத் தெருவில இருந்து ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்க எல்லாருக்குமே பரமுதான் லீடர். அரைமணி நேரம் நடந்துதான் ஸ்கூலுக்குப் போகனும். நாங்க நடப்போம். பரமு சித்தப்பா அப்போவே ஸ்டைலா சைக்கிளில்தான் ஸ்கூலுக்குப் போவாரு. அவரு சைக்கிள் பின்னால மற்ற பசங்க சைக்கிள் போகும். என்னவோ ஒரு மந்திரி பின்னால வண்டிகள் போறமாதிரி இருக்கும். படிப்பும் நல்லா படிப்பாரு. அதிலும் கணக்கு நல்லா போடுவாரு. இங்கிலீஷ் பேசுவாரு.

 எங்கத் தெருவில அவரோடு குடும்பம்தான் அந்தக் காலத்திலேயே படிச்சக் குடும்பம். வக்கீலு குடும்பம்னு பேரு. வக்கீல்னு சொன்னவுடனே என்னவோ கறுப்பு அங்கியை மாட்டிக்கிட்டு கோர்ட்டு வாசலில் நடக்கும் எல் எல் பி வக்கீலானா கேட்டிடாதீங்க. அப்படி எந்தக் கோர்ட்டு வாசலிலும் எட்டிப்பார்க்காத வக்கீலு குடும்பம். பரமு சித்தப்பாவோட அப்பா அந்தக் காலத்திலேயெ இலங்கைப் போயி வெள்ளைக்காரங்கிட்டே வேலைப்பார்த்தவரு. வெள்ளைக்காரதுரைக்கு மனு எழுதறது, கலைக்டர் ஆபிஸ்க்கு மனு எழுதிக்கொடுக்கறது, அப்புறம் சட்டப்படி என்ன செய்யலாம்னு ஊர்ப்பஞ்சாயத்தில அட்வைஸ் செய்யறது, அவரு வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவாராம். ஆதலால் அவரு எங்க ஊரு வக்கீலானாரு. அவரோட வீடு தான் வக்கீல் வீடு. அவரோட குடும்பமே வக்கீல குடும்பம்னு ஆயிடுச்சி. அவருக்கு 14வது பிள்ளையா அவரோடு மூணாவது பொண்டாட்டிக்கு பிறந்தவரு பரமு சித்தப்பா.

 பரமு சித்தப்பாவை எப்படியும் உண்மையான வக்கீல் தொழிலுக்கு படிக்கவச்சிடனும்னு கிழவனுக்கு ஆசை இருந்திச்சி. எல்லாம் இந்த 65 ல இந்திப்போராட்டம் வந்து கெடுத்திடுச்சி.. அதுவரை அவரு பெரியார் கட்சியில இருந்தவருதான்.. கட்சி மாறி காங்கிரசுக்குப் போயிட்டாரு.. இதெல்லாம் எங்க ஊரு போராட்டத்தில் நடந்த உபகதைகள்.

 இந்தி ஒழிக , தமிழ் வாழ்க .. மாணவர்கள் போராட்டம் .. ஸ்கூல் காலேஜ் எல்லாம் காலவரையறையின்றி மூடப்போறதா அறிவிப்பு வரப்போவதுனு செய்திவருது. மூடிட்டா எப்படி போராட்டம் நட்த்தறதுனு பரமு சித்தப்பா டீம் யோசிக்கிறாங்க. போராட்டம் ஆரம்பிச்சிடறாங்க. எந்த ஒரு முன் அறிவிப்பு ப்ளான் எதுவும் கிடையாது. ஆனால் போராட்டம் பத்திக்கிடுச்சி. ஸ்கூலுக்கு வெளியே இருந்து கிளம்பின வரிசை அப்படியே ஸ்கூல் எல்லையைத் தாண்டி மெயின்ரோடு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வருவதற்குள் பேரணி பெரிசாயிடுச்சி. மாணவர்களோடு சேர்ந்து ரோட்டில நின்னவுங்க கட்சிக்காரங்க வேடிக்கையா கலந்துக்கிட்டு வரிசையில வந்தவுங்கனு வரிசையில் தலைகள் எண்ணிக்கை கடல் அலைமாதிரி வந்திட்டே இருந்திச்சி. கலைக்டர் ஆபீஸ்க்குப் போகணும். அதுதானே ஸ்ட்ரைக் பேரணி முடியற இடமா இருக்கும்.

 போகிற வழியில தான் போலீஸ் ஸ்டேஷன். கூட்டத்திற்கு போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடனே வீரம் வெறியா மாறிடுச்சி.. யாரு முதல்ல கல்லை எறிஞ்சானு யாருக்கும் தெரியாது. ரோடு போட ரோட்டோரம் இருந்தக் கல்லே ஆயுதமாச்சு.. சரமாரியா கல்லைத்தூக்கி வீசுனாங்க.போலீஸ் வெளியில வந்து கூட்டத்தைக் கலைஞ்சிப் போகச்சொல்லி அடிக்க ஆரம்பிச்சாங்க. .. புகைவெடியை வீசினவுடனே கூட்டம் கலைஞ்சிடுச்சி.. மாணவர்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் ஓட்டம்.. எதிரே வாய்க்கால். வாய்க்காலைத் தாண்டினா அக்கிரஹாரம். கூட்ட்த்தில லீடரா இருந்தவுங்களத்தான் போலீஸ் குறிவைச்சதா செய்தி வந்திச்சு. இருக்கலாம். பரமு சித்தப்பாவை விரட்டுனதில அவரு ஓடிப்போயி வாய்க்காலைத்தாண்டி எதிரே இருக்க அக்ரஹாரத்து கொள்ளைப்புறத்தில சுவரேறி குதிச்சிருக்காரு.

 கதையில இந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ். அவரு குதிச்சப்போ இந்தி வாத்தியாரு பொண்ணு விசலாட்சி குளிச்சிட்டு இருந்திருக்கு. அம்புட்டுத்தான்.

அது திடீர்னு குதிச்சவனைப் பார்த்து அலற.. ..

வேறென்ன..! அதோடு முடிஞ்சிப்போச்சு எல்லாமும்.

 சினிமாவில காட்டறமாதிரி இந்தப் பரமு சித்தப்பா விசாலம் வாயைப் பொத்தி இருக்கலாம். அப்புறம் அதுவே காதலா மாறி எங்க ஊரு வாய்க்காலில் “வேதம் புதிது” அப்பவே வந்திருக்கும். . சவத்தே..அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. இதில பரமு சித்தப்பா ஒரு ஹீரோ அந்தஸ்த்தை இழந்திட்டாருனு தோணிச்சு.

 பவாம்.. விசாலாட்சிதான். அவ இந்தி வாத்தியார் பொண்ணா வேற போயிட்டாளா.. கதையை டுவிஸ்டு பண்ணி பெரிய ப்ரேக் நியுஸ் ஆக்கிட்டாங்க.

 விசாலம் கத்தினதை கமுக்கமா வச்சிருக்கனும். ஆனா பாவம் அந்த இந்தி வாத்தியாரும் ஏழைதான். வாத்தியாரு ஆத்து மாமி அக்ரஹாரத்தில நல்லது கெட்டதுக்கு எல்லா ஆத்திலேயும் போய் கூடமாட உதவி செய்வாளாம். விசாலாட்சி சொல்லி இருக்கு. பிரைவேட் ஸ்கூல். இந்தி வாத்தியாருக்கு வேற பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்கவும் தெரியல. அதனால ஸ்கூலில் அவருதான் ஹெட்மாஸ்டருக்கு கையாளுமாதிரி எல்லா வேலையும் செய்வாரு. மனுஷன் இந்தி சொல்லிக்கொடுக்கறதிலேயும் குத்தம்சொல்ல முடியாது. கொஞ்சம் சாதுவானவருதான்.

 விசாலம் கத்தினப்போ பக்கத்து வீட்டு மாமிதான் அதை அக்ரஹாரத்திற்கே செய்தி ஆக்கிட்டா.

“ஏன் டீ,, நீ குளிச்சிட்டிருக்கிறப்போ குதிச்சானா.. இல்லை குளிச்சி முடிச்சப்போ குதிச்சானானு எதுவும் விவரமா கேட்கவே இல்லை! “

 கேட்கும் போதே.. “ஏன் டீ.. பார்த்திட்டானா.. பார்த்திட்டான்லியோ.. கர்மம்” தலையில அடிச்சிக்கிட்டு மாமி கேட்கும்போது விசாலத்தின் அழுகை சத்தம் இன்னும் அதிகமானது. அதனால வேற மாமி இன்னும் அதிகமா அதே காட்சியை விரிவாக்கிட்டா.

“ பொட்டுத்துணி இல்லாம குளிச்சாலாமே விசாலம்,”

“அப்போன்னா அந்தப் பிள்ளை எட்டிப்பார்த்துட்டான்’

‘அது எப்படி.. கரெக்டா .. விசாலம் குளிக்கறப்போ அந்த

சுவத்தை ஏறி குதிச்சானாம்.. டவுட்டா இருக்குதுனோ’’

‘ பாரோன்..தாயும் மகளும் ஊமை மாதிரி இருந்திட்டு

என்ன காரியம் செய்திருக்கா , பாருங்கோ’

“எப்பவும் துணி இல்லாம குளிக்கப்பிடாதுனு சொல்லியாச்சு.

அது என்ன அம்மண குளிப்போ! யாரு கண்டா விவஸ்தை கெட்ட

ஜென்மங்கள்’

அக்ரஹாரமே இந்தி வாத்தியாரு பொண்ணுப்பத்தி இப்படியாக வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேச ஆரம்பிடுச்சி. இந்திப் பாடமே ஸ்கூலில் கிடையாதுனு அறிவிச்சிட்டா.. பாவம் .. இந்தி வாத்தியாருக்கு வேலையும் போயிடுமோனு பயம் வந்திடுச்சி.. மாமியையும் இப்போதெல்லாம் யாரும் எந்த உதவிக்கும் கூப்பிடறதில்ல. என்ன நடந்திச்சோ.. மனுஷன் என்ன நினைச்சாரோ .. இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கிட்டாரு.. பெத்த பொண்ணு மானம் போயிடுச்சினு தூக்கில தொங்கிட்டதாதான் அக்கிரஹாரமே சொல்லிச்சே தவிர அந்த தெரு மனுஷாள் எல்லாம் வாத்தியாரை ஒதுக்கிவைச்சியே கொன்னுட்டதை ஒத்துக்கலை.

 இந்தி வாத்தியார் தற்கொலைனு தந்திக்காரன் கொட்டை எழுத்துல செய்தி போட்டு தெரிஞ்சவா தெரியாதவா எல்லாருக்கும் விசாலாட்சி குளிச்சக்கதையைப் பரப்பிவிட்டா. அதனாலே அதிகமா.. ரோஷம் வந்திடுச்சி வக்கீலுக்கு.

சிலம்பம் ஆடற கம்பாலா சுழட்டி சுழட்டி பரமு சித்தப்பாவை அடிச்சித் துவைச்சிட்டாராம். அப்பன் மகனுக்கு எப்போ சண்டை வந்தாலும் அப்பன்னு பார்க்காம எதிர்த்து கையை ஓங்கற பரமு சித்தப்பா அன்னிக்கு மட்டும் கிழவரு கொடுத்த அடியை தலையை நிமிர்ந்துப் பார்க்காம வாங்கி கிட்டாராம். ஒரு வார்த்தை ஐயாவை எதிர்த்து பேசலியாம். அதை எப்பவும் பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தி சொல்லி சொல்லி பரமுவை இந்த ஊரே விரட்டுடுச்சினு சொல்லும்.. அதுக்குப்பிறகு பரமு சித்தப்பா படிப்பை பாதியிலேயே விட்டுட்டு பம்பாய்க்கு டிரெயின் ஏறிப்போயிட்டாருனு கேள்வி.

 இப்போ பம்பாயி மும்பை ஆகி கதை எல்லாம் பழைய கதையாகிப் போனப்பிறகு இதே கதையில இப்படி ஒரு திகில் திருப்பம்தான் பரமு சித்தப்பாவைத் தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கு..

 இதைக் கேள்விப்பட்டதிலிருந்து விதம்விதமா கனவுகள் வேறு வந்து தொலைக்குது..

கனவு 1:

பரமு சித்தப்பா இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கினதினாலே மனசு பாதிச்சி அதுக்குப் பிராயசித்தமா இந்தி படிச்சி அவரே இந்தி வாத்தியாராயிட்டாராம்!

இந்தி வாத்தியாருக்கு கணக்குப்பாடமும் நல்லா வரும் , அதில அந்தக் காலத்திலேயே அவரு இங்கிலீசு பேசின ஆளுங்கிறதால இந்தியோட சேர்த்து கணக்கும் இங்கிலீசும் டியுஷன் எடுக்கறதால அவரு டியுஷன் ஃபேமஸ் ஆயிடுச்சி. நம்ம தமிழ்ப்பிள்ளைங்களுக்கு இந்த 3 பாடமும் கொஞ்சம் வீக் என்பதால அவரு காட்டில வருஷம் பூரா மழையாம்.

கனவு 2:

பரமு சித்தப்பா டாக்சி ஓட்டினாராம். அப்பொ அவரோட டாக்சியில விசாலம் ஏறிச்சாம். பரமு கண்டுப்பிடிச்சிட்டாராம். இது நம்ம இந்தி வாத்தியாரு பொண்ணு விசாலமாச்சேனு. ஆனா விசாலம் பரமுவை அடையாளம் கண்டுக்கலியாம்.. இப்படியா பல நாளு டாக்சி ஸ்டாண்டில விசாலத்திற்காக காத்திருந்து கூட்டிட்டுப்போயி .. எப்படியோ நான் தான் பரமுனு சொல்ல

அப்படியே அந்தக் கனவு பாதியில முடிஞ்சிப்போச்சு….ச்சே..

 என்னவெல்லாமோ தொடரும்போது கனவு மட்டும் தொலைக்காட்சி தொடர்மாதிரி தொடரக்கூடாதா என்ன?! அதே கனவின் தொடர்சி மறுநாள் பகல்கனவா வந்திச்சி.. அதில …

கனவு 3:

 பரமு சித்தப்பா சொல்றாரு “ விசாலம், செளக்கியமா இருக்கியா? என்னைத்தெரியுதா , நான் தான் பரமு” அப்படினு

விசாலம் ஒண்ணுமே சொல்லாம உட்கார்ந்திருக்கு. ஸ்கூல் வந்தவுடனே விசாலம் காரிலிருந்து இறங்கும்போது

” தெரியும் , நீதான் பரமுனு முதல் நாளே தெரியுன்மு” சொல்லிட்டு இறங்கியாச்சு.

கனவு கட் கட் கட்.

அதன்பிறகு கனவு தொடரலை. அதனாலே கதை ரொம்ப சஸ்பென்சா இருக்கு.

பரமு சித்தப்பாவை எப்படி தேடிக் கண்டுப்பிடிப்பதுனு தெரியல.

டோம்பிவலி தமிழ்ச்சங்கம் நெல்லைப் பைந்தமிழிடம் விசாரிச்சதில

டோம்பிவலியில் முக்குக்கு முக்கு டியுஷன் நடக்கு. ஒவ்வொரு பில்டிங்க்லேயும் எதாவது ஒன்றிரண்டு வீடுகளில் டியுஷன் நடந்திட்டு இருக்கும். வேறு எதாவது க்ளு கொடுங்கனு சொல்றாரு.

 எங்க ஊரு ஆட்கள் ஒன்றிரண்டு பேரிடம் நைசா விசாரிச்சதில்

பரமு சித்தப்பா முழுப்பேரு பரமு இல்லையாம். பரமானந்தம், பரமேஸ்வரன், பரசுநாதன், பிரம்மானந்தம் இப்படியாக பல பெயர்களைச் சொல்கிறார்கள்.

வக்கீலு மகன் பரமுனு ஊர்ல கேட்டா இப்போ அந்த வீட்டுக்கதையைத் தெரிஞ்ச யாரும் உசிரோட இல்லை. பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தியும் மண்டையைப் போட்டாச்சு. அது உயிரோட இருக்கும்போதே கேட்டிருந்தா அவரோட பெயராவது உருப்படியா தெரிஞ்சிருக்கும்.

 என்னவோ.. இப்போதும் பரமு சித்தப்பா எனக்கு ஹீரோ அந்தஸ்தில முடி நரைச்சிப்போன தல தள அஜீத் மாதிரி இருக்காரு. விசாலம்தான் யாருனு இன்னும் சரியா முகம் நினைவுக்கு வர மாட்டேங்கு. அதனால என்ன இப்போ..!

 இந்தக்கதையை இப்படி எந்த முடிவும் சொல்லாம முடிக்கறதில எனக்கும் விருப்பமில்ல. அதுக்காக பரமு சித்தப்பாவும் விசாலமும் எங்க ஊரு வாய்க்காலில் நீந்திக்கொண்டே டூயுட் பாடற மாதிரியோ இல்ல டோம்பிவலி ஸ்டேஷனில் டிரெயின் ஓடிட்டு இருக்கும் பின்னணியில் நாலாவது ப்ளாட்பாரத்திலிருந்து இரண்டாவது ப்ளாட்பாரத்திற்கு பாடிக்கொண்டே ஸ்லோமோஷனில் வருகிறமாதிரியோ கதையை முடிச்சிட முடியுமா என்ன! ம்கூம்.. முடியாதுங்கறேன்.

 எப்படியும் பரமு சித்தப்பாவை கண்டுப்பிடிக்கிற வரைக்கும் கதை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்.!

(ஐவருமாய் தொகுப்பிலிருந்து)

Tuesday, December 23, 2025

பெய்யென பெய்யும் மழை ?

"நாங்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவோமில்ல!"


"ஆண் பெண் உறவில் பெண்ணை இழிவுப்படுத்தி

அதைக்கொண்டுபோயி பெய்யற மழையோட 

தொடர்புபடுத்தி எழுதப்பட்ட உரைகள்தான்

தமிழ் இலக்கிய உலகில் புனைவுகளின் பித்தலாட்டம்." 


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை. 

குறள் எண் – 55. 


அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்.

திருக்குறளில் காலமெல்லாம், அனைத்து உரையாசிரியர்களும் தவறாகப் பொருள் கண்ட திருக்குறள் இதுதான். இதில் அதிசயமாக உரை எழுதிய பெண்களும் விதிவிலக்கல்ல,

பெண்ணின் கற்புக்கும் பெய்யும் மழைக்கும் தொடர்புண்டு  என்று சொன்னதுதான் தமிழ் இலக்கியத்தில் ஆகப்பெரிய புனைவு.

பித்தலாட்டம்.

மழை அறிந்தவன் வள்ளுவன்.

மழை நேரமும் காலமும் அறிந்தவன், நட்சத்திரங்களின் இருப்பை அறிந்தவன், அரசனுக்கு நேரம் கணித்து சொன்னவன் வானவியல் அறிவுடன் வாழ்ந்தவன் வள்ளுவன். 

அவன் “பெய்யெனப் பெய்யும் மழை” என்று எதைச் சொல்லி இருப்பான்? 

இக்குறளில் ஏன் : தெய்வம் தொழாஅள்” என்றான்?

யார் இந்த தெய்வம்?

ஓர் இல்லறவியல் பெண்ணை அடையாளம் காட்டுபவன்

எதற்காக “தெய்வம் தொழாஅள்” என்று உச்சமான 

ஒர் அடையாளத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறான்? 


“கணவன் திரும்பிவர பொய்கையில் புனித நீராடலுக்கு 

புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்தப்போது

“பீடன்று” என்று சொன்ன சிலப்பதிகாரம்

பெண்ணின் பீடு எது? என்று சொல்கிறது!

தினமும் தெய்வத்திற்கு பூஜை, விரதம். கோவில் கோவிலாக சுற்றி வருவது.. இதெல்லாம் அறத்துப்பாலின் இல்லறவியல் அல்ல,

இல்லறவியலின் வாழ்க்கைத்துணை நலமும் அல்ல.

இதெல்லாம் வேண்டாம் இல்லறவியலுக்கு என்று சொன்னவன் வள்ளுவன்.

உன்னோடு வாழ்கிறவனைக் கொண்டாடு.

அதுபோதும், அப்படி ஒரு துணை கிடைத்துவிட்டால் 

அந்த வாழ்க்கைத்துணை நலம் என்பது

 “பெய்யெனப் பெய்யும் மழை”

அவ்வளவுதான்..! 

வெரி சிம்பிள். வெரி லாஜிக்.

இதை விட்டுட்டு அடேங்கப்பா…

கற்பரசி சொல்லிட்டா மழைவரும்னு சொல்லி

சொல்லியே மழையை வரவிடாம பயமுறுத்தி

.. நீங்களும் உங்கள் உரைகளும்..பித்தலாட்டங்கள்.


மழைனா பெய்ய வேண்டிய இடத்தில பெய்யனும்.

அன்பும் மரியாதையும் பூஜையும் நம்பிக்கையும்

இருக்க வேண்டிய இடத்தில இருக்கனும்.

அதுதான்டா இல்லறவியல்.

அப்படி இருந்திட்டா… 

ஆஹா.. அவள் பெய்யெனப் பெய்யும் மழை..

எல்லா மழையும் வாழ்விப்பதில்லை.

பெய்கிற மழை எல்லாம் அறத்துப்பால் பேணுவதில்லை.

இப்படி ஒரு பெண் உனக்கு வாழ்க்கைத்துணையா இருந்தா அவ “பெய்யென பெய்யும் மழை” மாதிரிடா. 


காட்சி 1

என்ன இசக்கியம்மா வயக்காடு நட்டாச்சா?

எங்க நட, குளத்தில தண்ணி நிரம்பலியே

 நாத்து  நடறதுக்கு யோசனையா இருக்கு..

கிணறு இருக்குல்ல, ஒரு வயலையாவது நட்டுப்போடு,


“நாறப்பய மழ ..பெய்ய வேண்டிய இடத்தில பெய்யாம

சம்சாரி பொழப்பக் கெடுக்குது..!”

ஊரில் கனமழை என்று தொலைக்காட்சியில் செய்திகள்

ஓடிக்கொண்டிருந்தப்போதுதான் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தேன்.

மழை மலையடிவாரத்தில் பெய்யவில்லை.குளம் நீர் நிலைகள் நிரம்பாது. 

ஊரில் பெய்து என்ன பயன்?

எங்கே மழை வேண்டுமோ அங்கே பெய்திருந்தால்தான்

மழையும் இனிது. இல்லை என்றால் மழையால் என்ன பயன்!

மழைன்னா அது ‘பெய்யெனப் பெய்யும் மழை”யா இருக்கனும். இதுதான் வாழ்க்கை.


காட்சி 2..

வானம் கருக்கிறது. வறண்ட பூமி, மழை வருமா என்று

காத்திருக்கும் ஊர்.. ( லகான் திரைப்படத்தில் மழைப்பாடல்)

அப்போது கொட்டுகிறது பாருங்கள் வானம்.

ஊரே கூடி ஆடிப்பாடி .. கொண்டாடும்.

பெய்யெனப் பெய்யும் மழை 

அது மகிழ்ச்சியின் உச்சம்.


 நேரம் கணித்து சொல்லும் வள்ளுவனையே

அவன் அறிவையே இம்புட்டு கேவலப்படுத்த முடியும்னா

அதில பெருமைப்பட்டுக்க என்னடா இருக்கு?!


#புதியமாதவி_வள்ளுவம்

Friday, December 19, 2025

அம்பேத்கர் தனிமைப்படுத்தப் பட்டாரா?

 



அண்ணல் அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டாரா?

நாக்பூரில் இலட்சக்கணக்கான தன் ஆதரவாளர்களோடு 1956 அக்டோபர் 14ல் இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவினார்.அதன்பின் 53வது நாளில் டிச 06 அவர் டில்லியில் திடீரென மரணம் அடைந்தச் செய்தி..

இது குறித்த சந்தேகங்கள்

வழக்குகள்

அம்பேத்கருடன் இருந்தவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்கள்

எல்லாமும் அப்படியே மெளனத்தில் உறைந்துப் போயிருக்கின்றன.

என்ன நடந்தது,?

ஏன் நடந்தது?

யார் காரணம்,?

யார் அறிவார்,?!

இது குறித்து எனக்குத் தெரிந்ததைப் பதிவு செய்தாக வேண்டும்.

அன்றைய பம்பாய் தாராவி தமிழ் இளைஞர்கள் எப்போதாவது தாதரில்  அம்பேத்கரின் இல்லத்தில் அவரைச் சந்திப்பதுண்டு.

அதில் முக்கியமானவர்கள்

தொல்காப்பியனார்,

என் தந்தை எஸ். வள்ளிநாயகம், நெல்லை இராமானுஜம்புதூர் இளைஞர்கள் . அண்ணலின் இறுதிக் காலங்களில் தாராவியிலிருந்து இவர்கள் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கதவு திறக்கப்படவில்லை!சந்திப்பு மறுக்கப் பட்டிருக்கிறது.

அம்பேத்கர் குறித்து இந்திய பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைச் சேகரித்து இவர்கள் அண்ணலிடம் கொடுப்பது வழக்கம்.

தங்களின் தலைவர் தனிமைப்படுத்தப் பட்டார் என்று இவர்கள் வருந்தினார்கள். அண்ணலின் உடல்நிலை ஓய்வு நேரம் இதெல்லாம் காரணமாக இருந்திருக்கும்,

தாராவிக்காரர்கள் என்பதால் இவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நானும் நினைத்தேன்.

அண்ணலின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தாராவியும் நிலை குலைந்துப் போனது.

என் வீட்டில் என் தந்தை காரணமே சொல்லாமல் பட்டினி கிடந்திருக்கிறார். அண்ணலின் உடல் மறுநாள்தான் பம்பாய் வந்தது. டில்லியிலிருந்து மும்பை விமானத்தில் வந்த அண்ணலின் உடலைப் பார்க்க  சயான் சாலையில் கூடி இருந்த தாராவி தமிழர்கள் அந்த வாகனத்தின் பின்னால் ஓடி இருக்கிறார்கள்.

என் அப்பாவின் மெளனத்தை அம்மா புரிந்துக் கொள்ளவில்லை,!அப்பாவும் அதை தன் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பாவின் மெளனம் ஒரு பெண்ணாக என் அம்மாவை குழப்பியது. கைக்குழந்தையோடு என் அம்மா தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். மூன்று ஆண்டுகள் அம்மா தன் பிறந்த வீட்டில்தான் இருந்தார். அதன்பின் அப்பா போகிறார். எதுவும் பேசவில்லை அம்மா. அப்பாவுடன் கிளம்பி மீண்டும் பம்பாய் வந்துவிடுகிறார்.

அப்பாவுக்கும் அன்றைய தாராவி இளைஞர்களுக்கும் தங்கள் தலைவர் பாபாசாகிப் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற வருத்தம் ஒரு குற்றச்சாட்டாக கடைசிவரை இருந்தது.

இது குறித்து மாமா சீர்வரிசை சண்முகராசனிடம் பேசி இருக்கிறேன்.அவருக்கும் இதே கருத்துதான்.

வரலாறு பல மர்மங்களைக் கொண்டது.

உண்மைகள் சைத்யபூமியில் உறங்குகின்றன.


ஜெய்பீம்.

Tuesday, December 16, 2025

ஆண்டாளும் ஆத்தங்கரை சாமியும்

 

m

வெளியில் காத்திருக்கும் அவனை அடையாளம் தெரிகிறாதா ? ‘

மேளச்சத்தம் மிக நெருக்கத்தில்.. சாமி நம்ம தெருவிற்குள் வந்துவிட்டதுனு புத்தகத்தை மூடிவிட்டு

சன்னலருகில் வந்து எட்டிப் பார்த்தேன். அவர்கள் தெருவில் நுழையும்போது மட்டும் சாமியின்

ஒற்றைக்கால் மடித்துக் கட்டப்பட்டது.

இனி ஒற்றைக் காலுடந்தான் அவர்கள் தெருவில் சாமியின் ஆட்டம். காலை மடித்துக் கட்டியாதாலோ என்னவோ

குதித்து குதித்து ஆத்தங்கரைச் சாமி அவர்கள் தெருவில் ஆடிக் கொண்டே வந்தார்..

எல்லா பெண்களும் குடத்தில் மஞ்சள் தண்ணி வைத்து சாமியின் தலையில் கொட்டினார்கள்..

சாமி ஒற்றைக் காலுடன் அவர்களுக்கு விபூதிக் கொடுத்து அருள்வாக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒற்றைக்காலுடன் ஆடும் அந்த இளைஞனின் ஆட்டத்தில் ஒரு வெறி.. ஒரு பலி தீர்க்கும் வெறி..

கண்களில் நெருப்பின் துண்டுகள்..அவன் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மேளக்காரன்

கை சோர்ந்து போனான்.

அவனின் அவள் அந்த தெருவில் ஏதொ ஒரு வீட்டின் மாடியிலோ கதவிடுக்கிலோ நின்று

கொண்டு அவன் ஆடுவதைப் பார்த்து அழுதுக் கொண்டிருப்பாளோ என்று எனக்கு

எண்ணத் தோன்றியது.

எங்கள் தெருவில் எல்லா பெரிசுகளும் சாமி அள்ளித்தந்த விபூதியை பயபக்தியுடன் பூசிக்கொள்வதைப்

பார்க்கும்போது அவர்கள் பேச்சுதான் நினைவுக்கு வந்தது.

பள்ளு பறையனுக இப்போ எல்லாம்..!

கால் மடித்துக் கட்டிய வலியின் வேதனைத் தெரியாமாலிருக்க இந்த ஆட்டமா ?

அல்லது வேறு எந்த வலியை மறக்க இந்த வலி மறந்து ஆடுகிறாய் ?

ஆண்டாளின் தோல்வி அருள்தரும் அம்மன்சந்நிதியில் கற்பூர ஆரத்தியாய்..

ஆத்தங்கரையானின் தோல்வி இன்னும் ஒற்றைக்காலுடன் ..உயிரின் வலியாய்..

.

ஆண்டாளின் சந்நிதிக்குப் போகும்போதெல்லாம் இப்போதெல்லாம் ஆத்தங்கரைச் சாமியும்

நினைவுக்கு வந்து ஒற்றைக்காலுடன்.. வெறியுடன் பலிதீர்க்கும் வெறியுடன் என் கர்ப்பஹிரகத்தில்.

( மீள்)

மின்சாரவண்டிகள் சிறுகதை தொகுப்பு 2005.

Sunday, December 14, 2025

பாரதியும் சாதியும்



பாரதியார் குறித்து இரண்டு பக்கமும் ஆதாரங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பாரதியின் எழுத்துகளில் இருந்தே தங்கள் தரப்பு நியாயங்களை வைக்கிறார்கள்.

அப்படியானால் பாரதி யார்?

பாரதிக்குள் இருந்த அந்த அசல் மனிதன் யார்?

இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

பாரதி 

மகாகவி பாரதி

விதிவிலக்கல்ல.

எந்த ஒரு மனிதனும் தான் வாழும் சமூகத்திலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக் கொண்டு தனித்திருப்பது சாத்தியமில்லை.

ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாரதி அதற்காக போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார்.

எல்லோருக்குள்ளும் ' சாதி' 

வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் பிறப்பிலேயே மேலடுக்கிலிருக்கும் மனிதனுக்குள் சாதி அவனையும் அறியாமல் 

வினை புரிகிறது.

அது அவர்களின் நனவிலி மனதிலிருந்து வெளிப்படுகிறது.

இப்போதும் கூட அது அவ்வாறகத்தான் செயல்படுகிறது.

உதாரணமாக  தான் ஜாதி பார்ப்பதில்லையாக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக நினைத்து ' நான் புதியமாதவி வீட்டில் கூட சாப்பிட்டு இருக்கிறேன்' என்று பேச்சுவாக்கில் சொல்லத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள்தான். என் நம்பிக்கைக்குரியவர்கள் தான். அவர்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மை. உணவு உண்டது உண்மை. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களின் நனவிலி மனதின் சாதி மேட்டிமை வெளிப்படத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் வீட்டு சமையலறை வரை நானும் போயிருக்கிறேன். என் உரையாடலில் அது இடம் பெற்றதே இல்லை. காரணம் எனக்கு அது சாதாரணமான நிகழ்வு. அவர்களுக்கு ?!

பாரதியின் அரசியலில் செல்வாக்கு செலுத்திய திலகர் சாதி சமூகத்தின் முகம். பெண்களுக்கு ஆங்கிலமும் கணக்குப் பாடமும் ஏன் என்று கேசரியில் எழுதியவர். அவர்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக தன் போராட்டத்தில் வேத இந்தியாவை முன் நிறுத்துகிறார். ஆர்யதேசம் என்று பேசுகிறார். இவை எல்லாமே பாரதியும் தன் போராட்ட அரசியலின் பண்பாட்டு தளத்தில் அப்படியே கையாண்டிருக்கிறார்.

அது சரியா? என்ற கேள்வியைத் தாண்டி பாரதியிடம் வெளிப்பட்ட திலகரின் தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.

பாரதி புதுவையில் சந்தித்த மனிதனின் கதையை ' தம்பலா'  பாரதி வசந்தன் எழுதி இருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் பாரதி.

பாரதி என்ற தனிமனிதன் தான் சார்ந்த சாதி சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டே போராடி இருக்கிறான்.

பாரதி சாதியாக கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்துடன் மட்டும் போராடவில்லை. தனக்குள் இருக்கும் அந்த சாதி மனிதனுடனும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறான்.

சாதியே மனிதனின் அடையாளமாக

சாதியே சமூகமாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்தியச் சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

யாரும் இங்கே விதிவிலக்கல்ல!🙏

Friday, November 7, 2025

இணைய யுகத்தில் பெண்ணியம்

 இணைய யுகத்தில் பெண்ணியம்

💥💥




பெண், பெண்மொழி,  பெண் அரசியல்

💥💥💥💥இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A 😭

  பெண்ணியம் அனைத்தும்  நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெண்ணுடல் உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்திற்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை காவேரி வரை பல்வேறு மாற்றங்களை உள்வாங்கிக் கொண்ட பெண்ணுடல் இன்றைய கணினி யுகத்தில் கைபேசி ஆன்லைன் வர்த்தக உலகத்தில் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது ?, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்பதைக் கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். 

 பெண்ணியம், பெண் உரிமை குறித்தப் புரிதல் இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான வகையில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. 

 பெண்ணியம் பெண் உரிமை என்று பேசிக்கொண்டு அதனால் தங்களுக்கு கிடைத்திருக்கும் அனைத்து சுதந்திரங்களையும் அனுபவிக்கும் இன்றைய பெண்கள் ஒரு விஷயத்தில் மட்டும் முழுக்கவும் ஆண்மைய சிந்தனைக் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். வீட்டு வேலையிலிருந்து குழந்தை பராமரிப்பு வரை இருபாலாருக்கும் சம உரிமையும் பங்களிப்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதைப் பெண்ணியம் வலியுறுத்துகிறது, அதை இன்றைய பெண்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பொருளாதாரம் என்று வருகிறபோது மட்டும், “சம்பாதிப்பது புருஷ லட்சணம், குடும்பச்செலவு ஆணின் பொறுப்பு, என்னையும் என் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியது – (இந்த இடத்தில் பொருளாதார ரீதியாக கவனித்துக் கொள்வது என்று வாசிக்க வேண்டும்) ஆணின் கடமை என்ற கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். 

 அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் அவனுடைய வாரிசு. இந்த இடத்திலும் அவன் சொத்துகளின் வாரிசு என்று வாசிக்க வேண்டும்!  

 ஈன்று புறம்தருதல் மட்டும்தான் அவள் கடன் என்று நினைக்கிறார்கள். ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்ற அதே 2000 ஆண்டு பழமையான ஆண்மைய சிந்தனையை வாழ்க்கையின் பொது அறமாக முன் வைக்கிறார்கள். இவர்கள்  பொருளாதர சுதந்திரம் கொண்ட பெண்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்றைய பெண்கள் தங்களுக்கும் தங்கள் செயல்பாடுகளுக்கும் எதெல்லாம் உதவியாக ஆதரவாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு பெண்ணீய விடுதலையைப் பேசுகிறார்கள். குடும்பம், வாழ்வியல்  விழுமியம் , ஆண் பெண் உறவின் நம்பிக்கை இதெல்லாமே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு தங்களுக்கு பாதிப்பு வரும்போது சம உரிமை சம பங்களிப்பு என்பதை புறம்தள்ளிவிட்டு பழைய மரபான ஆண்மைய கருத்துருவாக்கங்களை  பயன்படுத்துகிறார்கள். இரட்டை மன நிலையில் வாழ்கிறார்கள். இதில் விழி பிதுங்கி நிற்கிறது இன்றைய ஆண் பெண் உறவு.

 பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப் பட்ட சட்டங்களில் மிக முக்கியமானது சட்டப்பிரிவு 498A. குடும்ப வன்முறையிலிருந்து பெண்ணைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த சட்டப்பாதுகாப்பு இச்சட்டம். ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கு இது வரப்பிரசாதம். ஆனால் நடைமுறையில் இச்சட்டம் மிகவும் தவறுதலாக பெண்களாலேயே பயன்படுத்தப்படுகிறது என்கிறது உச்ச நீதிமன்றம்  . இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A என்பது உண்மையில் கவலை அளிக்கிறது.

 திருமணம் என்பதும் ஆண் பெண் உறவு என்பதும் காதல் நம்பிக்கை பரஸ்பர புரிதல் என்ற விழுமியங்களை இழந்துக் கொண்டிருக்கிறது.  

 நாமிருவர் நமக்கிருவர் என்பது கடந்தக் காலமாகி நாமிருவர் நமக்கு ஒருவர் என்ற மினி குடும்பங்களின் வாழ்க்கை நிலையில் பல வகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன. கணவனின் பெற்றோரைக் கவனிக்க வேண்டியது ஒரு மனைவியின் கடமை என்று போதிக்கப்பட்ட நம் குடும்ப அமைப்பில் ஒரே பெண்ணைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி நல்ல வேலையில் இருக்கும் மனைவியின் பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியதும் ஆதரவு தர வேண்டியதும் கணவனின் கடமையும்தான் என்பது சொல்லப்படவில்லை. அப்படியே ஓர் ஆண் தன் மனைவியின் பெற்றோரைக் கவனித்துக் கொண்டாலும் அது அவன் கடமையாக கருதப்படுவதில்லை. “எதோ கருணையின்பாற்பட்டு ஆண் செய்வதாக’  நம் சமூகம் நினைக்கிறது. இதன் அடிப்படை உளவியல் சிக்கல்கள் காலப்போக்கில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. இதன் விளைவாகவே ஒரு பாதுகாப்பின்மை என்ற உளவியல் சிக்கலுக்குள்ளாகி பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண்ணின் வாழ்க்கையில் அதிகமாகத் தலையிடுகிறார்கள். மகள் எப்போதும் தங்கள் மகளாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை பேராசை அல்ல. ஆனால் அதற்காக அவள் ஒருவனின் மனைவியாகவோ மருமகளாகவோ ஏன் அவள் குழந்தைகளுக்கு தாயாகவோ இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பேசித் தீர்க்க வேண்டிய சில்லறை விஷயங்கள் கூட போலீஸ் கோர்ட் என்று வருவதற்கு காரணமாகிவிடுகிறார்கள். 

 ஆண் பெண் உறவு, கணவன் மனைவி உறவு என்பது அவர்கள் இருவரின் அந்தரங்கம். அவர்களின் வாழ்க்கை, அவர்களின் காதல் காமம் அனைத்தும் அவர்கள் மட்டுமே அறிந்தவை. உணர்ந்தவை. ஆனால் மூன்றாவது மனிதர்கள் தலையிடும்போது ஈகோ தலை தூக்குகிறது. யார் யாரைக் கடித்துக் குதறுவது? என்ற வன்மத்துடன் அலைகிறார்கள். 

 யாருடைய தலையீடும் இல்லாமல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கை குறித்த முடிவுகளை ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு எடுக்க வேண்டும். அம்மாதிரியான முடிவுகள் மட்டும்தான் அப்பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். மற்றவை எல்லாம் கண நேர ஈகோதான்.   நீர்க்குமிழி போல!  

 ஆண் பெண் உறவில் திருமணம் தாண்டிய பாலியல் உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல ( Adultery is no longer a criminal offence in India) என்று 2018ல் உச்ச நீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் அறிவித்தப்போது ஆணாதிக்க சமூகத்திற்கு விழுந்த அடி என்று என்னைப் போன்றவர்கள் கொண்டாடினோம். ஆனால் நடைமுறையில் இது ஏற்படுத்தி இருக்கும் தலைகுனிவுகள் மனித வாழ்வின் விழுமியங்களைச் சிதைத்து சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

 திருமணம் தாண்டிய பாலியல் உறவை திருமண உறவில் இருந்துக் கொண்டே ஆணோ பெண்ணோ நியாயப்படுத்திவிட முடியாது. இன்றைக்கு

ஆன்லைன் டேட்டிங்க் இணைய தளங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கான தளங்களாக இல்லை. டிண்டர், பம்புல், ஹின்ஞ், , அஸ்லி, க்வாக் க்வாக் ( Tinder, Bumble, Hinge, Aisle, QuackQuack) தளங்களில் நுழைந்தப் பெண்கள் மிக எளிதாக ஆணின் பாலியல் இச்சைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதன் விளைவுகள் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கிவிடுகின்றன. இது என்னவோ இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் நடப்பதாக நினைப்பதற்கில்லை. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டம்தான் முதலிடத்தில் இருப்பதாக அஸ்லி மடிசன் (Ashley Madison) ஆன்லைன் டேட்டிங் தளம்  இந்த ஆண்டு (2025) தரவுகளின் படி புள்ளிவிவரம் தருகிறது. ! 

 பெண்ணுடல் பெண் உரிமை. அது விற்பனைக்கானதல்ல. விளம்பரங்களிலோ கண நேர ஆசை வார்த்தைகளிலோ மயங்கிவிடும் அளவுக்கு பெண் பலகீனமானவளாக, தன் சுயமிழந்தவளாக இருக்க கூடாது. 

 பெண்ணியம் என்பது பெண் உரிமை மட்டுமல்ல, அது பாலியல் சமத்துவம். இதை ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய ஆணும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 என்னைக் கைதியாக்கியதில்

 நீயும் கைதியானதை 

 அறியாமலேயே

 காத்திருக்கிறாய் சிறைவாசலில்.

 உள்ளே  நானும்  வெளியே நீயுமாய்

 ஒரே வீட்டில் பூட்டப்பட்டிருக்கிறோம்.

 என் உரிமைப்போரின்

 விடுதலைப் பரிசாக

 அன்பே …

 உனக்கும் கொடுப்பேன்

 கட்டுகள் அறுத்து

 பறப்பதன் சுகத்தை.!.

******

 புதியமாதவி,

 நன்றி : இந்து தமிழ் திசை.26/10/2025

நன்றி : Brindha Srinivasan


Friday, October 31, 2025

ராகுல சாங்கிருத்தித்தியாயன்

 





இந்திய எழுத்தாளர்களிலேயே அதிக மொழிகள் கற்றவர்.


30 மொழிகள்!

எழுதிய புத்தகங்கள் 146.

அவர் எழுதிய 

" வால்காவிலிருந்து கங்கை வரை" புத்தகம் தமிழுலகில் பலர் அறிந்தப் புத்தகம்.


தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர். கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர், திபெத்தில் புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன் என மாற்றிக்கொண்டார்.


வால் காலிலிருந்து கங்கை அறியப்பட்ட அளவுக்கு அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம்

 ' பொதுவுடமைதான் என்ன?' (1944 கண. முத்தையா தமிழ் மொழியாக்கம்)என்பது பேசப்படவில்லை.


இப்புத்தகத்தில் அவர் எழுதி இருந்தவை இன்றைய முதலாளித்துவ

ஜனநாயகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.


*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.


* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.


*சுயசிந்தனை குறையும்."காகம் உன் காதைக் களவாடிவிட்டது என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.


*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.

💥💥💥

இப்புத்தகம் என் புத்தகக்கிடங்கில் காணவில்லை!

நானும் " வால்காவிலிருந்து கங்கை வரை" தான் பத்திரப்படுத்தி இருக்கிறேன்.🥺



(படம் டார்ஜிலிங் அருகில் அவர் நினைவிடம்)

Thursday, October 30, 2025

சூ.. மந்திரகாளி.☠️

 











மந்திரங்கள் பூமியின் ஒலி வடிவம். ஆதிமனிதன் அதை அறிந்திருந்தான். 

அதிகாரத்தின் எழுத்து மொழி பிறப்பதற்கு முன்

அவன் அனைத்து ஜீவராசிகளுடனும் (ஒலி அலை) பேசிக் கொண்டிருந்தான்.

💥💥💥💥 


வீரபத்திரன் முதலில் அரவங்களை ஏவலில் இருந்து விலக்கித் தமது கட்டுக்குள் கொண்டு வரும் வேலை தொடங்கியது.


விபூதி அட்சரங்கள் பலவும் உருவாக்கி மூல மந்திரங்களை ஒத ஓதப் பாம்புகள் சுட்டவிழ்ந்து ஓடின. அரவத்தை மந்திர ஏவலில் இருந்து விடுவிக்கும் மந்திரங்களை வீரபத்திரன் உச்சரிக்கத் தொடங்கினார்.


அவ்வும் வசிய என்று உச்சரிக்க அரவம் ஓடும்


ஓம் அம் என்று உச்சரிக்க அரவம் படமெடுத்து ஆடும்


அவ்வும் வசி என்று உச்சரிக்க அரவம் சீறும்


ஓம் அவ்வும் என்று கூற அரவம் சீறிப் புடைக்கும்


ஓம் அவ் என்று கூற அரவம் நின்ற நிலையில் நிற்கும்


அவ்வும் சிவாய நம என்று கூற அரவம் நிலைபெறாமல் நின்றாடும்


அங் அங் சிவாய நம என்று கூற அரவு வணங்கி நிற்கும்


ஓம் அம் அம் என்று கூற அரவு கடிய வேமெடுத்து ஓடும்.


ஆங் ஆங் சிவாய நம என்று கூற அரவு தலை சாய்த்து வணங்கும்


ய நம சிவ என்று கூறக் கடுகிச் சிறி கடிவாயில் வரும்


சிவாயநம என்று கூற அரவம் ஆடாது நிற்கும்


வீரபத்திரன் இவ்வாறான மந்திரங்களைக் கூறும் போது உரிய அட்சரங்களையும் இயற்றி நாகங்களை ஏவல் கொண்டார். இதன் காரணமாக நாகங்ககள் வேகமெடுத்து விலகிச் சென்றன.


 அரவத்தை அல்லது நாகத்தை கட்ட என்று மூல மந்திரம் உண்டு. இந்த மூல மந்திரமே ஏனைய மந்திரங்களுக்கு அடிப்படை. ந்திரங்களுக்கு அடிப்படை. அதுபற்றி வீரபத்திரன் வரித்துக் கூறத் தொடங்கினார்.


தேவியின் சக்கரம் எழுதிக் காராம் பசுவின் பால் விட்டரைத்துச் சக்கரத்தில் தடவி வா, வா வென்று 100 உரு செவிக்க அரவு கட்டுப்படும். மேலும் சக்கரத்தைத் தோப்பின் நடுவே உள்ள மரத்தின் கீழ் புதைத்துத் தோப்பின் நான்கு திசையிலும் சேவலைப் பலி கொடுத்து உதிரம் தெளிக்க வேண்டும். 108 நாள் செபித்து உருவேற்ற சக்கரம் சக்தி பெறும்.


இவ்விதமாக அரவத்தின் ஏவலை நீக்கிட நாகங்கள் கம்ப சேவை விழா நடைபெறும் இடத்தை விட்டு உடனே அகன்றன.


அடுத்ததாகக் கருடன் மந்திரக் கட்டை உடைத்து வரவழைக்கும் சடங்குகள் செய்யப்பட்டன.


ஒரு பெரிய தட்டில் திருநீற்றைச் சமமாகப் பரப்பி அதன் மீது ஊசி முனை கொண்டு அட்சரங்கள் எழுதப்பட்டன. அட்சரங்களின் இடங்களில் எங்கெங்கு பலி கொடுத்துக் குருதி தூவ வேண்டுமோ அங்கெல்லாம் குங்குமத்தைத் தூவினார் வீரபத்திரன்.

பக். 92 & 93

💥💥💥


மந்திரங்கள் வசியம் செய்வது  இதில்  எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் பூமியில் அனைத்து ஜீவராசிகளும் ஒலி அலைகளுக்கு கட்டுப்பட்டவை. 

அதை அறிந்தவன்

அந்த ஒலிகளைக் சொற்களாகவோ அல்லது பொருளற்ற ஒலிக்குறிப்புகளாகவோ மந்திரம் வசியம் என்ற பெயரில் தலைமுறைகளாக வாய்மொழி வழி கடத்தி வந்திருக்கிறான்.


இதில் மதநம்பிக்கைகள் கலந்து விடும்போது சடங்குகள் மத வழிபாடாகி தொன்மங்கள் இன் வரலாறு  புனைவுகளின் ஊடாக தன்னைப் போர்த்திக் கொண்டு மதச்சடங்கு , அதன் வழியான நம்பிக்கைகளாக மாறி விடுகின்றன.


இந்த ஒலி அலை மந்திரச் சொற்களை அறிந்த இனக்குழு காலப்போக்கில் 

பெருந்தெய்வ வழிபாடுகளின் பிரம்மாண்டத்தில் கொள்ளைப் புறத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது.

உலகெங்கும் மனித நாகரிக வரலாற்றில் இவை நடந்திருக்கின்றன.


ஏழாம் வீரபத்திரனின் வாரிசுகள் தங்கள் மூதாதையர் அறிந்திருந்த ஒலி அலைகளை இழந்துவிட்டார்கள்.

பிழைப்புக்காக 

" சூ.. மந்திரகாளி" 

என்று எதையோ மந்திரம் போல பாவனை செய்கிறார்கள்.

Friday, October 24, 2025

தாராவியும் புதியமாதவியும்

 தாராவியும் நானும்



ஊரிலிருந்து ட்ரெயினில் வரும்போது பக்கத்திலிருப்பவர்

" பம்பாயில எங்க" என்று கேட்டால் தாராவிக்காரர்கள்

மகிம், சயான், மதுங்கா, செம்பூர் இப்படி எதாவது சொல்வோமே தவிர

மறந்தும் கூட எங்கள் தாராவி முகவரியைச் சொல்லமாட்டோம்.

இன்றும் இந்த நிலை முழுவதுமாக மறைந்து விடவில்லை!


இச்சூழலில்தான் தாராவியிலிருந்து முதன் முதலாக வங்கி வேலைக்கு அதுவும் பன்னாட்டு வங்கிக்கு வேலைக்குச் சென்ற முதல் பெண்ணாக நான்.. !

அப்போது 1980.

வி.கே. வாடியில் எங்கள் வீடு. என் அப்பாவின் தாத்தா காலம் முதல் தாராவிதான் எங்கள் வாழ்விடம்.

அப்பாவின் தாத்தா நரியமேஸ்திரி( நரசிம்ம மேஸ்திரி) அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குதிரை வண்டியில் பயணித்தவர். மகாத்மா புலேவின் தாக்கத்தில் தாராவி தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய திருநெல்வேலியிலிருந்து தான் அழைத்துவந்து  தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் நிறுவினார்.

இச்செய்தியை 'போல்டு இந்தியா'  மும்பை பத்திரிகையில்

ஞாயிறு மலரில் தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த ஆசிரியர் வழக்குரைஞர் இராஜமாணிக்கம் சார் அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அப்பாவின் அப்பா அதே  பிசினஸ் தொடர்ந்தார். செல்வ செழிப்பான வாழ்க்கை. அப்போது முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர் காலம் . இரண்டு முறை அவர் கப்பல் சேதமடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டது வாழ்க்கை.

முதல்மனைவி என் பாட்டியும் அம்மை வந்து இறந்தும் போனார். பாட்டியின் தங்கையைப் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் ..இந்த அதிர்ச்சியில் அவர் மரணம். பிள்ளைகள் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

என் அப்பா தன் பிழைப்புக்காக இலங்கை கொழும்பில் வேலை செய்தபோது தாத்தாவை அறிந்த ஒரு ஆங்கிலேயரை பேட்மிட்டன் மைதானத்தில் பந்து எடுத்து கொடுக்கும் வேலைப்பார்த்த சிறுவனாக இருந்த என் அப்பா சந்திக்கிறார்.

அந்த ஆங்கிலையர்தான் அப்பாவை இரவுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர்.

அப்பாவின் தம்பிக்கு இந்த வாய்ப்பு இல்லை. அதனால் அவர் அதிகம் படிக்கவில்லை.

அப்பாவும் அப்பாவின் தம்பியும் மீண்டும் தாராவியில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.


என் சித்தப்பா பி.எஸ். கோவிந்தசாமி அவர்கள் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கத்தில் பல பொறுப்புகளில் இருந்தவர்.தன் அப்பா செய்த அதே தோல் பதனிடும் தொழிற்சாலை ( tannery business) நடத்தினார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்தல் களம் கண்டவர். தோற்றுப் போனார். தன் 42 வயதில் மாரடைப்பில் இறந்தும் போனார்.


அப்பா பி.எஸ் வள்ளிநாயகம்  வங்கி வேலையில் இருந்தார் . .

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். அறிஞர் அண்ணா மட்டுமே அப்பாவின் அரசியல் தலைவர். தன் சம்பாத்தியத்தில் பெரும் பங்கை எவ்வித எதிர்பார்ப்புகளும்  இன்றி திமுக அரசியலுக்காக செலவு  செய்தவர். ஆனால் அதைக் கொண்டு தனக்கோ தன் வாரிசுகளுக்கோ ஒரு சான்றிதழ் வாங்குவதற்கு கூட திமுக அரசின் கதவுகளைத் தட்டியது இல்லை. அவர் பிள்ளைகளான நாங்களும் இன்றுவரை அப்படித்தான் வாழ்கிறோம்.


எனக்கும் தாராவிக்குமான உறவு, பிணைப்பு என்பது மற்றவர்களைப் போல அல்ல. அது தாராவி யின் ஒவ்வொரு மாற்றங்களுடனும் பின்னிப் பிணைந்தது.

இன்றைய இளைய தலைமுறைக்கு இதைச் சொல்ல வேண்டிய ஒரு நேரம் வந்திருக்கிறது.

போராட்டமான என் வாழ்க்கை..

என் மகன் பிறந்து இரண்டு வயது வரை தாராவி சால்களில் ( ராமர் வாடி& வாழக்கட்ட வாடி)  வாடகை வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை..

அனைத்துமே , இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு பன்னாட்டு வங்கியில் (HSBC) வேலை பார்த்த அனுபவம்...

இப்போது பாண்டூப்பில் எங்கள் வீடு..‌ 

இதில் ஒவ்வொன்றும் எங்கள் உழைப்பு.

நானும் என் சங்கரும் எங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவரிடம் இருந்த ஒரே சொத்து ஒரு மர்ஃபி ரேடியோவும் அவர் வேலையும்.

என்னிடம் என் வேலையும் பத்துப் புடவைகளும்.


தாராவியில் முதன்முதலாக ஃப்ரிட்ஜ்  நான்தான் ஆபிஸில் லோன் போட்டு வாங்கினேன். அப்போது அதில் ஐஸ் எடுக்கவும் பார்கவுமே பலர் வருவார்கள்.வாழ்க்கையின் பல கடினமான நாட்களை வெளியில் காட்டாமல் கடந்து வந்திருக்கிறேன்.

இப்போதும் புன்னகையுடன் வலிகளை மறைத்து மறந்து.. பயணிக்கிறேன்.


என் எழுத்து என் வாழ்க்கை என் தாராவியைக் களமாக கொண்டிருப்பதன் பின்னணி என்பது புதிய மாதவி என்ற தனி நபரின் கதை அல்ல. அது ஒரு காலத்தின் வரலாறு. அந்தக் காலத்தின் பிரதியாக நானும் என் எழுத்துகளும்.

( புகைப்படம் அப்பாவும் அண்ணாவும். மும்பை நிகழ்வு)


#புதியமாதவி

#தாராவி


Wednesday, October 22, 2025

ஜே கே சார்



கெளதமன் எழுதிய “ஜே கே சார்” – 

💥💥💥💥




தோழர் கெளதமன் எழுதிய ஜே கே சார் புத்தகம் அண்மையில் வாசிக்க நேர்ந்தது. இப்புத்தகம் என்  புத்தக அலமாரியில் கட்டாயமிருக்க வேண்டும் என்று தோழர் கெளதமன் விரும்பி புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்,

ஜே கே என்று பேரன்புடன் அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகங்களை  (நாவல், சிறுகதை) அனைத்தும் என் கல்லூரி காலங்களில் வாசித்து கொண்டாடி இருக்கிறேன்.

மதுரை பல்கலை கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கிறபோது எங்கள் சீனியர் அண்ணன்மார்கள் – முதுகலை இரண்டாமாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ) ஜே கே மதுரை வந்திருக்கிறார் என்றும் அவரைச் சந்திக்கப்போவதாகவும் ஒரு காதலியைச் சந்திக்கப்போவது போல த்ரில்லிங்க் காட்டினார்கள். நானும் ஜே கே வாசித்திருக்கிறேன், நானும் உங்களுடன் வருவேன் என்று அவர்களிடம் அடம் பிடித்து தர்ணா செய்கிற அளவுக்கு போனேன்.

ஆனால் அங்கெல்லாம் நீங்க வரமுடியாது ! பொதுவாக பெண்கள் அவர் இலக்கிய அரட்டைக் குழுமத்தில் கலந்து கொள்வதில்லை என்பதை ரகசியமாக என்னிடம் சொன்னார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியும் ஜே கேவை சந்தித்தே ஆகவேண்டும் என்றும் அவருடைய ‘சக்கரங்கள் நிற்பதில்லை” சிறுகதைக்கு நான் எழுதிய விமர்சனத்தையும் அவரிடம் கொடுத்தாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினேன்.

என் மன சாந்திக்காக அந்த விமர்சனக் கட்டுரையை மட்டும் ஜே கே சாரிடம் கொடுத்துவிடுவதாக சொல்லி வாங்கிச் சென்றார்கள். கொடுத்தார்களா ? இதுவரை எனக்குத் தெரியாது. இப்படியாக ஜே கே சாரை நேரில் தரிசிக்க பெண் வாசகர்களுக்கு அனுமதி இல்லை என்பதன் ரகசியம் எனக்குப் புரிய பல ஆண்டுகள் ஆனது.  (ட்யூப் லைட் தான்)

கெளதமன் எழுதிய ஜே கே சார் புத்தகத்தை வாசிக்கிறபோது அன்று புரியாதவைகளும் அன்று கேள்விப்பட்டவைகளும் என்று பல பக்கங்கள் இந்த எழுதிய பக்கங்களுக்கு ஊடாக என் வாசிப்பில் கலந்துவிட்டன.

கெளதமன் எழுதி இருக்கும் ஜே கே சார் புத்தகம் ஜெயகாந்தனின் தன் வரலாறு அல்ல.( BIOGRAPHY) , இப்புத்தகத்தை எழுதி இருக்கும் கெளதமனின் தன் வரலாறும் அல்ல. ஆனால் இந்த இரண்டும் கலந்த ஒரு கலவை. என் போன்றவர்களுக்கு கிடைக்காத / பெண் என்பதால் மறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு கெளதமனுக்கு எளிதாக கிடைத்திருக்கிறது. அந்த நட்பை பேணிக்கொள்ளும் வாசக மனமும் கெளதமனுக்கு வாய்த்திருக்கிறது, ஜே கேயுடனான தன் சந்திப்புகளை கெளதமனின் மனம் அசைபோடுகிறது. அதில் கொஞ்சம் எடிட் செய்கிறது. ஜே கே சாருடனான கெளதமனின் நினைவலைகளாக இப்பிரதி தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது.

அவருடனான சந்திப்புகளின் ஊடாக ஒரு பிரமாண்டமான எழுத்தாளர் என்ற ஜெயகாந்தனின் பிம்பத்தைப் பார்க்கிறார். மிக அருகில் பார்த்ததால் மற்றவர்கள் பார்க்க முடியாத ஜே கேயின் நிழல்களையும் அதன் மாறிவரும் தன்மையையும் போகிறபோக்கில் மிக நுணுக்கமாக பதிவு செய்திருப்பது கெளதமனின் தனி சிறப்பு .

ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ நாவல் ஆனந்த விகடன் இதழில் 1965ல் தொடராக வெளிவந்து 1966ல்  டிசம்பரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அக்கதையில் இடம்பெறும் சாரங்கன் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்தியாவின் இசைக்குடும்பத்தில் பிறந்து லண்டனின் மேற்கத்திய இசைப் பயின்று கலைகளின் சொர்க்கமான பாரீசில் சில காலம் வாழ்ந்து சென்னை திரும்பிய சாரங்கனை படைத்த ஜே கேவால் , .. அதைப் போலவே ஒரு வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட இளையராஜாவை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. இதை கெளதமன் அவர்கள்

“ தென்மேற்கு தமிழ் நாட்டு எல்லையோரம் அமைந்த சின்னஞ்சிறு  கிராமமான பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு நேராக ஜெயகாந்தனிடமே வந்து நின்றபோது , தனது சாரங்கனுக்கு இருந்த எவ்வித சலுகைகளும் இல்லாது , தான் பாரீசில் இருந்து உருவாக்கி தருவித்த சாரங்கனே தான் மெலிந்த கறுத்த உருவமாய் வந்து நம் முன் நிற்கிறான் என்று ஜெயகாந்தனால் உணரத்தான் முடியவில்லை”  பக் 321

ஏ ஆர் ரஹ்மானையும் ஜெயகாந்தன் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சேர்த்தே பதிவு செய்கிறார் கெளதமன்.  (பக் 334)

“ ஒரு பிரச்சனையை  நான் அணுகும் முன் , இதற்கு காந்தி இருந்திருந்தால் அவர் முன்வைக்கும் தீர்வு என்னவாயிருக்கும்? என்பதில் இருந்தே நான் யோசிக்க தொடங்குவேன்” என்பார் ஜெயகாந்தன் ( பக் 306)

இதை வாசித்தவுடன் ஜெயகாந்தன் அப்படி என்ன பிரச்சனையை காந்தியாக இருந்து யோசித்தார் என்று யாரும் மயிர்ப்பிளக்கிற மாதிரி யோசிக்க வேண்டியதில்லை. காரணம் ஜே. கே எப்படி தன் இலக்கிய உலகில் தன் இலக்கிய சகாக்களுடன் தன் பொழுதுகளைக் கழித்தார் என்பதை கெளதமன் எழுதி இருக்கிறார். இரண்டையும் வாசிக்கும் வாசகருள்ளம் ஜெயகாந்தன் காந்தியாக யோசித்திருக்கவே முடியாது. MY LIFE IS MY MESSAGE என்று வாழ்ந்த காந்தியுடன் ஜெயகாந்தனை எந்த வகையிலும் ஒப்பிடவோ அல்லது அவர் அப்படி யோசித்ததாகவோ  நாம் கனவிலும் யோசிக்க முடியாது.

ஜெயகாந்தனுக்கு போட்டோ ஷூட் பிடிக்காது. “ எனக்கு போட்டோ எடுக்கிறப்ப போஸ் கொடுக்க வராது “ பக் 263

“ஒரு மணிதான் ஆவுது. பரவால்ல. அதுதான் சின்ன நம்பர்” – பக் 269

ஜெயகாந்தன் நண்பர்களுடன் ஆடிய ‘சோப்பெங்கப்பா ‘ ஆட்டம். -345

ஜெயகாந்தனின் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹென்றியும் தேவராஜனும் ஆடிய சோப்பெங்கப்பா ஆட்டத்தை  ஆடி இருப்பார்கள் !)

“ ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் அடித்தளம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அறிவார்ந்த மூத்த தோழர்களால் வடிவமைக்கப்பட்டது என்று அவரும் பலரும் எழுதியுள்ளதை நான் படித்திருக்கிறேன். அதில் உண்மையும் உள்ளது. “ என்பார் கெளதமன் ஜே கே சார் 91 கட்டுரையில் ( கணையாழி இதழ் ஏப்ரல் 2025 ) ஆனால் அவர் மொத்த வாழ்வின் போக்கை நிர்ணயிக்கும் அடித்தளம் அவர் வளர்ந்த அக்ரஹாரத்திலே கட்டமைக்கப்பட்டதாக அவருடைய எழுத்துகளிலிருந்தே நான் அறிகிறேன் பத்து வயதுவரை அமைந்த அக்ரஹார வாழ்க்கைச் சூழல் வாழ் நாள் இறுதிவரை அவரை பிராமண சார்பில் அழுத்தமாக வைத்திருந்த்து ” ( கெளதமன் கட்டுரை மேலது பக் 11 & 12)

சனாதனம் பற்றி ஒன்றுமே அறியாத வயதில் அதில் மயங்கி , குழந்தமையோடு அதை ஆதரித்தது போலவே , திராவிடர் பற்றிய எந்த அறிதலோ புரிதலோ இல்லாமலேயே அதைக் கடுமையாக எதிர்க்கும் சிறுபிள்ளை மனமும் அவருக்கு அந்தப் பருவத்திலேயே உருவாகிவிட்டது .

கெளதமன். (மேலது கணையாழி கட்டுரை பக் 12)

ஜெயகாந்தனும் தன் திராவிட எதிர்ப்பை மிகவும் வெளிப்படையாகவே பேசியவர்தான். அவருடைய பிராமண ஈர்ப்பும் அதில் மறை பொருளாக இருந்து காலப்போக்கில் ‘ஜெய ஜெய சங்கர’ வாக வெளிப்பட்டது.

இந்த அனைத்தின் முரணாக ஜெயகாந்தனுக்கு அறிவிக்கப்பட்ட  முரசொலி அறக்கட்டளை விருதும் அதை ஏற்றுக்கொண்டு நேரில் சென்று விருது வாங்கிய ஜேகேவும்!!!!!. இது தமிழக அரசின் விருதல்ல. திமுக முரசொலி அறக்கட்டளை விருது. டிசம்பர் 2006ல் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 23, 2007 திமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முரசொலி விருது  நிகழ்வில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஜெயகாந்தனுக்கு விருது வழங்கினார் என்ற செய்தி தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றி ஒரு செய்தி மட்டுமல்ல. தமிழ் நாட்டு இலக்கிய அரசியலின் மிக முக்கியமான ஒரு செய்தியுமாகும். இங்கே சமரசங்களுக்கும் விருதுகளுக்கும் யாரும் விதிவிலக்கல்ல, ஜேகே உட்பட. !

ஜே கே சாரின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் கெளதமனும் முரசொலி விருது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

30 வயது ஜெயகாந்தனைவிட இளையவர் கெளதமன். ஒரு தீவிர வாசகராக ஜெயகாந்தனுடன் மாலை நேரங்களை கழித்தவர். ஜெயகாந்தனும் பயணித்தவர். ஜெயகாந்தனின் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். ஆளுமை கொண்ட ஜே கே சாருடன் பழகிய நினைவுகளை ஒரு புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு ஜே கேயின் பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பவர்.  தன் 29 வயதிலிருந்து ஜெயகாந்தன் மறையும் வரை ஜே கே சாரை  அருகிலிருந்து பார்த்த கெளதமனின் ஜே கே சார் நினைவலைகள் ஒரு சுனாமியைப் போல ஜே கே என்ற பாறையின் மீது மோதுகின்றன. அந்த இடம் இப்புத்தகத்தின் ஒரு திருப்புமுனை. க்ளைமாக்ஸ் காட்சிபோல வாசகனின் நினைவுகளில் பதிந்துவிடுகிறது. அது காந்தியும் நாரயணம்மாவும் கட்டுரை ( பக். 318 – 319)

“ ஐம்பத்திரண்டு வயது வரை அலட்சியமாக இருந்த எனக்கு , உடனே அம்பேத்கரை வாசிக்கும் உத்வேகம் பிறந்தது. அம்பேத்கரின் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ ‘ நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்’ ‘அம்பேத்கர் இன்றும் என்றும்’  ஆகிய புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கிய 2017-18 ஆண்டுகள் , நான் புதிதாக பிறந்ததாக எனக்கு உணர்த்தியது”  – கெளதமன்.

கெளதமனிடம்  ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் பிறக்கிறான்.

வாழ்த்துகள் கெளதமன்.


நூலின் விவரங்கள்:


நூல்: “ஜே கே சார்” (J K Sir)

எழுத்து: கெளதமன்.

வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 2024.

பக்கங்கள்: 441

விலை: ரூ.500.


எழுதியவர் : 


✍🏻 புதியமாதவி


நன்றி: bookday.in 

dated 22/20/2025